Published : 26 Jul 2019 10:34 AM
Last Updated : 26 Jul 2019 10:34 AM

360: மோசமாக எழுதப்பட்ட ஆவணம்

மோசமாக எழுதப்பட்ட ஆவணம்

உயர்நிலைப் பள்ளி வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தில் அறநெறிக் கல்விக்கு முன்னுரிமை, மும்மொழிகள் கற்பதற்கான வாய்ப்பு, ஒவ்வொரு பாடத்துக்கும் அதன் அடிப்படை கோட்பாடுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம், தொழிற்பயிற்சிக்கான வாய்ப்பு என்று மிகவும் நெகிழ்வானதாகவும் விரிவானதாகவும் அமைந்திருக்கிறது புதிய கல்விக் கொள்கை. ஆனால், இவ்வளவு விஷயங்களையும் ஒருசேர மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினோம் என்றால் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கற்க வேண்டிய பாடங்களின் எண்ணிக்கை 15 ஆக இருக்கும். ‘ஒரே வகுப்பில் 15 பாடங்கள் என்றால் அவை பாடங்களின் பட்டியலாக இருக்காது, சலவைத் துணி பட்டியலாகத்தான் இருக்கும்’ என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார் பேராசிரியர் ரோஹித் தங்கர். ‘ஒருங்கிணைந்த பார்வையிலும் பாடத்திட்டச் சிந்தனையிலும் இருக்கும் பற்றாக்குறையையே இது காட்டுகிறது. 21-ம் நூற்றாண்டுக்கான திறன்களைக் கொண்ட மாணவர்களை உருவாக்குவதே நோக்கம் என்று இந்தக் கல்விக் கொள்கை கூறுகிறது. ஆனால், திறன்களைப் பற்றிய அதன் அரைகுறை அறிவு வார்த்தைக் கூட்டங்களால் மூடி மறைக்கப்பட்டிருக்கிறது, மோசமாக எழுதப்பட்ட ஆவணம் இது’ என்று கொதித்திருக்கிறார் ரோஹித்.

‘லிபரல் ஆர்ட்ஸ்’ மயக்கமும் கலக்கமும்

புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவில் உயர்கல்வித் துறைக்கான பரிந்துரைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘லிபரல் ஆர்ட்ஸ்’ என்ற வார்த்தையே விவாதப் பொருள்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. என்சிஇஆர்டியின் முன்னாள் இயக்குநர் கிருஷ்ணகுமார் சமீபத்தில் எழுதிய கட்டுரையில் இந்த வார்த்தைப் பயன்பாட்டைப் பற்றி விரிவாக விவாதித்திருக்கிறார். வரலாற்றில், ‘லிபரல்’ என்ற வார்த்தைக்கு விமர்சனப் பார்வைகளிலிருந்து மாறுபட்டது என்ற பொருள் இருந்தாலும் இந்தியாவின் இன்றைய பொருளாதார விவாதங்களில், அந்த வார்த்தை பணம் செய்யும் கலை என்ற பொருளிலேயே கையாளப்பட்டுவருகிறது. கல்வித் துறையைப் பொறுத்தவரையில் அந்த வார்த்தை, அமெரிக்காவில் மேட்டுக்குடியினர் படிக்கும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் கற்பிக்கப்படும் இளங்கலைப் படிப்புகளைக் குறிப்பதாகும் என்ற விளக்கம் அளிக்கிறார் கிருஷ்ணகுமார். திறந்த மனதோடும் அறிவுத் துறையில் பெருந்தன்மையோடும் நடந்துகொள்வதைக் குறித்த ஒரு வார்த்தை, இன்று உருமாறியும் பொருள்மாறியும் விட்டது. ‘புதிய தாராளவாதம்’ பொருளாதாரத் துறையில் அரசு தனது கட்டுப்பாடுகளைத் தளர்த்திக்கொள்வதையே குறிப்பிடுகிறது. புதிய தாராளவாதத்தை நோக்கிய பயணம், ‘லிபரல் ஆர்ட்ஸ்’ படிப்புகளின் தாராளவாதச் சிந்தனைகளைப் பலவீனப்படுத்திவிட்டது என்றே கல்வியாளர்கள் பலரும் கருதுகிறார்கள் என்று எச்சரிக்கிறார் கிருஷ்ண குமார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x