Published : 18 Jul 2019 09:06 AM
Last Updated : 18 Jul 2019 09:06 AM

360: ராகுலைத் துரத்தும் ஸ்மிருதி இரானி

ராகுலைத் துரத்தும் ஸ்மிருதி இரானி

தேர்தலுக்குப் பிறகு ராகுல் காந்தியை காங்கிரஸார் விட்டுவைத்தாலும், பாஜக விட்டுவைக்காதுபோல. அமேதியில் வென்றதோடு மட்டுமல்லாமல், அங்கே தன்னை முழுமையாக நிலைநிறுத்திக்கொள்ளும் வேலையிலும் இறங்கியிருக்கிறார் ஸ்மிருதி இரானி. ‘உங்கள் வீட்டு வாசலில் அக்கா’ என்ற பெயரில், மக்கள் சந்திப்புகளை நடத்தும் ஸ்மிருதி இரானி, கிராமம் கிராமமாகச் செல்கிறார். மக்கள் கொடுக்கும் மனுக்களைப் பட்டியலிட்டு, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பிவைக்கிறார். அமேதி சம்பந்தமான கோரிக்கைகளுக்குக் கூடுதல் கவனம் கொடுக்கும்படி பாஜகவின் எல்லா அமைச்சகங்களுக்கும் மேலிடத்திலிருந்து சொல்லப்பட்டிருக்கிறதாம். “மறுமுறை நான் வரும்போது இந்தக் குறைகள் தீர்க்கப்பட்டிருக்கும்” என்று சொல்லிவிட்டு, அடுத்த கிராமம் நோக்கி நகர்கிறார் அவர். அமேதியிலேயே ஒரு வீடு பார்க்கும் வேலையும் நடக்கிறது. இப்போது ராகுலும் அமேதியில் பயணிக்கிறார். “அமேதி மக்களை நான் மறக்க மாட்டேன்; அமேதிக்காகத் தொடர்ந்து உழைப்பேன்” என்று மக்கள் மத்தியில் பேசிவரும் ராகுல், அமேதியை நிரந்தரமாக இழந்துவிடக் கூடாது என்று உள்ளூர் காங்கிரஸாரை முடுக்கிவிட்டிருக்கிறார்.

தோல்வியிலிருந்து பாடம் கற்கும் சத்தீஸ்கர் காங்கிரஸ்

சத்தீஸ்கரில் ஆட்சியைக் கைப்பற்றிய அடுத்த சில மாதங்களில், மக்களவைத் தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்தது காங்கிரஸுக்கு உள்ளபடியே பேரதிர்ச்சி. சட்டமன்றத் தேர்தலில் மாநிலத்திலுள்ள 90 தொகுதிகளில் 68 தொகுதிகளை வென்று, 15 வருட ஆட்சியிலிருந்த பாஜகவை வெறும் 15 தொகுதிகளுடன் முடக்கிய காங்கிரஸ், மக்களவைத் தேர்தலில் வெறும் 2 தொகுதிகளை மட்டுமே வெல்ல முடிந்தது; பாஜகவோ 9 தொகுதிகளை வென்று, மீண்டும் தலைநிமிர்ந்தது. வீழ்ச்சிக்கான காரணங்களை யோசித்த காங்கிரஸ், உடனடியாகக் கட்சியின் மாநிலத் தலைமையை மாற்றியிருக்கிறது. இதுவும் பாஜக பாணிதான்! பழங்குடிகள் பெரும்பான்மையாக வாழும் மாநிலத்தில் கட்சியின் மாநிலத் தலைவராக ஒரு பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவரை நியமிப்பது என்ற முடிவை எடுத்த பாஜக, விக்ரம் உசண்டியை அப்பதவியில் நியமித்தது. இப்போது காங்கிரஸும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மோகன் மர்காமைத் தலைவராக நியமித்திருக்கிறது.

ராஜத – காங். கூட்டணியை உடைக்கிறாரா நிதீஷ்?

பிஹாரில் பாஜக – மஜத உறவு மீண்டும் கசக்க ஆரம்பித்துவிட்டது. மக்களவைத் தேர்தலில் சரிபாதி தொகுதிகளைக் கேட்டு பாஜகவைப் பணியவைத்த நிதீஷைத் தேர்தலுக்குப் பின் கணக்குத் தீர்த்தது பாஜக. ‘மத்திய அரசில் ஒரேயொரு கேபினெட் பதவிதான்’ என்றதை ஏற்காத நிதீஷ், டெல்லியிலிருந்து பாட்னா திரும்பியதும் மாநில அமைச்சரவையை விரிவுபடுத்தி, அதில் ஒரேயோரு அமைச்சர் பதவியை பாஜகவுக்கு அளித்தார். பாஜக அதை ஏற்க மறுத்தது. மாநில பாஜகவுடன் நல்லுறவு இருந்தாலும் தேசியத் தலைவர்களுடனான முரண்பாடுகள் கூட்டணியை நாசமாக்கிவிடும் என்று எண்ணும் நிதீஷ், இப்போது புதுக் கணக்கு ஒன்று போடுகிறார். பாஜகவுக்கு விடை கொடுத்துவிட்டு, லாலுவின் குடும்பம் உரிய மரியாதை கொடுப்பதில்லை என்று புலம்பிக்கொண்டிருக்கும் பிஹார் காங்கிரஸை ராஷ்டிரிய ஜனதா தளத்துடனான கூட்டணியிலிருந்து உடைத்துத் தன் பக்கம் சேர்த்துக்கொள்வது அல்லது ராஷ்டிரிய ஜனதா தளமே வந்தாலும் ஏற்றுக்கொள்வது. ஆக, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் மஹா கூட்டணி உருவெடுக்கும் என்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x