Last Updated : 19 Jul, 2015 10:58 AM

 

Published : 19 Jul 2015 10:58 AM
Last Updated : 19 Jul 2015 10:58 AM

உங்களுடைய செல்பேசி ஒட்டு கேட்கப்படுகிறது: ஆலன் ரஸ்பிரிட்ஜர் சிறப்புப் பேட்டி

அண்மையில் சென்னை வந்திருந்தார் 'தி கார்டியன்' பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் ஆலன் ரஸ்பிரிட்ஜர். 2013 ஜூனில் இணைய உலகில் நடந்த, மிகப் பெரிய அரசு இயந்திர ஒட்டுகேட்பு விவகாரத்தை எட்வர்ட் ஸ்னோடன், கிளென் கிரீன்வால்ட், லாரா பொயித்ராஸ் மூவரும் வெளிக்கொணர்ந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும். அமெரிக்க அரசுக்காக அதன் 'தேசிய பாதுகாப்பு முகமை' (என்.எஸ்.ஏ.) ஒட்டுகேட்ட நாடா பதிவுகள் அம்பலப்படுத்தப்பட்டதில், 'தி கார்டியன்' நாளிதழுக்கு முக்கியப் பங்கு உண்டு. உலகெங்கும் அப்போது இரு பெரும் விவாதங்களுக்கு 'தி கார்டியன்' அப்போது வழிவகுத்தது. 'மக்களை இப்படி அரசு வேவு பார்க்கலாமா?' என்றும் 'அரசு வேவு பார்ப்பதைப் பத்திரிகை வெளியிடலாமா?' என்பது அந்த விவாதங்கள். இன்றும் அந்த விவாதங்கள் தொடர்கின்றன. ஆலன் ரஸ்பிரிட்ஜர் 'தி இந்து'வுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் இது உட்பட பல விஷயங்களையும் பற்றி விரிவாகப் பேசினார்.

ஸ்னோடனை மன்னித்துவிடும்படி கடந்த ஜூனில் 'தி கார்டியன்' தலையங்கம் எழுதியது. ஸ்னோடனைச் சமீபத்தில் சந்தித்தீர்கள். அமெரிக்காவுக்குத் திரும்பினால் அவருக்கு என்ன நடக்கும்?

அவரை மன்னித்துவிடும்படி நாங்கள் வாதாடவில்லை. பொதுநலன் கருதித்தான் இவற்றை வெளியிட்டேன் என்று அமெரிக்கா திரும்பிச் சொல்வதற்கு அவருக்கு வாய்ப்பு தரப்பட வேண்டும் என்றுதான் கூறினோம். உளவுச் சட்டப்படி அவர் மீது வழக்கு தொடரப்படக் கூடாது. அதுதான் அவருடைய நிலைப்பாடும்கூட என்று நினைக்கிறேன். அவர் இப்போது எங்கே இருக்கிறாரோ அங்கேயே இருப்பதுதான் அமெரிக்கர்களுக்கு ஏற்றதாக இருக்கிறது. அவரால் இப்போது எதையும் அம்பலப்படுத்த முடியவில்லை. ரஷ்யாவில் இருப்பது மிகவும் கடினமாக இருக்கிறது ஸ்னோடனுக்கு. அதேசமயம் அவரை விரும்பாதவர்கள் கூறக்கூடும், “பாருங்கள் ஸ்னோடன் எங்கே இருக்கிறார்? ரஷ்யாவில் (புகலிடம்) இருக்கிறார். மனித உரிமைகள் குறித்து அவருக்குக் கவலை இல்லை, இருக்கிறதா என்ன?” என்று அவர்கள் கேட்கக்கூடும்.

அமெரிக்காவில் இருக்க முடியவில்லையே என்று ஸ்னோடன் வருந்துகிறாரா?

அவர் அமெரிக்காவை நேசிக்கிறார், அங்கே வசிக்க விரும்பு கிறார். பெரும்பாலும் இணையதளம் மூலமே வாழ்ந்திருக் கிறார். எனவே இப்போதும் எதையும் இழந்துவிடவில்லை, தொடர்ந்து நண்பர்களுடன் தொடர்புகொள்கிறார்.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் அடுத்து அவர் புகலிடம் தேடுவது சரியாக இருக்குமா? அரசியல் புகலிடம் கோரி அவர் அளித்த விண்ணப்பங்களை அந்த நாடுகள் நிராகரிக்கவில்லையே?

லத்தீன் அமெரிக்க நாடுகள் அவருடைய முதல் தேர்வாக இருந்திருக்கலாம். சுமார் 20 நாடுகள் அவருடைய அரசியல் புகலிடக் கோரிக்கையை நிராகரித்தன. எனவே அவருக்கு மாற்று வழிகளே இல்லை. ரஷ்யாவுக்கு அவர் நன்றிக் கடன் பட்டிருந்தாலும் அவருடைய முதல் தேர்வு ரஷ்யாவாக இருந்திருக்காது. ரஷ்யர்களுக்குப் பொறுமை போய்விட்டால் அவர் எப்படி தென் அமெரிக்க நாடுகளிடம் அடைக்கலம் கோருவார் என்று தெரியவில்லை. அவர் தொடர்ந்து ரஷ்யாவிலேயே தங்கியிருப்பதற்கும் ஏதோ பேரம்தான் காரணம் என்கிறார்கள்.

ஸ்னோடன் பதிவுகள் வெளியாகி 2 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. அதைப் பற்றி போதிய அளவுக்கு விவாதங்கள் நடந்தனவா? நாட்டுப்பற்றுச் சட்டத்தின் சில பிரிவுகளை அமெரிக்காவின் சுதந்திரச் சட்டம் நீக்கிவிட்டது; இந்தச் சட்ட மாறுதல்கள் போதுமானவையா?

இது மிகவும் சிக்கலான விவகாரம். மற்றவர்கள் சொல்வதற்கு வாய்ப்பு தராமல், நாட்டின் பாதுகாப்புக்குப் பொறுப்பானவர்கள் மட்டும் முடிவு செய்கிற விஷயமல்ல இது; இதுகுறித்து ஏதோ ஓரளவுக்குத்தான் விவாதம் நடந்ததே தவிர போதுமான அளவுக்கு நடந்துவிடவில்லை. 'இந்த விவகாரங்கள் குறித்துப் பேச விரும்பவில்லை' என்ற நிலையிலிருந்த பாதுகாப்பு முகமைகள், 'பேசலாம் என்றே கருதுகிறோம்' என்று சொல்லும் அளவுக்கு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. சுதந்திரச் சட்டத்தால் விளைந்த மாறுதல்கள் போதுமானவையா என்று கேட்கிறீர்கள். தனக்கான விதிகள் என்ன என்பதை அந்தந்த நாடுதான் தீர்மானிக்க வேண்டும். 'எல்லாத் தகவல்களையும் அரசு சேகரிக்கும்' என்ற நிலையிலிருந்து, 'எல்லாத் தகவல்களையும் அரசு வைத்திருக்க வேண்டியதில்லை; தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அவற்றை வைத்துக்கொள்ளலாம்; தேவைப் படும் தகவல்களைக் கோரிப் பெற நாம் விதிமுறையை வகுத்துக்கொள்ளலாம்' என்று அரசு சொல்லும் அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது. என்னைப் பொருத்தவரை இந்த நிலைமாற்றமே முன்னேற்றம்தான். ஸ்னோடன் எழுப்பிய கேள்விகளுக்கு இது பதிலா என்றால், சந்தேகம்தான். தொழில்நுட்பம் வேகமாக மாறிவருகிறது, அதற்கு இணையாக சட்டமும் மாறுவது இயலாது.

பிரேசில், இந்தியா, ஜெர்மனி போன்ற நட்பு நாடுகளையும் 'தேசியப் பாதுகாப்பு முகமை' உளவு பார்த்திருக்கிறது. இதற்கு எதிர்வினையாக இணையதள உரிமைகள் மசோதாவை பிரேசில் நிறைவேற்றியது. இணையதள வீச்சு குறைவாக உள்ள இதர வளரும் நாடுகளிலும் இந்த விவாதம் பெரிதாகும் என்று நினைக்கிறீர்களா?

இதைப் பற்றி விவாதிக்க இன்னும் நேரம் இருப்பதால் வளரும் நாடுகள் சாதகமான நிலையில் இருக்கக் கூடும். மேற்கத்திய நாடுகளுடைய பிரச்சினை என்னவென்றால் எல்லாத் தொழில்நுட்பங்களும் திடீரென வந்துவிட்டன. “நம்மால் முடியும் என்பதால், நாம் செய்துவிடுவோம்” என்று அவை செய்துவிட்டன. நம்மால் முடியும் என்பதால் இப்படிச் செய்துவிட்டோமே இது சரியா என்று உளவு அமைப்பின் தலைவர்களில் சிலர் இப்போது சிந்தித்துவருகின்றனர். மேற்கத்திய நாடுகள் செய்ததைப் போலச் செய்வதற்கு முன்னால் இது சரியா, அவசியமா என்று நமக்குள் விவாதிப்போம் என்று வளரும் நாடுகள் முயற்சிக்க அவகாசம் இருக்கிறது.

அமெரிக்காவின் பாதுகாப்புக்காக மட்டுமல்ல, வர்த்தக, பொருளாதார ஆதாயங்களுக்காகக்கூட இந்த உளவு பார்க்கும் தொழில்நுட்பம் தங்களுக்கு உதவியதாகப் பாதுகாப்பு அதிகாரிகள் மார் தட்டிக்கொண்டதாக, 'ஒளி வதற்கு இடமே இல்லை' என்ற புத்தகத்தில் கிரீன்வால்ட் கூறியிருக்கிறார். 'பெட்ரோபிராஸ்' நிறுவனத்தை அமெரிக்கா குறிவைத்ததை அவர் சுட்டிக்காட்டுகிறார். இத்தகைய அதிகப்பிரசங்கித்தனமான செயல்களைக் கட்டுப்படுத்த வெறும் சட்டம் இயற்றினால் மட்டும் போதுமா?

இணையதளங்கள் எப்படி நிர்வகிக்கப்படுகின்றன என்று பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. எனக்குமே அதுகுறித்து மேலோட்டமாகத்தான் தெரியும். இந்தத் தகவல்கள் அம்பலமானபோது அமெரிக்கர்கள் தர்மசங் கடத்தில் நெளிந்தார்கள். காரணம், இணையதளத்தை வடிவமைத்தது அவர்கள்தான். பிறகு இதர நாடுகள் பின்பற்றின.

இணைய தளங்களைக் கண்காணிப்பது தொடர்பாக சட்டம் இயற்ற, பாதுகாப்பு முகமைகளில் பணிபுரிந்தவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசகர்களாக வைத்துக்கொள்ள வேண்டுமா?

உலகின் பெரும்பாலான நாடுகளைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர்கள் இதில் விற்பன்னர்கள் அல்ல என்று என் உள்ளுணர்வு சொல்கிறது. எனவே இந்தத் தொழில்நுட்பம், இதைப் பதிவுசெய்யும் முறை, இது மக்களின் உரிமைகளில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு, மக்களுடைய அந்தரங்க உரிமை ஆகியவற்றை நன்கு அறிந்த அந்தந்தத் துறை நிபுணர்களைக் கலந்தாலோசித்த பிறகு முடிவு செய்வது நல்லது.

பெரும் அளவில் தகவல்களைத் திரட்டுவதற்கு முன்னால் நீதித் துறையின் ஆணையைப் பெற வேண்டும் என்ற டேவிட் ஆண்டர்சனின் அறிக்கையில், பிரிட்டனை ஆளும் டேவிட் கேமரூன் அரசுக்கு ஆர்வம் இருப்பதைப் போலத் தெரியவில்லை. பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விஷயத்தில் சகிப்புத்தன்மை அதிகம் காட்டுகிறார்களா?

உலகம் முழுக்கவும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு என்று பொதுவான சில குணங்கள் உண்டு. நாட்டின் பாதுகாப்பை விட்டுக்கொடுப்பவர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. எங்காவது ஒரு வெடிகுண்டு வெடித்து சேதம் ஏற்பட்டால் மக்கள் அரசைத்தான் குற்றஞ்சாட்டுவார்கள். அதை எந்த அரசியல்வாதியும் விரும்புவதில்லை. இந்த விவகாரத்தில் திட்டவட்டமான நிலையை அவர்களால் எடுக்க முடிவதில்லை. தங்களை யாரும் குறைசொல்லிவிடக்கூடாது என்பதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்கறையாக இருக்கிறார்கள். ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு கோணத்தில் சிந்திக்கின்றன. கூகுள் என்ன நினைக்கிறது என்பதை ஜெர்மானியர்கள் விரும்புவதில்லை. கூகுள் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு மாதிரி நடந்துகொள்ள வேண்டியிருக்கிறது. மோசமாக நடந்துகொள்ளும் முகமைகளுடன் மல்லுக்கட்ட வேண்டிய அவசியம் பிரிட்டனுக்கு இல்லை, அமெரிக்காவுக்கு இருக்கிறது.

அரசின் உளவு வேலைகளை ஸ்னோடன் அம்பலப்படுத்திய பிறகு பத்திரிகையாளர்களைத் துழாவுவது அதிகரித்துவிடும் என்ற அச்சம் நிலவுகிறதே?

இது எல்லா பத்திரிகையாளர்களுக்குமான பொதுப் பிரச்சினை. அரசால் உங்களுடைய தகவல் தொடர்பு களை வேவுபார்க்க முடியும் என்பது மட்டுமல்ல; வேவு பார்க்கப்படுகிறீர்கள் என்பதே உண்மை. பத்திரிகையாளர்களுக்குத் தகவல்கள் எங்கிருந்து கிடைக்கின்றன என்று போலீஸார் பின்தொடர்ந் ததாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இது மிகவும் அபாயகரமான நிலைமை. இப்போது பத்திரிகையாளர்கள் கேட்க நேரும் கேள்விகளை 20 ஆண்டுகளுக்கு முன்னால் கேட்டிருக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x