Published : 13 Jul 2015 10:44 AM
Last Updated : 13 Jul 2015 10:44 AM

இது ஆரோக்கியமான வளர்ச்சியா?

தனியார் தன்நிதிப் பொறியியல் கல்லூரிகளின் இயக்கத்தைப் பற்றிய தங்கர் பச்சானின் கட்டுரை உண்மை நிலையைப் பிரதிபலிக்கிறது.

எம்.ஜி.ஆர். முதல்வரானவுடன் ‘இனி அரசு, கல்லூரிகளைத் தொடங்காது, அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கும் அனுமதி அளிக்காது, எல்லாம் சுயநிதிக் கட்டணக் கல்லூரிகள்தான்’ என்று அறிவித்தார். கல்லூரிகள் மட்டுமின்றி நர்சரிப் பள்ளி முதல் மருத்துவப் படிப்புவரை தனியார் நிறுவனங்கள் கோலோச்ச ஆரம்பித்தன.

தனியார் நிறுவனங்கள் வளர்ந்திட, அரசுக் கல்வி நிறுவனங்களின் தேவையையும் சேவையையும் குறைக்கும் முயற்சியில் அரசு இறங்கியது. புதிய கல்லூரிகளுக்குக் கணினி அறிவியல், நிர்வாக மேலாண்மைப் படிப்புகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டபோது, முதுபெரும் கல்லூரியான மாநிலக் கல்லூரியில் அப்படிப்புகளைத் தொடங்கப் பல ஆண்டுகாலம் காத்திருக்க வேண்டியதாயிற்று.

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் சுய நிதி நிறுவனங்களாகவே செயல்படுகின்றன. எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து வந்த அரசுகளும் அவரது கொள்கைகளையே மேலும் தீவிரமாகப் பின்பற்றியதன் விளைவு, இன்று தரமற்ற உயர்கல்விக் கூடங்கள் பரவி கல்வி வணிகத்தில் ஈடுபட்டுள்ளன.

ஏழு பொறியியல் கல்லூரிகளோடு தொடங்கிய தனியார் மையத் திட்டம் இன்று அளவுக்கு மீறி வளர்ந்து நிற்கிறது.

இவற்றின் செயல்பாட்டைக் கண்காணிக்க அரசு இயந்திரத்துக்கோ, பல்கலைக்கழகங்களுக்கோ தேவைப்படும் மனித சக்தியும் இல்லை. சாதாரண மக்கள் ஏமாற்றப்படுவதைக் குற்ற உணர்வு ஏதுமின்றி அரசு பார்த்துக்கொண்டிருப்பது வருத்தத்துக்கு உரியது.

நர்சரி முதல் மருத்துவம் வரை தரமான கல்வி எளியவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது. இது நாட்டின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு நல்லதல்ல.

- ச.சீ. இராஜகோபாலன்,சென்னை.

***



குப்பனோடு சில காலம்

எழுபதுகளில்… என்னுடைய கல்லூரி நாட்களில் கடிதம் எழுதும்போது, கடைசி வரியாக ‘இன்ஷா அல்லா' என்றே எழுதுவேன். ஜெயகாந்தனின் தாக்கம் அது.

குப்புசாமி மிக அழகாக நினைவுகூர்ந்திருந்தார். அவருடைய சொல்நயமும் சிறிய நிகழ்வுகளைக்கூட அழகாகச் சொல்லியிருந்த விதமும் வியக்க வைத்தது.

ஒரு நண்பருக்காக இவ்வளவு உருக முடியுமா என்பது வியப்பாக இருந்தது. அந்தக் குப்பனோடு சில காலம் பயணித்தது மன நிறைவாக இருக்கிறது.

- கேட்டி சிதம்பரம் ,சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x