Last Updated : 23 Jun, 2015 08:47 AM

 

Published : 23 Jun 2015 08:47 AM
Last Updated : 23 Jun 2015 08:47 AM

இன்றும் ஜப்பானியரின் நினைவில் உள்ள ‘போஸ்’

சமீபத்தில் ஜப்பானுக்குச் சென்றிருந்தேன். அங்கு என்னை வரவேற்று உபசரித்த ஜப்பானியர்களிடம், ‘நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பாக உங்களுடைய நினைவுகளிலிருந்து எதையாவது சொல்லுங்களேன்?’ என்று கேட்டேன். சுதந்திரப் போராட்ட வீரரான சுபாஷ் சந்திர போஸ் ஜப்பானியர்களுடன் இணைந்து பிரிட்டிஷாருக்கு எதிராகப் போரிட்டவர். அவருடைய அஸ்தி இப்போது டோக்கியோ நகர பவுத்த ஆலயத்தில் வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. எனவே அவர்களுக்கு ஏதாவது தெரிந்திருக்கும் என்று கேட்டேன். “இந்திய வரலாறு குறித்து ஆய்வு செய்யும் ஜப்பானியர்களுக்கு அதிகம் தெரிந்திருக்கலாம்; எங்களுக்கு ராஷ் பிஹாரி போஸைத்தான் அதிகம் தெரியும், அதுவும் டோக்கியோவாசிகளுக்கு” என்று பதில் அளித்தனர். ஜப்பானிய பிரபல ஹோட்டல்களில் இப்போதும் பரிமாறப்படும் இந்திய கறிக்கு அவர் காப்புரிமை வாங்கி வைத்திருக்கிறார்.

ராஷ் பிஹாரி போஸ் என்ற பெயர் கேள்விப்படாததல்ல. கல்கத்தா நகர மாணவனாக இருந்தபோது 27-ம் எண்ணுள்ள டிராமில் அவருடைய பெயரிலான நிழற்சாலை வழியாக அடிக்கடி சென்றிருக்கிறேன். சுபாஷ் சந்திர போஸுக்கும் ஏன், மகாத்மா காந்திக்கும் முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர். புரட்சியாளர். இந்தியாவுக்கு வெளியே அரசியல் புகலிடம் கோரியவர். 2015-ல் இந்தியாவைவிட ஜப்பானில் அவர் நன்றாக நினைவுகூரப்படுகிறார் என்பது எனக்கு தர்மசங்கடமாக இருந்தது.

ஹொக்கைடோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டகேஷி நகாஜிமா எழுதிய ராஷ் பிஹாரி போஸின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை பெங்களூரு திரும்பியதும் வாசித்தேன். பிரேம் மோத்வானி அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். ராஷ் பிஹாரி போஸ் 1915 ஜூன் மாதம் ஜப்பானிய நாட்டில் குடியேறியிருக்கிறார், இதை நான் எழுதுவதற்கு சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்னால். அதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவில் வைஸ்ராயைக் கொல்ல சதி செய்ததற்காக பிரிட்டிஷ் போலீஸாரால் தேடப்பட்டார் அவர்.

பிரிவினை தந்த எழுச்சி

வங்காள கிராமத்தில் 1886-ல் பிறந்தார் ராஷ் பிஹாரி. பிறகு சந்தன் நகர் என்ற ஊரில் வளர்ந்தார். அப்போது அது பிரெஞ்சுக்காரர்கள் வசம் இருந்தது. சிறு வயதிலேயே பிடிவாதமும் முன்கோபமும் அவருடைய குணங்களாக இருந்தன. பள்ளியிறுதி படிப்பை முடித்ததும் ராணுவத்தில் வேலைகேட்டு விண்ணப்பித்தார். வங்காளிகள் படிப்பாளிகள் மட்டுமே, மறவர்கள் அல்ல என்று கருதியதால் அவருடைய முயற்சி நிராகரிக்கப்பட்டது.

சிம்லாவுக்கு அருகில் உள்ள கசௌளி என்ற ஊரில் கிளார்க்காக வேலைக்குச் சேர்ந்தார். பிறகு டேராடூனில் உள்ள ‘வன ஆராய்ச்சிக் கழக’ வேலைக்கு மாறினார். பிரிட்டிஷ் அரசில் பணி செய்தாலும் அவர்களுடைய காலனியாதிக்க மனப்பான்மையைக் கடுமையாக எதிர்த்தார். வங்காளத்தை பிரிட்டிஷார் இரண்டு மாகாணங்களாகப் பிரித்தபோது அவருடைய கோபம் பொங்கிவழிந்தது. வங்காளத்திலும் பஞ்சாபிலும் செயல்பட்டுவந்த புரட்சிக்காரர்களோடு தொடர்புகொள்ளத் தொடங்கினார். வன ஆராய்ச்சிக் கழகத்தில் பணிசெய்தபோது ரசாயனங்களைக் கையாண்டு வெடிகுண்டு தயாரிக்கும் கலையைக் கற்றார். 1912-ல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் இந்தியத் தலைநகரமாக டெல்லி மாற்றப்பட்டது. அந்தக் கொண்டாட்டத்தைச் சீர்குலைக்க முடிவு செய்தார். அதில் அவருக்குத் துணையாக சேர்ந்த இன்னொரு வங்காளி இளைஞர் வசந்தகுமார் பிஸ்வாஸ். முகபடாம் அணிந்த யானை மீது அன்றைய பிரிட்டிஷ் வைஸ்ராய் ஹார்டிங் பிரபு ஊர்வலமாக வந்தபோது, ராஷ் பிஹாரி கொடுத்த வெடிகுண்டை அவர் மீது வீசினார் பிஸ்வாஸ். அது பயங்கர ஓசையுடன் வெடித்தது. ஹார்டிங் இறந்துவிட்டார் என்றே அனைவரும் நினைத்தனர். சிறு காயங்களுடன் அவர் தப்பிவிட்டார்.

அப்போது ஏற்பட்ட குழப்பத்தில் பிஸ்வாஸும் பிஹாரியும் தப்பிவிட்டனர். ராஷ் பிஹாரி அன்று மாலையே டேராடூன் செல்லும் ரயிலைப் பிடித்து ஊருக்குத் திரும்பிவிட்டார். வன ஆய்வுக் கழகத்தில் பணியைத் தொடர்ந்தார். அவருடைய இரட்டை வாழ்க்கை யாருக்கும் தெரியவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு ஹார்டிங் பிரபு, டேராடூனுக்கு வந்தபோது அவருக்களித்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு ராஷ் பிஹாரிதான் ஏற்பாடுகளைச் செய்தார். டெல்லியில் நடந்த கொடூரமான தாக்குதலிலிருந்து பிரபு தப்பியதற்கு அந்த நிகழ்ச்சியில் இறைவனுக்கு நன்றிகூட தெரிவிக்கப்பட்டது!

டோக்கியோவாசம்

ராஷ் பிஹாரியுடன் சேர்ந்து செயல்பட்ட சில புரட்சிக்காரர்களைக் கைதுசெய்து விசாரணை செய்த போலீஸாருக்கு அவர் மீதும் சந்தேகம் ஏற்பட்டது. தானும் கைது செய்யப்படலாம் என்று ஊகித்த ராஷ் பிஹாரி உடனே சந்தன் நகருக்கு ஓடினார். அங்கு ஓராண்டு தலைமறைவாக இருந்தார். அடிக்கடி பனாரஸ் (காசி) சென்று வந்தார். 1915 ஏப்ரலில் புதிய பெயரில் ஜப்பானுக்குக் கப்பலில் தப்பிச் சென்றார். 1915 ஜூன் 5-ல் கோபே நகருக்குச் சென்ற அவர் ரயில் மூலம் டோக்கியோ சென்றார். ஜப்பானில் தலைமறைவு வாழ்க்கை நடத்திவந்த சீன தேசியவாதி சுன்யாட் சென்னை அங்கு சந்தித்தார். சுன் ஷோங்ஷான் என்ற பெயரில் அவர் அங்கு வாழ்ந்துவந்தார். இந்தியா மீது அனுதாபம் கொண்ட ஜப்பானியப் பத்திரிகையாளர்கள், இதர ஆசிய நாட்டவர்களுடன் ராஷ் பிஹாரி தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார்.

டோக்கியோவில் ராஷ் பிஹாரி இருக்கிறார் என்பதை அறிந்த பிரிட்டிஷ் அரசு, அவரைக் கைதுசெய்து இந்தியாவுக்கு அனுப்பிவைக்குமாறு ஜப்பானிய அரசைக் கேட்டுக்கொண்டது. பிஹாரியின் நண்பர்கள் அவரை நகாமுராயா பேக்கரியின் சொந்தக்காரர் வீட்டுக்குக் கூட்டிச்சென்று அங்கே தலைமறைவாக இருக்குமாறு கூறினார்கள். பேக்கரித் தொழிலாளர்கள் அவர் அங்கே மறைந்து வாழ உதவினர். அப்போது அந்த வீட்டுப் பெண்களுக்கு இந்தியாவில் கறி (மசால்) எப்படி செய்கிறார்கள் என்று கற்றுக்கொடுத்தார். அதே சமயம், ஜப்பானிய வணிகக்கப்பல் மீது பிரிட்டிஷ் கப்பல் பீரங்கியால் சுட்டதால் இரு நாடுகளிடையே உறவு மோசமானது. எனவே ராஷ் பிஹாரியை வெளியேற்றும் உத்தரவு கிடப்பில் போடப்பட்டது.

பேக்கரியில் தலைமறைவாக இருந்த ராஷ் பிஹாரி போஸ் மீது நகாமுராயாவுக்கு அன்பு பிறந்தது. அவர் மீதான கைது ஆணை நீங்கிவிட்டதால் தனது மகள் தோஷிகோவை அவருக்கு 1918 ஜூலையில் திருமணம் செய்துவைத்தார். அத்தம்பதியருக்கு அடுத்தடுத்து 2 குழந்தைகள் பிறந்தன. 1925-ல் நிமோனியா காய்ச்சலுக்கு தோஷிகா இரையானார். (இறுதிச் சடங்கின்போது சம்ஸ்கிருத சுலோகங் களைச் சொல்லிக்கொண்டிருந்தாராம் ராஷ் பிஹாரி.)

காந்தி, சுபாஷ் சந்திரபோஸ்

தன்னுடைய துயரங்களை அரசியல் செயல்கள் மூலம் மறக்கத் தொடங்கினார் ராஷ் பிஹாரி. டோக்கியோவில் ‘இந்திய சங்கம்’ ஏற்படுத்தினார். மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் ஆபத்துகளை அதன் வாயிலாக பிற ஆசிய நாட்டவர்களிடம் எடுத்துரைத்தார். ஜப்பானிய மொழியில் சரளமாக எழுதவும் பேசவும் கற்றார். 1927-ல் இந்தியக் கறியை மாமனாருடைய ஹோட்டலில் முறைப்படி அறிமுகப்படுத்தினார். அது உடனே பிரபலமாகிவிட்டது. அதுவரை ஜப்பானியர் விரும்பிச் சாப்பிட்ட பூரணம் அடைத்த பன்னைவிட கறி வேகமாக விற்பனையானது. அதே சமயம் அவர் அரசியலிலும் கவனம் செலுத்திவந்தார். காந்திஜியை ஆசிரியராகக் கொண்ட ‘யங் இந்தியா’ பத்திரிகையை வாங்கிப் படித்தார். காந்திஜியின் மிகப் பெரிய சொத்து அவருடைய பேச்சுத் திறனோ சிந்தனைகளோ அல்ல, அவருடைய தியாக உணர்வுதான் என்ற முடிவுக்கு வந்தார். காந்திஜியின் எளிய வாழ்க்கை முறையும் நேர்மையுமே கோடிக்கணக்கான இந்தியர்களிடம் விடுதலைப் போராட்டத்தைக் கொண்டு சென்றிருக்கிறது என்று உணர்ந்தார்.

1934-ல் சுபாஷ் சந்திர போஸ் என்ற இளம் தலைவரின் பேச்சும் செயல்களும் அவரைக் கவர்ந்தன. இந்திய இளைஞர்களால் மிகவும் மதிக்கப்பட்ட தலைவர் என்று புகழ்ந்தார். “நான் மிகவும் மதிக்கும் காந்திஜி, இந்தியத் துறவி - நேற்றைய தினத்துக்குச் சொந்தக்காரர்; சுபாஷ் சந்திர போஸ் இன்றைய நாளுக்குரியவர்” என்று 6 ஆண்டுகளுக்குப் பிறகு எழுதினார் ராஷ் பிஹாரி போஸ்.

இரண்டாம் உலகப் போர்

இரண்டாம் உலகப் போர் 1942 பிப்ரவரியில் மூண்டது. சிங்கப்பூரில் பிரிட்டிஷ் படைவசம் இருந்த பாசறையை ஜப்பான் கைப்பற்றியது. அங்கே சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய சிப்பாய்கள், தாய்நாட்டின் விடுதலைக்காகப் போரிட மோகன் சிங் என்பவர் தலைமையில் ஜப்பானியருடன் சேர்ந்துகொண்டனர். இதனால் உற்சாகமடைந்த ராஷ் பிஹாரி, டோக்கியோவிலிருந்து பாங்காக் மாநாட்டுக்குச் சென்றார். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் (ஐ.என்.ஏ.) என்ற படையை ‘இந்திய தேசிய லீக்’ (ஐ.என்.எல்.) என்ற அமைப்பின் கீழ் கொண்டுவருவதாக அறிவித்தார். அந்த லீகின் தலைவர் அவர்தான். அப்போது பெர்லினில் இருந்த நேதாஜியுடன் தொடர்புகொண்ட ஜப்பானியர் அந்தப் படையை வலுப்படுத்த விரும்புவதாகத் தெரிவித்தனர். 1943 மே மாதம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ஜப்பானை அடைந்தார். நேதாஜியுடன் வங்க மொழியில் பேசிய ராஷ் பிஹாரி, ‘இந்திய சுதந்திர லீக்’ தலைமையை அவருக்கு அளித்தார்.

அதன் பிறகு அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் குறித்து மாத வாரியாகவும், ஆண்டு வாரியாகவும் வரலாற்று அறிஞர்கள் விரிவாக எழுதியுள்ளனர். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறித்து பல்வேறு மர்மங்கள் இன்னமும் தீர்க்கப்படாமலேயே தொடர்கின்றன. 1944 பிப்ரவரியில் ராஷ் பிஹாரிக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டு உடல் நிலை மோசமானது. 1945 ஜனவரி 21-ல் அவருடைய மூச்சு அடங்கியது. அப்போது அவருக்கு வயது 58.

ராஷ் பிஹாரி போஸின் கடைசி நாள்களில் மருத்துவர்கள் அவரைச் சோதித்துவிட்டு, “பசி எப்படி இருக்கிறது” என்று கேட்பார்களாம். “எனக்குப் பிடித்த கறியைச் சாப்பிட அனுமதிப்பதில்லை, பசி எப்படி இருக்கும்” என்று பதிலளிப்பாராம்.

- ராமச்சந்திர குஹா, ‘இந்தியா ஆஃப்டர் காந்தி' உள்ளிட்ட வரலாற்று நூல்களின் ஆசிரியர்

தமிழில் சுருக்கமாக: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x