Last Updated : 25 Jun, 2015 10:30 AM

 

Published : 25 Jun 2015 10:30 AM
Last Updated : 25 Jun 2015 10:30 AM

நெருக்கடி நிலையில் 40 ஆண்டுகள்: கருப்பு நினைவுகள்

நெருக்கடி நிலைப் பிரகடனத்துக்கு முன்னதாகவே இந்திராவின் சர்வாதிகாரம் இந்தியாவைப் பீடிக்கத் தொடங்கிவிட்டது. வங்கதேசப் போருக்குப் பின் துர்கையாக காங்கிரஸாரால் முன்னிறுத்தப்பட்ட இந்திரா காந்தி, உண்மையாகவே தன்னை அப்படித்தான் கருதிக்கொண்டார். கட்சியிலும் ஆட்சியிலும் முழு அதிகாரத்தையும் தன் பிடிக்குள் கொண்டுவந்த இந்திரா, ஒருகட்டத்தில் நாட்டின் அரசமைப்புகளையும் தன் விரல் நுனி அசைவுக்குக் கொண்டுவரும் காய்களை நகர்த்தினார்.

நிர்வாகத்திலும் நீதித் துறையிலும் ஆளும் கட்சிக்கு - குறிப்பாக பிரதமருக்கு, ஆதரவாகச் செயல்படும் எண்ணம் உள்ளவர்களே பதவியில் இருக்க முடியும் என்பது அறிவிக்கப்படாத கொள்கையாகவே மாறியது. பிரதமரின் செயலகத்தில் முதன்மைச் செயலராக இருந்த பி.என். ஹக்சர் இதை வெளிப்படையாகவே அறிவித்தார். முன்னதாக, கோலக்நாத் வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியது. அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகள் உட்பட எதையும் பாதிக்கும் வகையில் அரசியல் சட்டங்களைத் திருத்தும் உரிமை நாடாளுமன்றத்துக்குக் கிடையாது என்பதே அது. இந்தத் தீர்ப்பைச் செல்லாததாக்கும் வகையில் 1971-ல் நாடாளுமன்றம் மூலம் 24-வது சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியது அரசு. இந்திரா அரசு செல்லவிருக்கும் பாதையை இதுவே தெள்ளத்தெளிவாகக் காட்டிவிட்டது என்று சொல்லலாம்.

அதிபர் இந்திரா

சீக்கிரமே இந்திராவின் மன ஓட்டத்தை அவருடைய நெருங்கிய சகாக்கள் வி.சி. சுக்லா, பிரணாப் முகர்ஜி, ஓம் மேத்தா, எஸ்.எஸ். ராய், பன்சிலால் போன்றோர் கட்சிக்குள் விதைத்தனர். விளைவு, “எதிர்க் கட்சிகளின் அக்கப்போர் அரசியலால் நிர்வாகத்தைச் செம்மையாகக் கவனிக்க முடிவதில்லை, பிரிட்டிஷ் நாடாளுமன்றப் பாணியை ஒட்டிய நிர்வாக முறைக்குப் பதிலாக, சுயமாகச் சட்டம் இயற்றிக்கொள்ளக்கூடிய (அமெரிக்க) அதிபர் பாணி அரசியல் முறைக்கு மாற வேண்டும்” என்று முன்னணி காங்கிரஸார் பலரும் பேச ஆரம்பித்தனர். எதிர்க் கட்சிகள், எதிர்க் குரல் என்றாலே எரிச்சலடைய ஆரம்பித்தார் இந்திரா. அப்போதுதான் அது நடந்தது.

சின்ஹாவின் அதிர்ச்சி வைத்தியம்

உத்தரப் பிரதேசத்தில் ராய் பரேலி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான இந்திரா காந்தியை எதிர்த்து சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராஜ் நாராயண் 1971-ல் போட்டியிட்டுத் தோற்றார். ஆனால், தேர்தலின்போது அதிகார துஷ்பிரயோகம் நடந்ததாகவும் வாக்காளர்களுக்குப் பணம் தரப்பட்டதாகவும் வழக்கு தொடுத்தார். அலாகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஜக்மோகன் லால் சின்ஹா 1975 ஜூன் 12-ல் அளித்த அதிரடியான தீர்ப்பில், இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாது என்று அறிவித்தார்.

6 ஆண்டுகளுக்கு எந்தத் தேர்தலிலும் அவர் போட்டியிடத் தடையும் விதித்தார். லஞ்சப் புகாரை நிரூபிக்க ஆதாரம் இல்லை என்ற அவர், அரசு அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்ட குற்றச்சாட்டை ஏற்றார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் இந்திரா காந்தி. நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் மனுவை விசாரித்தார். “ஒரு பிரதமராக நீடிக்க இந்திராவுக்குத் தடை இல்லை என்றாலும், அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்குரிய உரிமைகள், சலுகைகளைப் பெற முடியாது. நாடாளுமன்றத்தில் தீர்மானங்கள் மீது வாக்களிக்கும் உரிமையும் அவருக்கு இல்லை” என்றார்.

துஷ்பிரயோக வெற்றி

எதிர்க் கட்சிகள் இதை ஏற்கவில்லை. அதிகார துஷ்பிரயோகத்தால் தேர்தலில் வென்றவர் என்ற குற்றச்சாட்டு நீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்திரா காந்தி பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுப் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற முழக்கத்துடன் போராட்டத்தில் இறங்கின. டெல்லியில் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெயப்பிரகாஷ் நாராயண், ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட வேண்டும் என்று மக்களுக்கு அழைப்பு விடுத்தார். ஆட்சியாளர்களின் தவறான, சட்டத்துக்குப் புறம்பான ஆணைகளை போலீஸ் அதிகாரிகள் ஏற்காமல் நிராகரிக்க வேண்டும் என்றார்.

இந்திராவுக்கு ஏற்பட்ட நெருக்கடி

தனக்கு ஏற்பட்ட நெருக்கடியை நாட்டுக்கு ஏற்பட்ட நெருக்கடியாக மாற்றினார் இந்திரா. உள்நாட்டுக் கலகத்துக்கு எதிர்க் கட்சிகள் திட்டமிட்டிருக்கின்றன; நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்று கூறி, மத்திய அமைச்சரவையைக்கூட ஆலோசனைக்கு அழைக்காமல், தானாகவே ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, அப்போதைய குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அஹம்மதுவுக்கு அனுப்பினார். அதை ஏற்று 1975 ஜூன் 24-ல் நெருக்கடி நிலை நிலவுவதாக அவசரச் சட்டம் மூலம் அறிவிப்பை வெளியிட்டார் பக்ருதீன் அலி அஹம்மது.

அமலுக்கு வந்தது நெருக்கடி நிலை

அன்றிரவே நாட்டின் முக்கியமான அனைத்துப் பத்திரிகை அலுவலகங்களின் மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் நாடு முழுக்கக் கைது செய்யப்பட்டு, இரவோடு இரவாகச் சிறைகளில் அடைக்கப்பட்டனர். அரசை எதிர்க்கும் அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அனைத்துத் தேர்தல்களும் நிறுத்திவைக்கப்பட்டன. மேற்கு வங்க முதல்வர் சித்தார்த்த சங்கர் ராய், நெருக்கடி நிலை கொண்டுவருவதற்கான வாய்ப்பை அரசியல் சட்டம் வழங்குவதை இந்திரா காந்திக்குக் கடிதம் வாயிலாகத் தெரிவித்து ஆலோசனை வழங்கினார். இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி உள்ளிட்டோர் பதவி ஏதுமில்லாமலேயே அதிகாரங்களைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டனர்.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இந்த நெருக்கடி நிலை அமல் நீட்டிக்கப்பட்டு வந்தது.

வானொலி, பத்திரிகைகளில் செய்திகள் தணிக்கை செய்யப்பட்டன. கைதானவர்களுக்கு அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. அவர்களுடைய குடும்பத்தினருக்கும் தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (மிசா) கைதுகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. பொதுக்கூட்டங்கள், போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அரங்குகளில் கூட்டம் நடத்த போலீஸ் அனுமதி தேவை என்று வலியுறுத்தப்பட்டது. திரைப்படங்கள், நாடகங்கள்கூட அரசியல் கருத்துகளுக்காகத் தடைக்கு உள்ளாயின. எழுத்துரிமை, பேச்சுரிமை, கருத்துரிமைகள் ஒடுக்கப்பட்டன.

நிர்வாகச் சீர்திருத்தம்

இதற்கிடையே விவசாயத்திலும் தொழில்துறையிலும் உற்பத்தி பெருக 20 அம்சத் திட்டம் வகுக்கப்பட்டு, நாடு முழுக்க விளம்பரப்படுத்தப்பட்டது. அரசு ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு அலுவலகங்களுக்கு வர வேண்டும். ரயில், விமானம் போன்றவை காலதாமதமின்றி ஓட வேண்டும் என்றெல்லாம் கூறப்பட்டு, அது வானொலிகள் மூலம் பிரச்சாரமாகவும் மேற்கொள்ளப்பட்டது. அரசியல் சட்டத்தின் 352-வது பிரிவின் கீழ், இந்திரா காந்தி அதிக அதிகாரங்களைப் பெற்று நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இந்தியாவில் இடதுசாரிகளும் வலதுசாரிகளும் ஒரே நேரத்தில் தாக்குதலுக்குள்ளாகி தலைமறைவு வாழ்க்கையில் அரசியலில் ஈடுபட்டது நெருக்கடி நிலையின்போதுதான். ஆர்எஸ்எஸ், ஜமாத்-இ-இஸ்லமி இரண்டும் தடைசெய்யப்பட்டன. ஜெயப்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய், விஜயராஜே சிந்தியா, சரண் சிங், ஆசார்ய கிருபளானி, அடல் பிஹாரி வாஜ்பாய், எல்.கே. அத்வானி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், சத்யேந்திர நாராயண் சின்ஹா உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டனர். தேசிய அளவில் நெருக்கடி நிலைக்கு அதிக விலை கொடுத்த கட்சிகளில் ஒன்றானது திமுக. மு.கருணாநிதி தலைமையிலான அரசு கலைக்கப்பட்டது. தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டார். நெருக்கடி நிலை அமலில் இருந்தாலும், கைதுசெய்யப்படும் ஒருவர் தனது கைதை எதிர்த்து வழக்கு தொடர உரிமை உண்டு என்று ஒன்பது உயர் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கின. ஆனால், இந்திரா காந்தியின் ஆதரவாளராக அறியப்பட்ட ஏ.என். ராய் தலைமையிலான உச்ச நீதிமன்றமோ அவற்றையெல்லாம் நிராகரித்தது. நெருக்கடி நிலைக் காலத்தில் கைது செய்யப்படுகிறவருக்கு அதற்கான காரணத்தைக் கூற வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிவிட்டது.

ரத்த சாட்சியம் ராஜன்

கேரளத்தில் கோழிக்கோடு பிராந்தியப் பொறியியல் கல்லூரி மாணவர் பி. ராஜன் என்பவர் நெருக்கடி நிலைக் காலத்தில் கைதுசெய்யப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, போலீஸ் காவலிலேயே இறந்தார். அது நாடு முழுக்கப் பேசப்பட்டது. நெருக்கடி நிலை நீங்கிய பிறகும்கூட அவருடைய வழக்கும் விசாரணைகளும் பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்தன. கடைசிவரை அவருடைய உடல் கிடைக்கவே இல்லை.

கொடூரமான குடும்பக் கட்டுப்பாடு

மக்கள்தொகைப் பெருக்கத்தைத் தடுக்க குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்ற இலக்கை எட்ட அதிகாரிகள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். வீடில்லாததால் வீதிகளில் படுத்திருந்தவர்கள், நள்ளிரவில் பஸ், ரயில்களைத் தவறவிட்டதால் பொது இடங்களில் தூங்கியவர்கள், ஏழைகள், சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று அப்பாவிகள் பலர் வலுக்கட்டாயமாகக் கருத்தடை அறுவைச் சிகிச்சைக்கு ஆளாக்கப்பட்டனர். டெல்லியில் துருக்மான் கேட் என்ற பகுதியில் அங்கீகாரம் இல்லாமல் குடிசையில் வாழ்ந்த மக்கள் முன்னறிவிப்புகூடத் தரப்படாமல் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். குடிசை வீடுகளை புல்டோசர்கள் தகர்த்துத் தரைமட்டமாக்கின. இதில் சிலர் பலியானதாகவும் கூறப்பட்டது. கருத்தடையை இந்தியில் ‘நஸ்பந்தி’ என்று அழைப்பார்கள். அப்போது வட இந்திய மக்களிடையே ஒரு கோஷம் மிகவும் பிரபலம்: ‘நஸ் பந்திகே தீன் தலால் - இந்திரா, சஞ்சய், பன்சிலால்’.

20 அம்சத் திட்டம் என்பது ஆரம்பத்தில் நல்ல பெயருடன் தொடங்கி, பிறகு மரியாதையை இழந்தது. அதிகாரிகள் மெத்தனம் காட்டினர். கடைசியில், அதைக் கேலி செய்யும் கோஷங்கள் பிரபலமாயின. ‘பிராப்ளம்ஸ் ஆர் பிளன்டி, பாயிண்ட்ஸ் ஆர் டுவென்டி, ரிசல்ட்ஸ் ஆர் எம்ப்டி’ என்பது இடதுசாரி மாணவர் இயக்கங்களால் பிரபலமானது.

இந்தியாவில் நெருக்கடி நிலை அமலில் இருந்த 21 மாதங்களில் 1,40,000 பேர் கைது செய்யப்பட்டதாக ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்தது. ஆனால், உண்மையான எண்ணிக்கை இதைவிடவும் அதிகமாக இருந்திருக்கக் கூடும்.

தேர்தலை அறிவித்தார் இந்திரா

மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகளின் அறிக்கைகளை நம்பி, 1977 ஜனவரி 18-ம் தேதி மக்களவைக்குப் பொதுத் தேர்தலை அறிவித்த இந்திரா காந்தி, எதிர்க் கட்சித் தலைவர்களை விடுதலை செய்தார். நெருக்கடி நிலையை மார்ச் 23-ல் நீக்கினார். அதற்குப் பிறகு ஸ்தாபன காங்கிரஸ், ஜனசங்கம், சோஷலிஸ்ட்டுகள், பாரதிய லோகதளம் ஆகிய நான்கு பெரிய எதிர்க் கட்சிகள் ஒரே அரசியல் கட்சியாக (ஜனதா) உருவெடுத்தன. “இந்தத் தேர்தல் ஜனநாயகமா, சர்வாதிகாரமா எது தேவை என்பதைத் தேர்வு செய்வதற்கான கடைசித் தேர்தல்” என்றே எதிர்க் கட்சிகள் பிரச்சாரம் செய்தன. வட இந்தியாவில் ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. இனியொரு முறை நெருக்கடி நிலையை மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறாமல் கொண்டுவர முடியாதபடிக்கு அரசியல் சட்டம் திருத்தப்பட்டது.

ஷா கமிஷன்

நெருக்கடி நிலையைக் கொண்டுவந்தவர்கள் யார், ஏன் என்பதை ஆராய நீதிபதி ஷா தலைமையில் விசாரணைக் கமிஷன் கொண்டுவரப்பட்டது. வாய்மொழி உத்தரவுகளை அதிகாரிகள் அமல்படுத்தக் கூடாது என்ற முக்கியப் பரிந்துரையை அது செய்தது. ஜனதா கட்சியின் தலைவர்களுக்கிடையிலான பதவிப் போட்டி காரணமாக அந்தக் கட்சி பிளவுபட்டது, ஆட்சியும் பறிபோனது. அடுத்த மக்களவைப் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. இந்திரா காந்தியே மீண்டும் பிரதமரானார்.

நெருக்கடி நிலை ஆட்சியை மீண்டும் நினைவுகூர சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே.அத்வானி, அப்படிப்பட்ட நிலை மீண்டும் ஏற்படுவதற்கான காரணிகள் இப்போதும் நிலவுகின்றன என்று பூடகமாக எச்சரித்திருக்கிறார். அவர் அதை விவரிக்கா விட்டாலும் இந்திரா காந்தி காலத்தைப் போலவே பிரதமர் அலுவலகம் என்பது அதிகாரக் குவி மையமாக இருப்பதைக் காண முடிகிறது. நாம் நெருக்கடியிலிருந்து நிரந்தரமாக மீண்டோமா இல்லையா என்பதைக் காலம்தான் கூற முடியும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x