Published : 21 Jun 2015 12:01 PM
Last Updated : 21 Jun 2015 12:01 PM

சாதனா என்னும் அற்புதம்

நாம் பிறக்காத ஒரு கலாச்சாரம் குறித்த தேடலில் ஈடுபடும்போது சில விசித்திரங்கள் நிகழ்ந்துவிடக்கூடும். நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரின் ‘சாதனா’ என்னும் நூலை நான் படித்திருக்கிறேன். மெதுவாகவும் ஆழமாகவும் அந்நூலைப் படித்தேன். யோகப் பயிற்சிகளில் ஆழமாக ஈடுபடும்போது இதை நான் ஏற்கெனவே செய்துகொண்டிருக்கிறேனே என்னும் எண்ணம் ஏற்பட்டது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு தற்செயலாகத்தான் யோகா வைப் பற்றி அறிந்தேன். கற்றுக்கொள்ள ஆரம்பித்தபோது அது குழப்பமானதாக இருந்தது. கடினமானதாக இருந்தது. என் காலைப் போதிய அளவு நீட்ட முடியவில்லை. உடலை வேண்டிய அளவுக்கு வளைக்க முடியவில்லை. உடலை நளினமாகக் கையாள முடியவில்லை. நான் நடனம் ஆடுபவள். உடல் அசைவுகளில் அழகு என்பது நடனத்துக்கு முக்கியம். ஆனால், யோகா செய்யும்போது அதைக் கொண்டுவர மிகவும் கஷ்டப்பட வேண்டியிருந்தது. யோகா செய்யும்போது கடுமையாக மூச்சு வாங்கியது. அவமானம் என்றால் என்னவென்று யோகா எனக்குக் கற்றுத் தந்தது.

மெல்ல மெல்ல ஆசனங்களுக்கு என் உடல் பழகியது. என் மூச்சுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டால் என் உறுப்புகளை உயிர் (பிராண) சக்தியால் நிரப்ப முடியும் என்பதை யோகா கற்றுக்கொடுத்தது. கட்டுப்பாட்டைப் பயிற்சி செய்தால் அமைதி கிடைக்கும் என்பதை யோகா உணர்த்தியது. மிகுந்த அமைதியை அளிக்கும் உடற்பயிற்சி இது என்பதை அறிந்து கொண்டேன். பல்வேறு யோகாசனங்களைச் செய்து, கடைசியில் சவாசனத்தை அடையும்போது அப்படி ஓர் அமைதி ஏற்படும்.

அன்று முதல், சவாசனத்திலும் அதை எட்டுவதற்கான பயணத்திலும் கிடைக்கும் அமைதியைத் தேடும் முயற்சிகளை எடுத்துவருகிறேன். 2013-ல் யோகா ஆசிரியரான டி.எல்.ஜாக்சனைச் சந்தித்தேன். அவர் மூலமாகவே, யோகா என்றால் என்ன என்பதன் ஆழமான புரிந்துணர்வு ஏற்பட்டது. பிறகு, யோகாசனங்களுக்கான ஆசிரியர் பயிற்சியையும் எடுத்துக்கொண்டேன்.

சுவாசம் ஆன சாதனா

பயிற்சியின் ஒரு பகுதியாக தியானம், பிராணாயாமம், ஆசனங்கள் ஆகியவை ‘வீட்டுப் பாடங்க’ளாகக் கொடுக்கப் பட்டன. ஒவ்வொரு கட்டத்திலும் புதிய, எளிய நடைமுறைகள் சொல்லித்தரப்பட்டன. அவற்றை வெறுமனே செய்ய வேண்டியதுதான். ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டும். இந்தப் பயிற்சிகள் வாழ்க்கையையே மாற்றுபவையாக இருந்தன. தினசரிப் பயிற்சி, கட்டுப்பாடு, விடா முயற்சி ஆகியவையே சாதனா எனப்படுவது. முறையான பயிற்சி முடிந்த பிறகு, இந்த சாதனா சுவாசம்போல ஆகிவிட்டது. வாழ்க்கையாகவே மாறிவிட்டது. தாகூரின் சாதனா என்னும் நூலைப் புரிந்துகொள்வதற்கான புதிய பார்வையை இந்தப் பயிற்சி எனக்கு அளித்தது. முற்றிலும் புதியதாக அது தன்னை வெளிப்படுத்திக்கொண்டது.

யோகா எனும் கடல்

வேகமும் பரபரப்பும் கொண்ட இந்த நகர்ப்புற வாழ்வு நமது உபரி நேரத்தைச் சாப்பிட்டுவிடுகிறது. யோகா ஸ்டுடியோவுக்குப் போக வேண்டுமென்றாலே நெடு நேரம் பயணிக்க வேண்டும் என்னும் நிலையில் பயிற்சிக்கு எதை, எப்படித் தேர்ந்தெடுப்பது? இப்படி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு நெருக்கடி. யோகப் பயிற்சி என்னும் பரந்த கடலிலிருந்து நமக்கான பயிற்சியை எப்படித் தேர்ந்தெடுப்பது?

முதலில் எளிமையான ஒரு பயிற்சியைத் தேர்ந்தெடுக்கலாம். தீர்க்க பிராணாயாமம் (மூன்று பகுதிகள் கொண்ட ஆழ்ந்த சுவாசம்). இது மூச்சுக்கு அமைதியையும் ஆழத்தையும் கூட்டுகிறது. அடி வயிறு, விலாப் புறம், மார்பின் மேல் புறம் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தப்படுகிறது. இந்த இடங்களில் மூச்சுக் காற்று நிறைகிறது. மூச்சை உள்ளே இழுப்பதும் வெளியே விடுவதும் நாம் எப்போதும் செய்வதுதான். ஆனால், மூச்சின் திறனைக் கூட்டும் விதத்தில் பிராணாயாமம் இதைச் செய்கிறது. இதைத் தினமும் செய்யுங்கள். சிக்கல்களோ கேள்விகளோ இல்லாமல் 90 நாட்கள் தொடர்ந்து செய்யுங்கள். எல்லா விதமான சாக்குப்போக்குகளையும் கவனச் சிதறல்களையும் மனம் தூர எறிந்துவிடும்.

இது எனக்குப் பலன் தந்தது. முதலில் அது வெறும் ‘வீட்டுப் பாடம் அல்லது பயிற்சி.’ நாளாக நாளாக நான் அதில் ஆழ்ந்துபோனேன். வாராந்தர வகுப்புகளிலோ சிறப்புப் பயிலரங்குகளிலோ இதர வகுப்புகளிலோ இதை நான் சொல்லித்தரும்போது விளைவுகள் கண்கூடாகத் தெரிகின்றன. பயில்பவர்களின் கண்களில் பிரகாசம் கூடுகிறது. முகங்களில் ஒளி ஏறுகிறது. அவர்கள் சுவாசம் அமைதிகொள்கிறது. முன்பைவிட நன்றாகத் தூங்குகிறார்கள். பலனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் இது தன்னளவில் ஓர் ஆன்மிகப் பயிற்சியாகிறது.

சாதனாவில் தொடர்பயிற்சி என்பதும் முக்கியம். ஒவ்வொரு நாளும் என்று இதற்கு அர்த்தம் இல்லை. ஒவ்வொரு புதன்கிழமையாகவும் இருக்கலாம். ‘தர்மா இன்ஸ்பைர்டு யோகா’ என்னும் அமைப்பின் சார்பில் நான் எடுக்கும் பயிற்சி வகுப்புக்கு வருபவர்களால் வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே யோகப் பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடிகிறது. ஒவ்வொரு புதன்கிழமை என்று 90 நாட்கள், 108 நாட்கள் என்று ஒரு திட்டத்தை வைத்துக்கொண்டு அதன்படி விடாமல் செய்துவரலாம்.

யோகாவைக் கற்பிப்பதில் முக்கியமான அம்சம் என்னவென்றால், நாம் சொல்லித்தருவதை நாமே செய்வது. நகரில் பயணங்கள் ஒரு நாளின் பெரும்பகுதியை எடுத்துக்கொண்டுவிடுகின்றன. மின்னஞ்சல் மற்றும் இதர வேலைகளும் நேரத்தைப் பிடுங்கிக்கொள்கின்றன. இவற்றுக்கு இடையே மேற்கொள்ளும் யோகப் பயிற்சிகளால் என்னைப் போன்ற ஒரு புதிய ஆசிரியருக்குக் கிடைக்கும் உயிர்த் துடிப்பும் ஆற்றலும் மிகவும் உதவிகரமாக இருக்கின்றன. எல்லாம் நமக்குள் இருக்கின்றன என்பார் எங்கள் யோகப் பயிற்சி மையத்தின் நிறுவனர் தர்ம மித்ரா. நமது பல்வேறு அன்றாட நடவடிக்கைகளிலிருந்து சாதனாவுக்கான பயிற்சியை வேறுபடுத்துவது எது?

ஆனந்த வீற்றிருப்பு

செயலுக்குப் பின் உள்ள பிரக்ஞைபூர்வமான நோக்கம்தான் சாதனாவைப் பிற நடவடிக்கைகளிலிருந்து வேறுபடுத்துகிறது. இத்தகைய நோக்கம் இருக்கும்போது அங்கே ஆற்றல் உருவாகிறது. நோக்கம் உத்வேகமாக மாறுகிறது. நமது தன்னுணர்வு அற்ப விஷயங்களிலிருந்து விடுபடுகிறது. அன்றாட வாழ்வின் சுமைகள், அலுவலக சகாவுடனான வாக்குவாதம் முதலானவற்றிலிருந்து விடுபடுகிறது. இந்த விடுதலை என்பது ஆனந்தமான அனுபவம். ஆன்மிக இருப்பு தனிமையில் தன்னுடன் தானே ஆனந்தமாக வீற்றிருக்கிறது.

ஆன்மிக இருப்புபற்றி எடுத்த எடுப்பில் யோசிக்க வேண்டாம். எளிய பயிற்சி ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். தேர்ந்தெடுத்த பிறகு அதற்கென நேரம் ஒதுக்குங்கள். அந்த நேரத்தில் அதை மட்டும் செய்யுங்கள். தொடக்கக் கட்டத்தில் ஏதாவது கஷ்டம் இருந்தால் ஒரு ஆசிரியர் உங்களுக்கு உதவக்கூடும். அவர் தன்னுடைய பயிற்சி அனுபவங்களை உங்களிடம் பகிர்ந்துகொண்டு உங்களுக்கான அனுபவங்களை நீங்கள் பெற உதவுவார்.

என்னைப் பொறுத்தவரை யோகா சொல்லித்தருவது என்பது இந்த உலகின் பரபரப்பான ஓட்டத்திலிருந்து தப்பிப்பதற்குத் தனிநபர்களுக்கு உதவுவது. ஒவ்வொருவரும் தனது சாதனாவை அடைய அவர்களுக்கு உதவுவதற்காக அவர்களோடு சேர்ந்து பயிற்சி செய்வது.

யோகாவைப் பயிற்சிசெய்யச் சிறந்த இடம் நியூயார்க்தான் என்பார் தர்ம மித்ரா. ஏனென்றால், அங்குதான் அதற்கான தேவை அதிகம் உள்ளது என்று அவர் சொல்லுவார். ஒரு மாணவர் புவியியல்ரீதியாக, ஆன்மிகரீதியாக எங்கே இருக்கிறாரோ அங்கே அவரது வாழ்வுக்கு இது தேவைப்படும். சாதனாவுக்கான இந்தப் பயிற்சியின் மூலம் ஒவ்வொருவரும் - அவர் உலகை எப்படி எதிர்கொள்பவராக இருந்தாலும் சரி - மகத்தான அற்புதங்களையும் மதிப்புவாய்ந்த பலன்களையும் பெற முடியும்!

தர்ம மித்ரா - யோகப் பயிற்சிகளுக்கான ‘தர்ம யோகா’ என்னும் அமைப்பை நிறுவியவர்.

டி.ஜே. ஜாக்சன் யோகா ஆசிரியர்.

கட்டுரையாளர் ஷான் மலாங்கஷ் தாவேத், இங்கிலாந்தைச் சேர்ந்த எழுத்தாளர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக யோகப் பயிற்சிகளை மேற்கொண்டுவருகிறார்.

தொடர்புக்கு: siandafydd@gmail.com

தமிழில்: அரவிந்தன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x