Last Updated : 12 Jun, 2015 09:03 AM

 

Published : 12 Jun 2015 09:03 AM
Last Updated : 12 Jun 2015 09:03 AM

நல்ல கணவர்... அதைவிட நல்ல மனிதர்!

மிகவும் பிரபலமான மனிதர்களின் மனைவியரைப் பற்றி வரலாற்றாசிரியர்களும் வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்கிறவர்களும் போதிய அளவு எழுதி அவர்களுடைய பங்களிப்புக்கு நியாயம் செய்வதே இல்லை. ஆபிரகாம் லிங்கன், லெனின், வின்ஸ்டன் சர்ச்சில், சார்லஸ் டிகால், லீ குவான் யூ ஆகியோருடைய மனைவியர்குறித்தும் அவர்கள் தங்களுடைய கணவர்களின் சாதனைகளுக்காகத் தங்களைக் கரைத்துக்கொண்ட விதம்குறித்தும் எதிர்காலத்துக்காக எதுவும் பதிவு செய்யப்படவேயில்லை. அரசியல்வாதிகள் விஷயத்தில் இப்படி என்றால், காவியங்களைப் படைத்தவர்கள், எழுத்தாளர்கள் சங்கதிகளும் அவ்வாறே. காளிதாசன், கோதே, சார்லஸ் டிக்கன்ஸ், பல்சாக், மான்டோ பற்றியெல்லாம் நமக்குத் தெரியும். அவர்களுடைய மனைவியர்பற்றி நாம் என்றைக்காவது கவலைப்பட்டிருக்கிறோமா?

இந்தக் கட்டுரை மிகப் பிரபலமான ஒரு பெண்மணியை மணந்ததால் மறைக்கப்பட்ட வரலாற்றைக்கொண்ட ஒரு மிகப்பெரிய மனிதரைப் பற்றியது. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற நாவலாசிரியை வர்ஜீனியா உல்ஃப் என்பதில் எந்தவொரு சந்தேகமுமில்லை. அவரது வாழ்நாளிலேயே பெரிதும் மதிக்கப்பட்டவரான அவருடைய புகழ், இறப்புக்குப் பிறகு மேலும் பெருகிக்கொண்டே இருக்கிறது. பெண்ணியவாதிகள், கருத்தியல்வாதிகள், நாவல்களின் வரலாறுகளை ஆராய்பவர்கள் என்று பலரும் அவருடைய கீர்த்தியைப் பரப்பிக்கொண்டே இருக்கிறார்கள். தன்னுடைய வாழ்நாளில் ஓரளவுக்கு மற்றவர்களால் அறியப்பட்டவரும் மதிக்கப்பட்டவருமான மாமனிதர் லியோனார்ட் உல்ஃப் அவருடைய கணவர், இப்போது கிட்டத்தட்ட நினைவுகளிலிருந்து நீங்கியவராகவே மாறிவிட்டார்.

பல்கலைக்கழகம் கற்றுத்தராத பாடம்

லண்டனில் வாழ்ந்த யூதக் குடும்பத்தில் 1880-ல் பிறந்த லியோனார்ட் உல்ஃப், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்றார். சிலோன் (இலங்கை) சிவில் சர்வீசஸில் பணியில் சேர்ந்தார். மாவட்ட ஆட்சியராக 7 ஆண்டுகள் பணிபுரிந்தார். பல்கலைக்கழகம் கற்றுத்தராத பல பாடங்களை ஆட்சியராக இருந்தபோது அவர் கற்றார். மனிதாபிமான உணர்வுமிக்க அவர், நிறவெறி மிக்க அதிகாரவர்க்கத்தின் அங்கமாக இருப்பதை விரும்பாமல் ‘வீடு திரும்புவதற்கான விடுப்பில்’ இங்கிலாந்து திரும்பினார். கேம்பிரிட்ஜில் படித்த அறிஞரின் இரண்டு மகள்களில் இளைய மகளான வர்ஜீனியா ஸ்டீபனிடம் அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறினார். அவர் சம்மதித்ததும் தன்னுடைய ஆட்சியர் வேலையை ராஜிநாமா செய்துவிட்டு லண்டனிலேயே தங்கி எழுதுவதையும் பதிப்பிப்பதையும் தொழிலாகக் கொண்டார்.

அறிவுஜீவிகளின் ‘புளூம்ஸ்பரி’

உல்ஃப் தம்பதியினர் ‘புளூம்ஸ்பரி குழு’ என்று அழைக்கப்பட்ட அறிவுஜீவிகளின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். லண்டன் மாநகரின் புளூம்ஸ்பரி மாவட்டத்தில் பிரிட்டிஷ் அருங்காட்சியகம் அருகில் உள்ள இடத்தில் இவர்கள் கூடி பல்வேறு விஷயங்கள்குறித்து விவாதிப்பது வழக்கம். எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிவுலக மேதைகள் இதன் உறுப்பினர்கள். முதல் உலகப் போருக்கும் இரண்டாவது உலகப் போருக்கும் இடைப்பட்ட காலத்தில் இவர்கள் துடிப்பாகச் செயல்பட்டனர். இதில் இருந்த ஆடவர்கள் கேம்பிரிட்ஜில் படித்தவர்கள். அவர்களுடைய சகோதரிகள், மகள்கள் இதில் கலந்துகொள்வர். பொருளியல் மேதை ஜான் மேனார்ட் கீன்ஸ், வரலாற்றாசிரியர் லிட்டன் ஸ்ட்ரேச்சி, கலைஞர்கள் வனேசா பெல், டங்கன் கிராண்ட், கலை விமர்சகர்கள் கிளைப் பெல், ரோஜர் ஃபிரை, நாவலாசிரியர்கள் இ.எம். பாஸ்டர், வர்ஜீனியா உல்ஃப் அவர்களில் அடக்கம்.

பயணமல்ல… சேருவதே முக்கியம்!

வர்ஜீனியாவைப் பற்றி எழுதுவோர் அவருடைய கணவர் லியோனார்ட் குறித்து ஓரிரு வரிகளோடு முடித்துக்கொள்வர். அரசியல்குறித்து அவர் நிறைய எழுதியிருக்கிறார். சிலோனில் தான் பணியாற்றிய காலத்தை அடிப்படையாக வைத்து நாவல் எழுதியிருக்கிறார். ஹோகார்த் பிரஸ் என்ற பதிப்பு நிலையத்தை நிர்வகித்தார். ‘நியூ ஸ்டேட்ஸ்மேன்’ பத்திரிகையின் இலக்கியப் பிரிவுக்கு ஆசிரியராக இருந்தார். தொழிலாளர் கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருந்தார். 5 தொகுதிகளைக் கொண்ட மிகச் சிறந்த சுயவரலாற்று நூலையும் எழுதியிருக்கிறார். விதைப்பு, வளர்ப்பு, மீண்டும் தொடக்கம், சரிவுப் பயணம், பயணமல்ல - சேருவதே முக்கியம் என்று அவற்றுக்குத் தலைப்பிட்டிருக்கிறார்.

எழுத்தாளர்கள் இரண்டு ரகம்

உல்ஃபின் தலைமுறையைச் சேர்ந்த பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் இரண்டு ரகம். இடதுசாரி சர்வதேசியவாதிகள் லெனின், ஸ்டாலின் ஆகியோரின் சாதனைகளைப் புகழ்ந்தனர் அல்லது அவர்களின் தவறுகளுக்கு மன்னிப்பு கோரினர். அதே வேளையில், பிரிட்டனின் காலனியாதிக்கப் போக்கைக் கடுமையாகச் சாடினர். சுதந்திரச் சிந்தனையுள்ள தேசியவாதிகள் இன்னொரு ரகம். இவர்கள் ரஷ்யாவின் கம்யூனிச நிர்வாகத்தைக் கிழித்துத் தோரணம் கட்டுவார்கள். ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் பிரிட்டனின் அக்கிரமச் செயல்களுக்குச் சமாதானம் சொல்வார்கள் அல்லது அதையே சாமர்த்தியம் என்று வாதிடுவார்கள். லியோனார்ட் உல்ஃப், கம்யூனிஸ்ட்களையும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளையும் ஒரே சமயத்தில் கடுமையாக விமர்சிப்பார்.

“கம்யூனிஸ்ட்கள், ரோமன் கத்தோலிக்கர்கள், ரோஜா சிலுவையர்கள், அட்வென்டிஸ்ட்கள் என்று அனைவருமே அவர்களுக்கு மட்டுமே தெரிவிக்கப்பட்ட தேவரகசியத்தை மற்றவர்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்காமல் தங்களுக்குள் ஏகபோகமாக வைத்துக்கொள்வதைக் கண்டு எனக்குள் வேதனைதான் பொங்குகிறது” என்று 1919-ல் ஒரு போல்ஷ்விக்கைச் சந்தித்த பிறகு எழுதினார் லியோனார்ட்.

ஈயைக் கொல்வதுகூட நியாயமல்ல

கம்யூனிசத்தின் மீதான அவருடைய வெறுப்பு அதன் சீன வகைப்பாட்டின் மீதும் தொடர்ந்தது. கட்சித் தலைமையுடன் அனுசரித்துப்போகாத அதிருப்தியாளர்கள் மாவோ அரசால் கொல்லப்படுவதாக 1963-ல் செய்திகள் வெளிவந்தன. ‘நியூ ஸ்டேட்ஸ்மே’னின் நீண்டகால ஆசிரியர் கிங்லி மார்ட்டின் அந்தப் படுகொலைகளை நியாயப்படுத்தினார். “கற்பனையான ஒரு நன்மைக்காக ஒரு தனி நபரோ, அரசோ மிகப்பெரிய அளவில் தீச்செயல் புரிவதை நியாயப்படுத்தவே முடியாது. எது நல்லதென்று எனக்குத் தெரியும். அடுத்தவர்களைக் காயப்படுத்துவது, சித்திரவதை செய்வது, கொல்வது சரியல்ல என்றே என் அறிவு சொல்கிறது. நானும் மார்க்சிஸ்ட்டுதான். அதற்காக மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ளாத ஒரு ஈயைக் கொல்வதுகூட நியாயமல்ல என்று நம்புகிறவன் நான்” என்று அவருக்குக் கடிதம் எழுதினார் லியோனார்ட்.

லியோனார்டின் தேர்தல் முழக்கம்

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் செயல்களை அவர் கடைசிவரை எதிர்த்தார். 1920-ல் ஆப்பிரிக்காவை பிரிட்டன் கைப்பற்றியதை அவருடைய நண்பர்கள் நியாயம் என்று கூறியபோது லியோனார்ட் அதை ஏற்க மறுத்தார். “கேப்டன் லுகார்டின் செயலுக்கும் (பிரிட்டனுக்காக உகாண்டாவைக் கைப்பற்றியவர்) மதங்களின் உயர் பீடங்கள் சொன்னதற்காக ஏராளமான ஆண்களையும் பெண்களையும் கொன்ற - சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய - கொடூரர்களுக்கும் வித்தியாசமே கிடையாது” என்றார்.

1921-ல் பிரிட்டிஷ் நாடாளுமன்றத் தேர்தலில் லியோனார்ட் தோற்றார். ‘ஏகாதிபத்தியக் கொள்கையைக் கைவிட வேண்டும், பொருளாதார ஆதாயத்துக்காகப் பிற நாடுகளில் ஊடுருவக் கூடாது, இந்தியாவுக்கும் சிலோனுக்கும் சுதந்திரம் அளிக்க வேண்டும்’ என்பதே அவருடைய தேர்தல் முழக்கம்!

ஐரோப்பியர்களுக்குத் தகுதி இல்லை

40 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சுதந்திரம் அளிக்க வேண்டும் என்று கோரினார். ரொடீஷியாவில் வசித்த ஆங்கிலேயர் ஒருவர் அவருக்குப் பதில் அளிக்கும் வகையில், ‘சுதந்திரம் கொடுத்தால் அவர்களால் தங்களை நிர்வகிக்கத் தெரியாமல் நாசமாக்கிவிடுவார்கள்’ என்றார். “ஐரோப்பியக் கண்டத்தில் இரண்டு உலகப் போர்களுக்கு வித்திட்டவர்களும் யூதர்களைப் பூண்டோடு அழித்தவர்களுமான ஐரோப்பியர்களுக்கு ஆப்பிரிக்கர்களுடைய நிர்வாகத் திறன்குறித்துப் பேச யோக்கியதையே இல்லை” என்று அவருக்குப் பதில் எழுதினார் லியோனார்ட்.

இந்திய சுதந்திரம்

“இந்தியாவுக்கு 1900-லோ 1920-லோ 1940-லோ கொடுக்க மறுத்த சுதந்திரத்தை 1947-ல் வழங்கியிருக்கிறார்கள். காலம் தாழ்த்தி வழங்காமல் முன்கூட்டியே அளித்திருந்தால் கொலை, துப்பாக்கிச் சூடு, வகுப்புக் கலவரம், படுகொலை என்று 1947-ல் நடந்த சம்பவங்களில் பத்தில் 9 பங்கைத் தடுத்திருக்கலாம்” என்று மனம் வெதும்பிக் கூறினார். பிரிட்டிஷார் காலம் தாழ்த்தியதால்தான் நிலைமை முற்றி இரு சமூகங்களுக்கிடையே பெரும் பகை வளர்ந்து, ஏராளமான உயிர்ப் பலிகளும் மக்களுக்கிடையே பெரும் விரோதமும் உண்டாயிற்று என்று அப்போதே அவர் சுட்டிக்காட்டினார்.

தன்னுடைய நண்பர்களுக்கிடையிலேயே அவர் தனித்துவம் மிக்கவராகத் திகழ்ந்தார். நல்ல மனிதாபிமானி, எளிமையானவர், கண்ணியமுள்ள கனவான். அவருடைய சகாக்கள் மெத்தப் படித்தவர்கள், திறமைசாலிகள் என்றாலும் ஆணவம் பிடித்தவர்கள். தங்களைத் தாங்களே புகழ்ந்துகொள்வார்கள். குழுவாக மட்டுமே இயங்குவார்கள்.

ஐரோப்பிய சிந்தனை, கலாச்சாரம் மட்டுமே அவரை ஈர்க்கவில்லை. பவுத்த மதம்குறித்து மிக உயர்வான மதிப்பு கொண்டிருந்தார். மலைப் பிரசங்கத்தைவிட புத்தரின் போதனைகள் மனிதாபிமானமிக்கவை, எளிமையானவை என்று நான் கருதுகிறேன் என்பார்.

மகா புருஷர் காந்தி

1931-ல் காந்திஜியைச் சந்தித்தார் லியோனார்ட். “முதலில் அவருடைய தேகத்தைப் பார்த்தபோது மனிதன் மாதிரியே இல்லை. சற்றே கேலிக்குரியதாகக்கூட இருந்தது அவரது தேகம். அவர் பேசத் தொடங்கியதும்தான் தெரிந்தது, அவர் எத்தனை பெரிய மகா புருஷர் என்று. பேச்சில் என்ன வலிமை, நகைச்சுவை, இனிமை, எவ்வளவு துல்லியம்?” என்று அப்படிப் பாராட்டியிருக்கிறார்.

பெண்மையை ஆராதிப்பதிலும் லியோனார்டுக்கு நிகர் அவர்தான். மார்கரெட் லீவெலின் டேவிஸ் என்பவரைப் பற்றி எழுதும்போது, “அவர் மட்டும் ஆணாகப் பிறந்திருந்தால் உலகின் பிரமுகர்களைப் பற்றிக் குறிப்பெழுதுபவர்கள் பாதி பக்கங்களை அவருக்காகவே ஒதுக்கியிருப்பார்கள்” என்று மனதாரப் புகழ்கிறார்.

வர்ஜீனியா உல்ஃப் 1919 ஜூலை 19-ல் எழுதிய நாட்குறிப்பில், “கலைஞர்கள் மட்டுமே நேர்மையானவர்கள்; சமூக சீர்திருத்தவாதி, தரும சிந்தனையுள்ளவர் என்றெல்லாம் வர்ணிக்கப்படுகிறவர்கள் பெரும்பாலோர் வெறுக்கத் தக்க குணங்களைப் பெற்றுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார். லியோனார்ட் இந்தக் கண்டனத்துக்கு அப்பாற்பட்டவர். லியோனார்ட் சிறந்த சீர்திருத்தவாதி. பெண்கள் மீது ஆண்கள் செலுத்தும் ஆதிக்கம், காலனி நாடுகள் மீது பேரரசுகள் செலுத்தும் ஆதிக்கம், தனிநபர் மீது அரசு செலுத்தும் ஆதிக்கம் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டுவரக் குரல் கொடுத்தவர். மக்களின் வறுமையும் துயரங்களும் நீங்க புரட்சியையோ, கனவுலக வாழ்க்கையையோ (உடோபியா) அவர் பரிந்துரைக்கவில்லை. ஜனநாயகபூர்வமாக, படிப்படியா கத்தான் மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்றார். ஜனநாயகமும் சத்தியாகிரகமும் நல்ல சாதனங்கள் என்றார்.

தன்னை உயர்த்திக்கொள்ள விரும்பாத நேர்மையாளரான லியோனார்ட், இப்போது மறக்கப்பட்ட கணவராகிவிட்டார். முதலில் அவர் எழுதிய 5 தொகுப்பு சுயவரலாற்றைப் படிப்போம். பிறகு, அவரைப் பற்றி விக்டோரியா கிளென்டிங் எழுதியதைப் படிக்கலாம்.

வேலைதான் சிறந்த வலி நிவாரணி

“உங்களுடைய கால் பெருவிரலிலோ, பல்லிலோ, தலையிலோ அல்லது இதயத்திலேயோகூட வலி இருந்தாலும் வேலை செய்யுங்கள்; வேலைதான் சிறந்த வலி நிவாரணி - மரணம், தூக்கம், குளோராஃபார்ம் ஆகியவற்றைவிட அதுதான் நன்றாக வேலை செய்யும்” என்ற அவருடைய மேற்கோளி லிருந்தே அவரைப் பற்றி நன்கு புரிந்துகொள்ளலாம்.

தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x