Published : 29 May 2014 07:00 AM
Last Updated : 29 May 2014 07:00 AM

இன்னும் பிறக்காத தலைமுறைக்காக…

சுற்றுச்சூழல் மீது நாம் அக்கறைகொள்வது நமக்காக மட்டுமல்ல, வருங்கால சந்ததிக்காகவும்தான்

பருவநிலை மாறுதல்கள் குறித்து சமீபகாலத்தில் கூறப்பட்ட பலவற்றில், வாஷிங்டன் மாநிலத்தைச் சேர்ந்த கவர்னர் ஜே இன்ஸ்லீ சொன்னதைவிட தெளிவானதும் வலிவானதும் வேறு எதுவும் இல்லை; “பருவநிலை மாறுதல்களின் விளைவை உணர்ந்ததில் நாம்தான் முதல் தலைமுறையாக இருக்கிறோம், அதைச் சரிசெய்யக்கூடிய கடைசித் தலைமுறையாகவும் நாம்தான் இருக்கிறோம்.”

பருவநிலைகளில் ஏற்பட்ட மாறுதல்களை எப்படிச் சரி செய்வது, எந்த அளவுக்கு நாம் இதில் செயல்பட முடியும், எல்லோருமே அவரவர் வயிற்றுப்பாட்டுக்காகக் காலையில் எழுந்திருப்பது, சாப்பிடுவது, வேலைக்குப் போவது, இரவில் வீடு வந்துசேர்ந்து சாப்பிட்டுவிட்டுத் தூங்குவது என்று செக்குமாடு போல உழலும்போது, இதை எப்படிச் சரிசெய்வது என்ற சந்தேகம் இயல்பாகவே எழுகிறது. பருவநிலை மாறுதலுக்கு இந்த ஒன்றுதான் காரணம் என்று எதையுமே நாம் குறிப்பிட்டுச் சொல்லிவிட முடியாது என்று அறிவியலாளர்கள் கூறும்போது, இது மேலும் சிக்கலாகிறது. புவி வெப்பமடையும்போது என்னென்ன மாறுதல்களை அது ஏற்படுத்துகிறது என்று அவர்கள் கூறும் வகைகளில் மாற்றங்கள் நடக்கின்றன என்றே வைத்துக்கொண்டாலும், பரிகார நடவடிக்கைகள் அவ்வளவு எளிதல்ல என்பதும் கவனிக்கப்படவேண்டும்.

எதிர்காலத்துக்காகக் குரல்

தாமஸ் வெல்ஸ் என்ற டச்சு நாட்டுத் தத்துவஞானி கூறியுள்ள புதிய அணுகுமுறையைக் கையாண்டு பார்க்கலாம் என்று ஆண்ட்ரு சுல்லிவன் தன்னுடைய பிளாக்கில் குறிப்பிட்டிருக்கிறார். பருவநிலை மாறுதல் களும் சுற்றுச்சூழல்களில் ஏற்படும் கேடுகளும் இன்றைய தலைமுறையை - இன்னமும் பிறக்காத - எதிர்காலத் தலைமுறைக்கு எதிராகக் கொண்டுபோய் நிறுத்துவதால், நம்முடைய அரசியலில் எதிர்காலச் சந்ததிக்காகவும் நாம் குரல்கொடுக்க வேண்டும் என்கிறார்.

“வருங்காலச் சமுதாயம் எதை மதிப்புமிக்கதாகக் கருதும், அதன் தேவை என்னவாக இருக்கும் என்பதெல்லாம் திட்டவட்டமாகத் தெரியாதபோதிலும் அவர்கள் நம்மைப்போலவே இருப்பார்கள், நமக்குத் தேவையானதெல்லாம் அவர்களுக்கும் தேவைப்படும் என்ற எண்ணத்திலேயே நாம் சில கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். நல்ல காற்று இல்லாவிட்டால் நம்மால் சுவாசிக்க முடியாமல் மூச்சுத்திணறி அவதிப் படுவோம் என்றால், எதிர்காலத் தலைமுறைக்கும் அதுதான் நேரும் என்பதை நிச்சயமாக நம்மால் கூறிவிட முடியும். எனவே, தூய்மையான நீர், காற்று, நிலம் ஆகியவற்றையும் நல்ல சூழலையும் எதிர்காலத் தலை முறைக்கு விட்டுச்செல்வதில் நாம் அக்கறை காட்ட வேண்டும்.

அடுத்த தேர்தலைப் பற்றித்தான் கவலை

நம்முடைய அக்கறை எதிர்காலச் சந்ததியைப் பற்றியதாக இருக்கும்போது, அரசியல்வாதிகளின் நோக்க மெல்லாம் அடுத்த தேர்தலைப் பற்றியதாக இருக்கிறது. எனவே, நாம்தான் தலையிட்டு பாரபட்ச மின்றி, தொலைநோக்குப் பார்வையுடன் வாக்களிக்கும் ஏற்பாட்டைச் செய்ய வேண்டும். அரசு சாராத மக்கள் அமைப்புகளும் அறக்கட்டளைகளும் சுற்றுச்சூழல் ஆர்வலர் அமைப்புகளும் எந்தப் பக்கமும் சாராமல் நடுநிலையுடன் சிந்திக்கும் அறிஞர்கள் குழாமும் இணைந்து வாக்காளர்களில் குறைந்தபட்சம் 10% அளவுள்ளவர்களைத் திரட்ட வேண்டும். அவர்கள் சுற்றுச்சூழலிலிருந்து கரிமத்தை (கார்பன்) அகற்றும் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பார்கள். எதிர்காலச் சந்ததியினருக்கு (இயற்கை) ஓய்வூதியப் பலன்கள் கிடைப்பதை உறுதிசெய்வார்கள் என்கிறார். இந்த மாற்றங்களையெல்லாம் கொண்டுவராவிட்டால், இப்போது வாக்களிக்கும் உரிமை இல்லாத - இன்னமும் பிறக்காத - எதிர்காலச் சந்ததி பாதிக்கப்பட நேரும் என்று எச்சரிக்கிறார் வெல்ஸ்.

பிற உயிர்களுக்கும் பூமி சொந்தம்

“இது யதார்த்தமாக இல்லை, ஒப்புக்கொள்கிறேன்; நம்முடைய எதிர்காலத் தலைமுறைக்கு - நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு - ஏற்படக்கூடிய தேவைகளை இப்போதுள்ள தலைமுறைகளின் மூலமே நிறைவேற்றுவது உண்மையில் அவசியப்படுகிறது. ஆண்டி ரெவ்கின் இதை நன்றாக விளக்குகிறார். இந்த பூமிக் கிரகமானது காலமெல்லாம் தொடர்ந்து இருக்கும் என்ற எண்ணத்தில் இருந்த நாம், இப்போது இது முடியக்கூடியது என்பதை உணர்ந்திருக்கிறோம். இதில் மனித இனம் மட்டும் பெருகவில்லை, பிற உயிரினங்களும் பெருகுகின்றன, தேவைகளும் பெருகுகின்றன; நாம் எப்படி இந்த பூமிக்கும் மற்ற உயிரினங்களுக்கும் உள்ள உறவைத் தக்க வைத்துக்கொள்ளப்போகிறோம் என்பதே கேள்வி என்கிறார்.

இது வெறும் பருவநிலை மாறுதல் பற்றிய பிரச்சினை மட்டுமல்ல என்று மக்களுக்குப் புரியவைக்க வேண்டும். நம்முடைய தந்தையர் காலத்தில் கம்யூனிசம் பரவிவிடாமல் தடுப்பதே பெரிய கடமையாக இருந்தது. அப்படிச் செய்ததன் மூலம் நாம் சுதந்திர மனிதர்களாக இருக்கிறோம். இப்போது நாம் மீண்டும் பழைய உற்சாகத்தைப் பெற வேண்டும். நம்முடைய நகரங் களையும், ஊர்களையும் நாட்டுப்புறங்களையும் பழைய இயற்கை நிலைக்குக் கொண்டுவருவதன் மூலமே நாம் மீண்டும் உயிர்பெற முடியும்.

மேலும் மோசமாகும்

பருவநிலை மாறுதலால் இந்தச் சூறாவளி ஏற் பட்டது என்று எந்த ஒன்றையும் நம்மால் குறிப் பிட்டுக் கூற முடியாவிட்டாலும் பசுமை இல்ல வாயுக் களை நாம் தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டே வருகிறோம். இதன்மூலம் நிலையை முற்றவிட்டுக் கொண்டிருக்கிறோம். புவி வெப்பநிலை உயரும், துருவங்களில் பனிப்பாறைகள் மேலும் உருகும், கடலில் நீர்மட்டம் மேலும் உயரும், கடல் சூடேறும், மேலும் வறண்டுபோகும், அனல்காற்று மேலும் சூடாகும், சூறாவளியுடன் பெய்யும் மழை மேலும் தீவிரமாகப் பெய்யும். நிலைமையை இப்படி முற்றவிட்டுக்கொண்டு பாதிப்புக்கு நம்மை ஆட்படுத்திக்கொண்டு நாம் வாழ நினைப்பதைவிட, சுதந்திரக் குறைவாக வாழ முற்படுவது வேடிக்கையாக இருக்கிறது. பருவநிலை மாறுதல்களால் ஏற்படும் சேதங்களால் திரளும் கழிவுகளை அகற்ற மேலும் மேலும் வரி செலுத்த வேண்டிய நிலையில் நாம் எப்படிச் சுதந்திரமாக வாழ்ந்துவிட முடியும்?

பருவநிலை மாறுதல்களை எதிர்கொள்ள அவசர பதில் நடவடிக்கைகள் தேவை. வருமான வரி, கம்பெனி கள் (மீதான) வரிக்குப் பதிலாக கரிம வரி அவசியம். புதுப்பிக்கத் தக்க எரிசக்தித் துறையை தேசிய அளவில் ஏற்படுத்த வேண்டும். வீடுகள், கட்டிடங்கள், வாகனம் என்று எல்லாவற்றிலுமே எரிபொருள் பயன்பாட்டுக்கான விதிகளில் உரிய திருத்தங்களைச் செய்து காற்றில் மாசு கலப்பதை வெகுவாகக் கட்டுப்படுத்த வேண்டும். பருவநிலை மாறுதல்களால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி அதீதமாகவே நாம் அஞ்சுகிறோம் என்று கொண்டாலும்கூட புதுப்பிக்கத் தக்க எரிசக்தியைப் பயன்படுத்துவதன் மூலமும் கரிமத்தின் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலமும் சுத்தமான காற்று கிடைக்கும். புதிய வரிவிதிப்பினால் வேலைவாய்ப்பும் முதலீடும் பெருகும். கரிமம் சேர்வது குறையும். பெட்ரோலியப் பண்டங்களைத் தயாரிப்பவர்களிடமிருந்து பணபலத்தைக் குறைப்போம். சுத்தமான நிலம், நீர், காற்று ஆகியவற்றைத் தரும் நிறு வனங்களுக்கு ஊக்குவிப்புகளைத் தருவோம். 2050-ல் மக்கள்தொகை 700 கோடியிலிருந்து 900 கோடியாக உயரும் இந்தப் புவிக்கு அவையெல்லாம் அவசியம் அதிகம் தேவைப்படும்.

நம்முடைய தந்தையர் தலைமுறையில் அன்றைய பெரிய எதிரியிடமிருந்து போராடிச் சுதந்திரம் பெறுவது பெரிய கடமையாக இருந்தது. நமக்கோ பருவநிலை மாறுதல், பெட்ரோலியப் பண்டங்களைக் கையாள்வோரின் சர்வாதிகாரம், நம்முடைய சுற்றுச்சூழலையும் உயிரினப் பல்வகைமையையும் அழிப்போரிடமிருந்து சுதந்திரம் ஆகிய சவால்கள் காத்திருக்கின்றன, அவற்றை நாம் முறியடிப்போம்.

நம்முடைய முன்னோர்களை நாம் நினைவுகூர்வதைப் போல, நம்முடைய வருங்கால சந்ததியர் நம்மை நினைவுகூர நாமும் பாடுபடுவோம்.

நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x