Last Updated : 30 Jun, 2015 09:34 AM

 

Published : 30 Jun 2015 09:34 AM
Last Updated : 30 Jun 2015 09:34 AM

எந்த அளவுக்கு ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்கிறது?

1975 ஜூன் 25-26-ல் பிறப்பிக்கப்பட்ட நெருக்கடி நிலையின் 40-வது ஆண்டு நிகழ்ச்சியையொட்டி இந்தக் கேள்வி என்னைக் குடைகிறது: எந்த அளவுக்கு ஜனநாயகம் இன்றைக்குப் பாதுகாப்பாக இருக்கிறது?

ரேபரேலி மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்வு பெற்றது செல்லாது என்று அலாகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து, பதவி வகிப்பது சரியா என்று இந்திரா காந்தியைக் கேட்டார்கள் என்ற ஒரே காரணத்துக்காக, நாடெங்கும் ஆயிரக் கணக்கான அரசியல் தொண்டர்களும் எதிர்க் கட்சித் தலைவர்களும் கைதுசெய்யப்பட்டு விசார ணையே இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டார்கள். போலீஸ்காரர்களின் துணையோடு ஆயிரக் கணக்கான ஆண்கள் சஞ்சய் காந்தியாலும் அவருடைய அடியாட்களாலும் கட்டாய கருத்தடைச் சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

பிரதமர் பதவி வகித்த இந்திரா காந்தியும், அரசின் எந்தப் பதவியிலும் இல்லாத அவருடைய மகன் சஞ்சய் காந்தியும் சஞ்சயின் சிறு ஆதரவாளர்கள் கும்பலும் நாட்டின் முழு நிர்வாகத்தையும் அதிகாரத்தையும் தங்களுடைய கைகளில் எடுத்துக்கொண்டவுடன் நாடு முழுக்க அச்சம் பரவியது. “இந்திய அரசியல் சட்டம் அளிக்கும் அனைத்து அடிப்படை உரிமைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன” என்ற அரசின் நெருக்கடி நிலை அறிவிப்பு வெளியானபோது, அறிவுஜீவிகளில் பெரும்பாலான வர்களும் பொதுக்கருத்துகளை உருவாக்கும் இடங்களில் இருந்தவர்களும் எதிர்ப்பு ஏதும் இல்லாமல் ஏற்றுக்கொண்டனர். அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதை எதிர்த்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் செல்ல உரிமை இல்லை என்ற அரசின் அறிவிப்பு பல அரசியல் கட்சிகளுக்கு எந்தவிதக் கவலையையும் ஏற்படுத்தவில்லை.

அன்றைய ஆட்சியாளர்களின் ஜனநாயக விரோதச் செயலுக்கு உச்ச நீதிமன்றம் சட்டபூர்வ அங்கீகாரம் அளித் ததுதான் வெட்கப்பட வேண்டிய செயலாக இருந்தது. 1976-ல் நடந்த ‘ஏ.டி.எம்., ஜபல்பூர்’ வழக்கில் ‘அரசின் முடிவு சரியே’ என்று நான்கு நீதிபதிகள் ஆதரித்தனர். நீதிபதி எச்.ஆர். கன்னா மட்டுமே அந்த அறிவிப்பு, சட்டப்படியான ஆட்சி என்ற கோட்பாட்டுக்கு எந்த அளவுக்கு ஊறு செய்யும் என்று உணர்ந்து, மாற்றுத் தீர்ப்பை வெளியிட்டார். அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்பட்டால் அதன் விளைவு எவ்வளவு மோசமாக இருக்கும் என்று அவர் மட்டுமே தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்தார். ஆனால், பெரும்பாலான நீதிபதிகள் ஆதரித்ததால், அடிப்படை உரிமைகள் பறிப்பு செல்லாது என்று 9 உயர் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகள் தள்ளுபடியாயின.

‘அரசியல் சட்டம் அளிக்கும் அடிப்படை உரிமைகளைத் தற்காலிகமாக மறுக்கும் அளவுக்கு உள்நாட்டுப் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது’ என்ற அரசின் கூற்றை உச்ச நீதி மன்றத்தின் நான்கு நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.

போர்க்காலத்தில் நாட்டு மக்கள் மீது அரசின் கட்டுப்பாடு முழுமையாக இருக்க வேண்டும் என்று இரண்டாவது உலகப் போரின்போது பிரபுக்கள் அவை அளித்த தீர்ப்பையே அவர்கள் முன்னுதாரணமாகக் கொண்டனர். பெரும்பான்மை நீதிபதிகள் தங்களுடைய தீர்ப்புக்கு ஆதரவாகப் பற்றி நின்ற நிலையை, பிரிட்டிஷ்காரர்களே பின்னாளில் தூக்கி எறிந்துவிட்டனர். அந்த வழக்கிலும் மாற்றுத் தீர்ப்பு அளித்த அட்கின் பிரபு, தன்னுடைய சகோதர நீதிபதிகள், (அரசியல்) நிர்வாகிகளைவிடத் தங்களை அதிகபட்ச நிர்வாகிகளாகக் கருதிவிட்டனர் என்று மனம் வெதும்பிக் கூறினார். ‘உள்துறை அமைச்சகத்தின் நாற்காலிக்கு அடியில் சிக்கிக்கொண்ட சுண்டெலி போல நீதித் துறை ஆகிவிட்டது’ என்று லண்டன் உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்டேபிள் வேடிக்கையாகக் குறிப் பிட்டார்.

1976-க்கு முன்னால் பிரிட்டிஷ் நீதிமன்றங்களே நிராகரித்த ஒரு நிலையை இந்திய உச்ச நீதிமன்றம் பின்பற்றி, நெருக்கடி நிலையை நியாயப்படுத்தியது மிகுந்த ஏமாற்றத்தையே தந்தது. ஒரு தலைமுறையையே கொந்தளிக்கவைத்த விஷயங்கள் இவையெல்லாம்.

ஆனால், இவை குறித்தெல்லாம் இன்றைய இந்தியர்களில் எவரேனும் இப்போது கவலைப்படுகிறார்களா? பேச்சு சுதந்திரத்தையும் அரசுக்கு எதிராகக் கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்தையும், அரசை விமர்சிக்கும் சுதந்திரத்தையும் நெரிக்கும் அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்க இன்றைக்குத் தயாராக இருப்போர் எத்தனை பேர்? அட, 26.06.1975 தொடங்கி 23.03.1977 வரையிலான 21 இருண்ட மாதங்களில் இந்தியாவில் என்ன நடந்தது என்பதைப் பதிவுசெய்யாமல் இன்னமும் ஏன் நம்முடைய வரலாற்றுப் புத்தகங்கள் மவுனம் சாதிக்கின்றன?

மாறியது என்ன?

நெருக்கடி நிலை காலத்துக்குப் பிறகு, இங்கே ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? பெரிதாக எதுவும் மாறிவிடவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சட்டப் பேரவைகளுக்கும் மக்களவைக்கும் தேர்தல் நடப்பது மட்டுமே இங்கு ஜனநாயக நடவடிக்கையாக இருக்கிறது. தேர்தலிலும்கூடப் பண பலம், அடியாள் பலம், சாதிகளின் ஆதிக்கம், மதவாதம், ஆதிக்க சக்திகளின் செல்வாக்கு ஆகியவையே முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தியா அடைந்துள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்களால் செயற்கைக் கோள்களைப் பறக்கவிட முடிகிறது, கோடிக் கணக்கான மக்களின் வறுமையை, பசியை, தாகத்தை, சுகாதாரமற்ற வாழ்க்கையைப் போக்க முடியவில்லை.

ஊழல் பேர்வழிகளான அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் ஆகியோருடைய துணையோடு பெருந்தொழில் நிறுவனங்கள் இந்தியாவின் இயற்கை வளங்களைச் சூறையாடுகின்றன. அவர்களைத் தேச பக்தர்கள் என்று அழைக்கின்றனர். இப்படி இயற்கை வளங்களைச் சூறையாடாதீர்கள் என்று தடுக்கும் சமுதாயத் தலைவர்களை, சமூக ஆர்வலர்களை, சுற்றுச்சூழல் ஆர்வலர்களை அடித்து நொறுக்கி, கைது செய்து சிறையில் அடைத்து துரோகிகள் என்று பட்டம் சூட்டுகின்றனர். வளர்ந்து வரும் பெரும்பான்மையினவாதமும், வகுப்புவாதமும் இந்திய ஜனநாயகத்துக்கு இதுவரை இருந்திராத அச்சுறுத்தல்களை ஏற்படுத்திவருகின்றன.

சூட்-பூட் கி சர்க்கார்

இன்றைக்கு மோடி அரசு மீது முன்வைக்கப்படும் சூட்-பூட் கி சர்க்கார் என்ற அடைமொழி எல்லாப் பெரிய அரசியல் கட்சிகளுக்குமே பொருந்தும். பெருந்தொழில் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில்தான் நாட்டின் பொருளாதாரமும் வணிகமும் இருக்கின்றன. எல்லா மாநில அரசுகளுமே மக்களுடைய எதிர்ப்பைக் கொடூரமாக ஒடுக்க ஆள்தூக்கிச் சட்டங்களை இயற்றி வைத்துள்ளன. காங்கிரஸ், பாஜக, திமுக, அஇஅதிமுக, சமாஜ்வாதி, தெலுங்கு தேசம், தெலங்கானா ராஷ்டிர சமிதி என்று எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதுதான் நிலைமை. தேசவிரோதச் செயல் தடுப்பு, தேசப் பாதுகாப்பு போன்ற சட்டங்களைப் பயன்படுத்த அவை தயங்குவதில்லை. விவசாயிகள், பழங்குடிகள், மாணவர்கள், மகளிர் என்று எந்த அமைப்பினர் கிளர்ச்சி செய்தாலும் கடுமையாக ஒடுக்கப்படுகின்றன. வட கிழக்கு மாநிலங்கள், காஷ்மீர் மட்டுமின்றி பெரும்பாலான மாநிலங்கள் இப்போது போலீஸ் சர்க்கார்களாக மாறிவிட்டன.

படித்தவர்களின் அலட்சியம்

ஜனநாயகம் ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது. நகர்ப்புற படித்த மக்களும் சொந்தத் தொழில் செய்வோரும் இதுகுறித்து கொஞ்சமும் கவலைப்படவில்லை. இந்தி யாவின் கிராமங்களிலும் நகர்ப்புறங்களிலும் வசிக்கும் கோடிக் கணக்கான இந்தியர்கள் கோபத்தில் கொதித்துக்கொண் டிருக்கிறார்கள். புதிய சுரங்க அகழ்வுகள், அணை கட்டும் திட்டங்கள், வன அழிப்பு, தாது மணல் உள்ளிட்ட இயற்கை வளங்கள் சூறையாடல் தொடர்பாக நாட்டின் பல பகுதிகளிலும் அன்றாடம் லட்சக் கணக்கான சிறு சிறு மோதல்கள் நடந்துவருகின்றன. செய்தி ஊடகங்கள் அவை அனைத்தையும் மக்களுக்குத் தெரிவிப்பதில்லை. வளர்ச்சி என்பது கவுரவம், ஜனநாயகம் ஆகியவற்றுடன் ஏற்படும்வரை போராட்டம் தொடரும் என்று மக்கள் அறிவித்துள்ளனர்.

நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது டெல்லி திஹார் சிறையிலிருந்த ஜெயப்பிரகாஷ் நாராயண், ஆசார்ய கிருபளானி போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள், மக்களுடைய நலன்களையும் உரிமைகளையும் காப்பதற்கு ஏற்படுத்தியது தான் ‘சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கம்’(பி.யு.சி.எல்.). ஜனநாயகத்துக்கு விரோதமான சக்திகளும், ஆளும் கட்சியின் அதிகார வட்டத்துக்குள் இருக்கும் எடுபிடிகளும் மக்களுடைய அடிப்படை உரிமைகளை நசுக்கிவிடக் கூடாது என்பதற்காகத் தோற்றுவிக்கப்பட்டதுதான் இந்த இயக்கம்.

நெருக்கடி நிலை காலத்தில் அடக்குமுறைகளுக்கு ஆளான ஆயிரக் கணக்கான மக்களை பி.யு.சி.எல். இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறது. அறிவிக்கப்படாத இரண்டாவது நெருக்கடி நிலை ஏற்பட்டுவிடாமல் தடுக்கும் கடமை பி.யு.சி.எல்லுக்கும் இதைப் போன்ற சகோதர அமைப்புகளுக்கும் இருக்கிறது. நம்முடைய ஜனநாயக உரிமைகளை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் சுதந்திரம், சமத்துவம், சமூக நீதி ஆகியவை எல்லோருக்கும் கிட்டும் வகையிலும் எல்லா ஜனநாயக ஆதரவு சக்திகளும் இணைந்து செயல்பட வேண்டும்.

பல்சாக் தன்னுடைய நாவல் ஒன்றில் குறிப்பிட்டிருப்பார், “நீதித் துறையை அவநம்பிக்கையோடு பார்ப்பதில் தொடங்கு கிறது ஒரு சமூகத்தின் முடிவு; இப்போதைய அமைப்புகளின் மாதிரியை உடையுங்கள், வேறு அடிப்படையில் அதைப் புதிதாக உருவாக்குங்கள். ஆனால், அதை நம்புவதை மட்டும் கைவிட்டுவிடாதீர்கள்” என்று. எந்த ஒரு சமூகத்திலும் நீதித் துறை ஆற்ற வேண்டிய முக்கியப் பங்கை இது எடுத்துக்காட்டுகிறது.

இன்றைய இந்தியாவில் அரசியல் சட்டம் தனக்களித்த கடமையிலிருந்து இந்திய நீதித் துறை நழுவுவதாகவே தோன்றுகிறது.

- வி. சுரேஷ், பி.யு.சி.எல். தேசியப் பொதுச் செயலாளர்,

தொடர்புக்கு: rightstn@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x