Last Updated : 20 May, 2015 09:33 AM

 

Published : 20 May 2015 09:33 AM
Last Updated : 20 May 2015 09:33 AM

நம் கல்வி... நம் உரிமை! - சமூக வளர்ச்சிக்கு அரசுப் பள்ளிகளே அடிப்படை!

தங்கதுரை அண்ணனுக்கு மீசை, தாடியெல்லாம் வளர்ந்திருக்கும். அரைக்கால் சட்டை போட்டுக் கொண்டுதான் பள்ளிக்கு வருவார். அவர்தான் பாடவேளை மணி அடிப்பார். மாணவர் தலைவர் அவர். எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். ஓன்றாம் வகுப்போ, இரண்டாம் வகுப்போ படித்துக்கொண்டிருந்தேன். தங்கராசை அண்ணா என்று நாங்கள் கூப்பிடக் கூடாது. தங்கராசு என்று பெயர் சொல்லித்தான் கூப்பிட வேண்டும். தலைமை ஆசிரியரின் கட்டளை இது. ஊருக்குள் வயதுக்கு மூத்தவர்களை அண்ணா என்று அழைக்கும் போது, பள்ளி வளாகத்தில் மட்டும் வா, போ என்றும், பெயர் சொல்லியும் அழைப்பது சற்று வித்தியாசமாக இருந்தது. என் போன்ற சிறுவர்களுக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது. எங்கள் பள்ளி வளாகம் அப்படி ஏன் இருந்தது என்று அப்போது எங்களுக்குத் தெரியவில்லை; கிராமப்புறப் பள்ளிகளில் தனிக் குவளை முறை கூட அதே காலகட்டத்தில் கோலோச்சிவந்தது. எங்கள் பள்ளி மாணவர்கள் அதெல்லாம் தெரியாமல் வளர்ந்தனர்.

தலித் மாணவர்கள், சக உயர்சாதி மாணவர்களை பள்ளி வளாகத்தில் ‘நீ, வா, போ’ என்றும் பெயர் சொல்லியும் அழைக்கலாம் என்பதை அப்பகுதி மக்கள் மரபாக்கிக்கொண்டனர். பள்ளியின் நடைமுறை சாதி மரபைத் தகர்த்தது. பள்ளிக்கு அருகில் இருந்த மளிகைக் கடைக்காரர் மகனும், அதே பள்ளியில் எங்களுடன் படித்தான். அவன் மட்டும் கடையில் இருக்கும் நேரத்தில் சக நண்பர்கள் கடைக்கு வந்தால், அவர்கள் உள்ளே வர மறுத்தாலும், கையைப்பிடித்து இழுத்துக் கடைக்குள் அமர வைப்பான். ஊருக்குள் தாழ்த்தப்பட்ட மாணவர்களும் பிற சமூக மாணவர்களும், சேர்ந்து விளையாட மாட்டார்கள். தோட்டக் காடுகளில் விடுமுறை நாட்களில் சந்தித்தால் சேர்ந்து சடுகுடு உட்பட அனைத்து விளையாட்டுகளும் அரங்கேறும்.

சாதியை ஊதித்தள்ளிய அரசுப் பள்ளிகள்

விளையாட்டு தொடங்கும்போது உயர் சாதியினர் ஒருசிலரின் சின்னச் சின்ன உரசல் இருக்கும். “அதென்ன விளையாட்டு, தொட்டுத் தொட்டு விளையாடுவது” என எதிர்ப்புக் குரல் வரும். அவர்களுக்குள்ளிருந்தே இன்னொரு குரல் “ஏப்பா அதனாலென்ன? பள்ளிக்கூடத்துல வாடா, போடான்னுதான பேசிக்கிறாங்க. கட்டிப்பிடிச்சுத்தான விளையாடறாங்க” என்று எதிர்க் குரல் எழுப்பும். இந்த இரண்டு குரல்களையும் சிறுவர்கள் கண்டுகொள்ளாமல் விளையாடிக்கொண்டு இருப்பார்கள். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகப் பேணப்பட்டுவரும் கற்பிதத்தை விளை யாட்டாக ஊதித்தள்ளினார்கள். ஒரு பள்ளியில் நிலக்கிழார் வீட்டு மகன் குறைந்த மதிப்பெண் எடுப்பதும், விவசாயத் தொழிலாளியின் மகன் அதிக மதிப்பெண் எடுப்பதும் இயல்பான ஒன்றாக இருந்தது. கல்வி என்பது சாதி, மதம் சார்ந்தது அல்ல; வர்க்கம் சார்ந்தது அல்ல என்பதை அந்தப் பள்ளிகள் உணர்த்தின. கல்வியறிவு என்பது பிறப்போடு தொடர்புடையதல்ல என்பதை இப்பள்ளிகள் வெளிப்படையாகச் சொல்லாமலே சமூக மாற்றத்தை ஏற்படுத்தின.

பறப்பது சுமையா?

ஆசிரியருக்கு வகுப்பறைக்குள் தேவையான அடிப்படைச் சுதந்திரம் ‘கல்விசார் சுதந்திரம்’. அந்தச் சுதந்திரத்துடன் பாடங்களைப் பயிற்றுவிக்கும்போதுதான் உண்மையான கற்றலை நிகழ்த்த முடியும். தனியார் பள்ளியில், ஒரே ஒரு ஆசிரியருக்குக்கூட இந்தச் சுதந்திரம் அனுமதிக்கப்படுவதில்லை. தனியார் பள்ளிகளில் ஆகப்பெரிய கற்றல் குறைபாடு என்பது இந்தக் கல்விசார் சுதந்திரமின்மைதான். ஆசிரியரின் கல்விசார் சுதந்திரம் முடமாக்கப்படும்போது, மாணவர்களின் படைப்பாக்கத்துக் கான சிறகுகளும், சேர்த்தே முறிக்கப்படுகின்றன. ‘பறப்பது சுமை’ என்று கற்றுக் கொடுக்கப்படாமலே கற்றுக்கொடுக்கப் பட்டுவிடுகிறது.

ஒரு மாலைப் பொழுதில், மாணவர்களைக் கடற்கரைக்கு அழைத்துச்சென்று, “பறவைகள் பறக்கும் அழகைப் பாருங்கள்” என்றார் ஓர் ஆசிரியர். சிறகடித்துப் பறந்த பறவைகளைப் பார்த்த மாணவர்களில் ஒருவர் “நானும் இந்தப் பறவைகளைப் போல் ஒரு நாள் வானில் வட்டமிட்டு பறக்க வேண்டும்” என்று கற்பனை செய்தார். அத்தகைய பாக்கியம் பெற்ற சிறுவர் தற்போது இந்தியாவெங்கும், லட்சக் கணக்கான மாணவர்களை ஆகர்ஷிக்கிறார். அரசுப் பள்ளியிலிருந்து தன் பயணத்தைத் தொடங்கி, இந்தியாவின் முதல் குடிமகன் என்ற அந்தஸ்தை எட்டிய ஆ.பெ.ஜெ. அப்துல் கலாம்தான் அந்தச் சிறுவர்.

இதில் துரதிர்ஷ்டம் என்னவென்றால், அவரை ஆராதிக்கும் மாணவர்கள் அவர் படித்த சுதந்திரச் சிந்தனைப் பள்ளியில் படிக்கும் பேறுபெறாதவர்களாகப் போய்விட்டனர்.

ஒரு மணி நேரப் பாட வேளையில் ஊருக்குள் பெரும் புரட்சியைச் செய்த ஆசிரியர்கள் பலர் அரசுப் பள்ளிகளுக்கு உரமாய்த் திகழ்ந்தனர். ‘சாதி இரண்டொழிய வேறில்லை’ என்று தொடங்கும் செய்யுளை உயிர் உருக நடத்தி முடித்து, வகுப்பறையை நிமிர்ந்து பார்த்தார் அந்த ஆசிரியர். மாணவர்களின் முகங்களையும், அவர்தம் கண்களையும் ஊடுருவிப்பார்த்தார். தனது உணர்வுநிலைக்கே தன் மாணவர் களைக் கரம்பிடித்து அழைத்து வந்துவிட்டதாக அவர் உணர்ந்தார்.

“சாதிகள் இல்லையென்று நீங்கள் உண்மையில் நம்புகிறீர்களா? இந்தச் செய்யுளுக்கு உண்மையில் பொருள் உண்டா?” என்று கேட்டார். ஒட்டுமொத்த வகுப்பும் வேகமாய்த் தலையாட்டியது. “சரி, தாழ்த்தப்பட்ட சக மாணவர்களில் ஒருவரை இன்று இரவே உங்கள் வீடுகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அந்தப் பையனோடு உண்டு உறங்கி நாளை பள்ளிக்கு வர வேண்டும்.” “சரிங்கய்யா” என்றனர் ஏக குரலில். ஒரு மாணவன் தன் உயிருக்கு உயிரான உள்ளூர் நண்பனை அழைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றான்.

மொத்தக் கிராமமும், தண்ணீர் தேவைக்குத் தனியாரின் கிணறுகளை நம்பியிருந்த காலம் அது. தலித் மாணவனை வீட்டுக்குள் அனுமதித்த குற்றத்துக்காகத் தண்ணீர் தர மறுத்தனர். அதிர்ந்துபோன அந்தக் குடும்பம், அந்தப் பகுதி பஞ்சாயத்துத் தலைவரிடம் முறையிட்டது. ஒரே வாரத்தில் அவ்வூரில் பொதுக்கிணறு வெட்டப்பட்டது. இப்படியான அரசுப் பள்ளிகளின் சேவைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் அவையே ஒரு மாபெரும் ஆவணமாகும்.

40 வயது கடந்து பொதுவாழ்வில், அரசில், அரசியலில் இருப்பவர்களில் பலர் இத்தகைய பாதிப்புகளின் ஊடாகவே சிறந்து விளங்குகின்றனர். சமூகத்தில் இதுவரையில் நடந்துள்ள நல்ல காரியங்களுக்கும், நல்லெண்ண உருவாக்கங்களுக்கும் பொதுப்பள்ளிகள் பெரும்பங்காற்றியுள்ளன. அவற்றைப் புனரமைக்காமல் சமூகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிப் படிநிலை சாத்தியம் இல்லை.

- நா. மணி, பேராசிரியர், ஈரோடு கலைக்கல்லூரி, ‘மீண்டெழும் அரசுப் பள்ளிகள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: tnsfnmani@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x