Last Updated : 24 May, 2015 11:21 AM

 

Published : 24 May 2015 11:21 AM
Last Updated : 24 May 2015 11:21 AM

வெளிச்சத்தில் நடக்கும் வியாபாரம்

தமிழகம் முழுவதும் திருட்டு டிவிடிகள் விற்பனை செய்யப்பட்டாலும், அவை தயார் செய்யப்படுவது ஒருசில இடங்களில்தான். சென்னையில் குறிப்பிட்ட 3 பேர்தான் மிகப் பெரிய அளவில் திருட்டு டிவிடிகளைத் தயார்செய்து விநியோகம் செய்கின்றனர். சமீபத்தில் காஜா மொய்தீன் என்பவர் மீது சில வழக்குகளைப் பதிவுசெய்த காவல் துறையினர் அவரைக் கைதுசெய்தனர். ஆனால், இன்னும் சிலர் சுதந்திரமாகத் திருட்டு டிவிடிகளைத் தயாரிக்கின்றனர். இது காவல் துறையினருக்கும் நன்றாகவே தெரியும். ஆனால், அவர்களைக் கைதுசெய்ய மாட்டார்கள். அதற்கான காரணத்தைச் சொல்லவா வேண்டும்!

தமிழகத்தில் ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அதன் டிவிடி வெளிநாடுகளில் முறையான உரிமம் பெற்று விற்பனைக்கு வந்துவிடுகிறது. அப்படி வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் டிவிடிகளில் ஒன்றை சென்னைக்குக் கொண்டுவந்து, திருட்டு டிவிடிகளைத் தயாரிக்கின்றனர். ‘அயன்' திரைப்படத்தில் இந்த சம்பவத்தை இயக்குநர் கே.வி. ஆனந்த் ஓரளவு காட்டியிருப்பார்.

புதுப் படத்தைத் திரையரங்கத்தில் ஓடவிட்டு, கேமரா மூலம் பதிவுசெய்து திருட்டு டிவிடி தயாரிப்பது இரண்டாவது ரகம். இவர்கள் உள்ளூர் திருட்டு டிவிடி தயாரிப்பாளர்கள். இவர்களால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. ஆனால், வெளிநாடுகளிலிருந்து டிவிடியை வரவைப்பவர்கள்தான் திருட்டு டிவிடி தொழிலின் ஆணிவேர்கள். இவர்கள் தயாரிக்கும் டிவிடி 5.1 தொழில்நுட்பத்தில் மிகத் தெளிவான ஒளி, ஒலியுடன் இருக்கும். இதற்குதான் ரசிகர்களும்?! அதிகம்.

திருட்டு டிவிடி விற்பனை செய்ததாக பேருக்கு ஓரிருவரையும், அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாகச் சில பொருட்களையும் காவல் துறையினர் அவ்வப்போது காட்டுவார்கள். திருட்டு டிவிடியைத் தடுக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்று கணக்கு காட்டும் செயல்தான் இது. கொசு உற்பத்தியாகும் இடத்தை மறைத்துவிட்டு, ஓரிரு கொசுக்களை மட்டும் கொல்வதால் என்ன பயன்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x