Last Updated : 22 May, 2015 10:16 AM

 

Published : 22 May 2015 10:16 AM
Last Updated : 22 May 2015 10:16 AM

பொருளாதாரம் இயல்புநிலைக்குத் திரும்புவது நிச்சயமல்ல!

பொருளாதார வீழ்ச்சியிலிருந்து அமெரிக்காவும் பிற நாடுகளும் பாடம் கற்கவில்லை.

இப்போது நாம் சந்திக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள் வழக்கமான சுழற்சிதான் என்பதைத் தவிர வேறு வகையில் சிந்தித்துப் பார்க்கத் தயக்கமாக இருக்கிறது. சிறிது காலமாகவே பொருளாதார நிலைமை சரியில்லை என்று தெரியும், ஆனால் உண்மையில் என்னதான் நடக்கிறது?

அமெரிக்காவின் ஒட்டுமொத்தப் பொருளாதார நிலையைப் பார்க்கும்போது தொழிலாளர்களின் ஊதியம் (உண்மை மதிப்பில்) மிகக் குறைவாகவே அதிகரிக்கிறது, பண முதலீடுகளுக்கான வட்டிவீதம் குறைவாகவே இருக்கிறது, உற்பத்தியில் தொழிலாளர் பங்களிப்பு குறைவாகவே இருக்கிறது – இவையனைத்துமே தற்காலிகமானவை என்று நம்மால் பார்க்க முடிந்த காரணங்களைப் பட்டியலிட்டுத் திருப்திப்படுகிறோம். நிர்வாகம் சீரடைந்தால், பொதுக் கடன் அல்லது வீடமைப்புத் துறையில் குவிந்துள்ள கடன் குறைந்தால் எல்லாமே சரியாகிவிடும் என்று ஒரு சாரார் கூறுகின்றனர்.

கடந்த முறை பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தபோது ஏற்பட்ட சில மாறுதல்களைப் போக்காமல் பொருளாதாரத்தில் அவற்றை அப்படியே நீடிக்க விட்டுவிட்டோம், அதுதான் தவறு. கடந்த காலத்தில் பொருளாதாரக் கொள்கைகளில் செய்த தவறுகளைச் சரிப்படுத்தினாலே இயல்புநிலை திரும்பி விடும் என்று மற்றொரு சாரார் கூறுகின்றனர்.

இரு தரப்பினரின் வாதங்களிலும் சில உண்மைகள் இருக்கின்றன. வீழ்ச்சி என்பது நாம் பாடம் படிப்பதற்காக ஏற்பட்ட ஒரு அனுபவம், அதை நாம் சரியாகக் கவனிக்கத் தவறிவிட்டோம் என்பதே உண்மை. நிதி நெருக்கடி திடீரென்றும், இயல்புக்கு மாறாகவும் மாறியதற்குக் காரணமே நம்முடைய பொருளாதாரத்தின் வலுவற்ற தன்மையும், முறையாகச் செயல்படாத தன்மையும்தான். மெதுவாக, அதே சமயம் நிச்சயமாக இந்த நிலைமைக்கு ஏற்ப நாம் நமது இலக்குகளை மாற்றிக்கொள்ளலாம். கசப்பான சில உண்மைகளை நாம் கண்டுபிடிக்கத் தொடங்கியிருக்கிறோம். டொரான்டோ பல்கலைக்கழகப் பொருளாதார அறிஞர் ரிச்சர்ட் ஃபுளோரிடா பாணியில் சொல்வதானால் “நாம் இப்போது மாற்றுமுறையில் பொருளாதாரத்தை அமைத்துக்கொண்டிருக்கிறோம்”.

நிறுவனங்கள் தங்களுடைய நிர்வாகத்தில் நீக்கு போக்கு இல்லாமல் இருந்தால், மாற்றங்கள் ஒரே நேரத்தில் நடந்துவிடாது, படிப்படியாகத்தான் மாறும். அதே வேளையில் இந்த மாற்றங்களைத் தொடர்ந்து கவனித்துவந்தால் ஒரு தொழில்துறை அல்லது சேவைப் பிரிவு எந்த திசையை நோக்கிச் செல்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

அமெரிக்க உதாரணங்கள்

அமெரிக்கப் பொருளாதாரத்துக்குப் பொருந்தும் உதாரணமொன்று இருக்கிறது. ஃபோர்டு, கிறிஸ்லர், ஜெனரல் மோட்டார்ஸ், கேடர்பில்லர், நவிஸ்டார் (முன்னாள் பெயர் இன்டர்நேஷனல் ஹார்வஸ்டர்) போன்ற நிறுவனங்கள் தங்களுடைய புதிய ஊழியர்களுக்குக் குறைவான சம்பளம் தருகின்றன. இரட்டை அடுக்குத் தொழிலாளர் முறையில் பழைய தொழிலாளர்களின் ஊதியத்தில் பாதியைத்தான் இவர்கள் வாங்குகின்றனர். இத்துடன், அதிக ஊதிய விகிதம் பெறும் தொழிலாளர்களைப் பணியிலிருந்து ஓய்வுபெற வைத்து பணியாளர் பணிவரிசைகளையும் குறைத்து வருகின்றனர்.

இவ்வாறு தொழில்நிறுவனங்கள் தங்களுடைய ஊதியச் செலவைப் பாதியாகக் குறைக்கும் முயற்சியின் பெரும் பளுவை, இளம் தொழிலாளர்கள்தான் தங்களுடைய தோள்களில் ஏற்றிக்கொள்கின்றனர். கல்லூரியில் 4 ஆண்டுகள் படித்து பட்டம் பெற்று வேலைக்கு வரும் இளம் பட்டதாரியின் ஊதியம், 2000-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இப்போது 7% குறைந்துவிட்டது. இளைஞர்கள் வேலைக்கு வரும் எண்ணிக்கையும் குறைந்துகொண்டிருக்கிறது. இதன் மறு விளைவாக ஏராளமான இளைஞர்கள் பெற்றோருடன் பழைய வீட்டில் இருக்கும் காலத்தை மேலும் சில ஆண்டுகளுக்கு நீட்டிக்கின்றனர். அவர்கள் புதிய வீடுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை.

சுருங்கும் பொருளாதாரம்

இந்த உண்மைகள் அனைத்தும் தெரிவிப்பது என்னவென்றால், நம்முடைய பொருளாதாரம் சுருங்கிக் கொண்டிருக்கிறது. நீண்ட கால நோக்கில், நம்முடைய பொருளாதார மந்தநிலை நீங்கி வளம் ஏற்படுவதற்குப் பதிலாக நீண்ட காலத்துக்கு இதே நிலைக்கான சாத்தியக்கூறுகளே தென்படுகின்றன. பொருளாதாரச் சரிவு ஏற்பட்டால் அது பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்பதே நவீன கால பாடமாக இருக்கிறது.

தொடக்க காலத்தில் ஒருவர் குறைந்த சம்பளத்துக்கு வேலைக்குச் சென்றால் அவருடைய வாழ்நாள் முழுக்க அதே விகித ஊதியம்தான் அவருக்குக் கிடைக்கிறது. இளைஞர்களுடைய ஊதியம் குறைவாக இருக்கிறது. சில ஆண்டுகளில் அவர்கள்தான் ஊதியம் பெறுவோரில் கணிசமாக இருக்கப்போகின்றனர். அப்படியானால் எதிர்காலத்திலும் பொருளாதாரம் மீட்சி அடையாமல் இப்படியே நீடிக்குமா?

பொருளாதாரச் சூழல் இப்படித்தான் தன்னைத் தகவமைத்துக்கொள்ளப்போகிறதென்றால் அரசின் கொள்கை இதை மாற்றிவிடாது. கட்டுப்படியாகாத பொருளாதாரக் கட்டுமானங்கள் தளர்ந்து தானாகவே விழ ஆரம்பிக்கும். இப்போதுள்ள அரசியல் சூழலில் பெரிய மாறுதல்களைக் கொண்டுவர முடியாது. ஏதாவது மாறுதல்கள் செய்யப்பட்டாலும் பெயரளவிலான மாறுதலாகத்தான் இருக்கும். பொருளாதாரம் வேறு தடத்தில் பயணப்பட ஆரம்பித்த பிறகு அதை எதிர்த்துப் போராடுவதில் அர்ததமே இல்லை.

ஜெர்மனி தன்னுடைய பொருளாதார முறைமை செயல்படவில்லை என்று கண்டது. தன்னுடைய தொழிலாளர்களுக்குக் குறைந்த ஊதியமே போதும் என்ற நிலையை எடுத்தது. அது இன்றுவரை தொடர்கிறது. ஜெர்மானியத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர்வது தாமதமானது. ஜெர்மானியப் பொருளாதாரம் நீக்குபோக்கானது என்பதால் தொடர்ச்சியான வளர்ச்சி என்ற பாதையில் அது பயணிக்கிறது. இப்போதைக்கு ஜெர்மனியால் அப்படித்தான் இருக்க முடியும்.

பிரான்ஸ் அதற்கு மாற்றாக, அதிக ஊதிய விகிதத்தை அப்படியே பராமரிக்க முயன்றது. இளவயது தொழிலாளர்களுக்கு அதிக ஊதியம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மூத்த தொழிலாளர்களுக்கு ஓய்வுகொடுத்தது. சில துறைகளில் புதியவர்களுக்கு வேலை கொடுப்பதைத் தாமதப்படுத்தியது. ஆனால் இறுதியாகப் பார்க்கும்போது நாட்டின் ஒட்டுமொத்த வேலையில்லாத் திண்டாட்டம் அதிக அளவுக்கு உயர்ந்தது. இது இப்படியே நீடித்தால் தொழிலாளர்களின் ஊதியக் குறைப்பு, நிறையப் பேருக்கு வேலையிழப்பு என்ற நிலைமை ஏற்படும். பிரான்ஸ் நாட்டில் பொருளாதார எதிர்காலம் குறித்து கவலையும் அவநம்பிக்கையும்தான் அதிகமாக இருக்கிறது.

ரோபாட் பொருளாதாரம்

இப்போதைய பொருளாதார விவாதங்கள் எல்லாம் ஊதிய வேறுபாடு பற்றியல்ல; பொருளாதாரம் பழைய நிலைக்குத் திரும்புமா, திரும்பாதா என்பதுபற்றித்தான். அங்கொன்றும் இங்கொன்றுமாக கோடிகாட்டப்படும் சில நிலைகளைப் பார்த்தால் எதிர்காலப் பொருளாதாரம் ‘ரோபாட்’ பொருளாதாரமாகிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. அதிக செல்வாக்கு பெற்றவர்கள் – அதாவது மேட்டுக்குடிகளிடம் அதிகாரம் குவிந்துவிடும். புதிய பொருளாதார முறைமையில் அமெரிக்காவால் ஆதிக்கம் செலுத்த முடியாது. அது அமெரிக்க நிறுவனங்களுக்கும் அமெரிக்கத் தொழிலாளர்களுக்கும் பெருத்த பின்னடைவாக இருக்கும்.

புதிய சூழலுக்குப் பொருளாதாரம் தன்னைத் தகவமைத்துக்கொள்வது எந்த நிலையில், எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் இப்போது கிடைத்துள்ள தரவுகளைக் கொண்டு பெரிய, மிக நிரந்தரமான மாற்றங்கள் குறித்து ஏதும் தெரிந்துகொள்ள முடியுமா என்று தெரியவில்லை.

- © தி நியூயார்க் டைம்ஸ்,
சுருக்கமாகத் தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x