Last Updated : 04 May, 2015 08:34 AM

 

Published : 04 May 2015 08:34 AM
Last Updated : 04 May 2015 08:34 AM

பேரிடர்களும் மனிதர்களும்

நிலநடுக்கம் இயற்கைப் பேரிடர் என்றால், அதன் பின்விளைவுகள் மனிதர்களால் உருவாக்கப்படுபவை! 

“அழிவு என்பது அடிப்படையில் மனிதன் சம்பந்தப்பட்ட விஷயம். நில நடுக்கங்களின் மூலம் நகரங்களை அழிப்பவன் மனிதன்தான். இந்த பூமியில் மனிதர்கள் இல்லாமல் இருப்பார்களேயானால், நிலநடுக்கம் பவுதீக இயற்கையின் அர்த்தமற்ற இயக்கங்களில் ஒன்றாகவே இருக்கும். ஆனால், நகரங்களைக் கட்டும் மனிதனின் திட்டத்துக்கு அவை ஊறு விளைவிக்கும்போதுதான் அவை பேரிடராகின்றன” என்றார் பிரெஞ்சு சிந்தனையாளரும் சமூகப் போராளியுமான ழான்-பால் சார்த்தர். இங்கு ‘மனிதன்’ என்று அவர் குறிப்பிடுவது முதலாளியம், அதன் லாப வேட்டை, அதன் சுரண்டல், இவற்றுக்குத் தேவைப்படும் இனவாதம் ஆகியற்றைத்தான். இதோடு நாம் மதவாதத்தையும் சாதியத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.

அரசியல்வாதிகளின் ஆதாயம்

தென்னாசிய, தென் கிழக்காசியப் பகுதிகளைச் சூறையாடிய 2004 சுனாமியின்போது, எத்தனையோ சடலங்களிலிருந்து தங்க நகைகளுக்காகக் காது களையும் கைகளையும் அறுத்தும் வெட்டியும் கொண்டுசென்றவர்களும் இருக்கத்தான் செய்தனர். வண்டி வண்டியாக அள்ளப்பட்ட பிணங்கள் குப்பை களைக் கொட்டுவதுபோலத்தான் மொத்தமாகக் குழிகளில் கொட்டப்பட்டுப் புதைக்கப்பட்டன (ஒரே விதிவிலக்கு, நாகூரில் மட்டும் முஸ்லிம்கள் ஒவ்வொரு சடலத்தையும் தனித்தனியாகக் கிடத்தி வைத்து, தங்கள் சம்பிரதாயப்படி நல்லடக்கம் செய்தது). சடலங்களை அடையாளம் காண்பதற்கான எந்த முயற்சியையும் நமது அரசாங்கம் செய்யவில்லை.

இதற்கு மாறாக, இந்தோனேஷியாவில் சுனாமிக்குப் பலியானவர்களின் உடல்கள் ஒவ்வொன்றும் மரபணுப் பரிசோதனைக்குப் பிறகே புதைக்கப்பட்டது. இங்கே, பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் கொஞ்சம் கிடைத்தன என்றாலும், பெருமளவில் ஆதாயம் அடைந்தவர்கள் அரசியல்வாதிகளும் ஒப்பந்ததாரர்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும்தான்.

ஆனால், ஏராளமான இழப்புகளுக்குப் பிறகும் நம்முடைய அரசாங்கம் கற்றது என்ன? ஒன்றுமில்லை. மாறாக, அதே சுனாமியின் பெயரால், இழப்புகளின் பெயரால், கடலோடிகளைக் கடலை விட்டு விரட்டி, கடற்கரையை வர்த்தகமயமாக்கும் வேலைகளிலேயே இறங்கியது. அமர்நாத் யாத்ரீகர்களைத் தங்கள் மதவாத அரசியலுக்குப் பயன்படுத்திக்கொள்பவர்கள், ஒரு போதும் சுற்றுச்சூழல் கேடுகள் காரணமாக லிங்க வடிவப் பனிக்கட்டி முழு வடிவம் கொள்வதற்கு முன் உருகிப்போய்விடுவதுபற்றியோ, அந்த யாத்ரீகர்கள் போகும் வழியெல்லாம் மலைமலையாக பிளாஸ்டிக் பொருட்களைக் கொட்டி, பிரகிரிதிக்கு ஊறு விளை விப்பதுபற்றியோ பேசுவதில்லை.

இயற்கையின் மீது பழியா?

2013-ல் உத்தராகண்டில் பெருவெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்துக்கு, நுண்மையான மலைப் பகுதிகளில் மின்உற்பத்திக்காக அணைகள் கட்டப்பட்டு, அவற்றின் பொருட்டுப் பெரும் சாலைகள் அமைக்கப்பட்டதும், பணத்தாசை பிடித்த வணிகர்களும் ஒப்பந்ததாரர்களும் விதிமுறைகளை மீறிக் கட்டிடங்கள் கட்டியதும் முக்கியக் காரணங்கள் என்று உறுதியானது. சூழலியலாளர்களும் அறிவியலாளர்களும் இதைச் சுட்டிக்காட்டியபோது நடந்தது என்ன? அவர்களை அலட்சியம் செய்து முழுப் பழியையும் இயற்கையின் மீதே சுமத்தினார் அந்த மாநிலத்தின் முதல்வர்.

நிலநடுக்கத்தால் பேரழிவுகளைச் சந்திக்கும் உலக நாடுகளின் பட்டியலில் நேபாளம் 11-வது இடத்தில் இருக்கிறது. உலகில் நிலநடுக்கத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் மக்கள் உள்ள 21 நகரங்களில் காத்மாண்டுவும் ஒன்று. வேதனை என்னவென்றால், ஏப்ரல் 25-ல் நிகழ்ந்த நிலநடுக்கத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்புதான் உலகெங்கிலும் இருந்து வந்திருந்த நிலநடுக்கவியல் விஞ்ஞானிகளின் மாநாடும் காத்மாண்டில் நடந்திருக்கிறது. அவர்கள் முன்கூட்டியே எதிர்பார்த்த அதே இடத்தில், அதே அளவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் புவி அறிவியல்கள் துறையைச் சேர்ந்த ஜேம்ஸ் ஜாக்ஸன், நிலநடுக்கம் இயற்கையால் ஏற்படுத்தப்படும் பேரிடர் என்றால், அதனால் ஏற்படும் பின்விளைவுகள் மனிதர்களால் உருவாக்கப்படுபவை என்றார்.

உலகிலுள்ள மிக வறிய நாடுகளில் ஒன்று நேபாளம். ஏகாதிபத்திய நாடுகள் மட்டுமின்றி, பிற நாடுகளாலும் நீண்ட காலமாகச் சுரண்டப்பட்டு, ஒடுக்கப்பட்டுவரும் நாடு. அதனுடைய பொருளாதாரம் இந்தியாவையே பெரிதும் சார்ந்துள்ளது. இயற்கை எரிவாயுவும் டீசலும்கூட இங்கிருந்துதான் செல்ல வேண்டும். அந்த நாட்டு மக்களில் மிகப் பெரும்பாலானோர் கிராமப் புறங்களில் உள்ள மிக வறிய, ஊட்டச்சத்துக் குறை பாடுள்ள மக்கள். ஊழல்மிக்க அரசாங்க அதிகாரிகள், நிலப்பிரபுக்கள், லேவாதேவிக்காரர்கள் ஆகியோரால் சுரண்டப்படுபவர்கள். போதாக்குறைக்கு இந்தியாவைப் போலவே அங்கும் இறுக்கமான சாதி அமைப்பு இருக்கிறது.

உழைப்பு ஏற்றுமதி

இப்படிப்பட்ட அமைப்பின் கீழ்மட்டத்தில் இருப் பவர்களும் இனத்துவச் சிறுபான்மையினரும் கொடூரமான புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர். சமுதாயத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் பெண்கள் ஒடுக்கப்படுகின்றனர். கிராமப்புற மக்களில் மிகப் பெரும்பாலோருக்குக் கல்வி, மருத்துவம், குடிநீர், சுகாதார வசதிகள் ஏதும் இல்லை. இந்தியா, மத்தியக் கிழக்கு நாடுகள் போன்றவற்றுக்கு மிக மலிவான உழைப்பை ஏற்றுமதி செய்வதுதான் உலக முதலாளிய அமைப்பில் நேபாளம் வகிக்கும் பாத்திரம். நேபாள ஆண்கள் கத்தார், துபாய் போன்ற பாரசீக வளைகுடா நாடுகளில் கட்டுமான வேலைக்குச் செல்கின்றனர். இந்தியாவில் பெருந்தோட்டங்களில் மட்டுமே காணப்பட்ட நேபாளத் தொழிலாளர்களை அண்மைக்காலமாக, தமிழகத்தின் நிறு நகரங்களிலும்கூடக் காண முடிகிறது. இந்தியாவில் பாலியல் தொழிலில் பெருமளவில் ஈடுபடுத்தப்படு கின்றனர் நேபாளப் பெண்கள்.

விதிமுறை மீறும் காத்மாண்டு

வேலைவாய்ப்புகளுக்காக காத்மாண்டு போன்ற நகரங்களுக்கு ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கான கிராமப்புற மக்கள் இடம்பெயர்கின்றனர். இந்த நகரங்களிலும்கூடப் போதுமான அகக்கட்டுமான வசதிகளோ, குடிநீர், சுகாதாரச் சேவைகளோ இல்லை. பெருநகரங்களிலும் சிறுநகரங்களிலும் 40 லட்சம் பேர் மழைக்கும் வெயிலுக்கும் தாக்குப்பிடிக்காத குடிசைகளில் வாழ்கின்றனர். அந்த நாட்டில் ‘இயல்பு வாழ்க்கை’ உள்ள நாட்களிலும்கூட பல மணி நேர மின்தடை. அனைத்து விதிமுறைகளையும் மீறி ஒவ்வோர் ஆண்டும் காத்மாண்டில் மட்டும் மிக மோசமான முறையில் 6,000 கட்டிடங்கள் கட்டப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

இத்தகைய நாட்டால் நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்களை எவ்வாறு எதிர்கொள்ள முடியும்? ஏப்ரல் 25 அன்று நேபாளத்தில் ஏற்பட்ட அதே அளவிலான நிலநடுக்கம், ஒவ்வொரு நாட்டிலும் உள் கட்டிடங்களின் அமைப்பு, மக்கள்தொகை, அடிப்படை வசதிகள் ஆகியவற்றைப் பொறுத்து வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் என்று நிலநடுக்கவியல் வல்லுநர் டேவிட் வால்ட் கூறுகிறார். எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத்தில் இதேபோன்ற நிலநடுக்கத்துக்குப் பலியாகிறவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்துக்கு 10 முதல் 30 பேராக இருக்கும் என்றும், நேபாளம், இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளில் சில இடங்களிலோ 10 லட்சத்துக்கு 1,000 பேர் முதல் 10,000 பேர் வரை பலியாவார்கள் என்றும் கூறுகிறார். இயற்கையின் சீற்றத்தை யாராலும் தடுக்க முடியாது. ஆனால், அதன் பின்விளைவுகளை எதிர்கொள்வதும் சமாளிப்பதும் சம்பந்தப்பட்ட நாட்டிலுள்ள சமூக, பொரு ளாதார, அரசியல் அம்சங்களைச் சார்ந்துள்ளன.

இந்நாட்களில் நேபாளத் துயரத்தைப் பற்றி நாம் நிறையப் பேசுகிறோம். ஆனால், நாம் என்ன கற்றுக் கொண்டிருக்கிறோம்?

- எஸ்.வி. ராஜதுரை,

மார்க்ஸிய-பெரியாரிய அறிஞர், இவரது மொழிபெயர்ப்பில் ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ நூல் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது.

தொடர்புக்கு: sagumano@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x