Last Updated : 13 May, 2015 08:27 AM

Published : 13 May 2015 08:27 AM
Last Updated : 13 May 2015 08:27 AM

நோஞ்சான் ஆகிறதா இந்தியா?

ஊட்டச்சத்துக் குறைபாடு இந்தியாவின் பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது.

சென்னையில் உள்ள பத்திரிகைத் துறை நண்பருக்கு நடுத்தர வயதுதான். அவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற் பட்டு அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். பலதரப்பட்ட மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முடிவுகள் எல்லாமே சரியாகத் தான் இருந்தன. மருத்துவர்கள் நோயைக் கணிக்கச் சிரமப்பட்டார்கள். இதுவாக இருக்குமோ, அதுவாக இருக்குமோ என ஊகத்தின் அடிப்படையில் பல நோய்களுக்குரிய சிகிச்சை கொடுத்தார்கள். ஒரு மாதம் கழித்து நோய் குணமானது. “இந்த அளவுக்கு நோய் நீடித்தது ஏன்?” என்று கேட்ட நண்பருக்கு மருத்துவர்கள் சொன்ன பதில் “உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கிறது.”

இது சின்ன உதாரணம்தான். இந்த நிலையில் இருப் போரின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம். ஆனால், இதுகுறித்த ஆராய்ச்சிகள், தொடர் கண்காணிப்புகள், புள்ளிவிவரங்கள் நம்மிடம் இருப்பதோ மிகக் குறைவு. மக்களிடமும் இது தொடர்பான விழிப்புணர்வு அவ்வளவாக இல்லை என்பதுதான் துயரம். இந்த நிலை நீடித்தால், இந்தியா ஒரு ‘நோஞ்சான் நாடு’ என்று பெயரெடுக்க வெகு காலம் ஆகாது.

எது நோய் எதிர்ப்புச் சக்தி?

நம்மைச் சூழ்ந்திருக்கும் கண்ணுக்கே தெரியாத, கோடிக் கணக்கான நுண் கிருமிகள் எந்த நேரமும் நம்மை ஆட்டிப்படைக்கக் காத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், மனித இனத்துக்கே கிடைத்துள்ள மிகப் பெரிய வரப்பிரசாதம், ‘நோய் எதிர்ப்பு மண்டலம்' என்று சொல்லக்கூடிய உடலின் தற்காப்புப் படைதான். இதற்கு 24 மணி நேரமும் நம்மைக் ‘காவல் காக்கும்' வேலைதான். இதற்கு நாம் இடையூறு செய்தால், ஆரோக்கியத்தில் பிரச்சினை வரும். தீமை செய்யும் கிருமிகள் உடலின் திசுக்களுக்குள்ளும் உறுப்புகளுக்குள்ளும் எளிதில் புகுந்து நம்மை ஆட்டிப்படைக்கும்.

உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைய இரண்டு வழிகள் பொதுவானவை. பரம்பரைரீதியாக மரபணுக்களில் பிழை உண்டாகி, குழந்தைக்கு எதிர்ப்புச் சக்தி குறைவது ஒரு வகை. இப்படி ஏற்படுவது மிகக் குறைவுதான். ஆனால், நம் வாழ்க்கைமுறை மாற்றங்களாலும், சுற்றுச்சூழல் பாதிப்பாலும், தொற்று நோய்களாலும், எய்ட்ஸ் போன்ற கடுமையான நோய் களின் ஆக்கிரமிப்பாலும் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைவதுதான் அதிகம்.

ஊட்டச்சத்துக் குறைபாடு

உடலில் நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடும் ரத்த அணுக்களுக்குப் போதுமான அளவில், ஊட்டச் சத்துகள் தொடர்ந்து கிடைத்துக்கொண்டிருக்க வேண்டும். இதற்குச் சரிவிகித உணவை எடுத்துக்கொள்வது அவசியம். முக்கியமாக, சிறுதானியங்கள், கீரைகள், காய்கறிகள், பழங்கள், பால் முதலியவற்றை உட்கொள்வதன்மூலம் வைட்டமின்கள் மற்றும் தாதுச் சத்துகள் உடலில் சேர்ந்து, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். ஆனால், இந்தியாவில் சுமார் 30% பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்வதாக அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. உண்மையில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும். இவர்களுக்குச் சரியான அளவில் உணவு கிடைக்காமல் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட்டு நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.

ஆரோக்கியத்தை உறுதி செய்வதில் வாழ்வாதாரங்கள் முக்கியமானவை. இந்தியாவைப் பொறுத்தவரை வறுமை ஒருபுறமும் சுற்றுச்சூழல் கேடுகள் மறுபுறமும் இங்கு வாழ்வதற்கான சூழலைக் கெடுத்து நீண்ட காலம் ஆகிவிட்டது. சுவாசிக்கப் புகையும் தூசியும் கலந்த காற்று, குடிக்க நச்சுத் தண்ணீர், சாப்பிட பூச்சிக்கொல்லியும் ரசாயனமும் கலந்த உணவு என்று விதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு டெங்கு, டைபாய்டு, மலேரியா, பன்றிக் காய்ச்சல், சிக்கன்குனியா போன்ற தொற்றுநோய்கள் ஏற்படுவதும், இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதும் வாடிக்கை ஆகிவிட்டது. இப்படிச் சுற்றுச்சூழல் மோசமாகிக்கொண்டே போனால், பல தொற்றுநோய்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது; இந்தியா ‘நோஞ்சான்’ ஆவதையும் தடுக்க முடியாது. இந்தச் சூழலில் இந்தியா தன்னுடைய சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மேற்கத்திய நாடுகளில் உள்ளதைப் போல் இன்னும் அதிக கவனமும் கண்டிப்பும் செலுத்த வேண்டும்.

ஆரோக்கிய வாழ்க்கைமுறை

தினமும் ஆரோக்கிய வாழ்க்கைமுறையைப் பின்பற்றுவதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம். அதாவது, உணவில் முழு தானியங் களைச் சேர்த்துக்கொள்வது, அதிக அளவு காய்கறி, பழங்களைச் சாப்பிடுவது, உடல் பருமன் வராமல் பார்த்துக்கொள்வது, தவறாமல் உடற்பயிற்சி செய்வது, புகை, மதுவைத் தொடாமல் இருப்பது, இறைச்சி உணவுகளைக் குறைத்துக்கொள்வது, வெங்காயம், வெள்ளைப்பூண்டு, ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மிகுந்துள்ள மீன் உணவுகளைச் சாப்பிடுவது, தேவையான அளவு தூக்கம் போன்ற நல்ல பழக்கங்கள் நோயற்ற வாழ்வுக்கு வழி அமைக்கும். ஆனால், இன்றைய அவசர வாழ்க்கையில் குழந்தைகளும் இளைஞர்களும் விரைவு உணவுகளையும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட கொழுப்பு மிகுந்த செயற்கை உணவுகளையும்தான் அதிகமாக விரும்பிச் சாப்பிடுகிறார்கள். இவற்றில் கலக்கப்படுகிற பலதரப்பட்ட ரசாயனங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்குத் தீங்கு விளைவிப்பவை. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்துவிடுகிறது. செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட காய்கனிகள் மூலமும் உடல்நலப் பாதிப்புகள் வருகின்றன.

மன அழுத்தம் தவிர்ப்போம்

மன அழுத்தத்துக்கும் நோய் எதிர்ப்புச் சக்திக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மன அழுத்தம் அதிகரிக்கும்போது, அது நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பாதிக்கிறது. இன்றைய இயந்திரகதியிலான வாழ்க்கை முறையில் மாணவப் பருவத்திலிருந்து பணிக்குச் செல்வோர் வரை அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் மன அழுத்தம் இருக்கிறது. எனவே, மன அழுத்தத்தைத் தவிர்க்கும் யோகாசனம், தியானம் போன்றவற்றை சிறு வயதிலிருந்தே பின்பற்ற வேண்டும். இதற்கு உதவும் வகையில் பள்ளிகள், கல்லூரிகள், கார்ப்பரேட் அலுவலகங்கள் போன்றவற்றில் இதற்கான சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்; தகுந்த பயிற்சிகளும் தரப்பட வேண்டும். வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் வெளியில் சென்று மன ஓய்வுக்கு வழி செய்ய வேண்டும்.

இந்தியாவில் நகர்ப்புறத்திலும் சரி, கிராமப்புறத்திலும் சரி, சுயமருத்துவம் பார்த்துக்கொள்வதும் போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதும் மிக இயல்பாக நிகழ்பவை. இவற்றின் விளைவால் பயனாளியின் உடலுக்குள் தேவையற்ற மருந்துகள் அளவுக்கு அதிகமாக நுழைகின்றன. உதாரணத்துக்கு; ஆன்டிபயாட்டிக் மருந்துகள், ஸ்டீராய்டு மருந்துகள், வலி மாத்திரைகள் போன்றவை தேவைக்கு மேல் உடலுக்குள் போனால் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு ஆபத்து வரும். அப்போது நோய் எதிர்ப்புச் சக்தி குறையும். எனவே, இம்மாதிரியான மருந்துகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இருந்தால் மட்டுமே பயனாளிகளுக்கு வழங்குவது என்பதில் மருந்துக் கட்டுப்பாடுத் துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்டிப்பு காட்ட வேண்டும்.

ஒருவருக்கு அடிக்கடி நோய் ஏற்படுமானால், அதுவே அவருடைய உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைத்துவிடும். எனவே, ஒரு நோயைக் குணப்படுத்துவதற்குப் புதிய மருந்துகளைக் கண்டு பிடிப்பதிலும், உள்நாட்டில் கிடைக்காத மருந்துகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதிலும், அவற்றை விற்பனை செய்வதற்குச் ‘சந்தை உத்தி’களை மேம்படுத்துவதிலும் அரசும் தனியார் மருந்து நிறுவனங்களும் செலுத்துகிற கவனத்தை, அந்த நோயை வரவிடாமல் தடுப்பதில் செலுத்தினால் அதிக பலன்கள் கிடைக்கும். இதற்கு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இருப்பதைப் போல் நோயைத் தடுக்கும் வழிமுறைகளை முன்னிலைப்படுத்தும் சுகாதாரக் கொள்கைகளை வகுத்து, அதற்குரிய மருத்துவக் கட்டமைப்புகளை இந்தியாவிலும் ஏற்படுத்த வேண்டும்.

ஏழை மக்களின் ஆரோக்கியத்தைக் காப்பதில் ஆபத்பாந்தவன்களாகத் திகழ்பவை ஆரம்ப சுகாதார மையங்கள்தான். இந்த அமைப்புகள் மட்டும் முறையாகவும் சரியாகவும் செயல்பட்டால் போதும் மக்களின் ஆரோக்கியப் பிரச்சினைகள் கணிசமாகக் குறைந்துவிடும். இதற்குரிய கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கவும், தேவையான மருத்துவப் பணியாளர்களை நியமிக்கவும், தடையில்லாத மருந்து விநியோகத்துக்கு உத்தரவாதம் கிடைக்கவும் மத்திய அரசும் மாநில அரசும் போதுமான நிதியை ஒதுக்க வேண்டும்.

- டாக்டர் கு. கணேசன், பொதுநல மருத்துவர்.

தொடர்புக்கு: gganesan95@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x