Last Updated : 18 May, 2014 11:17 AM

 

Published : 18 May 2014 11:17 AM
Last Updated : 18 May 2014 11:17 AM

மோடியின் படை!

மோடி வெற்றிபெறுவார் என்று கணிக்கப்பட்டாலும் இதுவரை கால்பதிக்காத பிரதேசங்களின் கோட்டைகளை நொறுக்கி வெற்றிக்கொடி நாட்டியது பா.ஜ.க-வே எதிர்பாராதது. இந்த மகத்தான வெற்றிக்குப் பின்புலமாகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், ஆர்.எஸ்.எஸ்-ஸின் பரிபூரண ஆசி என்ற காரணிகள் இருந்தாலும் அவற்றையும் தாண்டி மோடியின் பின்னால் நின்றது நெருங்கிய நண்பர்கள், அதிகாரிகள், அறிவுஜீவிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய ஒரு நவீனப் போர்ப்படைதான்.

இவர்களில் பெரும்பாலானோரை விரைவில் பிரதமர் அலுவலகத்தில் பார்க்கலாம் என்று தெரிகிறது. இவர்களில் அமித் ஷா பற்றிய தனிக்கட்டுரையே எழுத வேண்டும் என்பதால் மற்ற தளபதிகளைப் பற்றிப் பார்ப்போம்.

கே. கைலாஷ்நாதன்:

மோடிக்கும் அரசு அதிகாரிகளுக்கும் ஒரு ‘பக்கா பாலமாக’ இருக்கும் தமிழர் இவர். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் குஜராத் முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றியவர். கடந்த ஆண்டே ஓய்வுபெற்றுவிட்டார். என்றாலும் இவரை விட மனமில்லாத மோடி, ‘தலைமை முதன்மைச் செயலாளர்’என்ற பதவியை உருவாக்கி அதில் அமரவைத்து அழகுபார்க்கிறார். தமிழகத்தில் மோடி பேசிய கூட்டங்களில் அவருக்கான உரையைத் தயாரித்ததும் இவர்தான்.

‘மூவர்(ஸ்) அண்ட் ஷேக்கர்ஸ்’:

மோடியை 3-டி-யில் காட்டிய தொழில்நுட்ப வல்லுநர் குழு இது. ஹிரேன் ஜோஷி, ராஜேஷ் ஜெயின், பி.ஜி. மகேஷ் என்ற மூன்று பேர்தான் இந்தக் குழுவின் தளபதிகள். ஹிரேன் ஜோஷி புனே பல்கலைக்கழகத்தில் பிடெக் படித்தவர். சமூக வலைத்தளங்களில் மோடியின் தளபதியாகச் செயல்பட்டவர். 272 ப்ளஸ் என்ற தேர்தல் இலக்கை உருவாக்கியதில் மூளையாகச் செயல்பட்டவர். 2014- மக்களவைத் தேர்தலில் சமூக வலைத்தளங்கள் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதை உணர்ந்த மோடி, அந்தப் பணிகளைச் சிறப்பாகச் செய்ய ராஜேஷ் ஜெயினையும் மகேஷையும் நியமித்தார். இவர்கள் இருவரும்

‘டாட்காம் போஸ்டர் பாய்ஸ்’ என்று இணைய உலகில் நன்கு அறியப்பட்டவர்கள். பெங்களூருவில் 100 பேர் கொண்ட குழுவை உருவாக்கி மோடிக்காகத் தீவிரப் பிரச்சாரம் செய்தவர்கள்.

அரவிந்த் ஷர்மா:

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர்தான் ‘மோடி: வளர்ச்சியின் நாயகன்’ என்ற பிம்பத்தை உருவாக்க முதன்மைக் காரணமாக இருந்தவர். 1988- பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர், ‘துடிப்பான குஜராத்’ (வைப்ரண்ட் குஜராத்) என்ற பெயரில் மாநாடுகளை நடத்தி மோடியின் புகழுக்கு மேலும் புகழ் சேர்த்தவர். பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதில் வல்லவர்.

பிரஷாந்த் கிஷோர்:

அமெரிக்காவில் படித்த இளைஞரான இவர், அமெரிக்க அதிபர் தேர்தல் பாணியில் மோடியை முன்னிறுத்தியவர்களில் முக்கியமானவர். குஜராத் முதல்வர் அலுவலகத்தில் இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றிய இந்த இளம் அறிஞர் ‘பொறுப்புள்ள நிர்வாகத்தின் குடிமக்கள்’ என்ற அமைப்பை உருவாக்கி, ஆர்வமுள்ள ஐ.டி. இளைஞர்களை ஈர்த்தவர். பிற கட்சிகளின் இளைஞர் அணியினர் போலல்லாமல், தொழில்நுட்ப ரீதியாகவும், சந்தைப்படுத்துதல் திறமையுடனும் செயல்படும் இளைஞர்களை பா.ஜ.க. கொண்டிருப்பதற்கு இவரும் ஒரு முக்கியக் காரணம்.

பரத் லால்:

மோடியின் புகழை டெல்லியில் பரப்பியவர்களில் முதன்மையானவர் இவர். அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், ஊடகங்கள் என்று அனைத்துக்கும் ஒரு பாலமாக நின்று செயல்படுபவர் பரத் லால். மோடி கலந்துகொள்ளும் கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்பவர். ஐ.எஃப்.எஸ். அதிகாரியான இவர் குஜராத் ரெசிடெண்ட் கமிஷனராக டெல்லியில் பணிபுரிகிறார்.

கிரிஷ் முர்மு:

ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் மோடியின் செயலாளராகவும் உள்துறைச் செயலாளராகவும் பணியாற்றுபவர். மோடிமீது தொடரப்பட்ட வழக்குகளில் அவரைக் காக்க கடுமையாக உழைத்தவர். ஒடிசாவைச் சேர்ந்தவர். அரசியல் கல்வி படித்தவர். ஜாம்நகர் ஆட்சியராக இருந்தபோது, குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க பல நடவடிக்கைகளை எடுத்தவர்.

சுரேந்திர படேல்:

அத்வானியின் முக்கிய நண்பரான இவர் கடந்த 20 ஆண்டுகளாக பா.ஜ.க-வின் பொருளாளராக இருக்கிறார். மோடியின் நம்பிக்கைக்குரியவர்.

விஜய் நெஹ்ரா:

2001 பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரி. வடோதரா ஆட்சியராக இருந்தபோது, இந்திரா காந்தி முதியோர் உதவித் திட்டத்தில் 12 ஆயிரம் முதியோரைச் சேர்த்து சாதனை செய்தவர். இதற்காக சிறந்த ஆட்சியர் என்றும் குஜராத் அரசால் கவுரவிக்கப்பட்டவர். குஜராத் முதல்வர் அலுவலகத்தில் இணைச் செயலாளராகப் பணிபுரிகிறார். மோடியின் பக்கபலமாக விளங்கும் இளைஞர்களில் முக்கியமானவர்.

விஜய் சவுதியாவாலே:

மூலக்கூறு உயிரியல் நிபுணரான இவர், குஜராத்திலிருந்து செயல்படும் டோரெண்ட் குழுமத்தின் துணைத் தலைவர். கூச்ச சுபாவம் மிக்க இந்த இளைஞர் சமூக வலைத்தளங்களில், குறிப்பாக ட்விட்டரில் தீவிரமாக இயங்குபவர். ட்விட்டரில் இவரைப் பின்பற்றுபவர்களில் நரேந்திர மோடியும் ஒருவர் என்றால் இவரின் முக்கியத்துவத்தைத் தெரிந்துகொள்ளலாம். இந்திய பத்திரிகைகளில் இவர் பெயர் பெரிய அளவில் பிரபலம் இல்லையென்றாலும் ‘தி கார்டியன்’போன்ற வெளிநாட்டுப் பத்திரிகைகள் இவரைப் பேட்டியெடுத்துள்ளது குறிப்பிடத் தக்கது. ஆர்.எஸ்.எஸ். பெரிய தலைகளுக்கும் பரிச்சயமானவர்.

போர் முடிந்துவிட்டது. இந்தப் படைவீரர்கள் தற்போது தங்கள் ஆயுதங்களைப் பட்டை தீட்டிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மோடிக்காகச் செய்வதற்கு இன்னும் இருக்கிறது. இவர்களைக் கொண்டு மோடி என்ன செய்யப்போகிறார்? பொறுத்திருந்து பார்ப்போம்.

வெ. சந்திரமோகன்,
தொடர்புக்கு: chandramohan.v@kslmedia.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x