Published : 21 Apr 2015 08:37 am

Updated : 21 Apr 2015 08:37 am

 

Published : 21 Apr 2015 08:37 AM
Last Updated : 21 Apr 2015 08:37 AM

எங்கேதான் இருக்கிறது சரஸ்வதி நதி?

சரஸ்வதி நதிக்கு உயிர்கொடுக்கும் திட்டத்தில் இருக்கிறது ஹரியாணாவின் பாஜக அரசு. சரஸுதி என்ற பெயரில் தற்போது இருக்கும் நதி, புராணத்தில் சொல்லப்பட்டிருக்கும் சரஸ்வதி நதியோடு பொருந்திப்போகாததால்தான் இந்த நடவடிக்கை. அந்தப் புனித நதியின் நதிமூலம் என்று ஹரியாணாவில் அதிகாரபூர்வமாகத் தீர்மானிக்கப் பட்டிருக்கும் இடத்தில், அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

அந்த நதியின் தோற்றுவாய் எங்கே இருக்கிறது என்பதைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ளத்தான் இந்த அகழ்வாராய்ச்சி. ஒருவேளை இப்படித் தோண்டுவதன் மூலம் இயற்கையான ஊற்று ஏதாவது தட்டுப்படுகிறதா என்பதற்காக இருக்கலாம். அப்படி நடக்கவில்லை என்றால், இருக்கவே இருக்கிறது ‘பிளான்-பி’. ‘இரண்டு அல்லது மூன்று குழாய்க் கிணறுகள்’ தோண்டி, அதிகாரபூர்வ ஊற்றை உருவாக்குவது.


அந்த அதிகாரபூர்வ நீரூற்று பேராற்றை அல்ல ஒரு சிற்றாற்றைக்கூட உருவாக்காமல் போனாலும் கவலையே வேண்டாம். அந்தத் தலத்தின் அருகே ஒரு வடிகால் இருக்கிறது. செயற்கை நீர்ப்பாதையை நோக்கி அந்த வடிகாலைத் திருப்பி விடலாமல்லவா! ஆனால், அதிகாரத் தரப்பின் மூளைகளுக்கு ஒரு விஷயம் உறைக்கவில்லை. அப்படி வடிகாலை நோக்கித் திருப்பி விடப்பட்டால், உண்மையில் வடிகால் எங்கே தொடங்குகிறதோ அதுவே சரஸ்வதி நதியின் மூலம் என்றாகிவிடுமல்லவா! அந்த வடிகாலின் மூலம் என்பது இமாசலப் பிரதேசத்தின் மலைப் பகுதியிலிருந்து ஓடிவரும் ஏதாவதொரு சிற்றாறாக இருக்கலாம். அப்படியென்றால், சரஸ்வதி நதியின் தோற்றுவாய் என்பது ஹரியாணாவுக்கு வெளியில் போய்விடுமல்லவா?

கங்கா - யமுனா - சரஸ்வதி

சரஸ்வதி நதியின் தோற்றுவாயைத் தனது எல்லைக்கு உட்பட்டதாக ஆக்கிக் கொண்டாட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது ஹரியாணா அரசு. அதேபோல், சரஸ்வதி நதி எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்பதிலும் அந்த அரசு உறுதியாக இருக்கிறது. அந்தப் பிரதேசம் இயற்கையாகவே தென்மேற்கு திசையை நோக்கிய சரிவைக் கொண்டிருக்கிறது. ஆனால், தென்கிழக்குத் திசையை நோக்கி, அதாவது உத்தரப் பிரதேசத்தில் இக்காலத்தில் அலகாபாத் என்றழைக்கப்படும் முற்கால பிரயாகையை நோக்கி, அந்த நதியைச் செலுத்துவது என்பதில் அதிகாரத் தரப்பு உறுதியாக இருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத சரஸ்வதி நதி, பிரயாகையில் கங்கா - யமுனா சங்கமத்தில் ஒன்றாகக் கலக்கிறது என்பது பிரயாகையில் நிலவும் ஐதீகம். கங்கையும் யமுனையும் உண்மையில் அந்த இடத்தில்தான் கலக்கின்றன. புராணத்தோடு அனுசரித்துப்போகும் வகையில் சரஸ்வதி நதியைக் கண்ணுக்குப் புலப்படாமல் கொண்டு செல்ல, அலகாபாத் வரையிலான 500 கி.மீ. தொலைவுக்கு ஹரியாணா அரசு குடைந்துகொண்டே செல்லும் என்று எதிர்பார்ப்பது அசாத்தியமான நம்பிக்கைதான்!

சரஸ்வதிச் சமவெளி

இதற்கே மலைத்துப்போனால் எப்படி? இன்னமும் இருக்கிறது சிக்கல். சரஸ்வதி நதியைப் பற்றி ஹரியாணா அரசு கொண்டிருக்கும் கண்ணோட்டத்துக்கு மாறான கண்ணோட்டம் கொண்டிருப்பவர்களை இதெல்லாம் திருப்திப்படுத்தாது. பிரயாகைப் பகுதியில் நம்பப்படும் ஐதிகத்துக்கு நேரெதிரான கண்ணோட்டம் அது. ஆச்சார்ய டேவிட் ஃபிராலீ போன்ற சாமியார்களும் (சமீபத்தில் பத்மபூஷண் விருது பெற்றவர்), ‘நாஸா விஞ்ஞானி’ நவரத்தினா எஸ். ராஜாராம் உள்ளிட்டோரும்தான் அவர்கள். சரஸ்வதி நதிக்குப் பிரயாகையுடன் உள்ள உறவை ஒதுக்கித்தள்ளுபவர்கள்தான் அவர்கள். அதைவிட மிக முக்கியமான பொறுப்பை சரஸ்வதி நதியிடம் அவர்கள் ஒப்படைத்திருக்கிறார்கள். ஆம், சிந்துச் சமவெளி நாகரிகத்தை இந்தியாவுக்காக வென்றெடுப்பதுதான் அந்தப் பொறுப்பு! தேசபக்தி மிக்க இந்த நோக்கத்துக்காக, சரஸ்வதி நதி 5,000 ஆண்டுகளுக்கு முன்பு உலகத்தின் மாபெரும் நதியாக இருந்தது என்றும், சிந்து நதிக்கு இணையாக பாகிஸ்தானின் கட்ச் பகுதியில் உள்ள ரன் பிரதேசத்தில் பாய்ந்தது என்று நாம் கற்பிதம் செய்துகொள்ள வேண்டும். இதன் மூலம் சிந்துச் சமவெளி நாகரிகத்தை ‘சரஸ்வதிச் சமவெளி நாகரிகம்’ என்று பெயரிட்டு, அந்த நாகரிகம் இருந்த நிலப்பரப்பை இந்தியாவுக்காக வென்றெடுக்கலாம்.

பெயரைக் கைப்பற்றுவதற்கான இந்தப் போராட்டம் தொடங்கப்பட்டது 20 ஆண்டுகளுக்கு முன்னால். 1995-ல் பேராசிரியர் வி.என். மிஸ்ரா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சிறப்பு மிக்க ‘மாந்தன்’ இதழில் ஒரு கட்டுரை எழுதினார். அதன் தலைப்பு ‘தொலைந்துபோன சரஸ்வதி - ஹரப்பா நாகரிகத்தின் தொட்டில்’. அடுத்த ஆண்டு, இந்தியத் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிக் கழகத்தின் புரவலரான எஸ்.பி. குப்தா, சிந்துச் சமவெளி நாகரிகத்தைப் பற்றி ‘தி இண்டஸ் - சரஸ்வதி சிவிலைசேஷன்’ (சிந்து - சரஸ்வதி நாகரிகம்) என்ற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டார். பெயரைக் கைப்பற்றும் போரில் பாதியளவு ஏற்கெனவே வென்றாகிவிட்டது. அதைத் தக்கவைக்கவும், சரஸ்வதி நதியை மாபெரும் நதியாக மீட்டுருவாக்கம் செய்யவும் நமக்கு வேண்டியதெல்லாம் சில ஆதாரங்கள்தான்!

ரிக் வேதம் என்ன சொல்கிறது?

இதற்குத்தான், சங்க பரிவாரத்தைச் சேர்ந்த பண்டிதர்கள் கிட்டத்தட்ட ஒருவர் விடாமல் ரிக் வேதத்திலிருந்து பாடல்களை ஒப்புவிக்கிறார்கள். ரிக் வேதத்தில், சரஸ்வதி நதி மாபெரும் நதியாகவும், மலையில் தோன்றி கடலில் கலக்கும் நதியாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. ரிக் வேதக் கவிஞர்கள் சரஸ்வதியை நதியாகக் கற்பனை செய்திருப்பதைவிட, நதிதெய்வமாகக் கற்பனை செய்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது. வேறொரு பார்வையும் இருக்கிறது. ருடால்ஃப் வான் ராத், ஹெய்ன்ரிச் ஜிம்மர், கே.சி. சட்டோபாத்யாய போன்றோர் சரஸ்வதி என்பது சிந்து நதியைக் குறிக்கிறது என்ற கருத்தை முன்வைக்கிறார்கள். ஆக, ஹரியாணாவின் இன்றைய சரஸ்வதி இமயமலையில் தோன்றவில்லை என்பதும் கடலில் கலக்கவில்லை என்பதும் தெளிவு!

எனவே, பின்வரும் விதத்தில் ஊகம் தெரிவிக்கப்படுகிறது. யமுனையும் சட்லெஜும் சரஸ்வதி நதியில் கலந்தன என்றும், இதனால் சரஸ்வதி நதி இமயமலை நதியாக மாற்றம் பெற்றது என்றும் சொல்கிறார்கள். அப்படியொரு சங்கமத்தை உண்மை என்றே வைத்துக்கொண்டாலும், வரலாற்றுக்கு முந்தைய காலத்தில்தான் அது நடந்திருக்கக் கூடும். அப்போது சரஸ்வதி நதி, யமுனை அல்லது சட்லெஜ் நதிகளில் ஒன்றுடன் கலந்திருக்குமே தவிர, அந்த நதிகள் சரஸ்வதியுடன் கலந்திருக்காது. மேரி-அக்னெஸ் கவுண்டி என்பவரின் குழு 1983-87 காலகட்டங்களில் காகர் சமவெளியின் நதிப் படிவுகளை அகழ்ந்தெடுத்து மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவு மேற்கண்ட சாத்தியங்களை நிராகரித்தது. கடந்த 10,000 ஆண்டு காலத்தில் இமயமலையிலிருந்து எந்த நதியும் அந்தப் பிரதேசத்தில் பாய்ந்திருக்க வாய்ப்பில்லை என்று அந்த ஆய்வு முடிவு சொன்னது.

பிரயாகையை வந்தடையும் சரஸ்வதி என்ற பழம் புராணம், சிந்து நதிக்குச் சவால் விடுக்கும் சரஸ்வதி நதி என்ற சமீபத்திய போட்டி. இரண்டுமே ஒன்றுக்கொன்று சளைக்காதவை. இவற்றில் ஒன்றை ஹரியாணா அரசு தேர்ந்தெடுக்க வேண்டும். சரி, இந்தச் சிரமம் எதுவும் வேண்டாமென்று ஹரியாணா அரசு நினைத்தால், சரஸ்வதி நதி குறித்த இன்னொரு பழம் புராணத்தைப் பரிசீலிக்கலாம்.

பிரம்மவர்த்தம்

ரிக் வேதத்தில் நதிக்கான கீதம் (X. 75.5) யமுனை நதிக்கும் சட்லெஜுக்கும் இடையில் சரஸ்வதியை வைக்கிறது. சரஸுதி நதியுடன் இது பொருந்திப்போகிறது. பஞ்சவிம்ஷா பிரமாணம் உள்ளிட்ட தொன்மையான நூல்கள், வினஷனா என்ற இடத்தில் சரஸ்வதி நதி மறைந்ததைப் பற்றிப் பேசுகின்றன. அப்படியென்றால், காகர் நதியுடன் அது இணைந்திருக்க முடியாது. அதற்கு மாறாக இன்னும் தெற்கு நோக்கி, அநேகமாக சிர்ஸா பகுதியின் வழியாக (இடைக்காலத்தில் இந்தப் பகுதியின் பெயர்: சரஸதி) பாய்ந்திருக்கலாம். வினஷனா என்பது ஹரியாணாவில் இன்னும் தெற்குப் பகுதியில் இருந்திருக்கலாம். மனுஸ்மிருதி (2.17) சரஸ்வதி நதி, திருஷத்வதி நதி (சவுதங் நதி?) ஆகிய நதிகள் பாயும் பகுதிதான் பிரம்மவர்த்தம் என்று சொல்கிறது. ஆகவே, மேற்குறிப்பிட்ட வகையில் சரஸ்வதி நதி பாயும் பாதை பிரம்மவர்த்தமாக இருக்கக் கூடும்; ஹரியாணாதான் அந்த பிரம்மவர்த்தம்.

சரஸ்வதியைப் பற்றிய புராணச் சித்தரிப்புகள் புவியியலுடனோ வரலாற்றுடனோ சற்றும் பொருந்திப் போகவில்லை என்பதே தெளிவு. அப்படியென்றால், சரஸ்வதியை அலகாபாதுக்கோ கட்ச்சின் ரன் பகுதிக்கோ கொண்டுசெல்வதற்கு ஏன் முயற்சிக்க வேண்டும்? அறிவுபூர்வ மான காரணங்களைவிட, வேறு உள்நோக்கங்கள் இதன் பின்னணியில் இருப்பதைப் புரிந்துகொள்வதில் சிரமமேதும் இருக்கிறதா என்ன?

- இர்ஃபான் ஹபீப்,

வரலாற்றாசிரியர், வரலாற்று ஆய்வுக்கான இந்திய கவுன்சிலின் முன்னாள் தலைவர்.

©‘தி இந்து’ (ஆங்கிலம்), |சுருக்கமாகத் தமிழில்: ஆசை|


சரஸ்வதி நதிஹரியாணா அரசுபாஜக அரசுசரஸ்வதி நதிக்கு உயிர்கொடுக்கும் திட்டம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x