Published : 03 Mar 2015 10:39 AM
Last Updated : 03 Mar 2015 10:39 AM

உற்பத்தி செய்வது தனியார் பள்ளிகளே!

‘தி இந்து’ இணையதளத்தில் வெளியான ‘மாணவர்களை அரசுப் பள்ளிகள் ‘உற்பத்தி’ செய்வது எப்படி?’ என்ற கட்டுரை படித்தேன். தனியார் பள்ளிகள்கூட அரசுப் பள்ளிகளைப் பற்றி முழுக்க முழுக்க இப்படிப்பட்ட அவதூறான கருத்துகளை அவிழ்த்துவிடுவதில்லை.

அரசுப் பள்ளி மாணவன் ஒருவன் ஒரு மாணவியைக் பலாத்காரம் செய்து கொலைசெய்தானாம். இதற்கு அரசுப் பள்ளிக் கல்வி முறை காரணமாம். சில ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலோ-இந்தியப் பள்ளியில் படித்த 9-ம் வகுப்பு மாணவன், தனது ஆசிரியையை வகுப்பறையில் கத்தியால் குத்திக் கொன்றான். இதற்கு ஆங்கிலோ-இந்தியக் கல்வியின் ‘உற்பத்தி’ முறைதான் காரணம் என்று கட்டுரையாளர் சொல்வாரா?

பெரும்பாலான தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 10-ம் வகுப்புப் பாடங்கள் 9-ம் வகுப்பிலும் 12-ம் வகுப்பு பாடங்கள் 11-ம் வகுப்பிலும் கற்பிக்கப்படுகின்றன. இந்த முறைகேட்டின் மூலமே தனியார் பள்ளி மாணவர்கள் 10 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் அரசுப் பள்ளி மாணவர்களைவிட அதிகத் தேர்ச்சி விகிதமும் மதிப்பெண் விகிதமும் பெறுகிறார்கள்.

இதனால், அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களின் உயர் கல்விச் சேர்க்கை வாய்ப்புகள் பறிபோகின்றன. மருத்துவப் படிப்பில், அரசுப் பள்ளியில் படித்த ஒரு சதவீதத்தினர்கூட இடம்பெற முடிவதில்லை. இந்தச் சமூக அநீதிக்குக் காரணமான தனியார் பள்ளிகளின் முறைகேட்டைத் தடுக்க 11-ம் வகுப்பிலும் அரசுப் பொதுத்தேர்வு முறையைக் கொண்டுவர வேண்டும். மேலும், தவறு செய்யும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்துசெய்யப்பட வேண்டும் என்று கட்டுரையாளர் ஏன் கேட்கவில்லை?

அரசுப் பள்ளிகளின் மதிப்பைத் தாழ்த்தும்படியான நியாயமற்ற கருத்துகளைப் பொத்தாம்பொதுவாக யாரும் சொல்லக் கூடாது. காரணம், அரசுப் பள்ளிகள் மூலம்தான் தமிழகத்தில் இதுவரையில் 5 கோடிக்கும் அதிகமானோர் கட்டணமில்லாமல் எழுத்தறிவு பெற்றுள்ளனர்.

இவர்கள் அனைவரும் கல்விக் கூடங்களுக்குள் காலடிவைத்த முதல் தலைமுறையினர் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் பல குறைகள் இருக்கலாம். அவை களையப்பட வேண்டியவை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. எனவே, இருக்கிற சிறுசிறு குறைகளைக் களைய உதவுங்கள்.

- சு. மூர்த்தி,ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு, திருப்பூர் மாவட்டம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x