Published : 11 Mar 2015 09:09 AM
Last Updated : 11 Mar 2015 09:09 AM

பருவநிலை பயங்கரவாதம் உண்மையா?



பருவநிலை ஓர் ஆயுதமா?

- பேட்ரிக் பர்காம்

உலகைப் பணியவைக்க பருவநிலையையே ஆயுதமாக்க முயல்வது ஜேம்ஸ்பாண்ட் திரைப்பட வில்லன்களின் வழிமுறையாக இருக்கலாம். ஆனால், அமெரிக்க அரசின் வலதுகரமான மத்தியப் புலனாய்வு முகமையே (சி.ஐ.ஏ.) அந்த முயற்சியில் ஆர்வமாக இருக்கிறது என்றால் என்ன சொல்வது? ‘ஜியோஇன்ஜினீயரிங்’ என்று இந்தத் தொழில்நுட்பத்துக்குப் பெயர். இதில்தான் சி.ஏ.ஐ. இப்போது ஆர்வம் காட்டுகிறது.

கரிப்புகை வெளியீடு அதிகமிருப்பதால் புவி வெப்பமடைவதைக் குறைக்க கரியுமிலவாயுவை அகற்றும் தொழில்நுட்பம்தான் ‘ஜியோஇன்ஜினீயரிங்’. மற்றொரு தொழில்நுட்பம், மேகங்கள் அல்லது விண்தூசு உதவியுடன் புவியின் பிரதிபலிப்புத் திறனைக் கூட்டுவதாகும். புவி வெப்பமடைவதை இவ்விதச் செயல்களின் மூலம் தடுத்துவிடலாம் என்று நினைப்பதை நவோமி கிளெய்ன் உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலர் கண்டித்துள்ளார்கள். இந்த ‘ஜியோஇன்ஜினீயரிங்’ என்ற திட்டத்தின் உள்நோக்கம் சூது நிறைந்ததாக இருக்குமோ என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.

அணுகுண்டு வீசப்பட்ட பிறகு தோன்றும் கடும் குளிரால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து 1980-களில் ஆராய்ந்த ஆலன் ரொபாக், பருவநிலை மாறுதல்களைச் சமாளிக்கும் பல்வேறு உத்திகளுக்காக தேசிய அறிவியல் அகாடமிக்கு நிதியுதவி அளித்து ஆய்வுகளை நடத்த சி.ஐ.ஏ. ஆர்வம் காட்டுவது குறித்து எச்சரிக்கிறார். அறிவியல் அறிஞர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலைப்பட வேண்டிய துறை குறித்துத் தனக்கென்ன அக்கறை என்று சி.ஐ.ஏ. வெளிப்படையாக எதையும் தெரிவிக்கவில்லை.

பிரிட்டன்தான் முன்னோடி

பருவநிலையை ஆயுதமாகப் பயன்படுத்த முற்படுவது புதிதல்ல. 99 ஆண்டுகளுக்கு முன்னால் பிரிட்டிஷ் அரசு அத்தகைய முயற்சியில் இறங்கியிருக்கிறது. முதல் உலகப் போரின்போது ஜெர்மானியப் போர் விமானங்களை ஏமாற்றுவதற்காகச் செயற்கையாக மழைமேகங்களை உருவாக்க முயன்றிருக்கிறது. அதற்காக சஃபோல்க் என்ற பகுதியின் ஆர்ஃபோர்டு ராணுவத் தளத்தில் சில சோதனை முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. ராணுவம் மேற்கொண்ட பல்வேறு சோதனைகளைப் போலவே இதுவும் தோல்வியில்தான் முடிந்தது. ஆனால், மழை மேகங்கள் திரண்டால் அவற்றின் மீது ‘சில்வர் அயோடைடு’ பொடியைத் தூவி செயற்கையாக மழைப் பொழிவை உண்டாக்க முடியும் என்று பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

1967–68-ம் ஆண்டுகளில் வியட்நாமில் அமெரிக்க ராணுவம் ‘ஆபரேஷன் பொபாய்’ என்ற பெயரில் செயற்கை மழை முயற்சியை மேற்கொண்டது. வடக்கு வியட்நாமிலிருந்து வியட்காங் துருப்புகளும் ராணுவத் தளவாடங்களும் தெற்கு வியட்நாமுக்குச் செல்வதைத் தடுக்க இப்படிச் செயற்கையாக மழையை வரவழைத்தனர். வியட்நாமின் 30% பகுதிகளில் அந்த மழை பெய்தது. ஆனால், வியட்நாம் துருப்புகள் அதைப் பொருட்படுத்தாமல் தெற்கு வியட்நாமுக்குச் சென்று போரிட்டார்கள்.

சமீப ஆண்டுகளில் அமெரிக்க ராணுவம் ஹார்ப் (HAARP - High Frequency Active Auroral Research Program) என்ற ஆய்வை இதே அடிப்படையில் மேற்கொண்டது. அமெரிக்க விமானப்படை, கடற்படை மற்றும் அலாஸ்கா பல்கலைக்கழகம் இணைந்து அயனி மண்டல ஆராய்ச்சியை மேற்கொள்வதைக் குறிப்பதே இந்தப் பெயர்ச் சுருக்கமாகும். அயனி மண்டலத்தைக் கவனித்துப் பருவநிலையில் மாறுதல் செய்ய முடியுமா என்பதே இந்த ஆராய்ச்சி. இது வெற்றிகரமாக அமைந்தால், ஆராய்ச்சி மேலும் தொடரும்.

பருவநிலையை இப்படி அறிவியல் ஆய்வுகள் மூலம் நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்றால் அது தீயவர்களுக்கும் தெரிந்து, அவர்களும் பருவநிலையைக் கட்டுப்படுத்தத் தொடங்கினால் என்னாவது என்ற கேள்வி எழுகிறது. இப்போது மட்டும் என்ன, பல்வேறு ரசாயனங்களைத் தூவியும் கரைத்தும் சோதனைகள் நடத்திக்கொண்டுதானே இருக்கிறார்கள் என்ற பதில் வருகிறது. அமெரிக்காவின் கிழக்கில் கடும் குளிர் நிலவவும் கலிஃபோர்னியா வறட்சியில் ஆழ்ந்திருக்கவும்கூட இந்தச் சோதனைகள்தான் காரணம்; விமானத்தில் மழை மேகங்கள் படிந்து குளிர்ந்து உறையும் பகுதியில் நச்சு ரசாயனங்களை இதற்காகவே தடவி அனுப்புகிறார்கள் என்றுகூடப் பேசுகிறார்கள். இந்த சந்தேகங்கள் எல்லாம் வெறும் ஊகங்களே என்று அறிவியல் அறிஞர்கள் நிராகரிக்கின்றனர். மனிதர்களின் கற்பனையில் வேண்டுமானால் இவை சாத்தியமாக இருக்கலாம்; இதைச் செயல்படுத்தும் தொழில்நுட்பம் இன்னமும் கைவரப்பெறவில்லை என்கின்றனர்.

இந்தத் தொழில்நுட்பங்களைக் கையாள்பவர்களை யார் கட்டுப்படுத்தப்போகிறார்கள் என்று ரொபாக் கவலைப்படுவது நியாயமே. ஆனால், ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத் தயாரிப்பின்போது ஏற்பட்ட சகுனம் நல்லதே நடக்கும் என்று உணர்த்துகிறது. பனிபடர்ந்த ஆஸ்திரியாவில் கடந்த மாதத் தொடக்கத்தில் இதே போன்ற காட்சியைப் படமாக்க படப்பிடிப்புக் குழுவினர் முயற்சி செய்தபோது பலத்த காற்று வீசி அதைத் தடுத்துவிட்டது. பருவநிலைகளுக்கென்று ஒரு கடவுள் உண்டென்றால் அது நாமில்லை!

சி.ஐ.ஏ. என்னை அணுகியது

- ஆலன் ரொபாக்

‘ஜியோஇன்ஜினீயரிங்’ மிகவும் ஆபத்தானது, சி.ஐ.ஏ-வின் உள்நோக்கம் என்ன என்று நமக்குத் தெரியாது. இதைத் தடுக்கவோ கண்டிக்கவோ அரசியல் உறுதிப்பாடு இல்லையென்பதால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது. “2011 ஜனவரி 19-ம் தேதி எனக்கொரு தொலைபேசி அழைப்பு வந்தது. நாங்கள் இருவரும் சி.ஐ.ஏ-வின் ஆலோசகர்கள் என்று அழைத்தவர்கள் அறிமுகப் படுத்திக்கொண்டார்கள்.

ரோஜர் லூகேன், மைக்கேல் கேன்ஸ் என்பது அவர்களுடைய பெயர்கள். ‘நம்முடைய பருவநிலையைக் கட்டுப்படுத்த வேறொரு நாடு முயற்சி செய்தால், அதை நம்மால் கண்டுபிடிக்க முடியுமா?’ என்று கேட்டார்கள். புவி அடுக்குமண்டலத்தில் தடிமனான, பெரிதான மேகம் ஒன்று தோன்றி நம்முடைய பிரதேசத்துக்கு வரக்கூடிய ஆற்றலை மாற்றும் அளவுக்கு இருந்தால் நிலத்தில் வைத்துள்ள ஆய்வுக் கருவிகளின் உதவியாலும் செயற்கைக் கோள்கள் மூலமாகவும் அதைக் கண்டுபிடித்துவிட முடியும் என்று பதில் அளித்தேன்.

கடலுக்கு மேலே அந்த மேகமானது பளபளவென்று ஒளிர்ந்தால் அதிலிருந்தே அது ரசாயனம் கலக்கப்பட்டது, வேறு யாராலோ அனுப்பப்பட்டது என்பதைக் கண்டுபிடித்துவிட முடியும் என்றேன். விமானம் அல்லது கப்பல் மூலமாக வாயுக்களையோ துகள்களையோ வளிமண்டலத்தில் செலுத்தினாலும் இதே போல கண்டுபிடித்துவிடலாம் என்றேன். ஒருவேளை தாங்கள் அப்படிப் பருவநிலையைக் கட்டுப்படுத்தினால் அதை மற்ற நாடுகளும் கண்டுபிடித்து விடுமோ என்று தெரிந்துகொள்ளவே அப்படிக் கேட்டார்களோ என்றுகூட திகைத்தேன்.

‘ஜியோஇன்ஜினீயரிங்’கில் சி.ஐ.ஏ-வுக்கு இருக்கும் ஆர்வமும் அதற்காக அது பெருந்தொகையை ஒதுக்கியிருப்பதாக வரும் தகவல்களும் இந்த எண்ணத்தை ஏற்படுத்தின. தேசிய அறிவியல் அகாடமியின் ஆய்வு முடிவுகளை நான் ஏற்கிறேன். புவி வெப்பமடைகிறது என்பது உண்மை. அதற்குக் காரணம் மனிதர்கள் மற்றும் நிலக்கரி, எண்ணெய், பெட்ரோல், இயற்கை எரிவாயு ஆகியவற்றை வரம்பின்றி எரிப்பது அதன் மூலம் கரியமிலவாயுவைக் காற்றில் கலக்கவிடுவது என்பதை ஒப்புக்கொள்கிறேன். இதைக் குறைக்கவோ, தடுக்கவோ முயற்சிகளை மேற்கொள்ளா விட்டால் மனிதகுலத்துக்கே ஆபத்தாகிவிடும் என்பதையும் ஒப்புக்கொள்கிறேன்.

இதற்கு ஒரே வழி படிம எரிபொருள் களைப் பயன்படுத்துவதை நிறுத்துவதும் சூரிய ஒளி, காற்று போன்றவற்றிலிருந்து மின்சாரத்தைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்துக்கு மாறுவதும்தான். அத்துடன் மாறிவரும் பருவநிலைகளுக்கேற்ப வாழக் கற்றுக்கொள்வதும் முக்கியம்.

சூரிய ஒளியே பூமிக்கு வராமல் செயற்கையான மேகங்களைக் கொண்டு அதைத் தடுக்கும் முயற்சிகளை எல்லாம் மேற்கொள்ளக் கூடாது. அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் என்ன, நன்மைகள் என்னவென்று தெரியாத நிலையிலேயே இப்போது இருக்கிறோம். காற்றிலிருந்து கரியமில வாயுவை அகற்றும் முயற்சி நல்லது; ஆனால், அது மிகவும் செலவு பிடிக்கக்கூடிய தொழில்நுட்பம். அதிலும்கூட ஆராய்ச்சிகள் மேலும் அவசியம். யு.எஸ். ராணுவம் எச்சரிக்கை

“பருவநிலை மாறுதல்களால் அமெரிக்காவுக்கும் உலகின் பிற நாடுகளுக்கும் பெரிய ஆபத்து காத்திருக்கிறது. பருவநிலை மாறுதலால் மழைப்பொழிவு மாறுபடும். வெப்பம் அதிகரிக்கும். பயிர் விளைச்சல் அடியோடு குறைந்துவிடும். சமூகத்தில் பஞ்சம், பசி, பட்டினி காரணமாக மக்களிடையே கொந்தளிப்பு ஏற்படும். ஏழை நாடுகளும் பணக்கார நாடுகளும் மோதிக்கொள்ளும் நிலைமை ஏற்படும். அரசியலில் ஸ்திரமற்ற நிலை ஏற்படும். பயங்கரவாதிகளுக்கும் சமூக விரோதிகளுக்கும் நல்ல வாய்ப்பாகிவிடும்” என்று அமெரிக்க ராணுவம் வெளியிடும் காலாண்டு பருவ இதழ் எச்சரிக்கிறது.

இதனால்தான் அமெரிக்க ராணுவமும் சி.ஐ.ஏ-வும் பருவநிலை மாறுதல்கள் குறித்து ஆர்வம் செலுத்துகின்றன. பருவநிலை மாறுதல்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்காக 2009-லேயே சி.ஐ.ஏ. தனி மையமொன்றை ஏற்படுத்தியது. அதை மூடுமாறு அமெரிக்க நாடாளுமன்றம் 2012-ல் உத்தரவிட்டது. மையத்தை மூடினாலும் இந்த ஆராய்ச்சியைத் தொடர்வோம் என்று சி.ஐ.ஏ. அறிவித்தது.

‘ஜியோஇன்ஜினீயரிங்’கில் பணியாற்ற எனக்கு விருப்பமில்லை. ஆனால், பருவநிலை மாறுதலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற மனஉறுதி உலக அரசியல் தலைவர்களிடம் இல்லை. எனவே, இந்த ஆய்வு தொடர்ந்தால் இதில் உள்ள ஆபத்துகளையும் நன்மைகளையும் தெரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும். திடீரென நெருக்கடி ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வதென்று கைகளைப் பிசைந்துகொண்டிருக்காமல் தெளிவான முடிவுகளை எடுக்க முடியும். இந்த ஆராய்ச்சியால் 5 நன்மைகள் ஏற்படக்கூடும் என்றால் 26 ஆபத்துகள் இருக்கின்றன. இந்த ஆராய்ச்சி கைகூடினால் வெப்பம் குறைந்து புவி குளிர்ச்சி அடையக்கூடும். ஆனால், இதில் பல்வேறு தார்மிக, நிர்வாகப் பிரச்சினைகள் எழும். இதற்கிடையே கரிப்புகை வெளியீட்டைக் குறைக்கவும் நாம் தீவிர நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்.

- தி கார்டியன்

தமிழில்:சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x