Last Updated : 03 Mar, 2015 09:34 AM

 

Published : 03 Mar 2015 09:34 AM
Last Updated : 03 Mar 2015 09:34 AM

யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது மனம்?

சமீபத்தில் ஒருவர் என்னிடம் சிகிச்சை பெற வந்தார். அவருக்கு இருந்தது சாதாரண மனப்பதற்றம்தான். ஆனால், அவர் சொன்ன இரண்டு விஷயங்கள் என்னை மிகவும் யோசிக்க வைத்தன. சிகிச்சைக்காக மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு என்னைப் பார்க்க வந்திருந்தார். மதுரையிலேயே எனது மனநல மருத்துவ நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் அனுப்பி வைக்கிறேன் என்றதற்கு “வேண்டாம் டாக்டர்! தெரிந்தவர்கள் யாராவது பார்த்துவிட்டால் பிரச்சினையாகிவிடும்” என்றார். பட்டப்பகலில் மதுபான விடுதிக்குப் பகிரங்க மாகச் செல்பவரைவிட, அதிகமான குற்றவுணர்வு மனநல மருத்துவரிடம் செல்வதற்கு அவருக்கு இருந்தது.

இரண்டாவது விஷயம், “நான் நார்மலா இருக்கேனா டாக்டர்?” என்று அவர் கேட்ட கேள்வி. மூட்டுவலி இருப்பவரோ பல்வலி இருப்பவரோ “நான் இயல்பாகத்தான் இருக்கேனா?” என்று கேட்க மாட்டார். மனதுக்கு ஏற்படும் நோயை மட்டும் தன்னுடன் அடையாளப்படுத்திக்கொள்கிறார். தனக்கு ஏற்பட்டிருக்கும் மனநோய்க்குத் தானே முழுப் பொறுப்பு என்று அவர் கருதுகிறார். இதனால்தான் தனக்கு ஏற்பட்ட நோயைத் தன்னுடைய குற்றமாகப் பார்க்கிறார். மனநோய் என்ற அவமான முத்திரை குத்தப்பட்டுவிடுமோ என்ற பயம்தான் காரணம். ‘ஸ்டிக்மா’ என்ற ஆங்கிலச் சொல் ‘தழும்பை உண்டாக்குதல்’ என்ற கிரேக்க மொழிப் பயன்பாட்டிலிருந்து பிறந்தது. பண்டைய காலத்தில் கைதிகள், கடுமையான குற்றங்களைச் செய்தவர்களுக்குச் சூடுவைத்துத் தழும்பை உண்டாக்கி அடையாளப்படுத்துவார்கள். நமது ஊரில் கரும்புள்ளி செம்புள்ளி குத்துவதுபோல.

மனதுக்கு யார் பொறுப்பு?

பொதுப்புத்தியில் மனம் மற்றும் மனநோய் பற்றிய இதுபோன்ற கருத்துக்களே இருக்கின்றன. இதய நோய் வந்திருப்பவரைப் பார்த்து ‘நீ நினைத்தால் உன்னுடைய நோயைக் குணமாக்கிக்கொள்ள முடியும்’ என்று யாரும் சொல்வதில்லை. ஆனால், எத்தனை தீவிரமான மனநோயால் பாதிக்கப்பட்டவரையும்கூட ‘நீ மனது வைத்தால் சரியாகிவிடும்’ என்று சொல்கிறார்கள். உண்மையில் நம்முடைய மனம் முழுக்க முழுக்க நமது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா?

ஒருவருக்குத் தனது மனதின் மேல் முழுச் சுதந்திரம் இருக்கிறதா? அல்லது எல்லாமே முன்னரே தீர்மானிக்கப்பட்டு இன்னொன்றைச் சார்ந்திருக்கிறதா? மனிதர்கள் சிந்திக்கத் தொடங்கிய நாளிலிருந்தே இந்த விவாதம் இருந்துவருகிறது. ஒருவரின் மனதில் தோன்றும் எல்லா எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் அதன் விளைவாக அவர் செய்யும் எல்லாச் செயல்களுக்கும் அவரே முழுப் பொறுப்பாக முடியுமா? உளவியலும் அறிவியலும் அவ்வாறு இல்லை என்றுதான் சொல்லுகின்றன.

வேதியியல் மாற்றங்களும் மரபணுக்களும்

மனம் என்பது மூளையின் செயல்பாட்டு உறுப்பு; கணினியின் மென்பொருள்போல. இதைக் கண்ணால் நாம் காண்பதில்லை என்றாலும், இதன் பணிகளை நாம் உணர முடியும். எனவே, மூளையின் அலகுகளான நரம்புகளும் நரம்பு மண்டலத்தில் நடக்கும் செய்திப் பரிமாற்றமான வேதியியல் மாற்றங்களுமே ஒருவரது மனம். இதில் ஏற்படும் மாற்றங்கள் ஒருவரது சிந்தனை மற்றும் செயல்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. மூளையின் அமைப்பும் செயல்பாடும் பெருமளவு நம்முடைய மரபணுக்களில் புதைந்திருக்கின்றன. ஆகவே, ஒருவர் கவிஞராக ஆவதற்கும் கொலைகாரராக ஆவதற்கும் அடிப்படை மரபணுக்களிலேயே இருக்கிறது. நாம் மரங்களுக்குக் கீழேயும் குரங்குகள் மரங்களிலும் இருப்பதற்குக் காரணம் மரபணுக்கள்தான்.

எனினும், மரபணுக்கள் வெறும் விதைதான். விளைநில மான தாய்வயிற்றில் குழந்தை உருவாகும்போது தாய்க்கு ஏற்படும் நோய்கள்கூடப் பிற்காலத்தில் ஒருவரது மனநிலையைப் பாதிக்கும். ஒருவரது வளர்ப்பு மற்றும் சூழ்நிலையும் சமூகம் விதிக்கும் நிர்ப்பந்தங்களினால் ஏற்படும் அழுத்தங்களும் ஒருவரது மனதின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகின்றன. விதை, விளைநிலம், வளர உதவும் நீர், உரம், வெளிச்சம் போன்ற சூழல் காரணிகள் அனைத்தும் சரியாக அமைந்தால்தான் ஒரு மரம் நன்கு வளர்ந்து நிழலும் கனிகளும் கொடுக்கும். இதில் ஏதேனும் ஒன்று சரியாக அமையவில்லை என்றால்கூட, அது வளர்ச்சிக்குப் பாதகமாக அமைந்துவிடும். நம் மனநலமும் அதுபோன்றே.

ஒளி என்பது வெறும் துகளா? அல்லது அலையா? என்பது இயற்பியலில் இருந்துவரும் விவாதம். அதுபோல் மனநோயைப் பற்றியும் மனம் என்பது வெறும் ரசாயன மாற்றங்கள்தானா அல்லது நம்முடைய எண்ணங்கள் எல்லாம் முழுக்க நம்முடைய பொறுப்பா என்ற விவாதம் இருந்துவருகிறது. கிட்டத்தட்ட கருத்துமுதல்வாதத்துக்கும் பொருள்முதல்வாதத்துக்கும் இடையே இருக்கும் முரணியக்கத்தைப் போல்.

ரசாயனக் குவியல்தான் உடலா?

எல்லாமே மரபணுக்கள் மற்றும் வேதியியல் மாற்றங்கள் தானா? மேலைநாட்டுப் பொருள்முதல்வாத அறிவியல் நோக்கில், மனதை வெறும் ரசாயனக் குவியலாகப் பார்த்தோமாயின், அது மருந்துகளை விற்பதற்கான வெறும் தந்திரமாகவே முடியும். அன்பு, காதல், மனிதநேயம் போன்ற உணர்வுகளைக்கூட வெறும் உடலியல் நிகழ்வுகளாக மாற்றினால் மனித இனத்தின் தனித்தன்மைகள் பல அழிந்துபோகக் கூடும். அதுமட்டுமின்றி மனச்சோர்வுக்கு, கோபத்துக்கு உணர்ச்சிவசப்படுவதற்கு என்று மருந்துகள் இருப்பதுபோல் எதிர்காலத்தில் அதிகாரத்துக்கு எதிராகக் கலகம் செய்வது போன்றவைகூட மூளையில் ஏற்படும் கோளாறாகக் கருதப்பட்டு, அதற்கும் மருந்துகள் தரப்படக்கூடும்.

அதே நேரம், எல்லாமே ஒருவருடைய கையில்தான் இருக்கிறது என்று சொல்வதும் தவறாகவே முடியும். கொலை, வன்முறை போன்ற குற்றங்களைச் செய்பவர்களுக்குக்கூட அந்தச் செயலுக்கு முழுப் பொறுப்பு கிடையாது. அவர் களது பிறப்பு, வளரும் சூழல் ஆகியவையே முக்கியக் காரணம் என்று வாதிடுவோரும் உண்டு. அப்படியிருக்க மனச்சோர்வுக்கும் அது போன்றவற்றுக்கும் பாதிக்கப்பட்ட நபரையே பொறுப்பாக்குவது திருட்டு வழக்கில் பொருளைப் பறிகொடுத்தவரையே குற்றவாளி என்று சொல்வதுபோலாகும்.

எல்லா விஷயங்களிலும் எதிர் துருவங்களுக்கு இடையே உண்மை ஒளிந்திருப்பதைப் போலவே இந்த விஷயத்திலும் நடுநிலையுடன் இருப்பதே சிறந்தது. இதைத்தான் ஜார்ஜ் எங்கெல் என்ற மனநல மருத்துவர் உடல்-மனம்-சமூகம் என்ற மூன்று பரிமாணங்களும் மனநோயைத் தீர்மானிக்கின்றன என்று 1977-ம் ஆண்டு ‘சயின்ஸ்’ இதழில் வெளிவந்த தனது புகழ்பெற்ற கட்டுரையில் தெரிவித்திருந்தார். இது மனநோய்களுக்கு மட்டுமல்ல சர்க்கரை நோய், இதய நோய் போன்றவற்றுக்கும் பொருந்தும்.

சமீபத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், தான் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டதையும் சிகிச்சை எடுத்துக் கொண்டபின் நலமாக இருப்பதையும் மிகவும் வெளிப்படை யாகத் தெரிவித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவருடைய மனச்சோர்வு தன்னுடைய கட்டுப்பாட்டை மீறிச் சென்று விட்டதைக் கூறியிருப்பார். மனநலம் மற்றியும் மனநோய்கள் பற்றியும் பொதுப்புத்தியில் உள்ள மனப்பான்மை மாற வேண்டுமானால் அதற்கு இதுபோன்ற வெளிப்படையான விவாதங்கள் தேவை.

அதற்கு முதலில் நமது மனதை முழுக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள நாம் மனதுவைத்தாலும் முடியாது என்பதை உணர வேண்டும். அப்போதுதான் மனநோயால் பாதிக்கப்பட்டவர்களின் குற்றவுணர்வும் குறையும். முதலில் நான் கூறிய நண்பருக்கும் மதுரை - நெல்லை பயணச் செலவு குறையும்.

- ஜி. ராமானுஜம், மனநல மருத்துவர், ‘நோயர் விருப்பம்’ என்ற நூலின் ஆசிரியர், தொடர்புக்கு: ramsych2@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x