Last Updated : 16 Mar, 2015 09:16 AM

 

Published : 16 Mar 2015 09:16 AM
Last Updated : 16 Mar 2015 09:16 AM

நல்வரவு, உறவுக்கு மரியாதை

மோடியின் இலங்கைப் பயணம் குறித்து இலங்கையிலிருந்து ஒரு பார்வை

இந்தியப் பிரதமர் ஒருவர் இலங்கைக்கு வருவது நீண்ட காலத்துக்குப் பிறகு நிகழ்ந்திருக்கிறது. ராஜீவ் காந்தி கடைசியாக வந்து சென்றது பல விதங்களிலும் எதிர்மறை பலன்களையே ஏற்படுத்தியது. இந்தியாவுக்கு வாருங்கள் என்று இலங்கையின் முன்னாள் அதிபர்கள் சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே போன்றோர் பலமுறை வற்புறுத்தி அழைத்ததுகூட இந்தியத் தலைவர்களின் காதுகளில் விழவில்லை. ஆனால், இந்திய அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் இந்தியத் தலைவர்கள் இலங்கைக்கு வருவது நிச்சயம் என்ற நம்பிக்கையைப் பல சந்தர்ப்பங்களில் ஏற்படுத்தினார்கள். தமிழ்நாட்டில் உள்ளவர்களைத் திருப்திப்படுத்த இந்தியத் தலைவர்கள் நினைத்ததாலேயே இலங்கையின் அழைப்பை ஏற்காமல் இருந்தார்கள்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் வராவிட்டாலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையாவது வரவழைக்க முயற்சிகள் நடந்தன. அது லட்சுமண் கதிர்காமரின் யோசனை. கதிர்காமரை விடுதலைப் புலிகள் பின்னர் படுகொலை செய்து விட்டார்கள். அந்த முயற்சியை ராஜபக்ச தொடர்ந்தார். ராஜீவ் காந்தியை கவுரவிக்கவும் அவருடைய நினைவாக சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்யவும் விரும்பி சில கடிதங்கள் அனுப்பினார், ஆனால் அவற்றுக்குப் பதில்தான் இல்லை.

இலங்கை மதிக்கப்படவில்லை

இந்தியாவில் புதிய அரசு பதவிக்கு வந்தவுடனேயே இலங்கை அதிபர்கள், பிரதமர்கள், வெளியுறவு அமைச்சர்கள் டெல்லிக்கு யாத்திரை மேற்கொண்டு இந்தியத் தலைவர்களைச் சந்தித்தார்கள். ஆனால், ஒரு இந்தியத் தலைவர்கூட இலங்கையர்களுக்கு அந்தப் பதில் மரியாதையைச் செலுத்தவில்லை. இந்தியர்களை இலங்கையில் மரியாதையுடன் வரவேற்றார்கள். ஆனால், அது டெல்லியில் திருப்பிச் செய்யப்படவில்லை. இலங்கை வாழ் மக்கள், அறிவுஜீவிகள், அரசியல் தலைவர்கள், செய்தி ஊடகங்கள் என்று எல்லா தரப்பாருமே இதை இலங்கைக்கு இந்தியா செய்யும் அவமரியாதையாகவே கருதினார்கள். இலங்கையில் மையம் கொண்டிருந்த இந்திய ஊடகங்கள்கூட இந்திய அரசின் போக்கை ரசிக்கவில்லை. 2013 நவம்பரில் கொழும்பில் நடந்த காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற உச்சி மாநாட்டுக்குக்கூட மன்மோகன் சிங் வரவில்லை. தமிழ் நாட்டில் உள்ளவர்களின் திருப்திக்காக இலங்கையைத் தொடர்ந்து புறக்கணித்தது இந்தியத் தலைமை. இது ஏன் என்று புரிந்துகொள்ள முடியாமல் இலங்கைத் தலைவர்கள் விரக்தி அடைந்தார்கள்.

இரு நாடுகளும் தங்களுக்கிடையே சிறந்த உறவு நிலவுவதாக அடிக்கடிக் கூறிக்கொண்டன. பயங்கர வாதத்துக்கு எதிரான இறுதிப் போரின் இறுதிக்கட்டத்தில் இந்தியாவின் நேரடி ஆதரவும் மறைமுக உதவிகளும் இலங்கைத் தலைமையால் பெரிதும் வரவேற்கப்பட்டன. இலங்கைக்கான இந்திய ஹை-கமிஷனராகப் பணியாற்றிய நிருபமா ராவ் ஓய்வு பெற்றபோது, சம்பிரதாயங்களையெல்லாம் உடைத்தெறிந்துவிட்டு அவரைத் தமது அலுவலகத்துக்கு வரவழைத்து வாழ்த்தியனுப்பினார் மகிந்த ராஜபக்ச. மற்றொரு முன்னாள் ஹை-கமிஷனரான சங்கர மேனனையும் இலங்கைத் தலைவர்கள் தங்களுடைய உற்ற நண் பராகவே கருதினார்கள்.

சீனாவிடம் சென்றது ஏன்?

இலங்கைத் தலைவர்களின் அழைப்புகளை இந்தியத் தலைவர்கள் தொடர்ந்து புறக்கணித்ததாலேயே சீனாவுடன் இலங்கை நெருக்கமானது. மகிந்த ராஜபக்ச தனது அதிபர் பதவிக் காலத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட முறை சீனத்தின் உயர் தலைவர்களைச் சந்தித்து சரிசமமாக அமர்ந்து பேசியிருக்கிறார். கிட்டத்தட்ட 30 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இலங்கைக்கு வந்த முதல் சீன உயர் தலைவர் அதிபர் ஜி ஜின்பெங்தான். இந்தியா என்னுடைய உறவு நாடு, சீனம் எனது நட்பு நாடு என்று ராஜபக்ச பலமுறை கூறியிருக்கிறார். நண்பர்கள் அடிக்கடி வந்தனர், உறவு நாடு கண்ணில் தென்படவே யில்லை. பல்வேறு திட்டங்களில் சீனத்துடன் இணைந்து செயல்படுவது ராஜபக்சவுக்கு எளிதாக இருந்தது.

மோடியின் வருகை

2014 மக்களவை பொதுத்தேர்தலில் பெரும்பான்மை யான இடங்களைப் பிடித்துப் பிரதமர் பதவிக்கு வந்தார் நரேந்திர மோடி. பதவியேற்பு விழாவுக்கு எல்லா சார்க் நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பினார். அஇஅதிமுகவுக்கோ திமுகவுக்கோ கட்டுப்பட்டு நடக்க வேண்டிய சூழல் அவசியமில்லை என்ற அளவுக்கு வெற்றி அமைந்துவிட்டது. வைகோவின் மதிமுக கூட்டணியில் இருந்தாலும் அவரை அவ்வளவு முக்கியத்துவமுள்ளவராக மோடி நடத்தவில்லை.

ராஜபக்ச மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இதைத்தான் அவர் விரும்பினார். மோடிக்கும் தனக்கும் உள்ள ஒற்றுமைகளைப் பட்டியலிட்ட ராஜ்பக்ச, மோடியுடன் மனம் திறந்து பேசினார். அடிக்கடிப் பேச தனித் தகவல் தொடர்பு வசதியை ஏற்படுத்திக்கொண்டார். மோடி கேட்டுக்கொண்டார் என்பதற்காக, போதைப்பொருள் கடத்தலில் கைதானவர்கள் உட்பட பலரைச் சிறைகளிலிருந்து விடுதலை செய்தார். மோடி அதற்கு நன்றி தெரிவித்தார்.

அதன் பிறகு காத்மாண்டில் நடந்த சார்க் மாநாட்டில் உதவியாளர்கள் தயாரித்த குறிப்புகள் இல்லாமல் ராஜபக்சவுடன் மோடி இயல்பாகப் பல அம்சங்கள் குறித்தும் மனம்விட்டுப் பேசினார். அதிபர் தேர்தலில் ராஜபக்ச மீண்டும் போட்டியிடுகிறார் என்றதும் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தார்.

மைத்ரிபால சிறிசேன அதிர்ஷ்டக்காரர்

இந்தியப் பிரதமர் மோடியைக் கொழும்பில் வரவேற்ற புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேன அதிர்ஷ்டக்காரர். இலங்கைத் தரப்பில் அதிக முயற்சிகள் எடுக்கப்படாமலேயே மோடி வந்துவிட்டார். ராஜபக்ச அரசில் செயல்பட்ட மங்கள சமரவீர நல்ல வெளியுறவு அமைச்சராகக் கருதப்படுகிறவர். அவரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் மோடியை வரவேற்பது வரலாற்றின் தொடர்ச்சியே. சந்திரிகா குமாரதுங்க, ராஜபக்ச என்ற இரு முன்னாள் அதிபர்களின் தொடர் முயற்சிகளால் மோடியின் பயணம் இப்போது நிறைவேறியிருக்கிறது. இலங்கையின் அழைப்பை ஏற்று உற்ற தருணத்தில் வந்துள்ள மோடியும் பாராட்டுக்குரியவர்.

பக்கத்து நாடான இந்தியாவுடன் உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும், அதே வேளையில் அதன் எல்லா கொள்கைகளுக்கும், செல்வாக்குக்கும் கட்டுப்பட்டுவிடாமல் சுயேச்சையாகவும் செயல்பட வேண்டும். இதெல்லாம் புதிய அதிபர் சிறிசேனவின் கைகளில்தான் இருக்கின்றன.

- பண்டுல ஜெயசேகர, இலங்கையின் ‘டெய்லி நியூஸ்’ பத்திரிகையின் முன்னாள் முதன்மை ஆசிரியர், இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் சர்வதேச ஊடக ஆலோசகர்.

‘தி இந்து’ (ஆங்கிலம்), |சுருக்கமாகத் தமிழில்: சாரி|

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x