Published : 17 Feb 2015 09:01 AM
Last Updated : 17 Feb 2015 09:01 AM

இனமேட்டிமை மனோபாவம் நடத்தும் தாக்குதல்!

இந்தியப் பெரியவர் ஒருவர் அமெரிக்க போலீஸால் சமீபத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்டிருக்கிறார். அவர் செய்த தவறு வேறு ஒன்றுமில்லை; ஆங்கிலம் பேசத் தெரியாத இந்தியராக இருந்தது. அமெரிக்க ஆதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடு என்பதைத் தவிர, வேறு எப்படி இந்தச் சம்பவத்தை நாம் அர்த்தப்படுத்திக்கொள்வது?

சுரேஷ்பாய் படேல் தனது பேரனைப் பார்த்துக்கொள்வதற்காக அலபாமாவில் உள்ள தன் மகன் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். ஒரு நாள் வீட்டுக்குப் பக்கத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தவரை அமெரிக்கக் காவல் துறை திடீரெனச் சுற்றி வளைத்திருக்கிறது. யாரோ, ‘எலும்பும் தோலுமாக சந்தேகத்துக்குரிய கருப்பு ஆசாமி’ என்று சொன்னார்களாம். காவல் அதிகாரிகள் கேட்ட கேள்வி களுக்கு, ஆங்கிலம் தெரியாததால், “நோ இங்கிலீஷ்” என்று பதற்றத்துடன் சொல்லியிருக்கிறார் படேல். அச்சத்தோடு விலக முற்பட்ட முதியவரின் கைகளைப் பின்புறமாகக் கட்டிவைத்து, அடித்துக் கீழே தள்ளியிருக்கிறார்கள். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் படேல். கொஞ்சம் கொஞ்சமாகத் தேறிவரும் படேலுக்கு அதிர்ச்சியில் பக்கவாதம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்திய மக்களும் சரி, அமெரிக்க வாழ் இந்தியர்களும் சரி, இந்தச் சம்பவத்தால் கொதித்துப்போயிருக்கிறார்கள். அமெரிக்கா இந்தச் சம்பவத்துக்காக வருத்தம் தெரிவித்திருக்கிறது. படேலைத் தாக்கிய போலீஸ்காரர் பார்க்கரைப் பணியிடை நீக்கம் செய்திருக்கிறது. தனிப்பட்ட ஒரு சம்பவத்தை வைத்து ஒரு தனிமனிதரையோ சமூகத்தையோ நாம் முத்திரை குத்திவிட முடியாது. அது பெரும் தவறும்கூட. இதே அமெரிக்காவில்தான் 35 லட்சம் இந்தியர்கள் வாழ்கிறார்கள்; 1.35 லட்சம் இந்திய மாணவர்கள் படிக்கிறார்கள்.

எனினும், சில கேள்விகள் தவிர்க்க முடியாதவை. முதலில், கருப்பு நிறத்தவர், அதிலும் சற்றே முதியவர், அந்தப் பிரதேசத்தில் நடந்து செல்கிறார் என்பதற்காகக் காவல் துறையை அழைத்தவரின் மனோபாவத்தை என்னவென்று சொல்வது? படேலை விசாரித்த போலீஸ்காரர்களுக்கு அவர் ஒரு முதியவர் என்பதுகூடவா தெரியவில்லை? அவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்பதை அறிந்துகொண்ட பின்பும் அவரிடம் தொடர்ச்சியாகக் கேள்விக் கணைகளைத் தொடுத்தால் அவருக்கு என்ன வாய்ப்புதான் இருக்கக் கூடும்? படேல் மீது ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தை வேறு வழிகளில் நிவர்த்திசெய்துகொள்ள வாய்ப்பே இல்லையா? இத்தனைக்கும், தனது வீடு பக்கத்தில் இருக்கிறது என்பதையும் படேல் சுட்டிக்காட்டியிருக்கிறார். அவரை அங்கே அழைத்துக்கொண்டுபோய் அல்லது காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, இந்தியர் ஒருவரின் உதவியுடன் விசாரணையை நடத்தியிருக்கலாமே?

எதுவுமே சாத்தியமற்றது இல்லை. ஆனாலும் ஏன் மூர்க்கத்தனம் வெளிப்படுகிறது என்றால், இன்னமும் ஒட்டிக்கொண்டிருக்கும் இனரீதியிலான பாகுபாடுகளைத்தான் நாம் காரணமாகப் பார்க்க முடியும். அமெரிக்க விமான நிலையத்தில் பரிசோதனை என்ற பெயரில் அப்துல் கலாமுக்கும் ஷாருக் கானுக்கும் ஏற்பட்ட அவமானங்கள் மறக்கக்கூடியவையா என்ன? ஃபெர்குசன் சம்பவத்தில் கொல்லப்பட்ட கருப்பின இளைஞர் மைக்கேல் பிரௌன் கொலையும் இங்கே சேர்த்துப் பார்க்கக் கூடியது. அமெரிக்கர்கள் இயல்பில் ஒட்டிக்கொண்டிருப்பதாக உலகம் குற்றம்சாட்டும் இனமேட்டிமை மனோபாவத்திலிருந்து அவர்கள் வெளிப்பட முயல வேண்டும். அமெரிக்க அரசாங்கம் தன்னுடைய பள்ளிக்கூடங்களிலேயே தொடங்க வேண்டிய வேலை இது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x