Last Updated : 16 Feb, 2015 09:11 AM

 

Published : 16 Feb 2015 09:11 AM
Last Updated : 16 Feb 2015 09:11 AM

இடஒதுக்கீட்டின் நிழல் படாதவர்கள்

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு என்பது பல மாநிலங்களில் நடைமுறையில் இருப்பதுதான்.

இந்தியச் சிறுபான்மை முஸ்லிம்களின் சமூக, பொருளாதார ஆய்வுப் பரிந்துரைகள் தொடர்ந்து பேசப்பட்டுவருகின்றன. ரங்கநாத் மிஸ்ரா குழு மத்திய அரசுக்கு அளித்த அறிக்கையில் கல்வியில், அரசுப் பணிகளில், 10% முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப் பரிந்துரை செய்துள்ளது.

நீதிபதி ராஜீந்தர் சச்சார் குழு அறிக்கை சார்ந்து வறுமைக்கோடு ஒப்பீடு, எழுத்தறிவு, கல்வியில், அரசுத் துறைப்பணியில் பின்தங்கிய நிலை, வளர்ச்சித் திட்டங்களில் புறந்தள்ளப்படுதல், பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரையிலான அரசியல் பிரதிநிதித்துவம் என்பதாக இந்த விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதற்கு இணையாக இன்னமும் கவனப்படுத்தப்படாத விஷயங்களில் ஒன்றுதான் முஸ்லிம்களிடையே நிலவும் மேல், கீழ் சமுதாய படிநிலை அமைப்பு முறை.

கேரள மற்றும் தென்னிந்திய முஸ்லிம்களின் நிலையில் வளைகுடா நாடுகளின் பொருளீட்டல், வணிகரீதியான முன்னேற்றம் என சில வளர்ச்சித் தடங்கள் தென்படுகின்றன. எனினும், வட இந்திய முஸ்லிம்களின் நிலையோ மிகவும் பின்தங்கியே உள்ளது. பிஹார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் தலித்துகள் மற்றும் பழங்குடியினரைவிட முஸ்லிம்கள் மோசமான வாழ்நிலையில் உள்ளனர். எனவேதான், பழங்குடியினர், தலித்துகளைப் போல் விளிம்புநிலைத் தொழில்களில் ஈடுபட்டுவரும் நலிந்த முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டு முன்னுரிமைக் குரல் மேலெழுந்துள்ளது.

முஸ்லிம் உட்பிரிவுகளின் நிலை

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு என்பது பல மாநிலங்களில் நடைமுறையில் இருப்பதுதான். மேற்கு வங்க மாநில மொத்த மக்கள்தொகையில் 25.25% முஸ்லிம்கள். அந்த அரசு 10% ஒதுக்கீட்டை 12 முஸ்லிம் சாதி உட்பிரிவுகளுக்கு வழங்கியுள்ளது. ஆனால், அரசுக் குறிப்போ மொத்தம் 37 முஸ்லிம் உட்பிரிவுகள் உள்ள தாகத் தெரிவிக்கிறது. கர்நாடக மாநிலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர்களுக்கான உள் ஒதுக்கீடாக கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. கேரளத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 40% இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு 12% இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. பிஹாரில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 13% ஒதுக்கீட்டில் 9 வகை முஸ்லிம் பிரிவினருக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 18% ஒதுக்கீட்டில், 27 முஸ்லிம் பிரிவு களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் விளிம்புநிலை முஸ்லிம்கள்

தமிழக அரசு ஆணையின்படி லெப்பை, தக்கினி முஸ்லிம், மரைக்காயர், ராவுத்தர், மாப்பிள்ளை, பட்டாணி, (பத்ஹான்கான்) காக்கா, சேட், சையது, ஷேக், பீர், தாவூத், அன்சாரி, நவாப் உள்ளிட்ட முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்டவர்களின் பட்டியலைச் சேர்ந்தவர்கள். 1982-ல் அம்பாசங்கர் கமிஷன் அறிக்கை அடிப்படையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என இரு பிரிவுகளாகப் பகுக்கப்பட்டனர். 30% பிற்படுத்தப்பட்டவர், 20% மிகவும் பிற்படுத்தப்பட்டவர், 18% ஆதிதிராவிடர், பழங்குடியினர் 1% மற்றும் பிற சமூகத்தினர் 31% என்ற கணக்கில் இடஒதுக்கீடு அமைந்திருந்தது. இந்த 30% பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஒதுக் கீட்டில் முஸ்லிம்களுக்குத் தனி இடஒதுக்கீடாக 3.5% நடைமுறையில் இருந்துவருகிறது. தமிழகத்தின் முஸ்லிம்கள் 5.6% என அரசு தரப்பிலும், 7%-க்கு மேல் என முஸ்லிம் அமைப்புகள் தரப்பிலும் முன்வைக் கப்பட்டுள்ளன.

புதிதாக இஸ்லாத்துக்கு வந்த தலித் மக்கள் தங்களை லெப்பை என்ற பிரிவுக்குள் மட்டுமே இணைத்துக் கொள்ள முடிகிறது. இதனோடு சமூகரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் நலிந்த முஸ்லிம்களை அடையாளப்படுத்த வேண்டிய நிலையில் விவசாயக் கூலிகள், பாவோடிகள், பீடி சுற்றுபவர்கள், தோல் தொழிலாளர்கள், நகர்ப்புற சேரிகளில் வசிக்கும் உடல் உழைப்பாளிகள், சிறு வியாபாரம் செய்பவர்கள், பக்கிர்ஷாக்கள், மீங்காரர்கள், நாவிதர்கள் என்னும் ஒசாக்கள், நிரந்தர வாழிடமின்றி அலையும் முஸாபர்கள் என பல தரப்பட்ட விளிம்பு நிலை முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை சச்சார் அறிக்கையின் அடிப்படையில் கவனப்படுத்தவேண்டியுள்ளது. மேலும், சாதிய ஒடுக்குமுறையிலிருந்து தப்பிக்க முஸ்லிம்களாக மதம் மாறிய தலித் மக்களையும் அடித்தள முஸ்லிம்களாக அறிவிக்க வேண்டும். முஸ்லிம் தலித்துகளுக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் தனித்த இடஒதுக்கீட்டை வழங்குவது தமிழக முஸ்லிம் சமுதாயத்துக்கு உள்ளேயும் சமச்சீர் வளர்ச்சியை உருவாக்க வழிவகுக்கும்.

அடித்தள முஸ்லிம் இயக்கங்கள்

இந்தியாவில் வாழும் அடித்தள முஸ்லிம்களின் உரிமைகளையும், குரல்களையும் பதிவு செய்யும் வகையில் ‘இந்தியன் தலித் முஸ்லிம்ஸ் வாய்ஸ்’ (ஐ.டி.எம்.வி.) என்ற அமைப்பு பரந்துபட்ட விவாதத் தளத்தை முன்னிறுத்துகிறது. இதன் முக்கிய இயக்கங்களில் ஒன்று 1950-களில் மறுதலிக்கப்பட்ட உரிமையை மீண்டும் திரும்பப் பெறுவதாகும். தலித் முஸ்லிம்களையும் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் பிரிவில் சேர்த்திட வேண்டும் என்பதே இந்த அமைப்பின் கோரிக்கை. மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்குத் தடையாக இருக்கும் இந்திய அரசியல் சாசனப் பிரிவு-341-ல் திருத்தம் கொண்டுவரவும் இந்த அமைப்பு கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

சமூகரீதியிலான ஏற்றத்தாழ்வை முஸ்லிம்களிட மிருந்து நீக்க வேண்டிய அவசியத்தை சச்சார் குழு சொல்கிறது. முஸ்லிம் சமூகம் மேல் - கீழ் என பிளவுபட்டு அஷ்ரப், அஜ்லப், அர்சால் என்கிற முக்கிய மூன்று படிநிலைகளாக உள்ளது. இது இந்து மத சாதி அமைப்பின் மேலாண்மையைத் தக்க வைத்திருக்கிறது. அம்பேத்கரும் தனது ஆய்வில் இதை மிக விரிவாக விளக்குகிறார். அஷ்ரப்கள் ஏழாம் நூற்றாண்டு அரபு பூர்விகத்தோடு இணைத்துப் பேசப்படுகிறார்கள். அரபுகளின் வழித்தோன்றல்கள், இந்து உயர் சாதிகளிலிருந்து மதம் மாறியவர்கள் போன்றவர்களை இந்தப் பிரிவு உள்ளடக்கியது. உயர் குடிமகன் என்பதான அர்த்தத்தை இந்தச் சொல் உள்ளடக்கியுள்ளது. அஷ்ரப்களின் உபபிரிவுகளாக சையதுகள், ஷேக்குகள், முகலாயர், பதான்ஸ் உள்ளனர். அஜ்லப்கள் இந்து இடைநிலை சாதிகளிலிருந்து மதம் மாறியவர்கள், விவசாயக் குடிகள், சிறு தொழில்களை நடத்துபவர்கள்.

அர்சால்கள், தாழ்த்தப்பட்ட பிரிவுகளிலிருந்து மதம் மாறியவர்கள், மிகவும் ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களாகவே இவர்கள் இருக்கிறார்கள். இந்து சாதிய அமைப்பின் தொழில்களிலிருந்து விடுபடாதவர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள். வட இந்தியாவில் அர்சால் முஸ்லிம்கள் 30%-ம், அஜ்லப் முஸ்லிம்கள் 65%-ம் அஷ்ரப்கள் 5%-ம் இருக்கிறார்கள்.

1994-ல் பிஹார் மாநிலத்தின் பாட்னாவை மையப் படுத்தி இஜாஸ்அலி உருவாக்கிய அகில இந்திய தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் மோர்ச்சா அமைப்பு 29 முஸ்லிம் தலித் சாதிகளை ஒன்றிணைக்க முற்பட்டது. 2001-ல் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் இவ்வமைப்பு தனது செயல்தளத்தை விரிவுபடுத்தியது. தலித் முஸ்லிம்களுக்கு அரசுப் பணிகளிலும், சட்ட மன்றம், நாடாளுமன்றம் போன்றவற்றிலும் தனி இடஒதுக்கீடு வேண்டும்; இந்து தலித்துகள், சீக்கிய தலித்துகள், புத்த தலித்துகளுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டு உரிமையை முஸ்லிம் தலித்துகளுக்கும் வழங்க வேண்டும் என்பதே இவ்வமைப்பின் முக்கியக் கோரிக்கை.

இந்திய அளவில் முஸ்லிம் தலித் மக்களைப் பட்டியல் இனத்தவராகவும், இதர முஸ்லிம்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினராகவும் அறிவிக்க வேண்டும் என்பதே இவ்வியக்கங்களின் அடிப்படைக் குரல். மைய நீரோட்டம் சார்ந்த முஸ்லிம் அரசியல் இயக்கங்கள் இதை ஏற்கவில்லை. எனினும், ஒடுக்கப்பட்ட முஸ்லிம் களின் கல்வி, வேலைவாய்ப்புக்கான தனி இடஒதுக்கீடு கோரிக்கை சமூக நீதிக்கு உட்பட்ட ஒரு குரலாகவே இன்று ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

- ஹெச்.ஜி. ரசூல், ‘மைலாஞ்சி’ உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர், தொடர்புக்கு : mylanchirazool@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x