Published : 17 Jan 2015 09:09 AM
Last Updated : 17 Jan 2015 09:09 AM

ஜனநாயகத்தில் பங்கேற்க ஒரு வாய்ப்பு!

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும் எனும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலையும், தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையையும் ஏற்றுக்கொண்டிருக்கும் மத்திய அரசு, அதை முழுமையாக அமல்படுத்த ஒப்புக்கொண்டிருக்கிறது.

2010-ல் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத் திருத்தத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. அதன்படி, 20-ஏ எனும் சட்டப்பிரிவு அறிமுகப்படுத் தப்பட்டது. அந்தச் சட்டப்பிரிவின்படி வேலை, கல்வி அல்லது மற்ற காரணங்களுக்காகத் தான் குடியிருக்கும் வீட்டை விட்டு வெளிநாடு களில் வசிக்கும் இந்தியக் குடிமகன் ஒருவர், தனது கடவுச்சீட்டில் அவர் குறிப்பிட்டிருக்கும் தொகுதியில் வாக்களிக்கும் தகுதியைப் பெறுவார். இந்தச் சட்டத் திருத்தம் வருவதற்கு முன்னர், இந்தியாவில் குடியிருப் பவர்கள்தான் வாக்களிக்க முடியும் என்ற நிலை இருந்தது. தேசிய அரசியலில் வெளிநாடு வாழ் இந்தியர்களையும் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டாலும், 20-ஏ சட்டப் பிரிவின்படி வெளிநாடு வாழ் இந்தியர்கள், தேர்தல் சமயத்தில் நேரடியாகத் தங்கள் தொகுதிகளில் வந்து வாக்களிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. இது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதால், இந்தச் சட்டத் திருத்தத்தின் நோக்கமே முறியடிக்கப்பட்டது. எனவே, 20-ஏ சட்டப் பிரிவில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

‘20-ஏ சட்டப் பிரிவானது, இந்திய அரசியலமைப்பின் 14-வது பிரிவை மீறும் வகையில் பொருளாதார அடிப்படையில் மக்களை வெவ்வேறு விதமாக நடத்தும் தன்மை கொண்டது’ என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வாதத்தை உச்ச நீதிமன்றமும் மத்திய அரசும் தயக்கமின்றி ஏற்றுக்கொண்டன.

தாங்கள் வசிக்கும் பகுதிகளில் வாக்களிப்பதன் மூலம் ஏற்படும் அரசியல் மாற்றங்களை எதிர்கொள்ளும் உள்நாடுவாழ் மக்கள்தான், தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்களே தவிர, வெளிநாடுவாழ் இந்தியர்கள் அல்ல என்பது பல காலமாக இருந்துவரும் வாதம். ஆனால், நடைமுறைச் சான்றுகள் மூலம் இந்த வாதம் மிக வேகமாக முறியடிக்கப் பட்டுவருகிறது. வெளிநாடுகளுக்குக் குடிபுகுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவரும் நிலையில், தேசியம் எனும் கருத்தும் அரசியல் பங்கேற்பாளர்கள்குறித்த கருத்தும் விரைவாக மாறிவருகிறது.

இந்திய அரசின் இந்த முடிவு, தேர்தலில் அதிகமான குடிமக்களைப் பங்குபெறச் செய்வதில் உலக அளவில் ஏற்பட்டுவரும் மாற்றத்துக்கான உதாரணம். வெளிநாடுகளிலிருந்து வாக்களிக்கும் முறைகளில் சிலவற்றை, ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவி எனும் வெவ்வேறு அரசுகளுக்கு இடையிலான அமைப்பு பட்டியலிட்டிருக்கிறது. வெளிநாடு வாழ் இந்தியர்களை, அந்தந்த நாடுகளில் இருக்கும் தூதரகங்களில் வாக்களிக்க அனுமதிக்கலாம் என்றும், தபால் மூலம் தங்கள் வாக்குகளை அனுப்பலாம் என்றும், ஒருவரது வாக்கை அவரது அனுமதியுடன் மற்றொருவர் அளிக்க அனுமதிக்கலாம் என்றும், மின்னணு முறையில் வாக்களிக்க அனுமதிக்கலாம் என்றும் அந்த அமைப்பு யோசனை தெரிவித்திருக்கிறது. இந்த யோசனைகளில், தபால் மூலம் வாக்களிக்க அனுமதிப்பது என்ற முடிவை மத்திய அரசு எடுத்திருக்கிறது.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டால், அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையைத் தருவது இந்தியாவின் தேர்தல் முறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், மத்திய அரசின் முடிவை நிச்சயம் வரவேற்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x