Last Updated : 03 Dec, 2014 08:50 AM

 

Published : 03 Dec 2014 08:50 AM
Last Updated : 03 Dec 2014 08:50 AM

என்று ஒழியும் நிறவெறி?

ரோசா பார்க்ஸ் பேருந்துச் சம்பவம் நடந்த தினம் 1 டிசம்பர், 1955

அமெரிக்காவில் இன்னும் நிறவெறி நீங்கவில்லை என்பதே ஃபெர்குசன் படுகொலை உணர்த்தும் பாடம்.

மைக்கேல் பிரௌன் என்ற கருப்பின இளைஞரைச் சுட்டுக்கொன்ற போலீஸ் அதிகாரி டேரன் வில்சன் மீது, குற்றம் சுமத்தத் தேவையில்லை என்று அமெரிக்க நீதிமன்ற ஜூரிகள் செய்த முடிவால், அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தைச் சேர்ந்த ஃபெர்குசன் பகுதியே கொந்தளிப்பில் இருக்கிறது. “ஜூரிகளின் முடிவு ஏமாற்றமாகத்தான் இருக்கிறது; சட்டப்படியான ஆட்சி என்பதே நம்முடைய வழிமுறையாக இருக்கிறது. எனவே, இதை நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்” என்று ஏமாற்றம் தொனிக்கக் கருத்துத் தெரிவித்திருக்கிறார் அதிபர் பராக் ஒபாமா.

ஒபாமா சொன்னதைச் சற்றே பகுத்து ஆராய்வோம். அமெரிக்க அரசியல் சட்டம் இயற்றப்பட்டபோது, நாட்டு மக்கள்தொகையில் ஐந்தில் மூன்று பங்கினர் கருப்பர்களே. ஆனால், வாக்குரிமை என்பது நிலம் சொந்தமாக வைத்திருந்த வெள்ளையர்களுக்கு மட்டுமே தரப்பட்டிருந்தது. அமெரி்க்கா சட்டப்படி நடக்கும் நாடுதான்; ஆனால், அந்தச் சட்டம் வெள்ளை இனத்தவர்களுக்கு மட்டுமே சில சலுகைகளை அளித்து வந்திருக்கிறது.

அடையாள அங்கங்கள்

ஒரு கொள்ளை, வழிப்பறி, அடிதடி, தீ வைப்பு, கலவரம் அல்லது கொலை போன்றவற்றில் ஈடுபட்டவர் என்று போலீஸார் சந்தேகிக்கும்போதெல்லாம், “கருப்பு நிறம், தடித்த உதடுகள், முரட்டுத்தனமான தோற்றம், நல்ல உயரம், தேக்கு மரம் போன்ற தேகம், தலையில் தொப்பி, அழுக்கான - கசங்கிய உடை” என்று அடையாளங்களைக் கூறுவார்கள். அது பெரும்பாலான கருப்பின ஆண்களுக்குப் பொருந்தி விடும். வெள்ளையர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும்போது, தொலைக்காட்சிகளிலோ வானொலி யிலோ இதே போல அங்க அடையாளங்கள் விவரிக் கப்படுவது கிடையாது. இப்படிப் பட்ட அறிவிப்புகளுக்குப் பிறகு, சோதனைச் சாவடிகளில் தடுத்து நிறுத்தப் படும்போது சுட்டுக் கொல்லப்படுவதற்கான வாய்ப்பு கருப்பினத்தவர்களைப் பொறுத்தவரை 300%. கருப்பு என்றாலே ஆபத்து அல்லவா?

டேரன் வில்சனால் சுட்டுக் கொல்லப்பட்ட கருப் பினத்தைச் சேர்ந்த மைக்கேல் பிரௌன் நல்ல பையனா? சம்பவம் நடந்த நாள் முதல் இன்று வரை இது தீவிரமாக விவாதிக்கப்படுகிறது. ஒரு கடையில் ஏதோ சாமானை எடுத்துக்கொண்டு, கடைக்காரரைத் தாக்கிவிட்டுத் தப்பியோடினார் என்பதே அவர் மீதான புகார். அதற்காக மட்டும் அவரை விரட்டிச் சென்று சுட்டதாக போலீஸ் அதிகாரி கூறவில்லை, மைக்கேல் பிரௌனைப் பார்த்தபோது, பேயைப் பார்த்ததுபோல இருந்ததாம்.

நியாயத் தீர்ப்பு என்பது ‘புனிதர்களுக்கு’ மட்டும் வழங்கப்படக் கூடாது ‘பேய்களுக்கும்’ உண்டு!

ரோசா பார்க்கின் சத்தியாகிரகம்

ரோசா பார்க் என்ற கருப்பினப் பெண்ணின் போராட் டத்தை நினைவுகூருங்கள். கருப்பாக இருப்பதால், பேருந்தின் பின்பக்கத்தில்தான் போய் உட்கார வேண்டும் என்பதை ஏற்காமல் எத்தனை தீரத்துடன் போராடினார். அவருக்காக மான்ட்கோமரி மாநிலக் கருப்பினத்தவர்கள் பொதுப் பேருந்தில் ஏறாமல் வேலைக்கும் வீட்டுக்கும் நடந்தே சென்று தங்களுடைய எதிர்ப்பை எத்தனை நாட்களுக்குத் தொடர்ந்தார்கள்? அவருக்கும் முன்னதாக கிளாடி கால்வின் என்ற பள்ளிக்கூடச் சிறுமி, இதே போன்ற அவமானத்துக்கு எதிராகக் குரல் எழுப்பியதுடன், கை முஷ்டியை உயர்த்திக் காட்டி நிறவேற்றுமை கூடாது என்று உரிமைக் குரல் எழுப்பினார். வெள்ளையர்களுக்காகக் கருப்பர்கள் இருக்கையை விட்டு எழுந்திருக்க முடியாது என்று சொன்னதற்காக ரோசா பார்க்கின் அயல் வீட்டுக்காரர் ஒருவர் 1950-ல் அடித்தே கொல்லப்பட்டார். ஆனால், தையல் கலைஞரான ரோசா பார்க் பெயர் பிரபலமாகிவிட்டது. கிளாடி கல்வின் ஏழை என்பதாலும் திருமணம் செய்துகொள்ளாமலே கர்ப்பம் தரித்துவிட்டார் என்பதாலும் சிவில் உரிமைக் கழகங்கள் அவரை முன்னிலைப்படுத்தாமல் ரோசா பார்க்கை முன்னிலைப்படுத்தின.

அலபாமா மாநிலத்தின் மான்ட்கோமரி நகரில் பேருந்தின் முதல் 10 இருக்கைகளில் வெள்ளையர்கள் மட்டும் அமரலாம். அதன் பின்னால் உள்ள இருக்கைகளில் கருப்பர்கள் அமரலாம். ஆனால், வெள்ளைக்காரர் யாராவது வந்தால், அவருக்கு இடம் கொடுக்க எழுந்து பின்னால் போக வேண்டும். இடமில்லாவிட்டால் நின்றுகொண்டுதான் வர வேண்டும். வெள்ளையர் அருகில் இருக்கை காலியாக இருந்தால்கூடக் கருப்பர்கள் உட்காரக் கூடாது. மக்கள்தொகையில் பெரும்பான்மையினராக இருந்த கருப்பர்கள் இந்த அவமானத்தை எதிர்த்துப் பேருந்துகளில் ஏறுவதையே புறக்கணித்ததால், மான்ட்கோமரி நகரப் பேருந்து நிறுவனங்கள் வசூலின்றி நஷ்டமடைந்தன. கலகம் செய்வதாக சிவில் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. அவர்களுடைய கோரிக்கை நியாயமானது என்று தீர்ப்பளித்த நீதிமன்றங்கள் நிற அடிப்படையில் பேருந்துகளில் இருக்கைகளைப் பிரிக்கக் கூடாது என்று தீர்ப்பளித்தது.

பொறுத்தது போதும்

ஃபெர்குசன் சம்பவம் தொடர்பான ஜூரிகளின் கருத்தைத் தொலைக்காட்சிகள் நேரடியாகவே ஒளி பரப்பின. கருப்பினத்தவர்களின் கோபம் மீண்டுமொரு மக்கள் எழுச்சிக்குக் காரணமாகிவிட்டது. இந்த எழுச்சி நாடு முழுக்கப் பரவியது. நியூயார்க் நகரில் மக்கள் ஊர்வலமாகச் சென்றார்கள், பாலங்களில் போக்குவரத்தைத் தடுப்பதற்காகத் தடுப்புகளை ஏற்படுத்தினார்கள். பத்திரிகைகளும் தொலைக் காட்சிகளும்தான் சிறிய நிகழ்ச்சியைப் பெரிதுபடுத்தி விட்டன என்று அதிகாரிகள் குற்றம் சாட்டினார்கள்.

ஜூரிகளில் 9 பேர் வெள்ளையர்கள், 3 பேர் கருப் பினத்தவர்கள். சந்தேகப்படும் நபரின் முதுகை நோக்கிச் சுடலாம் என்று 1979-ல் பிறப்பிக்கப்பட்ட ஒரு ஆணையை ஜூரிகளின் பார்வைக்காகக் கொடுத்தார்கள். அப்படிச் செய்யக் கூடாது என்று 30 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான ஒரு தீர்ப்பின் நகலைத் தர வசதியாக மறந்துவிட்டார்கள். வழக்கமாக ஜூரிகள் ஒரே நாளில் சாட்சியங்களையும் பிற தடயங்களையும் பார்த்துவிட்டு முடிவெடுப்பார்கள். இந்த வழக்கில் 25 நாட்களுக்கு ஆய்வு நடந்தது. 60-க்கும் மேற்பட்ட சாட்சிகளை ஜூரிகள் விசாரித்தனர். அரசுத் தரப்பு வழக்கறிஞர் நேரில் ஆஜராகி, சில விளக்கங்களை அளித்தார். குற்றம்சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரிகூட 4 மணி நேரம் தன்னுடைய தரப்பை எடுத்துரைத்தார். வழக்கமாக, அரசு வழக்கறிஞர் குற்றம்சாட்டப்பட்டவர் மீதான குற்றச்சாட்டு என்ன என்று மட்டுமே குறிப்பிடுவார். இந்த வழக்கில் அப்படி எதையுமே கூறாமல் விட்டுவிட்டார். எனவே, ஜூரிகள் எதைத் தீர்மானிக்க வேண்டும் என்று இலக்கில்லாமல் விடப்பட்டது.

5 நிமிடத்தில் முடிய வேண்டியது

நீதிமன்ற நடவடிக்கைகளைத் தினமும் கவனித்துச் செய்தி தரும் ஜெனிஃபர் கானர்மேன் கூறுகிறார், “இம் மாதிரியான வழக்குகளில் சான்றுகளும் தடயவியல் அறிக்கைகளும் ஜூரிகளின் பார்வைக்கு விடப்படும். குற்றம்சாட்டப்பட்டவர் குற்றவாளியா இல்லையா என்று மட்டும் ஜூரிகள் வாக்களிப்பார்கள். சில சமயம் 5 நிமிஷங்களில் எல்லாம் முடிந்துவிடும், இதைப் போல 3 மாதங்களுக்கு இழுத்துக்கொண்டிருக்காது”.

அரசுக்கு நான் செலுத்தும் வரிப்பணம் போலீஸ் அதிகாரிகளின் கவனக் குறைவான செயல்களால், பாதிக்கப்பட்டவர் குடும்பங்களுக்கு நஷ்டஈடாகச் செல் வதை ஏற்க முடியாது. தவறு செய்த அதிகாரி சிறைத் தண்டனையும் இல்லாமல், அபராதமும் இல்லாமல், பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, முழு ஓய்வூதியம் பெறுவதையும் சகித்துக்கொள்ளவே முடியாது.

சட்டப்படியான ஆட்சி நடக்கும் நாடு நம்முடையது என்ற புகழ்ச்சிகளால் ஆகப்போவது ஏதுமில்லை. அதை உண்மையிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும். பழைய சட்டமானாலும் புதிய சட்டமானாலும் முறையாக அமல்படுத்தப்பட வேண்டும். நிற அடிப்படையில் பாரபட்சமான தீர்ப்பை வழங்கக் கூடாது. கருப்பர்கள் உயிர் மட்டும் முக்கியம் என்று கூறவில்லை. அனை வருடைய உயிரும் சமம்தான், முக்கியம்தான். இதைக் கடைப்பிடிக்காமல் பாசாங்கு செய்வதால் ஜனநாயகம் தழைத்து ஓங்கிவிடாது.

தி கார்டியன், தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x