Last Updated : 18 Dec, 2014 10:05 AM

 

Published : 18 Dec 2014 10:05 AM
Last Updated : 18 Dec 2014 10:05 AM

மருந்தா, மந்திரக் காளான்கள்?

குடிநோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமையக்கூடிய ஸைலஸைபினை அனுமதிக்க வேண்டும்.

மந்திரக் காளான்கள் என்று அழைக்கப்படு வனவற்றை ஆர்வம் காரணமாக ஆராயத் தொடங்கினேன். காளான்கள்பற்றி அறிய முற்பட்ட ஆர்வலர்களுடன் ஓரிரு ஆண்டுகள் சேர்ந்து கொண்டேன். நான் பங்கேற்ற கருத்தரங்குகளிலும் தேடும் பணிகளிலும் என்னுடன் இருந்தவர்கள் யாரும், மனப்பிரமையை ஏற்படுத்தும் காளான் வகைகள் குறித்துப் பேசவேயில்லை. பூஞ்சை இனங்களில் அவை ஏதோ வழிதவறிப் பிறந்தவை என்பதைப் போலவே அவர்கள் நடந்துகொண்டார்கள்.

உயிரி வகைகளை ஆராயும் தீவிர ஆராய்ச்சியாளர் களுக்கு அதன் பெயரே தர்மசங்கடத்தைத் தந்ததைப் போலவே உணர்ந்தேன். அவைகுறித்த சில நூல்களைப் படித்திருக்கிறேன். உளவியல் மாற்றங்களை ஏற்படுத் தும் காளான்களை, அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஒதுக்கியே வைத்திருந்தார்கள். அந்த வகைக் காளான் களைப் பயன்படுத்துவதே குற்றம் என்று 1968-ல் சட்டம் இயற்றப்பட்டதால், அதை விலக்கி வைத்திருந்தார்கள். அந்த வகைக் காளான்களிலிருந்து தயாரிக்கப்படும் ஸைலஸைபின் (Psilocybin) மருந்து எந்த வகையில் பலன் தரும் என்று இப்போது மறு ஆய்வு செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஸைலஸைபினை ஊசி மூலம் செலுத்தப்பட்டவரின் மூளையின் செயல்பாட்டையும் சாதாரண நிலை மூளையின் செயல்பாட்டையும் கவனித்து, ஒப்பு நோக்கி அந்த மருந்தின் விளைவுகளை ‘ராயல் சொசைட்டி இன்டர்ஃபேஸ்’ இதழில் கட்டுரையாக வெளியிட்டிருக் கிறார்கள். ஸைலஸைபின் செலுத்தப்பட்டவரின் மூளை, இதுவரை தொடர்பு இல்லாமல் இருந்த பகுதி களைக்கூடத் தொடர்புபடுத்தியது. வழக்கத்துக்கு மாறான இந்தத் தொடர்புகள்தான் ‘வண்ணங்களைக் கேட்பதாகவும்,’ ‘ஒலியைப் பார்ப்பதாகவும்’ போதையில் இருப்பவர்களைச் சொல்ல வைக்கிறது என்று தோன்று கிறது. ஒலியை உணரும் மூளையின் பகுதி, நிறத்தை அறியும் பகுதியுடன் இணைப்பு பெறுகிறது. அதே போல் நிறத்தை அறியும் பகுதி, ஒலியைக் கேட்கும் பகுதியுடன் இணைக்கப்படுகிறது. இதை ஆய்வுசெய்த லண்டன் கிங்ஸ் கல்லூரிப் பேராசிரியர் பால் எக்ஸ்பர்ட், இது நிரந்தரமாக இருக்க முடியாது, மூளையின் செயல்பாடு தற்காலிகமாக மட்டும் இந்த மாறுதலை அடைகிறது என்று கருதுகிறார்.

மனத்தாழ்ச்சிக்கு விடுதலையா?

ஸைலஸைபின் செலுத்தப்பட்ட மூளை புதிய வழியில் தற்காலிகமாகச் செயல்படுகிறது என்ற இந்தக் கண்டுபிடிப்பு, மனத்தாழ்ச்சி நிலையை (டிப்ரஷன்) அடைந்தவர்களை உளவியல்ரீதியாகச் சிகிச்சை அளித்து மீட்க உதவக்கூடும். மனச்சோர்வு அதிகரிக்கும்போது எதிர்மறைச் சிந்தனைகளில் ஆழ்ந்துவிடுகிறார்கள். அதிலிருந்து அவர்களால் மீள முடிவதில்லை என்கிறார் டாக்டர் எக்ஸ்பர்ட். மூளை அதன்பாட்டிலேயே செயல்பட்டுக்கொண்டிருக்கும்போது மனச்சோர்வில் சிக்கியவர்களை இந்த மருந்து மூலம் செயல்மாற்றம் செய்வதால் மீட்க முடியும் என்பதற்கு அவர் இரண்டு உதாரணங்களைக் கூறுகிறார். மின்சாரச் சாதனங்களில் பயன்படும் சர்க்யூட் பிரேக்கர் போலவோ, கம்ப்யூட்டர் ஒரு செயலை மேற்கொண்டு தொடர முடியாமல் செயலிழந்து நின்றால், அதை சுவிட்ச் ஆஃப் செய்து மீண்டும் ரீ பூட் செய்வதைப் போலவோ இது என்கிறார்.

ஸைலஸைபின், பலவகைக் காளான்களிலிருந்து கிடைக்கிறது. காளானில் இது ஏன் இருக்கிறது என்று தெரியவில்லை. ஸைலஸைபின் உட்செலுத்தப் படும்போது ரசாயன மாற்றம் பெற்று ஸைலோஸைன் என்ற பொருளாக மாறுகிறது. அது செரோடினின் என்ற பொருளைப் போலவே உருவ அமைப்பில் ஒத்திருக்கிறது. உணர்ச்சிகள், பசி, தூக்கம், நினைவு, கற்றல், மகிழ்ச்சியான உணர்வு ஆகியவற்றை செரோடினின்தான் கட்டுப்படுத்துகிறது. எனவே, உருவ அமைப்பில் அதைப் போலவே இருக்கும் ஸைலோஸைன் அந்தச் செயல்களை இயல்பாகச் செய்ய வைக்கிறது.

மருந்தா, போதைமருந்தா?

ஆல்பர்ட் ஹாஃப்மேன் என்ற வேதியியலாளர் ஸைலஸைபினை 1950-களில் முதல்முறையாக உருவாக்கினார். அவர்தான் பூஞ்சையிலிருந்து எல்.எஸ்.டி. என்ற போதை வஸ்துவையும் கூட்டுப் பொருளாக உருவாக்கினார். குடிநோய்க்கு மருந்து தயாரிக்கவும், குடியை மறப்பதற்கான சிகிச்சை முறைக்கு உதவிப்பொருளாகவும், தன்னிலை இழந்த வர்களை மீட்டு இயல்புநிலைக்குக் கொண்டுவரவும் ஸைலஸைபினைப் பயன்படுத்த முடியுமா என்ற ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தன்னிலை மறந்து பரவசத்தில் ஆழ இதை அதிகம் பயன்படுத்தத் தொடங்கினார்கள் என்பதால், இந்த ஆராய்ச்சியே அருகி அறவே நின்றது. இதற்கான ஆய்வு நிதி உதவியும் குறையத் தொடங்கியது. 1968-ல் ஸைலஸைபினைப் பயன்படுத்தவே கூடாது என்று அரசு தடை விதித்தது. அமெரிக்க அதிபராக நிக்சன் பதவி வகித்த காலத்தில், இதை முழுக்க முழுக்க போதைப்பொருளாகவே பார்க்கத் தொடங்கினார்கள். மருத்துவப் பயன் கிடையாது, வெறும் போதை தரும் வஸ்து என்று வகைப்படுத்தப்பட்டது.

இது ஒரு போதைப்பொருள்தான் என்ற எண்ணம் மாறவும், இதை ஒரு மருந்தாகக் கொடுத்து மனத்தாழ்ச்சி உற்றவர்களுக்குச் சிகிச்சை தந்து மீட்கலாம் என்று முயற்சித்துப் பார்க்கவும் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன. இப்போதும்கூட இதை ஆய்வுக்கூடத்தில் பரிசோதித்துப் பார்க்க மருந்துக் கட்டுப்பாட்டாளரிடம் முன் அனுமதியும் ஒப்புதலும் பெற வேண்டும். 1960-களில் கைவிடப்பட்ட ஆய்வுகளிலிருந்து மீண்டும் தொடங்க வேண்டியிருக்கிறது.

துணைமருந்தாக…

சிறிது சிறிதாக ஸைலோஸைபினை உட்செலுத்தும் போது, குடிநோயாளிகள் அமைதி அடைவதும் மனத்தாழ்ச்சி நிலையிலிருந்து தற்காலிகமாக விடுதலை அடைவதும் தெரியவந்திருக்கிறது. பலருக்கு நினைவாற்றல் நன்றாகத் திரும்பியிருக்கிறது. பலர் நல்ல உடல், மனநிலையில் இருப்பதாக உணர்ந்திருக்கிறார்கள். மனநோய்க்கு உள்ளானவர்களை பழைய நிலைக்குத் திரும்பச் செய்ய இதைத் துணை மருந்தாகக் கொடுக்க லாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். மனத் தாழ்ச்சியுற்றவர்களுக்கு மருந்து கொடுத்துப் பழைய நினைவுகளை மீட்கும்போது அவர்கள் கசப்பான நினைவுகளையே அதிகம் நினைவுகூர்கிறார்கள். இந்த மருந்து அதை மாற்ற உதவும்.

சில மனநோயாளிகள், செய்ததையே திரும்பத் திரும்பச் செய்வார்கள். எண்ணியதையே மீண்டும் மீண்டும் எண்ணி வைப்பார்கள். கையை அடிக்கடி கழுவிக்கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கும் ஸைலோஸைபின் நல்ல மருந்தாக இருக்க முடியும். சிலருக்கு அடிக்கடி தலைவலி வந்துகொண்டேயிருந்தது. அவர்களுக்கு இதைச் சிறிய அளவில் கொடுத்துப் பரிசோதித்தபோது, தலைவலியின் தீவிரம் குறைந்து விட்டதாகக் கூறியுள்ளார்கள். ஒரு சிலர் திக்குவாய்கூடச் சரியாகிவிட்டதாகக் கூறியிருக்கிறார்கள். எலிகளுக்குக் கொடுத்துச் சோதித்ததில் அவற்றின் அச்ச உணர்வு குறைந்தது தெரியவந்திருக்கிறது. இனி, பிழைக்கவே முடியாது என்ற நிலையில் இருந்த புற்றுநோயாளிகளுக்கு இதைக் கொடுத்தபோது அவர்களுடைய அச்சம், பதற்றம், மனத்தாழ்ச்சி நிலை ஆகியவை கணிசமாகக் குறைந்திருக்கின்றன.

பறந்தேன்…

எந்தவிதப் பாதிப்பும் இல்லாத, நல்ல மனநிலை உள்ளவர்களுக்குக்கூட இது நல்ல விளைவுகளை ஏற்படுத்துவதை என்னுடைய சொந்த அனுபவத்திலேயே உணர்ந்தேன். ஒரு புத்தக ஆய்வுக்காக நான் இந்தக் காளான்களைச் சிறிதளவு உட்கொண்டேன். சுமார் 4 மணிநேரம் நான் ஒருவிதப் பரவச நிலையில் இருந்தேன். அந்த நேரம் முழுக்க நான் வீட்டை விட்டு வெளியிலேயே கழித்தேன். அந்த 4 மணி நேரம் என்பதுகூட எனக்கு மிக நீண்ட பொழுதாகத் தெரிந்தது. எதைப் பார்த்தாலும் புதிதுபோலத் தெரிந்தது. அன்று நான் என்னுடைய உடலை ஒரு கப்பலாகவும் வாழ்க்கை என்னும் பெருங்கடலில் என்னை அது பத்திரமாகக் கொண்டுபோய்க்கொண்டிருப்பதாகவும் உணர்ந்தேன். வயதாகிவிட்டதே என்ற வருத்தம் மறைந்தது. உடலும் தோற்றமும் மாறியதுகுறித்து தாழ்வாக எதையும் நினைக்கவில்லை. மாறாக, ஏதோ ஒரு நன்றிப் பெருக்கு என் உடல்மீதே ஏற்பட்டது. என்னுடைய மனதில் பெருத்த நிம்மதியும் திருப்தியும் தோன்றியது. அதை நான் இப்போதும் உணர்கிறேன்.

ஸைலோஸைபின் ஏராளமான அமெரிக்கர்களுக்கு உளவியல்ரீதியாக நிம்மதியையும் பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் அளித்திருக்கும் என்று நம்புகிறேன். ஆனால், அதை மருந்துக் கட்டுப்பாட்டின் முதல் அட்ட வணைப் பட்டியலில் சேர்த்திருப்பது பெரிய தடையாக இருக்கிறது. இதை மாற்றியாக வேண்டும். இதில் ஆய்வுகள் பெருக வேண்டும்.

நான் சொல்வதைத் தவறாகக் கருதிவிடாதீர்கள். 16 வயது வாலிபர்கள் அனைவரும் மந்திரக் காளான்களைச் சாப்பிட்டுத் தங்களுடைய சுயநிலையை மறக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. மனத்தாழ்ச்சி அடைந்தோர் அதிலிருந்து மீள இது உதவ வேண்டும் என்றுதான் கூறுகிறேன்.

தி நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x