Published : 15 Dec 2014 09:55 AM
Last Updated : 15 Dec 2014 09:55 AM

தேவை தேசிய தங்கக் கொள்கை

இந்திய இறக்குமதியில் பெரும் இடத்தைப் பெட்ரோலியமும் தங்கமும்தான் பிடித்துக்கொள்கின்றன. நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை அவைதான் அதிகம் காலியாக்குகின்றன. தங்க இறக்குமதியைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகளால் பயன் ஏற்பட்டுவிடவில்லை. எனவேதான் அரசு சில கட்டுப்பாடுகளை நீக்கியிருக்கிறது. இந்த நிலையில், புதிய தேசிய தங்க நகைக் கொள்கையை அரசு வகுக்க வேண்டும் என்று இந்திய தொழில், வர்த்தகக் கூட்டமைப்பு (ஃபிக்கி) வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவில் தங்கக் கையிருப்பு சுமார் 22,000 டன் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஆண்டுதோறும் அதிகாரபூர்வமாக 850 டன் தங்கம் இறக்குமதியாகிறது. வேறு வழிகளிலும் வருவதைச் சேர்த்தால் 1,000 டன்கள் இருக்கும். தங்க இறக்குமதியால் அரிய அந்நியச் செலாவணி அதிகம் செலவாவதுடன் இந்திய ரூபாயின் மாற்று மதிப்பும் குறைகிறது. இதைத் தடுக்க, மக்களால் பயன்படுத்தப்படாமல் வீட்டில் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கும் தங்கத்தை அரசே வாங்கி, ஆண்டுதோறும் புதிதாகத் தங்கம் வாங்க நினைப்போருக்கு விற்பனை செய்யலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசிடம் தங்கம் அளிப்போருக்கு அதற்குண்டான சான்றிதழையோ, தங்கப் பத்திரத்தையோ அளித்து, ஆண்டுதோறும் வட்டியாகக் குறிப்பிட்ட தொகையை வழங்கலாம். சான்றிதழ் அல்லது பத்திரத்தை விற்பதற்கு முன்வந்தால், அன்றைய சர்வதேச விலை நிலவரப்படி ரொக்கமாகவோ தங்கமாகவோ தரலாம். ஆண்டுதோறும் இறக்குமதியாகும் தங்க அளவு, இந்தியாவில் உள்ள கையிருப்பு மதிப்பில் வெறும் 4% தான் என்பதால், இந்த யோசனையைச் செயல்படுத்த முயலலாம்.

இந்தியாவும் சீனாவும் சேர்ந்து ஆண்டுதோறும் 54% தங்கத்தை உலக சந்தையில் வாங்குகின்றன. எனவே, இவ்விரு நாடுகளும் சேர்ந்து செயல்பட்டால், உலக சந்தையில் தங்க விலையை வீழ்ச்சியுறச் செய்யலாம். அதேபோல், பங்கு விற்பனைக்குச் சந்தை இருப்பதைப் போல தங்கப் பரிமாற்றத்துக்கும் தனிச் சந்தையை ஏற்படுத்தலாம் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். தங்கம் தொடர்பான சேவைகளில் வங்கிகள் ஈடுபடுவதும் அவசியம். தங்க டெபாசிட்டுகளை மீண்டும் வங்கிகளில் அறிமுகப்படுத்தலாம்.

இந்தியக் கைவினைஞர்களின் தங்க நகைகளை வெளிநாட்டுச் சந்தைகளில் நன்கு விளம்பரப்படுத்தி விற்பனை செய்யலாம். இதனால், தங்கம் மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாகி, அதிக வருவாயை ஈர்க்கும். ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பும் ஏற்படும்.

தங்க நகைக்கு ‘ரசீது’கோரினால், “விற்பனை வரி, மதிப்புக் கூட்டப்பட்ட வரி கட்ட வேண்டியிருக்கும், பரவாயில்லையா?” என்று வியாபாரிகள் கேட்பதாக மக்கள் புகார் கூறுகிறார்கள். இதுபோன்ற குறைகளை நீக்கவும் தங்க வர்த்தகத்தை முறைப்படுத்தவும், அதனால் அரசு பலன் அடையவும் தங்க வாரியம், தங்கச் சந்தை, தங்க தரநிர்ணயம் ஆகியவை மிக மிக அவசியம் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.

ஏழை எளிய மக்களுக்குக் குன்றிமணி அளவு தங்கம்கூட வருங்காலத்துக்கான பெரும் சேமிப்பு. தேசத்துக்கும் அப்படித்தான்.

பொருளாதாரத்துக்கு உயிர்நாடியாகக் கருதப்படும் தங்கத்துக்கென்று ஒரு தேசியக் கொள்கையை உருவாக்காமல், தொடர்ந்து அதைப் புறக்கணித்துக்கொண்டிருப்பதற்கு இப்போதாவது முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x