Last Updated : 12 Dec, 2014 09:03 AM

 

Published : 12 Dec 2014 09:03 AM
Last Updated : 12 Dec 2014 09:03 AM

ரஜினி: காலத்தை வீழ்த்திய கலைஞன்

ரஜினிகாந்த் பிறந்தநாள்: 12.12.1950

1975-ல் ‘அபூர்வ ராகங்கள்’ படம் வெளியானபோது, படத்தின் இறுதிக் காட்சியில் நின்ற நிலையிலேயே உயிரைவிட்டு, ஸ்ரீவித்யா தொட்டதும் சரிந்துவிழும் அந்த அறிமுக நடிகர், உச்ச நட்சத்திரமாக உயர்ந்து, 40 ஆண்டுகளுக்குப் பின்னரும் கதாநாயகனாக நடிப்பார் என்று அந்தக் கால ரசிகர்கள் கணித்திருப்பார்களா தெரியவில்லை. ஆனால், அலட்சியமான வேகத்துடன் கைகளால் மேல் கோட்டைப் பின்னோக்கித் தள்ளிவிட்டபடிநடக்கும் ‘லிங்கா’ படத்தின் ஸ்டில்களை இப்போது பார்க்கும் அந்த ரசிகர்கள், கண்முன்னே பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கும் கால மரத்தின் குன்றாத பசுமையை நிச்சயம் உணர்வார்கள்.

திரைவாழ்வில், எந்த நடிகரும் எட்டாத புதிய உயரத்தை அடைந்துகாட்டியவர் ரஜினிகாந்த். இவரது படம் வெளியாகும்போதுதான், நட்சத்திர நடிகர்கள் கூடப் பாமர ரசிகர்களாகி, திரையரங்குக்குப் படையெடுக்கும் அதிசயம் நிகழும். மிகச் சில தோல்விகளின் வடுக்களும், பிரம்மாண்டமான பல வெற்றி மகுடங்களும் கொண்ட 40 ஆண்டுகாலப் பயணம் அவருடையது.

கவர்ச்சியான போக்கிரி

70-களின் இறுதியில் இளையராஜா பாரதிராஜா - மகேந்திரன் - ரஜினி - கமல் என்று புதிய திறமைகளின் அலை ரசிகர்களை ஈர்த்தது. அப்போது வெற்றிப் படங்களுக்கு உத்தரவாதம் தரும் கலைஞராகவும், ரசிகர்களின் பெரும் விருப்பத்துக்குரியவராகவும், மளமளவென உயர்ந்தார் ரஜினி. வித்தியாசமான உச்சரிப்பு, உற்சாகமான வேகம், அலைபாயும் தலைமுடி என்று ரசிகர்களைக் கட்டிப்போடத் தொடங்கியிருந்தார். கவர்ச்சியான போக்கிரித் தோற்றம் அவரது பலங்களில் ஒன்றாக அமைந்தது.

முன்கோபம் கொண்ட முரட்டு இளைஞன் பாத்திரத்தில் அவர் நடித்த ‘பைரவி’, ‘தப்புத்தாளங்கள்’ போன்ற படங்கள் அவர் மீதான அனுதாபத்தை வளர்த்தன. மகேந்திரன் இயக்கிய ‘முள்ளும் மலரும்’ படத்தில் சுயஇரக்கமும், தன்மானமும் மிக்க முரடனாக அவர் நடித்த காளி பாத்திரம் இவற்றின் உச்சமாக அமைந்தது. முழுமையான நாயகனாக அவர் உருக்கொள்வதற்கு முன் வெளியான இந்தப் படம், அவரது நடிப்பின் நுட்பங்களைச் சாத்தியப் படுத்தியது. தான் முற்றிலும் வெறுக்கும் சரத்பாபு, தன் தங்கையைப் பெண் கேட்டு வந்த பின்னர் அவர் ஆடும் ருத்ரதாண்டவம் ரசிகர்களை மட்டுமல்ல, திரையில் இருக்கும் சக நடிகர்களையே உலுக்கி யெடுத்துவிடும்.

வில்லத்தனம் நிறைந்த நாயகன்

வில்லன்களின் உலகிலிருந்து நல்லவர்களின் பக்கம் வந்த நடிகர் ரஜினி, வில்லன்களுக்கு உரிய பலம், ஆக்ரோஷம், சூழ்ச்சி என்று அனைத்தையும் கைக்கொண்டிருக்கும் ஒருவர் நாயகனானபோது ரசிகர்களுக்குக் கிடைத்த பாதுகாப்பு உணர்ச்சி அவரது வெற்றிக்கு அடித் தளமாக அமைந்தது எனலாம். எனவேதான், பிரம் மாண்டமான மொட்டைத் தலை வில்லனைப் ‘பறந்து பறந்து’ ரஜினி அடித்தபோது, திரையரங்கில் விசில் பறந்தது. ரவுடிகளால் தள்ளிவிடப்படும் பெரியவர், தன் காலில் விழும்போது தூக்கிவிடும் ரஜினியைப் பார்த்துக் கைத்தட்டல்களால் அரங்கமே அதிர்ந்தது. குழந்தைகள், பெண்களின் மதிப்பையும், அபிமானத்தையும் பெற்ற நடிகராக ரஜினி உயர்ந்ததன் ரகசியம் இதுதான்.

அந்தக் காலகட்டத்தில் அமிதாப் நடித்த ‘கோபக் கார இளைஞன்’ வேடத்தின் தமிழ் நகல்தான் என்றாலும், தனக்கே உரிய பிரத்யேக பாணியில் அதை மிளிரச் செய்தார் ரஜினி. வில்லனை வீழ்த்தும் அசுர பலம் கொண்டிருந்தாலும் சற்று நேரம் அவனிடம் அமைதியாகவும், போலியான பயத் துடனும் ரஜினி உரையாடும் காட்சிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்தன. காற்றில் கலைந்து புரளும் முடியைக் கைகளால் ஒதுக்கிக்கொண்டே புன்னகையுடன் வில்லன்களை எச்சரிக்கும் ரஜினியை யாருக்குத்தான் பிடிக்காது?

‘பாட்ஷா’வுக்குப் பிறகு

90-களின் மத்தியில் தமிழ்த் திரையுலகின் இசை, தொழில்நுட்பம் போன்ற தளங்களில் ஏற்பட்ட மாறுதலின் பின்னணியில் வெளியான ‘பாட்ஷா’, அவரது பிம்பத்தைப் பல மடங்கு பெருக்கியது. தமிழக அரசியலில் நிலவிய கொந்தளிப்பான சூழலைத் திரையில் பிரதிபலிக்கும் படங்களில் ரஜினி தொடர்ந்து நடித்தார். அது அரசியல் களத்தில் அவரை நிறுத்தாவிட்டாலும், ‘திரை அரசிய’லில் கோலோச்ச அவருக்கு உதவியது. ‘முத்து’ படம் ஜப்பானில் பிரபலமானதும், ‘படையப்பா’ அமெரிக் காவில் வெளியானபோது ‘வண்டி கட்டிக்கொண்டு’ திரையரங்குகளுக்கு ரசிகர்கள் படையெடுத்ததும், ரஜினியின் நட்சத்திர மதிப்பின் வீச்சை உணர்த்தியது.

எல்லையைக் குறுக்கிக்கொண்டவர்

சமகால நடிகரும் நண்பருமான கமல், பரிசோதனை முயற்சிகளில் இறங்கிவிட்ட பின்னர், வணிகப் படங்களே தனது பிரதேசம் என்ற முடிவுக்கு ரஜினி வந்துவிட்டார். இத்தனைக்கும் தமிழின் தரமான படங்கள் என்று பட்டியலிட்டால், அதில் ரஜினி நடித்த படங்களும் அடங்கும். ஒருகட்டத்தில் வணிக உலகின் திரையிலிருந்து மீளமுடியாமல் அதிலேயே தேங்கிவிட்டார் என்ற விமர்சனம் ரஜினி மீது உண்டு. ஆனால், உண்மையில், அமிதாப் நடித்த ‘சீனி கம்’ போன்ற, அசல் வயதுக்குரிய வேடங்களில் நடிக்கும் ஆர்வம் ரஜினிக்கு இருக்கிறது.

சமீபத்தில் பஞ்சு அருணாச்சலத்தைச் சந்திக்க இளையராஜாவுடன் சென்றபோது, இதை அவர் குறிப்பிட்டிருக்கிறார். ‘சந்திரமுகி’ வேட்டையன், ‘எந்திரன்’ சிட்டி எல்லாம்கூட அதன் வெளிப்பாடுதான் என்று கொள்ளலாம். தமிழில் இப்போது உருவாகியிருக்கும் ‘புதிய அலை’ இயக்குநர்களால் நிச்சயம் ரஜினியின் இந்த ஆசைக்குத் தீனிபோட முடியும். ரஜினி மீண்டும் அப்படியொரு படத்தில் நடிப்பதுதான் அவர் எதிர்கொள்ளும் மிகப் பெரிய வாழ்நாள் சவாலாக இருக்கும். ஆனால், அப்படி யான ஒரு சவாலை எதிர்கொள்வதில்தான் ஒரு அசலான கலைஞனின் ஆத்மார்த்த வெற்றி அடங்கியிருக்கிறது. எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது... நல்வரவு ரஜினி!

- வெ. சந்திரமோகன்

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x