Published : 02 Jul 2019 07:50 AM
Last Updated : 02 Jul 2019 07:50 AM

360: ஸ்டீபனின் இளைய கானா

சிக்கன வீட்டு வாழ்க்கைக்கு வழிகாட்டும் மெக்ஸிகோ அதிபர்

மெக்ஸிகோ அதிபர் ஆந்த்ரேஸ் மானுவெல் லோபஸ் ஆப்ரடார் ஒரு சிறிய அடுக்ககத்தில் குடிபுகத் திட்டமிட்டிருக்கிறார். அந்நாட்டின் அதிபரின் அதிகாரபூர்வ இல்லமான ‘நேஷனல் பேலஸ்’, இதற்கு முன் மன்னர்கள் வாழ்ந்த அரண்மனையாகும். ஏராளமான கலைப் பொருட்களுடன் அருங்காட்சியகமாகவும் இருக்கும் அக்கட்டிடம் வரலாற்றுச் சின்னமும்கூட. தனக்கு இவ்வளவு பெரிய வசிப்பிடம் தேவையில்லை என்று நினைப்பதோடு, அலுவலகத்தை ஒட்டியிருந்தால் நேரம் நிறைய மிச்சமாகும்; வேலைகளில் மேலும் கவனம் செலுத்தலாம் என்று நினைக்கிறார் ஆந்த்ரேஸ் மானுவெல். விளைவாகத்தான் இந்த முடிவு. மெக்ஸிகோ அதிபராகப் பதவியேற்கும் ஒருவர் ஒருமுறைதான் அந்தப் பதவியில் இருக்க முடியும் - அதிபரின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். பதவிக் காலத்தில் ஏதாவதொரு காரணத்துக்காகப் பதவி விலகினாலும் மீண்டும் அதிபராக முடியாது. ஆக, நீங்கள் நாட்டுக்கு என்ன செய்வதாக இருந்தாலும், இந்த ஆறு ஆண்டுகளுக்குள் சாதித்தாக வேண்டும். ஆந்த்ரேஸின் முனைப்புக்கு இதுவும் ஒரு காரணம்!

ட்விட்டருக்குப் படையெடுக்கும் ஆர்எஸ்எஸ் தலைமை

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத், பொதுச்செயலாளர் சுரேஷ் ‘பையாஜி’ ஜோஷி, துணை பொதுச்செயலாளர் சுரேஷ் சோனி உள்ளிட்ட ஆறு மூத்த நிர்வாகிகள் ட்விட்டரில் இணைந்திருக்கிறார்கள். இயக்கம் தொடர்பாகத் தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்கவும், கேலி கிண்டல்களைக் கட்டுப்படுத்தவும் மூத்த தலைவர்களெல்லாம் ட்விட்டருக்குப் படையெடுத்திருப்பதாக சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மோகன் பாகவத் இதுவரை ஏதும் ட்வீட் செய்யவில்லை. ஆர்எஸ்எஸ்ஸின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தை மட்டும் பின்தொடர்ந்திருக்கிறார்.

அதிகரிக்கும் போட்டி: டெல்லி கல்லூரியில் கலைப் படிப்புகளுக்கு கட்-ஆஃப் 98.75%

டெல்லி மதிப்புவாய்ந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படும் செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் இந்த ஆண்டு இளங்கலைப் பட்ட வகுப்பில் ஆங்கில இலக்கியம் (ஹானர்ஸ்) பொருளியல் (ஹானர்ஸ்) சேருவதற்கு இந்த ஆண்டின் கட்-ஆஃப் மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? 98.75%. அறிவியல் படிப்புகளுக்கு 97.75%. கலைப் பாடங்களுக்கு 96.5%. மருத்துவம், பொறியியல் படிப்புகள் நுழைவுத் தேர்வுகளின் ஆதிக்கத்துக்குள் வந்துவிட்ட பின்னர், அங்கு வாய்ப்பிழக்கும் மாணவர்கள் அடுத்தடுத்துக் குறிவைக்கும் இடங்கள் கலைக் கல்லூரிகள்தான். இக்கல்லூரியில் சேர மொத்தமாக 19,862 பேர் இந்த ஆண்டு விண்ணப்பித்திருக்கின்றனர்.

ஸ்டீபனின் இளைய கானா

சென்னை செம்மஞ்சேரியின் இளம் கானா பாடகர் ஸ்டீபனின் புதிய பாடல் இணையவுலகைக் கலக்கிக்கொண்டிருக்கிறது. யூட்யூப்பில் வெளியாகியிருக்கும் அவரது ‘கும்பலாக சுத்துவோம்’ பாடலை இதுவரை 2 கோடி பேர் பார்த்திருக்கிறார்கள். இந்தப் பாடலை வைத்து வெளிவரும் வெவ்வேறு ‘வெர்ஷன்கள்’கூட சக்கைபோடுபோடுகின்றன.

ஒரே பாடலில் நட்சத்திரப் பாடகர் வரிசையை நோக்கி நகர்ந்திருக்கிறார் ஸ்டீபன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x