Published : 23 Aug 2017 09:16 AM
Last Updated : 23 Aug 2017 09:16 AM

இப்படிக்கு இவர்கள்: கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை!

கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை!

தென் மாவட்டங்களின் வளர்ச்சியின்மை குறித்து ‘தி இந்து’ காட்டிய (வடக்கு வாழ்கிறது... தெற்கு தேய்கிறது... ஆக.18) அக்கறைக்கு அந்தப் பரிதாபத்துக்குரிய பகுதியைச் சேர்ந்தவன் என்ற முறையில் எனது நன்றி. கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ள விஷயங்கள் மிகச் சிலவே. இன்னும் பல விஷயங்கள் உள்ளன. அதையெல்லாம் பட்டியலிட்டால் தனிப் புத்தகமே எழுதலாம். மத்திய, மாநில அரசுகளில் அங்கம் வகிக்கும் தென் மாவட்டப் பிரதிநிதிகள் எல்லாம் இவ்விஷயத்தில் மௌனம் சாதிப்பதற்கு, முழுக்க முழுக்க அவர்களது சுயநலப்போக்கே காரணம். மக்களுக்கும் போதிய விழிப்பு உணர்வு இல்லை. ‘நம்மால் என்ன செய்ய முடியும்? அடுத்த தேர்தல் சீக்கிரம் வருமா? எந்தெந்தக் கட்சி எவ்வளவு ரூபாய் தருவார்கள்?’ என்ற மயக்கத்தில்தான் உள்ளனர். இதுதான் இன்றைய பரிதாப நிலைக்கு அடிப்படைக் காரணம். அதிகாரத்தில் இருப்பவர்களைக் கேள்வி கேட்கிற நிலைக்கு மக்கள் வராமல், மாற்றம் சாத்தியமில்லை.

- அ.பட்டவராயன், திருச்செந்தூர்.

இதைப் பரிசீலிக்கலாமே?

அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்புகளைப் பெருக்கிட ஆசிரியர்கள் எடுக்கும் முயற்சிகளை முன்னிறுத்தி

‘தி இந்து’வில் தொடர்ந்து செய்திகள் வெளியிடுவது வரவேற்கத்தக்கது. இவை தனிப்பட்ட ஆசிரியர்களின் செயல்பாடுகளே. பத்மஸ்ரீ விருதுபெற்ற நெ.து.சுந்தரவடிவேலு, பொதுக்கல்வி இயக்குநராக இருந்தபோது மாவட்டம், தாலுக்காதோறும் பள்ளிச் சீர்திருத்த மாநாடுகளை நடத்தி, அனைத்துப் பள்ளிகளின் தேவைகளை நிறைவுசெய்ய முற்பட்டது நினைவு கூரத்தக்கது. அவை கல்வித் துறையின் சார்பில் நடத்தப் பெற்றவை. குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், பிரதமர் நேரு உள்ளிட்ட பெருந்தலைவர்கள் பார்வையிட்டுப் பாராட்டினர். பள்ளிகள் மக்கள் பள்ளிகளாக விளங்கிட அம்மாநாடுகள் பெரிதும் உதவின. அரசு இப்போதும் அம்முறையைப் பரிசீலிக்கலாமே?

- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.

நடப்பவையாவது நல்லதாகட்டும்!

அறிஞர் அண்ணாவின் சிந்தனைகள் அனைத்தும் இன்றைய திராவிடக் கட்சிகளுக்குத் தேவைப்படுகிறது என்றால் மிகையல்ல. ‘பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு, கொள்கை தான் இடுப்பு வேட்டி’ என்ற அண்ணாவின் சொற்களுக்கு மீண்டும் மதிப்பளிக்க வேண்டிய இடத்தில் அதிமுக இருக் கிறது. திராவிட இயக்கங்களை வீழ்த்த எதிரிகள் வியூகம் வகுத்து, வேகமாகச் செயல்படுவது வெளிப்படையாகவே தெரிகிறது. அதோடு, தமிழக மக்களுக்கும் திராவிட இயக்கங்கள் மீது ஒருவிதச் சலிப்பு ஏற்பட்டுவிட்டது போன்ற பரப்புரையையும் பலர் செய்துவருகிறார்கள். இந்த யதார்த்த நிலையைத் திராவிடக் கட்சிகளின் தலைவர்கள் உணராமல் சென்றுகொண்டிருப்பது வேதனையளிக்கிறது. திராவிட இயக்கங்கள் செயலாற்றிடவேண்டிய தருணம் இது.

- அ.அப்பர்சுந்தரம், மயிலாடுதுறை.

தொடக்கக் கல்விக்கும் வேட்டு

8-ம் வகுப்பு வரையில் கட்டாயத் தேர்ச்சி முறையை ரத்துசெய்யும் மத்திய அரசின் முடிவு தொடர்பாக வெளிவந்த, ‘பள்ளிப் படிப்பைப் பாதியில் கைவிட வைப்பதா நோக்கம்?’ என்ற மைதிலி சுந்தரின் தமிழாக்கக் கட்டுரை (ஆக.17) தக்க சமயத்தில் எழுதப்பட்டுள்ளது. இது பெண் குழந்தைகள் குறிப்பாக ஏழை, கிராமப்புறக் குழந்தைகளின் பள்ளிப் படிப்பைக் கடுமையாகப் பாதிக்கும். தேர்ச்சி பெறவில்லை என்றால், அந்தக் குழந்தை தன் குடும்பப் பொருளாதார நிலையால் வேலைக்குத் தள்ளப்படும். படிக்கும் குழந்தைகளுக்கு அடிப்படை வசதியான, சுகாதாரமான தண்ணீர், கழிவறை அமைத்துத் தந்து அவர்களை ஊக்கப்படுத்தாமல், தரமான கல்வி என்ற பெயரில் குழந்தைகளின் கல்வியைப் பறிப்பது தவறு. கிராமப்புற, பெண் குழந்தைகளின் நலன் கருதி மத்திய அரசின் இந்தத் திருத்தத்தை மாநில அரசுகள் முழுமையாக எதிர்க்க வேண்டும்.

- ராஜ இந்திரன், காரைக்கால்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x