Last Updated : 05 Jul, 2017 02:22 PM

 

Published : 05 Jul 2017 02:22 PM
Last Updated : 05 Jul 2017 02:22 PM

ஆரியர் - திராவிடர்: ஒரு விவாதம் - புரட்டுகளும் உண்மையும்!

வெண்கல யுகத்தில் இந்தோ - ஐரோப்பிய மொழி பேசுவோர் இந்தியாவுக்குள் புலம்பெயர்ந்து வரவில்லை என்று வாதிடுபவர்கள் பேராசிரியர் அண்டர்ஹில்லின் பழைய கருத்தாக்கத்தை மட்டும் ஆதாரமாகக் கொள்ளவில்லை. ஹார்வர்டு மருத்துவப் பள்ளியின் மரபணுத் துறைப் பேராசிரியர் டேவிட் ரெய்க்கின் பழைய கட்டுரைகளையும், அதாவது அவர் மிகுந்த எச்சரிக்கையுடன் எழுதிய அந்தக் கட்டுரைகளையும் ஆதாரமாகச் சுட்டிக்காட்டுகிறார்கள். 2009-ல் ரெய்க்கின் தலைமையிலான ஒரு குழு எழுதி ‘நேச்சர்’ இதழில் ‘இந்திய மக்கள்தொகை வரலாற்றின் மறு கட்டுமானம்’ என்ற தலைப்பில் வெளிவந்த ஆய்வுக் கட்டுரையே இதற்கு மிகச் சிறந்த உதாரணம்.

இந்திய மக்கள்தொகையின் மரபணுக் கட்டுமானத்தை ஆய்வுசெய்த இந்தக் கட்டுரை, வட இந்திய மூதாதையர், தென்னிந்திய மூதாதையர் என்கிற கருத்தாக்கங்களைப் பயன்படுத்திக்கொண்டது. வட இந்திய மூதாதையர் மரபணுரீதியாக மத்தியக் கிழக்கு ஆசிய, மத்திய ஆசிய, ஐரோப்பியர்களுக்கு நெருக்கமானவர்கள் என்றும், தென்னிந்திய மூதாதையர் பிரத்யேகமாக இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அது கூறியது.

தற்போது இந்தியாவில் இருக்கும் மக்கள் குழுவினர் பலரும் ஏறக்குறைய இந்த இரண்டு வகை மூதாதையர்களின் கலப்பானவர்கள் என்றும், தொன்றுதொட்டு உயர் சாதியைச் சேர்ந்த இந்தோ - ஐரோப்பிய மொழி பேசுபவர்களிடையே வட இந்திய மூதாதையர் பாரம்பரியம் அதிகமாக இருக்கிறது என்றும் நிறுவியது அக்கட்டுரை. ஆனால், இந்தோ - ஐரோப்பிய மொழிகள் பேசுவோர் இந்தியாவுக்கு வெளியிலிருந்து வந்தவர்கள் என்கிற கருத்தாக்கம் தவறு என்று அந்தக் கட்டுரை கூறவில்லை. உண்மையில், அதற்கு மாறாக, வட இந்திய மூதாதையர்களுக்கும், மத்திய ஆசிய மக்களுக்கும் இடையிலான மரபணுத் தொடர்புகளை அது சுட்டிக்காட்டியது.

ஆனால், இந்தக் கட்டுரையின் மையக் கோட்பாட்டைப் பகுத்தறிவுக்கு ஒவ்வாத வகையில் நீட்டி ஒரு வாதம் முன்வைக்கப்பட்டது. அதாவது, 4,000 - 3,500 ஆண்டுகளுக்கு முன் இந்தோ - ஐரோப்பிய மொழி பேசுவோர் இந்தியாவுக்குள் வருவதற்குப் பல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வட இந்திய, தென்னிந்திய மூதாதையர்கள் இங்கு வந்து குடியேறிவிட்டனர் என்கிறது இந்த வாதம்.

இத்தனைக்கும் அந்த ஆய்வுக் கட்டுரை மேற்கண்ட நிலைப்பாட்டுக்கு மாறாக பின்வரும் எச்சரிக்கையை வைத்திருந்தது: “மக்கள்தொகை தொடர்பான மரபணு ‘மாதிரிகள்’ எச்சரிக்கை உணர்வுடன் கையாளப்பட வேண்டும். வரலாற்றியல் கருதுகோள்களைச் சோதனை செய்வதற்கான ஒரு கட்டமைப்பை இந்த மாதிரிகள் வழங்கியபோதும், அவை அதீதமாக எளிமைப்படுத்தப்பட்டவையே. எடுத்துக்காட்டாக, மாதிரிகளில் காணப்படும் உண்மையான மூதாதையர் குழுக்கள் நாங்கள் அனுமானித்துக்கொண்டதுபோல் ஒரே தன்மை கொண்டவையாக இருந்திருக்க முடியாது.

அவை பல்வேறு காலகட்டங்களில் ஒன்றுக்கொன்று தொடர்புள்ள குழுக்களின் கலப்பால் உருவானவையாகக்கூட இருக்க முடியும்.” வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், வட இந்திய மூதாதையர் குழு என்பது பல முறை நிகழ்ந்த புலம்பெயர்தல்களினால், இந்தோ - ஐரோப்பிய மொழி பேசுபவர்களின் புலம்பெயர்தல் உட்பட, உருவாகியிருக்கலாம்.

ஊடகங்கள் என்ன செய்தன?

இந்த ஆய்வு முடிவுகள் ஊடகங்களில் எப்படி வெளிவந்தன என்று பாருங்கள். ‘ஆரிய - திராவிடப் பிரிவு ஒரு கட்டுக்கதை என்று ஆய்வு கூறுகிறது’ - இப்படிக் கதறியது, செப்டம்பர் 25, 2009 அன்று வெளிவந்த ஒரு செய்தித்தாளின் தலைப்பு. ஆய்வுக் கட்டுரையை எழுதியவர்களில் ஒருவரும் ஹைதராபாதிலுள்ள செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநருமான லால்ஜி சிங், “இந்த ஆய்வுக் கட்டுரை வரலாற்றையே மாற்றி எழுதிவிட்டது…

வடக்கு - தெற்குப் பிரிவு என்பது இல்லை” என்று கூறியதாகவும் அச்செய்தியில் மேற்கோள் காட்டப்பட்டது. மேலும், “65,000 ஆண்டுகளுக்கு முன், அந்தமான் தீவுகளிலும் அதே காலகட்டத்தில் பண்டைத் தென்னிந்தியாவிலும் ஆரம்பகால குடியேற்றம் நடந்தது. இதனால் இந்தப் பகுதிகளில் மக்கள்தொகை பெருகியது. பின்னொரு காலகட்டத்தில், அதாவது 40,000 ஆண்டுகளுக்கு முன், வட இந்திய மூதாதையர் குழு தோன்றிய பின் மக்கள்தொகை இன்னும் பெருகியது. ஆனால், ஒரு காலகட்டத்தில் வட இந்திய, தென்னிந்திய மூதாதையர்களின் கலப்பு ஏற்பட்டு, வேறொரு வகையான மக்கள் குழு உருவானது. அந்த மக்கள் குழுதான் இன்று இருக்கிறது.

இந்திய மக்கள் குழுக்களுக்குள் ஒரு மரபணுரீதியான உறவு இருக்கிறது” என்று அந்தச் செய்தி குறிப்பிட்டது. ஆனால், அந்தச் செய்தியில் குறிப்பிடப்படும் ஆய்வில் இப்படிப்பட்ட கூற்றுகள் எதுவுமே இல்லை. இன்னும் சொல்லப்போனால் 65,000 மற்றும் 40,000 என்றும் எண்ணிக்கைகள்கூட அந்த ஆய்வில் குறிப்பிடப்படவே இல்லை.

ஆய்வில் சொல்லப்பட்டதற்கும் அதைக் குறித்து ஊடகத்தில் வந்த செய்திக்கும் இடையே இருந்த தெளிவான வேறுபாட்டை யாரும் கவனிக்காமல் இல்லை. இதைப் பற்றி ‘டிஸ்கவர்’ என்கிற இதழில் ரசிப் கான் என்கிற மரபணு ஆராய்ச்சியாளர் பின்வருமாறு எழுதினார்: “செய்தித்தாளில் பிரசுரிக்கப்பட்ட மேற்கோள்களைப் பார்க்கும்போது, மற்ற ஆராய்ச்சியாளர்களின் கருத்துகள் (ரெய்க் தவிர) இதிலிருந்து முற்றிலும் மாறான முடிவுக்கு இட்டுச்செல்வதுபோல் தோன்றும். வட இந்திய மூதாதையர்கள் ஆதிகால இந்தோ - ஐரோப்பிய மொழி பேசுபவர்கள் என்பதற்குப் பதிலாக, அந்தக் கருத்தையே அவர்கள் மறுக் கிறார்கள்.”

அதை அப்படியே விட்டுவிடுவோம்.. ஏராளமான புதிய விவரங்கள் கிடைத்திருக்கும் இந்நிலையில், ரெய்க் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். கடந்த பிப்ரவரி மாதம் ‘எட்ஜ்’என்கிற இதழில் வெளிவந்திருக்கும் ஒரு நேர்காணலில், இந்தோ - ஐரோப்பிய மொழிகள் ஸ்டெப்பி புல்வெளிகளில் தோன்றி பிறகு ஐரோப்பாவுக்கும் தெற்கு ஆசியாவுக்கும் பரவின என்கிற கருத்தாக்கம் குறித்து ரெய்க் பின்வருமாறு கூறுகிறார்: “மரபணு ஆராய்ச்சி முடிவுகள் ஸ்டெப்பி புல்வெளி தொடர்பான இந்தக் கருத்தாக்கத்துக்கு ஆதரவாக அமைந்துள்ளன.

ஏனெனில், ஆதிகால வடக்கு யுரேஷிய மூதாதையர் ஐரோப்பாவுக்கு வந்ததற்கான வலுவான தடங்களைக் கடந்த ஆண்டு கண்ட நமக்கு, அவர்கள் எந்த காலகட்டத்தில் ஐரோப்பாவுக்கு வந்தனர் என்று இப்போது தெரியவந்துள்ளது. அந்த மூதாதையர் 4,500 ஆண்டுகளுக்கு முன் கிழக்கில் இருக்கும் ஸ்டெப்பியிலிருந்து வந்தனர்.” மேலும், “இந்தியாவில் 2,000 மற்றும் 4,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மக்கள் குழுக்களின் மிகத் தீவிரமான கலப்பு ஏற்பட்டது. மிகப் புராதனமானதும், உலகத்திலேயே மிகவும் பழமையான இலக்கியங்களில் ஒன்றானதும், கலப்புச் சமுதாயத்தை விவரிப்பதுமான ரிக் வேதம் இயற்றப்பட்ட காலகட்டத்தோடு இயைந்துசெல்கிறது இந்தக் காலம்.

”ரெய்க்கின் பார்வையில், இந்தோ - ஐரோப்பிய மொழி பேசும் மக்கள் ஐரோப்பாவுக்கும் தெற்கு ஆசியாவுக்கும் பரவிச் சென்று, மிகப் பெரும் மக்கள்தொகை மாற்றங்களை ஏற்படுத்திய காலகட்டம் இது என்பதே இந்தக் கருத்தின் சாரம்.

தமிழில்: ஆர்.விஜயசங்கர், ஆசிரியர்,
ஃபிரண்ட்லைன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x