Last Updated : 12 Jul, 2017 10:09 AM

 

Published : 12 Jul 2017 10:09 AM
Last Updated : 12 Jul 2017 10:09 AM

ஆசிய முகட்டில் அதிகாரப் போட்டி

இந்திய – சீன உச்சி மாநாடு நடைபெறும்போது, ‘எல்லையில் பூசல், பதற்றம்’ என்ற செய்திகளுக்கு இனிமேல் நம்மைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். ஜெர்மனியில் நடந்த ‘ஜி-20’ மாநாட்டில் பிரதமர் மோடி புன்சிரிப்புடன் இருக்க, உற்சாகக் குறைவுடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் அவரை எதிர்கொள்வதைப் பார்க்க முடிந்தது. இந்தியா, சீனா, பூட்டான் நாட்டு எல்லைகள் சந்திக்கும் சும்பி பள்ளத்தாக்கின் தெற்கு முனையில் உள்ள டோகா லா என்ற இடத்தில் சீனா அத்துமீறுவதாக இந்தியா ஆட்சேபிக்க, தங்களுடைய பகுதியில் சாலை அமைப்பதற்கு இந்தியா இடையூறு செய்வதாக சீனா பதிலுக்குக் குற்றம்சாட்டியது. சமீபத்திய ஆண்டுகளில் இரு நாடுகளுக்கு இடையில் அதிகம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய எல்லை மோதல் இதுதான். 1986-87-ல் சும்டொராங் சு நெருக்கடி இதைவிடப் பெரியது; தவ்லத் பெக் ஓல்டி என்ற இடத்தில் 2013-ல் நடந்த மோதல் காலத்தால் இப்போதையதைவிட நீண்டது. முக்கியத்துவமும் மும்மடங்கு பெரியது.

உணர்த்துவது என்ன?

முதலாவது, சும்பி பள்ளத்தாக்கு தன்னிகரற்றது. சிலிகுரிக்குச் செல்ல உதவும் மிகக் குறுகிய நிலப்பகுதி; இரு புறங்களிலும் சீனப் படைகளால் நெருக்கப்படக் கூடியது. இரண்டாவது, பூட்டானின் நலன் - உரிமைகளைக் காக்க இந்தியா தலையிட நேர்ந்திருக்கிறது. இந்திய – பசிபிக் பிராந்தியத்தில் நேபாளம், வங்க தேசம், மியான்மர், இலங்கை, மாலத்தீவுகள் போல பூட்டானிலும் தனது செல்வாக்கைப் பரப்ப சீனா முயல்கிறது. இதனால்தான் இந்தியாவும் சீனாவும் மோதல் போக்கை அனுசரிக்கின்றன. மூன்றாவது, இந்தியா – சீனா இடையே நெருக்கம் குறைந்து, அவநம்பிக்கைப்படும் வகையில் சீனா நடந்துவரும் வேளையில் இந்த மோதல் பூட்டான் எல்லையில் நடந்துகொண் டிருக்கிறது.

டோகா லா பகுதியில் சீனா சாலை அமைப்பதைத் தடுப்பதற்கு ராணுவ ரீதியாக இந்தியாவுக்குக் காரணங்கள் இருக்கின்றன. பூட்டான் உரிமை கோரும் எல்லைக் கோட்டுக்குக் கீழே, சீனா தன்னுடைய பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது. தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தை மேலும் 5 கிலோ மீட்டருக்குத் தெற்கில், மலை முகடுகளை இணைக்கும் கோட்டை நோக்கி நகர்த்தப் பார்க்கிறது. இது பல விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

2013-ல் டெப்சாங் என்ற இடத்தில் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையில் உரசல் ஏற்பட்டது. முதலில் கர்ஜித்தாலும் பிறகு அடங்கியது சீனா. அதற்கு முக்கிய காரணம் இந்திய ராணுவத்தின் மலைப்படைப் பிரிவுகள் வலுவாகிவிட்டதுதான் என்று முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் 2016-ல் வெளியிட்ட ‘சாய்சஸ்’ என்ற தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்திய ராணுவத்துக்குள்ள இன்னொரு சாதகம் பூட்டானுடன் நமக்குள்ள உறவு. கிழக்கிலிருந்து பெருமளவு படைகளை நம்மால் கொண்டுவர முடியும். இந்தியாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் சீனா தனது செல்வாக்கை விரிவுபடுத்திக்கொள்வதற்காக இடைவிடாமல் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. முதலீடு, வர்த்தக உறவு, ஆயுத விற்பனை ஆகியவற்றை இதற்குப் பயன்படுத்திக்கொள்கிறது. பூட்டானுக்கும் சீனாவுக்கும் இடையிலான நிலப் பிரச்சினையில் இந்தியா வலிந்து தன்னை ஈடுபடுத்திக்கொள்ளக் காரணம், சும்பி பள்ளத்தாக்கைக் காப்பது அதனுடைய பாதுகாப்புக்கு அவசியமானது, பூட்டானுக்கு ராணுவரீதியிலான பாதுகாப்பை அளிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதால்தான்.

இந்திய-பூட்டான் நட்புறவு ஒப்பந்தம் 2007-ல் திருத்தப்பட்டது. அதில் திம்புவுக்கு மேலும் செயல்பாட்டுச் சுதந்திரம் அளிக்கப்பட்டது. தேசிய நலன்கள் விஷயத்தில் இரு நாடுகளும் கூட்டாகச் செயல்படுவது என்று அப்போது உறுதி ஏற்கப்பட்டது. பூட்டான் நமக்கு முக்கியத்துவம் வாய்ந்த நட்பு நாடுதான். அதற்காக சீனாவின் எதிர்ப்பை மீறி, சர்வதேச எல்லைப் பகுதியில் இந்தியா காலடி எடுத்து வைத்திருப்பதற்குக் காரணமே தன்னம்பிக்கை அதிகரித்திருப்பதுதான். இதையொட்டியே சீனாவின் ‘குளோபல் டைம்ஸ்’ நாளிதழ் இந்தியாவுக்கு எதிராக அனல் கக்கும் தலையங்கங்களையும் கட்டுரைகளையும் கருத்துகளையும் பிரசுரித்துவருகிறது.

எனினும் இது பெரிய சண்டையாக உருவெடுப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. கடந்த 30 ஆண்டுகளில் 1988, 1993, 1996, 2003, 2013 ஆகிய ஆண்டுகளில் செய்துகொள்ளப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்கள் எல்லை பற்றிய பிரச்சினைகள் பேச்சுவார்த்தை மூலமே தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகின்றன. ஆனால், இரு தரப்பிலும் தங்களுடைய அணுகுமுறைகளைக் கடுமையாக்கிக்கொண்டே வருகின்றனர். தலாய் லாமா கடந்த ஏப்ரலில் தவாங் நகருக்கு வந்தது, ஒரே பாதை – ஒரே பிரதேசம் என்ற சீனாவின் புதிய பட்டுப்பாதைத் திட்டத்தில் சேர இந்தியா ஒரேயடியாக மறுத்தது ஆகியவை சீனாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. அத்துடன் தென்சீனக் கடல்பரப்பு தன்னுடையது என்று சீனா கூறுவதை இந்தியா அங்கீகரிக்க மறுக்கிறது. இந்தியாவின் எண்ணெய் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை வியத்நாம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கடந்த வாரம் ஒப்பந்தம் செய்துகொண்டது. இவையெல்லாம் சீனாவுக்குப் பிடிக்கவில்லை.

இந்தியாவுக்கும் இதே போல சீனாவின் பல நடவடிக்கைகள் பிடிக்கவில்லை. அணுஆயுத இடுபொருள் விநியோகம் செய்வோர் குழுவில் இந்தியாவைச் சேர்க்கக் கூடாது என்று தடுப்பது, மசூத் அசாரை பயங்கரவாதியாகக் கருத வேண்டியதில்லை என்பது, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி வழியாக சீனப் பாதையை அமைத்து இந்தியாவின் இறையாண்மையைக் கேலிக்குள்ளாக்குவது அவற்றில் சில. இப்படி இரு நாடுகளின் முரண்பட்ட போக்கால் ஆசியப் பகுதியின் அமைதி, பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் நிலவுகிறது.

உறவில் மாற்றம்

இந்திய – சீன உறவு நிலை மாறிக்கொண்டே இருக்கிறது என்று ஜூலை 3-ல் எழுதினார் வெளியுறவுத் துறை முன்னாள் செயலர் சியாம் சரண். இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள ராணுவ பல வித்தியாசத்தைப் புரிந்துகொண்டு இந்தியாதான் அடங்கி நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது சீனா. இந்தியா இதை எப்போதுமே ஏற்றது இல்லை. எதிர்காலத்தில் மேலும் துணிவோடு இந்தியா செயல்படும். கடந்த மாதம் அமெரிக்காவுடன் சேர்ந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் சீனாவின் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும் தன்னுடைய நிலையைத் தெளிவுபடுத்தியது இந்தியா. வங்காள விரிகுடாக் கடலில் மலபார் போர் ஒத்திகையில் அமெரிக்கா, ஜப்பானுடன் சேர்ந்து இந்தியக் கடற்படை ஈடுபட்டுள்ளது. அத்துடன் இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில் சீனா எத்தகைய முதலீட்டை செய்துவருகிறது, அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன, அவை எந்த விதத்தில் இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்திய அரசு உயர்நிலையில் இந்த வாரம் ஆய்வு செய்தது. ஆகவே, பூட்டானையொட்டிய பகுதியில் இருக்கும் ‘17 கார்ப்ஸ்’ என்ற இந்திய படைப்பிரிவுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டைத் தாராளப்படுத்தி வலுப்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது.

- சஷாங்க் ஜோஷி, லண்டனில் உள்ள ராயல் யுனைட்டெட் சர்வீசஸ் நிறுவனத்தின் மூத்த

ஆராய்ச்சியாளர். சுருக்கமாகத் தமிழில்: சாரி,

©: ‘தி இந்து’ (ஆங்கிலம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x