Published : 02 Jun 2017 10:57 AM
Last Updated : 02 Jun 2017 10:57 AM

இப்படிக்கு இவர்கள்: விவசாயிகள் லாபமடைய...

பிரசாந்த் பெருமாள் எழுதிய ‘சுதந்திர வேளாண் சந்தை தேவை!’ மே 31 அன்று வெளியான கட்டுரையைப் படித்தேன். விவசாய விளைபொருட்களைச் சந்தைப்படுத்துதலில் உள்ள குறைகளைத் தெரியப்படுத்தி, வியாபாரிகளால்கூடக் கட்டுப்படுத்த முடியாத சந்தை ஒன்றுதான் ஓரளவுக்குத் தீர்வு என்றும் கூறியுள்ளார். விவசாய விளைபொருட்கள் எந்த அளவுக்கு உற்பத்திசெய்யப்படுகின்றன, அதில் எந்த அளவு உடனடியாக விற்பனைக்கு வரும், அது அப்போதைய தேவையை எந்த அளவுக்குப் பூர்த்திசெய்யும், உபரி உற்பத்தி என்றால் எப்படிச் சேமிப்பது என்பது அந்த விவசாய விளைபொருள் உற்பத்தி முடிந்து சந்தைக்கு வரும்போது மட்டுமே அறிந்துகொள்ள முடிகிறது.

அதாவது, என்ன பொருள், எவ்வளவு உற்பத்தி என்பவற்றை முன்கூட்டியே அறிய முடிவதில்லை. இது பெரும்பாலும் உபரி உற்பத்தியில் முடிந்து, விலை வீழ்ச்சி ஏற்பட்டாலும், தொடர்ந்து இம்முறையே கையாளப்படுகிறது. நாட்டில் உள்ள விவசாய நிலங்களை வரைமுறைப்படுத்தி, ஒவ்வொரு விளைபொருளின் தேவை என்ன என்பதைக் கணக்கிட்டு, அந்த விளைபொருள் எந்த மாநிலத்தில், எந்த மாவட்டத்தில், எந்தக் கால நிலைகளில், மண் மற்றும் நீர் வளம் ஆகியவற்றை மனதில்கொண்டு, தேவையான அளவுக்குப் பயிர்செய்து, உபரி உற்பத்தியைத் தவிர்த்து முறைப்படுத்தினால் மட்டுமே விவசாயிகளால் லாபம் அடைய முடியும்.

அதேபோல், தேவை மற்றும் உற்பத்தியின் அளவு முன்னமே அறியும்பட்சத்தில், உற்பத்தியாளர்களுக்கு விலை வீழ்ச்சியும் ஏற்படாது. எனவே, தற்போதைய மத்திய - மாநில அரசுகளின் கீழ் இயங்கும் பல்வேறு விவசாயத் துறைகளை முற்றிலும் கணினி மயமாக்கி ஒன்றிணைத்து, விவசாய உற்பத்தியை மேற்கூறிய முறையில் முறைப்படுத்தினால் மட்டுமே முடியும்.

-பெ.பூபதி, முதுநிலை விவசாயப் பட்டதாரி, ஆலூத்துப்பாளையம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x