Published : 08 Apr 2017 08:50 AM
Last Updated : 08 Apr 2017 08:50 AM

கோடையை வாசிப்போம்!

பெரும்பாலான பள்ளிகளுக்குக் கல்வியாண்டு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டிருக்கிறது. வரும் நாட்களில் மற்ற பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படும். கோடை விடுமுறை ஒரு மாதத்துக்கும் மேல் விடப்பட்டாலும் அதை முறையாக அனுபவிக்க முடியாமல் தவிக்கும் சிறுவர்களே அதிகம். வெயிலின் உக்கிரம் காரணமாக வெளியில் சென்று விளையாட முடியாமல் பல சிறுவர்கள் வீட்டுக்குள் தொலைக்காட்சிகளிலும் கைபேசிகளிலும் முடங்கிப்போகின்றனர். இந்த நிலையில் கோடையை மகிழ்ச்சியுடன் சிறுவர்கள் கழிப்பதற்கு வாசிப்பையும் ஒரு பொழுதுபோக்காகப் பெற்றோர்கள் முன்னெடுக்கலாம்.

ஏற்கெனவே, பள்ளிகளில் படித்துக் களைத்து விடுமுறையை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த சிறுவர்களிடம் வாசிப் பைக் கொண்டுபோனால் அவர்கள் சற்று மிரண்டுதான் போவார் கள். ஆனால், வாசிப்பைப் பொழுதுபோக்காக மாற்றினால் அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுவதுடன் அவர்களின் கற்பனைத் திறனும் இதனால் விரிவடையும். இதற்கு பெற்றோர்களின் முழுப் பங்களிப்பும் தேவை. எளிமையான சிறுவர் படக் கதை களைத் தங்கள் குழந்தைகளுக்குக் கொடுத்துப் படிக்கச் சொல்லி அவர்களின் பங்களிப்போடு அவற்றைச் சிறு சிறு நாடகங்கள் போல் வீட்டில் நடித்துக் காட்டலாம். அல்லது படித்த கதையை வேறு மாதிரி அவர்களை மாற்றிச் சொல்ல சொல்லலாம். அவர்களையே படங்கள் வரையச் சொல்லி அந்தப் படங்களுக்குப் பெற்றோர்கள் கதைகளை உருவாக்கலாம்.

அதேபோல், உலகப் புகழ்பெற்ற இலக்கியங்களைச் சிறுவர்களுக்கு ஏற்றாற்போல் அவர்கள் மொழியில் எளிமை யாகச் சொல்லலாம். காப்ரியேல் கார்ஸியா மார்க்கேஸின் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலைக்கூட பஞ்சதந்திரக் கதைகளின் வடிவில் மாற்றி எளிமையாகக் கதை சொல்லலாம். ‘நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு ஊர் இருந்துச்சாம். வெளி யுலகத்துக்கும் அந்த ஊருக்கும் தொடர்பே இல்லாம இருந்துச்சாம். அந்த ஊர் வழியா ஒரு நாள் ஒரு நாடோடிக் கிழவர் காந்தத்தைத் தரையில் இழுத்துக்கொண்டே போனாராம். மண்ணிலே இருந்து இரும்புத் துகள்கள், காணாமல் போன சாவி இப்படி எல்லாம் அந்த காந்தத்துலே போய் ஒட்டிக்கிச்சாம். காந்தத்தையே பார்த்திருக்காத அந்த ஊர் மக்கள் இதையெல்லாம் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனாங் களாம்’ என்று ஆரம்பித்துக் கதையைச் சொல்லி அவர்களை அசத்தலாம்.

இப்படிக் குழந்தைகளுக்குக் கதை சொல்வதும் அவர்களின் வாசிப்பில் வழிகாட்டியாக இருப்பதும் குழந்தைகளின் கற்பனைத் திறனை மட்டுமல்லாமல் பெற்றோர்களின் கற்பனைத் திறனையும் அதிகப்படுத்தும். கூடவே, மாலைப் பொழுதுகளில் குழந்தைகளை அருகில் உள்ள நூலகங்களுக்கு அழைத்துச் சென்று அந்தச் சூழலுக்கு அவர்களைப் பழக்கப்படுத்தலாம்.

கோடையில் விளையாட்டையும் வாசிப்பையும் கலந்து இப்படி ஊட்டும்போது, பாடப் புத்தகங்களையும் தாண்டி குழந்தை களுக்குப் பரந்ததொரு உலகம் விரியும். அது அவர்களுக்குத் திறனையும் மகிழ்ச்சியையும் ஒருங்கே ஊட்டும். கோடையை வாசிப்புக் கோடையாக மாற்றிக்கொள்வோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x