Last Updated : 19 Jan, 2017 09:27 AM

 

Published : 19 Jan 2017 09:27 AM
Last Updated : 19 Jan 2017 09:27 AM

இந்தியாவின் இதய நல்வாழ்வுக்கு உள்நாட்டு ஸ்டென்ட்கள் தேவை

தொற்றா நோய்களில் முதலிடத்தில் இருக்கிறது இதய நோய்

சில தினங்களுக்கு முன் நண்பர் செல்பேசியில் அழைத்தார். அவரது அப்பாவை ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை நடந்திருக்கிறது. “அப்பாவுக்கு இரண்டு இடங்களில் அடைப்பு இருந்திருக்கிறது. ஸ்டென்ட் வைக்கிறார்கள்” என்றார். மேலதிக விவரங்கள் கேட்டபோது, அவரால் சொல்ல இயலவில்லை. “என்ன மாதிரியான ஸ்டென்ட்கள் பொருத்தலாம் என்று அறுவைச் சிகிச்சை நடக்கும் நேரத்துக்குக் கொஞ்சம் முன்னதாகத்தான் கேட்டார்கள். எனக்கு ஒன்றும் தெரியவில்லை” என்றார். என் நண்பர் விவரம் தெரிந்த மனிதர்தான். ஆனால், திடீரென்று “உலோகமா, உலோகம் இல்லாததா என்ன மாதிரியான ஸ்டென்ட் வேண்டும்?” என்று கேட்டால் மருத்துவம் தெரியாத ஒரு மனிதரால் என்ன சொல்ல முடியும்?

இதய மருத்துவரும் நோயாளியும் சிகிச்சைக்கு முன்னதாகக் கலந்தாலோசிக்க வேண்டும் என்பது தற்போது கட்டாயமில்லை. சில மருத்துவர்கள் நோயாளிகளோடும் அவர்களின் குடும்பத்தாருடன் விவாதிக்கவே செய்கின்றனர் என்றாலும்கூடப் பெருமளவிலான முடிவுகள் மருத்துவமனைகளின் விருப்பப்படியே தீர்மானிக்கப்படுகின்றன. இதேபோல, இன்னொரு நண்பர் - அவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி - “விலை அதிகமான ஸ்டென்ட்டை எனக்குப் பொருத்திவிட்டார்கள்” என்று சொன்னது நினைவில் இருக்கிறது. கடைசி நிமிடத்தில் “இதுதான் நல்லது. கையெழுத்துப் போடுங்கள்” என்று டாக்டர் சொன்னதாக அவர் தெரிவிக்கிறார்.

நல்வாழ்வு அறியாமை

இந்தியர்களுக்கு மருத்துவ அறிவு குறைவு என்று சொல்லப்படுவது உண்டு. அது முழுமையான உண்மை அல்ல. பல விஷயங்கள் மறைக்கப்படுவதும், அவர்கள் முடிவெடுக்காவிடாமல் தடுக்கப்படுவதுமே மூலப் பிரச்சினை. ஸ்டென்ட்களை எடுத்துக் கொள்வோம். அவை மாரடைப்பு நம்மைக் கொல்லாமல் காக்கின்றன.

இந்த வருடம் ஜூலை மாதத்தில் வந்த செய்திகளைச் சிலர் படித்திருக்கலாம். உலோக ஸ்டென்ட்கள், உடம்பிலேயே கரைந்து போகக்கூடிய ஸ்டென்ட்கள் ஆகிய இரண்டு வகைகளையும் மத்திய அரசு அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் வைத்துள்ளது. அவை அரசின் விலைக் கட்டுப்பாட்டுக்கு உரியவை.

தேவையானவர்களுக்கு விலை குறைந்த விலையில் கிடைக்க வேண்டும். தேவையான அளவு கிடைக்க வேண்டும். ஆனால், இது எத்தனை பேருக்குத் தெரியும்? எத்தனை பேர் இதனால் பயனடைவார்கள்? சுமார் 70% மக்கள் தொலைதூரக் கிராமங்களில் வாழும் இந்நாட்டில் போதுமான மருத்துவத் தேவைகள், மருத்துவர்கள், உயிர்காக்கும் சிகிச்சைகள் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. போதுமான பொதுச் சுகாதாரக் கட்டமைப்புகள் இல்லை. அதனால்தான் பெரும்பான்மையான மக்கள் தனியார் மருத்துவமனைகளை நோக்கி ஓடுகிறார்கள். அங்கே அவர்களது சக்திக்கு மீறிய செலவுக்கு மருத்துவர்கள் தள்ளுகிறார்கள். சக்தியை மீறிச் செலவழிப்பதற்கும் வறுமைக்கும் தொடர்பு இருக்கிறது என்கிறது 2015-க்கான தேசிய சுகாதாரக் கொள்கைக்கான வரைவு. சக்தியை மீறிச் செலவழிப்பதால் கடுமையான வறுமைக்குள் 5.5 கோடி இந்தியர்கள் 2011-12 காலகட்டத்தில் சிக்கிக்கொண்டார்கள் என்கிறது அது. மருத்துவத்துக்காக மக்கள் சொந்தப் பணத்திலிருந்து செய்கிற செலவு 60 % அளவுக்கு அதிகமாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

மருந்துகள், மருத்துவக் கருவிகள்போல ஸ்டென்ட்கள் கடைகளில் மக்களுக்கு நேரடியாகக் கிடைக்காது. ஒரு மருத்துவமனையில் ஒரு நோயாளி செலுத்துகிற கட்டணத்தில் அவருக்குப் பொருத்தப்படுகிற ஸ்டென்ட்டின் விலை ஒரு சிறுபகுதிதான். வேறுபட்ட விலைகளில் உள்ள ஸ்டென்ட்களைப் பொறுத்து ஒரு நிலையான கட்டணத்தை நிர்ணயித்துக்கொள்ளுமாறு அரசாங்க மருத்துவமனைகள் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளன. ஆனால், அரசின் விலைக்குறைப்பு நோயாளிகளுக்குப் பயன்தரும் வகையில் தனியார் மருத்துவமனைகளுக்கு விதிகள் எதுவும் இல்லை.

உண்மையில், ஸ்டென்ட்களின் விலை குறைந்து வருகிறது. ஆனாலும், ஆஞ்சியோ பிளாஸ்ட்டி சிகிச்சைக்கான கட்டணம் தொடர்ந்து அதிகரிக்கிறது. சிகிச்சையின் சிக்கலான தன்மை, என்ன வகையான ஸ்டென்ட் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்துக் கட்டணம் சராசரியாக ரூ. 2 லட்சம் முதல் ரூ. 2.5 லட்சம் வரை ஆகிறது.

உலகின் பல பகுதிகளில் தயாரான பலவகை யான ஸ்டென்ட்கள் இந்தியாவில் கிடைக்கின்றன. இவற்றின் விலை ரூ.10,000 முதல் ரூ. 1,80,000 வரை. நம் மருத்துவர்கள் பொதுவாக வெளிநாட்டு ஸ்டென்ட்களையே பயன்படுத்துகிறார்கள். நம் நாட்டிலேயே தயாரான ஸ்டென்ட்களும் கிடைக்கவே செய்கின்றன. அவை போதுமான அளவு பரிசோதிக்கப்படவில்லை என்கிறார்கள் மருத்துவர்கள். இந்தக் கருவிகள் மீதான விலைக் குறைப்பு பற்றி தேவையில்லாத கருத்துகள் உள்ளன. ஆஞ்சியோபிளாஸ்டி பண்ண முடியாத நிலையில் 98% பேர் இருக்கிற ஒரு நாட்டில் இத்தகைய கருத்துகள் பொருத்தமற்றவை.

இதய நோய்களால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிவரும் நாடு இது. மேற்கத்திய நாடுகளில் வயதானவர்களுக்குத்தான் அதிகமாக இதய நோய் வருகிறது. ஆனால், இந்தியாவில் இளைஞர்களிடமும் நடுத்தர வயதினரிடமும் பாதிப்பு அதிகரித்துவருகிறது. 25 முதல் 69 வரையிலான வயதில் இறந்துபோனவர்களில் இதய நோய்களால் பாதிக்கப்பட்டு இறப்பவர் களின் எண்ணிக்கை சுமார் 25% என்கிறது இந்திய மருத்துவ ஆணையம் நடத்திய ஆய்வு. கடந்த ஐந்தாண்டுகளில் ஸ்டென்ட் பொருந்துகிற சிகிச்சைகள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு மட்டும் தோராயமாக 5 லட்சம் ஸ்டென்ட்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனாலும் இது தேவைப்படுகிற ஸ்டென்ட்களின் அளவில் வெறும் 2% மட்டுமே. தொற்றாநோய்களில் முதலிடத்தில் இருக்கிறது இதய நோய். ஸ்டென்ட்களின் தேவைக்கும் அவை கிடைக்கிற அளவுக்குமான பெரிய இடைவெளியைக் குறைப்பது இந்தியர்களின் ஆயுளோடு தொடர்புடைய முக்கியமான ஒன்று.

பொதுச் சுகாதாரத்துக்கான கட்டமைப்புகளை உருவாக்குதல், திறமையான மருத்துவர்களை உருவாக்குதல் ஆகியவை மட்டும் அல்ல; மருந்துகள், மருத்துவச் சாதனங்கள் நியாயமான விலையில் மக்களுக்குக் கிடைப்பதையும் சேர்த்தே பொதுச் சுகாதாரப் பணிகளை மதிப்பிடுகிறோம்!

© ‘தி பிஸினஸ்லைன்’

தமிழில்: த.நீதிராஜன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x