Last Updated : 15 Jun, 2017 09:12 AM

 

Published : 15 Jun 2017 09:12 AM
Last Updated : 15 Jun 2017 09:12 AM

சின்னகுத்தூசி எனும் மாந்த நேயர்!

வயிற்று வலியால் அவதிப்பட்ட காலத்திலும்கூட அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், தன் அறைக்கு வரும், பல்வேறு பத்திரிக்கையாளர்களையும் புன்முறுவலோடு வரவேற்று, அவர்களின் அரசியல், கேள்வி சார்ந்த ஐயங்களுக்குப் பதிலளித்து அசத்துபவர். மாற்றுக் கருத்தினருக்கும், அவர்கள் மனம் கோணாமல் நயமாகப் பதிலளித்து விவாதிப்பவர்.

அக்ரஹாரத்தில் பிறந்து, திராவிட இயக்கத்தின் கொள்கைகளுக்காகத் தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட வாழ்க்கை சின்னகுத்தூசியினுடையது. சின்னகுத்தூசி என்றழைக்கப்படும் இரா. தியாகராசன் திருவாரூரில் இராமநாதன் - கமலா இணையருக்கு 15.6.1934-ல் ஒரே மகனாகப் பிறந்தவர். திருவாரூர் பகுதி திராவிட இயக்க முன்னோடிகளான சிங்கராயர், முத்துகிருட்டிணன், வி.எஸ்.பி. யாகூப், தண்டவாளம் ரங்கராசன் ஆகியோரின் தொடர்பினால், திராவிட இயக்கக் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டவர். அப்படியே பெரியார் பாதையில் சங்கமமானவர்.

திராவிட இயக்கத்தின் மூத்த எழுத்தாளரான குருசாமி - தன் எழுத்தாற்றலால், எடுத்துக்காட்டுகள் கூறி, வரலாற்று நிகழ்வுகளை அவ்வப்போதைய அரசியல் நிகழ்வுகளுடன் நினைவாற்றலுடன் ஒப்பிட்டு எதிரிகளைத் திக்குமுக்காடச் செய்வதில் வல்லவர். அவரின் எழுத்து, படிப்பவர் நெஞ்சில் குத்தூசி தைப்பதுபோல் பதிவதால் ‘குத்தூசி குருசாமி’ என்ற பெயர் பெற்றார். பின்னாளில் எழுத வந்த இரா. தியாகராசனும் அதையொற்றி, தன் நயமான எழுத்து பாணியால், எதிரிகளை லாவகமாகக் கையாண்டு பதிலடியைக் கொடுத்ததால் ‘சின்னகுத்தூசி’ என்றழைக்கப்பட்டார்.

பள்ளிப் படிப்பு முடித்ததும், பெரியாரின் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், சிறப்பு அனுமதி அடிப்படையில் சேர்ந்து, ஆசிரியர் பயிற்சி பெற்று, குன்றக்குடி அடிகளார் நிர்வாகத்தில் செயல்பட்ட குன்றக்குடி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி, அடிகளாரின் அன்பைப் பெற்றார். பல்வேறு நாளிதழ், வார இதழ், மாத இதழ்களில், ‘கொக்கிரகுளம் சுல்தான் முகமது’, ‘தெரிந்தார்கினியன்’, ‘ஆர்.ஓ. மஜாட்டோ’, ‘திட்டக்குடி அனீஃப்’, ‘காமராசர் நகர் ஜான் ஆசிர்வாதம்’ போன்ற புனைபெயர்களில் அரசியல் திறனாய்வுக் கட்டுரைகள், பகுத்தறிவு, பெண்கள் முன்னேற்றம் என்று பல துறைகளையும் தொட்டு கட்டுரைகள் எழுதினார் சின்னகுத்தூசி.

சிறிது காலம் திருவாரூரிலிருந்து வெளியாகிய ‘மாதவி’ என்ற வார இதழின் பொறுப்பாசிரியராக இருந்தார். பின்னர், பெரியார் -அண்ணாவின் பாதையிலிருந்து விலகி ஈ.வெ.கி.சம்பத் தமிழ்த் தேசியக் கட்சியைத் தொடங்கியபோது, அதன் அதிகாரபூர்வ வெளியீடான ‘தமிழ்ச்செய்தி’ வார இதழ் மற்றும் நாளிதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார் சின்னகுத்தூசி.

கால ஓட்டம் சம்பத்தை காங்கிரஸ் இயக்கத்தில் கொண்டு சேர்த்துவிட காமராஜரின் ‘நவசக்தி’யில் தலையங்க ஆசிரியராகப் பொறுப்பேற்றார் சின்னகுத்தூசி. இன்னும் ‘அலையோசை’, ‘எதிரொலி’ தொடங்கி கடைசிக் காலத்தில் ‘நக்கீரன்’ வரை பல பத்திரிகைகளைப் பட்டியலிட முடியும் சின்னகுத்தூசியின் எழுத்துகளைத் தாங்கி வந்தவை என்று. ஆனால், அவர் உயிரோடும் உணர்வோடும் இரண்டற கலந்தது ‘முரசொலி’ பத்திரிகையில் அவர் ஆற்றிய பணி. “நான் திமுக அனுதாபி; அந்த அடிப்படையில் சமூகநீதிக் கண்ணோட்டத்திலேயே என்னுடைய பணியும் எழுத்தும் இருக்கும்” என்ற நிலையில் இறுதி வரை உறுதியாக நின்றவர் அவர். கருணாநிதிக்கும் சின்னகுத்தூசிக்குமான உறவு இரு பத்திரிகையாளர்களுக்கு இடையிலான உறவு. இவரும் அவரிடம் அப்படியே நடந்துகொண்டார்; அவரும் இவரிடம் அப்படியே நடந்துகொண்டார். எவ்வளவோ பிணக்குகள் உண்டு இருவருக்கும் இடையிலும்; அதையெல்லாம் தாண்டிய ஆழமான நட்பும் நல்லுறவும் இருவரிடத்திலும் உண்டு.

அவர் தங்கியிருந்த திருவல்லிக்கேணி ‘வல்லப அக்ரஹாரம் மேன்சன்’ பல்வேறு பத்திரிக்கையாளர்கள், அரசியல் கட்சியினரின் சரணாலயமாக இருக்கும். புராணக் கதைகள் தொடங்கி, தமிழக, திராவிட இயக்க அரசியல், காங்கிரஸ், பொதுவுடைமைக் கட்சியின் தோற்றம், செயல்பாடுகள், இந்து மகாசபை, ஆர்எஸ்எஸ், பூமிதான இயக்கம், முஸ்லிம் லீக் இயக்கம் ஆகியவற்றின் வரலாறு, உலகளாவிய நடப்பு நிகழ்வுகள் என்று விரிந்து பேசக்கூடியவர் சின்னகுத்தூசி. அவரது அறைக்குச் சென்றால், பெரும்பாலான நேரங்களில் இளம் பத்திரிகையாளர்களுடன் அவர் உரையாடிக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.

சின்னகுத்தூசி திருமணம் செய்துகொள்ளவில்லை. எழுத்துப் பணி முழு நேரத்தையும் தின்னக்கூடியது என்று உணர்ந்திருந்தாலோ என்னவோ தனியாளாகவே வாழ்க்கையை அமைத்துக்கொண்டு தமிழ்ச் சமூகத்துக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டுவிட்டார். தான் ஏற்றுக்கொண்ட கொள்கை வேறு; தன் வாழ்க்கை வேறு என்று இரு வாழ்க்கை வாழாதவர். அக்ரஹாரத்தில் பிறந்தவர் என்றாலும், அவர் உபநயனம் செய்துகொள்ளவில்லை. முப்புரி நூலையும் அணியவில்லை. ‘வாழ்நாள் முழுவதும் நான் ஒரு முழு மாந்தனாகவே இருந்துவிட்டுப்போகிறேன்’ என்று சொல்லிவிட்டவர். பத்திரிக்கையாளர் ஞாநியுடன், காஞ்சி சங்கராச்சாரியாரை ஒருமுறை சந்தித்தார் சின்னகுத்தூசி. சங்கராச்சாரியார், சின்னகுத்தூசியின் எழுத்தாற்றல், நினைவுத்திறனைப் பாராட்டியதுடன் அவர் தனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பதிலுக்குத் தன்னுடன் கொண்டுசென்ற பெரியாரின் இடஒதுக்கீடு, பொதுவுடைமைக் கொள்கை தாங்கிய நூல்களை சங்கராச்சியாருக்கு அன்பளிப்பாகத் தந்து அறை திரும்பினார் சின்னகுத்தூசி.

22.05.2011-ல் சென்னை பில்ராத் மருத்துவமனையில் அவர் மறைந்தார். அவரது உடல் நக்கீரன் அலுவலகத்தில் வைக்கப்பட்டபோது, மு.கருணாநிதி நேரில் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியதுடன், ‘முரசொலி’யில் ஒரு இரங்கற்பாவையும் வடித்தார். சின்னகுத்தூசியின் இறுதி ஊர்வலத்தில் மூன்று கிலோ மீட்டருக்கு மேலாக நடந்தே சென்று பங்கேற்றார் திமுகவின் இன்றைய செயல் தலைவர் ஸ்டாலின். சின்னகுத்தூசியின் வாழ்வும் பணியும் யாருக்காக அமைந்தன என்பதைச் சொல்லாமல் சொல்வதுபோல, சின்னகுத்தூசி பயன்படுத்திய ஆயிரக்கணக்கான நூல்கள் சரிபாதி பிரிக்கப்பட்டு, அறிவாலயத்தின் நூலகத்துக்கும், பெரியார் திடல் நூலகத்துக்கும் ஆய்வு செய்யும் ஆர்வலர்களின் வசதிக்காக அளிக்கப்பட்டன!

-செ. அருள்செல்வன், தொடர்புக்கு: arulselvanchennai@gmail.com

ஜூன் 15, சின்னகுத்தூசியின் பிறந்த நாள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x