Last Updated : 07 Feb, 2017 10:57 AM

 

Published : 07 Feb 2017 10:57 AM
Last Updated : 07 Feb 2017 10:57 AM

அறிவோம் நம் மொழியை | இந்தப் ப்ரச்னயை எப்படித் தீர்ப்பது?

பிற மொழியிலிருந்து தமிழில் அப்படியே கையாளப்படும் சில சொற்களை எப்படிப் பயன்படுத்துவது என்பது சிக்கலானது. வடமொழியில் உள்ள 'ப்ரச்ன' என்னும் சொல்லும் ஆங்கிலத்தில் Inch என்னும் சொல்லும் உதாரணங்கள். இந்த இரு சொற்களையும் பலரும் பல விதமாக எழுதுவதைப் பார்த்திருப்போம். இதை எப்படித் தரப்படுத்துவது?

ஒரு மொழியிலுள்ள ஒலியை இன்னொரு மொழிக்கு அப்படியே எடுத்துச் செல்வது என்பது பல சமயங்களில் இயலாதது. Raman என எழுதினால், இந்தப் பெயரை முன்பின் அறியாத ஒருவர் அதை ரமான், ராமான், ராமன், ரமண் என்றெல்லாம் படிக்க வாய்ப்புள்ளது. Thanks என்பதில் உள்ள 'a' என்னும் எழுத்தின் ஒலி, தமிழ் முதலான பல மொழிகளுக்கு அன்னியமானது. அது 'அ'வும் அல்ல, 'ஏ'வும் அல்ல. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒலியைக் கொண்டது. தமிழில் அதை அப்படியே எழுத முடியாது. எனவே தேங்க்ஸ், தாங்க்ஸ் என இரண்டு விதமாகவும் எழுதிவருகிறோம்.

'ப்ரச்ன'க்கு வருவோம். பிரச்சினை, பிரச்னை, பிரசினை, பிரச்சனை எனப் பலவாறாக இது எழுதப்படுகிறது. க்ரியா அகராதி, 'பிரச்சினை' என்கிறது. தமிழில் மெய்யெழுத்தில் சொல் தொடங்காது என்பதால் 'பி' எனத் தொடங்குவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், நடுவில் 'சி' என்று ஏன் சேர்க்க வேண்டும் என க்ரியா பதிப்பகத்தின் உரிமையாளர் ராமகிருஷ்ணனிடம் ஒருமுறை கேட்டேன்.

முத்ரா, நித்ரா, பத்ரம், சித்ரம், பாத்ரம் ஆகிய சம்ஸ்கிருதச் சொற்களை முத்திரை, நித்திரை, பத்திரம், சித்திரம், பாத்திரம் என எழுதும் மரபு இங்குள்ளது. நிலைபெற்றுவிட்ட இந்த வழக்கை அடியொற்றி, பிரச்சினை என எழுதுகிறோம் என்றார் அவர்.

இலக்கணத்துக்கு இணையாக மரபுக்கும் முக்கியத்துவம் உள்ளது. பிற மொழிகளைத் தமிழில் எழுதுவதற்குத் தமிழில் நீண்ட மரபு உள்ளது. காவ்யம் என்பது தமிழின் இயல்பான ஒலிப் பண்புக்கு ஏற்பக் காவியம் ஆகிறது. ராம: என்பது ராமன், சீதா - சீதை, சாக்ஷி சாட்சி, கல்பனா கற்பனை எனப் பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இவற்றை முன்னுதாரணமாகக் கொண்டு யோசித்தால், மூல மொழியில் உள்ளதுபோலவே எழுதுகிறேன் என்று சொல்லி ப்ரகாசம், ப்ரசாதம் என்றெல்லாம் எழுதத் தோன்றாது. சூர்யன், வீர்யம், ரவீந்த்ரன், பாபம் என்னும் சொற்களை சூரியன், வீரியம், ரவீந்திரன், பாவம் என்று தமிழ் ஒலிப் பண்புக்கு ஏற்பத் தகவமைத்தே எழுதுகிறோம். ப்ருஹ்மம் என்பதை பாரதியார் பிரும்மம் என எழுதியிருக்கிறார். தர்ம புத்ர என்பதை ராஜாஜி தரும புத்திரன் என்றே எழுதுகிறார். மரபையும் பல மொழிகள் அறிந்த முன்னோடிகளையும் கவனித்தால், சிலர் தனிப் போக்கில் எழுத மாட்டார்கள்.

நமது மரபையும் அறிவியல்பூர்வமான அணுகுமுறையையும் பின்பற்றினால் பிரச்சினை என்று எழுதுவதில் எந்த 'ப்ரச்ன'யும் இருக்காது.

ஆங்கிலச் சொற்கள் பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.

- அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x