Published : 29 Jun 2016 09:21 am

Updated : 14 Jun 2017 13:56 pm

 

Published : 29 Jun 2016 09:21 AM
Last Updated : 14 Jun 2017 01:56 PM

தமிழக காவல் துறையில் என்ன நடக்கிறது?

சென்னையில் சில நாட்களுக்கு முன் பொதுவெளியில் வெட்டிக் கொல்லப்பட்ட இளம்பெண் சுவாதியின் வழக்கு செல்லும் விதம் பெரும் அதிருப்தியை உருவாக்குவதுடன், தமிழகக் காவல் துறையில் உள்ள ஏராளமான ஓட்டைகளையும் அம்பலப்படுத்துகிறது.

நாட்டிலேயே அமைதியான நகரங்களில் ஒன்றாக மெச்சப்படுவது தமிழகத் தலைநகரம் சென்னை. இன்றைக்கு நாட்டிலேயே குற்றங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது தமிழகம். தலைநகர் சென்னையில் தொடரும் அடுத்தடுத்த கொலைகள், காவல் துறையினர் உண்மையில் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து முழுத் தீவிரத்தோடுதான் ஈடுபட்டிருக்கிறார்களா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. சுவாதி கொல்லப்பட்டது இரவில், ஏதோ ஒரு புறநகர் வீதியிலோ, முட்டுச்சந்திலோ அல்ல; பட்டப் பகலில் நகரின் மையப் பகுதியில் உள்ள நுங்கம்பாக்கம் ரயில் நிலைய நடைமேடையில் நடந்தது. சம்பவம் நடந்தபோது, அந்தப் பகுதியில் காவல் - கண்காணிப்புப் பணியில் யாரும் இல்லை என்பது முதல் அதிர்ச்சி. ஒரு பெண் வெட்டப்பட்டுக் கிடக்கும் தகவல் அருகிலுள்ள ரயில் நிலைய மேலாளர் அலுவலகத்தைச் சென்றடைய எத்தனை நிமிடங்கள் ஆகும்?அவர்கள் காவல் துறையினரை உடன் அழைக்க எத்தனை நிமிடங்கள் ஆகும்? அவர்கள் மருத்துவ உதவிக்கு அழைக்க எத்தனை நிமிடங்கள் ஆகும்? சுவாதி கொலை நடந்த இடத்துக்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ‘யாரும் வந்து சேரவில்லை’ என்பது வெட்கக்கேடு இல்லையா? எவ்வளவு மெத்தனம், எவ்வளவு அலட்சியம்!

இந்நாட்டில் குடிமக்களின் உயிர் அவ்வளவு மலிவானதாகிவிட்டதா? 137 காவல் நிலையங்களையும் 14,000 காவலர்களையும் கொண்ட சென்னை போன்ற ஒரு பெருநகரத்திலேயே நிலைமை இதுவென்றால், தமிழகத்தில் கிராமங்களின் நிலைமை என்ன?

இந்த விஷயத்தை சென்னை உயர் நீதிமன்றம் கையில் எடுத்தது. “ஊடகங்களில், ‘சுவாதி கொலை வழக்கு விசாரணையில் ரயில்வே போலீஸாருக்கும், மாநகர போலீஸாருக்கும் இடையே ஒருங்கிணைந்த செயல்பாடுகள் இல்லை’என்று செய்திகள் வெளியானதைச் சுட்டிக்காட்டி காவல் துறையைக் கேள்வி மேல் கேள்வி கேட்டது. தமிழக அரசிடமும் இது தொடர்பாக விளக்கம் கேட்ட நிலையில், “இந்த வழக்கை ரயில்வே போலீஸாரிடமிருந்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு மாற்றி, காவல் துறைத் தலைவர் உத்தரவிட்டிருக்கிறார்” என்று நீதிபதிகளிடம் அரசு வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார். கூடவே, சிறப்பு விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாகவும் சென்னை ஆணையர் நேரடியாக இந்த வழக்கைக் கண்காணிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். நீதிபதிகள், “ஒரு வழக்கை ஒரு விசாரணை வளையத்திலிருந்து இன்னொரு விசாரணை வளையத்துக்கு மாற்ற ஏன் இவ்வளவு தாமதம்?” என்றும் “பெரும்பான்மை வழக்குகளில் நீடிக்கும் தாமதத்திலிருந்து வெளியே வர என்ன உத்தியைக் காவல் துறை வைத்திருக்கிறது?” என்றும் எழுப்பிய கேள்விகளுக்குக் காவல் துறையிடம் உரிய பதில் இருப்பதாகத் தெரியவில்லை.

சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் எடுத்துக் கொண்டிருக்கும் அக்கறை பாராட்டுக்குரியது என்றாலும், ஒவ்வொரு வழக்கிலும் காவல் துறையை இப்படி முடுக்கிவிட நீதிமன்றம் வர முடியுமா; அப்படி வந்தால்தான் அது துடிப்புடன் செயல்படுமா என்ற கேள்வி எழுகிறது.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் போன்ற ஜன நெருக்கடி மிகுந்த ஓரிடத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாத சூழலைப் பலரும் கேள்விக்குள்ளாக்கி இருந்தாலும், குற்றவாளிகளைப் பிடிக்க கேமராக்கள் உதவுமேயன்றி, குற்றங்கள் செய்வதைத் தடுக்க கேமராக்களால் முடியாது. எது உண்மையில் குற்றங்களைத் தடுக்கும் என்றால், காவல் துறையின் கட்டுக்கோப்பும் உயிர்த் துடிப்பும் மிக்கதுமான கறாரான செயல்பாடுகள். குற்றங்களைத் தடுக்க முன்கூட்டித் திட்டமிடும் கண்காணிப்பு வியூகம். ஒவ்வொரு வழக்கிலும் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை. இவை அனைத்தும் சேர்ந்து மனித மனதில் உருவாக்கும் பயம். சாதாரண குடும்பப் பிரச்சினைகளில்கூட ஒருவரை ஒருவர் தீர்த்துக்கட்டத் திட்டமிடுகிறார்கள் என்றால், பயம் தொலைந்துகொண்டிருப்பதும் மிக முக்கியமான காரணம். பல சந்தர்ப்பங்களில் சாமானியர்கள் காவல் நிலையங்களில் வழக்குப் பதியவே போராட வேண்டிய சூழல் இருக்கும்போது, குற்றவாளிகளிடத்தில் பயம் எங்கிருந்து உருவாகும்?

சென்னையில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 75 கொலைகள் நடந்திருக்கின்றன. 2013 ஜனவரி முதல் சென்னையில் நடந்த கொலைகளின் எண்ணிக்கை 563 என்கிறது தேசியக் குற்ற ஆவணக் காப்பகம். இவற்றில் எத்தனை வழக்குகளில் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள், எத்தனை குற்றவாளிகள் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்? தொடரும் குற்றங்களுக்குத் தங்கள் அலட்சியங்களால் வலு சேர்க்கும் போலீஸார் எத்தனை பேர் மீது இதுவரை காவல் துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது? இந்த வழக்கில் இவ்வளவு வெளிப்படையாகத் தெரியும் மெத்தனமான செயல்பாடுகளுக்கு யார் பொறுப்பேற்பது? இதுவரை ஒருவர் மீதுகூட நடவடிக்கை எடுக்கப்படவில்லையே, ஏன்? இவை எல்லாவற்றையும்விட மோசம், சுவாதியின் நடத்தை தொடர்பாகத் திரித்துவிடப்பட்டுப் பரவிய அவதூறு தகவல்கள். கொலைக்குப் பிந்தைய இன்னொரு கொலை இது.

காவல் துறையைத் தன்னுடைய நேரடிப் பொறுப்பில் வைத்திருக்கும் தமிழக முதல்வர், தமிழகக் காவல் துறையில் ஒரு அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையே இவை எல்லாமும் சொல்கின்றன. தமிழகக் காவல் துறை தன் பழைய மாண்பை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும் என்றால், இது தவிர்க்க முடியாதது!

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தமிழக காவல்துறைமுதல்வர் ஜெயலலிதாகாவல்துறையில் சீர்திருத்தம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author