Published : 26 Sep 2016 09:52 AM
Last Updated : 26 Sep 2016 09:52 AM

காவிரி மேலாண்மை வாரியத்தை அமையுங்கள்!

காவிரி விவகாரம் ஒரு நல்ல தீர்வை நோக்கி நகர்ந்திருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை நான்கு வாரத்துக்குள் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவு, தமிழக விவசாயிகளிடமும் அரசியல் கட்சிகளிடமும் பெரும் நிம்மதியை விதைத்திருக்கிறது.

ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றம் தலையிட்ட பின்னர்தான், இப்பிரச்சினைக்கான தீர்வுகள் தென்படுகின்றன. உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படிதான் 1990-ல் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. நடுவர் மன்றம் 1991-ல் பிறப்பித்த இடைக்கால உத்தரவை நிறைவேற்றுவதற்கும் உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டியிருந்தது. 2007-ல் நடுவர் மன்றம் பிறப்பித்த இறுதி உத்தரவை மத்திய அரசிதழில் வெளியிட ஆறு ஆண்டுகள் ஆயிற்று. இதற்கும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுதான் வழிவகுத்தது.

2013-ல், காவிரி மேற்பார்வைக் குழுவை மத்திய அரசு அமைத்தது. மத்திய நீர் வள அமைச்சகத்தின் செயலாளர் இக்குழுவின் தலைவராகவும், காவிரி நீரைப் பெறும் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் இதன் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர். எனினும், உரிய சட்ட அங்கீகாரம் இல்லாத அமைப்பாக இது இருப்பதால், தண்ணீர் திறப்பது குறித்து இந்தக் குழு பிறப்பிக்கும் உத்தரவுகள் இரு மாநிலங்களுக்கும் பலனளிக்காத வகையில் அமைந்துவிட்டன. ஆக, ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டித்தான் தண்ணீர் கோர வேண்டிய நிலை மீண்டும் உருவானது.

இதற்குத் தீர்வாக, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் 2007-லேயே உத்தரவிட்டது. ஆனால், அப்போது மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அதை நிறைவேற்றத் தவறியது. பின்னர் வந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் இதைக் கண்டுகொள்ளாமல் இருந்த சூழலில்தான் இப்போது இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம் உரிய காலத்தில் அமைக்கப் பட்டிருந்தால், காவிரிப் பிரச்சினை எப்போதோ தீர்க்கப்பட்டிருக்கும். பந்தை எப்போதும் நீதிமன்றத்தின் பக்கம் தள்ளிவிட்டு வேடிக்கை பார்ப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் மத்திய ஆட்சியாளர்கள். காங்கிரஸ், பாஜக இரண்டுமே கர்நாடகத் தில் பிரதான கட்சிகளாக இருப்பதும் நியாயத் தீர்ப்புக்கான முட்டுக்கட்டையாக அவர்கள் இருந்ததற்கு முக்கியமான காரணம்.

மாநிலங்களின் ஒன்றியமாக அமைந்த இந்தியா போன்ற ஒரு நாட்டின் தலைமைப் பொறுப்பில் அமர்பவர்கள் இப்படிப் பாரபட்சமாகச் செயல்படுவது அசிங்கம், அவலம், சாபக் கேடு. இதுவரை நிறையவே தவறிழைத்துவிட்டார்கள். இப்போதேனும் நீதிமன்றம் காட்டியிருக்கும் வழிப்படி நடந்துகொள்ள வேண்டும். உண்மையில், மத்திய அரசுக்கு காவிரிப் பிரச்சினையையும் பின்னாளில், இதே போன்ற ஏனைய பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான வரலாற்று வாய்ப்பு இது. இதைத் தவறவிடக் கூடாது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x