Last Updated : 06 Apr, 2017 09:20 AM

 

Published : 06 Apr 2017 09:20 AM
Last Updated : 06 Apr 2017 09:20 AM

போராடும் இளைஞர்களுக்கு நம்மாழ்வார் காட்டிய வழி!

உலகமயமாக்கலுக்கு மாற்று, உள்ளூர்மயமே

எதையும் கண்டுகொள்ளாது இருந்த தமிழகத்தில், இப்போது திரும்பிய திசையெல்லாம் போராட்டங்கள். தமிழகத்தின் உரிமை மீட்பு, வாழ்வாதாரங்கள் காப்பு எனப் பலப் பல பிரச்சினைகள் இளைய தலைமுறையை போராட்டங்களுக்குள் இழுத்துவந்திருக்கிறது. இந்தச் சூழலில், தனது வாழ்வின் மிகப் பெரும் பகுதியைப் போராட்டமாகவே வாழ்ந்த நம்மாழ்வாரை நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவரின் வாழ்வே போராட்டமயமானது. அழிவைத் தரும் வளர்ச்சிப் போக்குக்கு நேர் எதிரான, நமக்கேயான வாழ்வியலை மீட்டெடுக்கும் போராட்டம் அது.

தங்களின் லாப வெறிக்கான பலி ஆடாக உலகின் ஒட்டுமொத்த விவசாயத்தையும் மாற்றிட ரசாயன இடுபொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் முனைப்பாக இயங்கியபோது, இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல ஆசிய நாடுகள் அவர்களின் வார்த்தைகளுக்கு மயங்கி, பச்சைப் புரட்சியைத் தலைமேல் வைத்துக் கொண்டாடிய காலமது. நம்மாழ்வார் என்ற அந்த ஒற்றை மனிதர் மட்டும், “இது ஆபத்தானது, ரசாயனங்கள் மண்ணை மலடாக்கும், விவசாயிகளை அழிக்கும். விவசாயம் வணிகமானால் கிராமப் பொருளாதாரம், கிராம வாழ்வியல் அனைத்தும் அழிந்துபடும்” என முழங்கினார்.

‘நாடு, அரசு, விவசாயிகள் எல்லாம் அந்தப் பாதையில் செல்கிறபோது, எந்த நம்பிக்கையில் தொடர்ந்து ஒலிக்கிறீர்கள்?’ என்று கேட்டால், “அவர்கள் மாறுவார்களா இல்லையா என்பது என் பிரச்சினையல்ல, நான் அவர்களிடம் உண்மையைச் சொல்கிறேனா இல்லையா என்பதும் மாற்று வழிகளைக் காட்டுவதும்தான் என் வேலை” என்றார். காட் ஒப்பந்தம், டங்கல் திட்டம் ஆகியன முக்கியப் பேச்சாக இருந்த காலத்தில், ‘இதை எதிர்த்து எப்படி வேலை செய்வது, இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்’ என்று கேட்டோம்.

“நான் எதற்கு அதையெல்லாம் எதிர்த்து வேலை செய்ய வேண்டும். வந்துவிட்டுப் போகிறது” என்றார்.

ஒரு பெரும் மாற்றத்தை இப்படிப் பார்க்கிறாரே என்று வருத்தம் கலந்த வியப்பு எங்களிடம். ‘என்ன காரணத்தால் இப்படிச் சொல்கிறீர்கள்?’ என்று கேட்டபோது, “என் வேலையே தற்சார்பு வாழ்வுக்கானதுதானே. அப்புறம் நான் ஏன் உலகமயத்தைத் தனியாக எதிர்க்க வேண்டும்?” என்றார். இன்னொரு சமயம், “உலகமயம் வேண்டாம் என்றால் வேறு எது வேண்டும்?” என்று எங்களிடமே திருப்பிக் கேட்டார். கொஞ்சம் யோசித்துவிட்டு, ‘உள்ளூர் தயாரிப்பு, உள்ளூர் பொருட்கள், உள்ளூர் சந்தை’ என்று விவரித்ததும், “எளிய வார்த்தையில் சொல்லுங்கள்” என்றார். திணறினோம். “உலகமயத்துக்கு மாற்று உள்ளூர்மயம். ஒன்று வேண்டாம் என்று சொல்லி வெற்றிடமாக்க முடியாது. எதையேனும் கொண்டு நிரப்ப வேண்டும். அது எது, எத்தகையது என்றால், மக்களுக்கானதாக இருக்க வேண்டும்” என்றார். உலகமயத்துக்கு நேர் எதிர்நிலை உள்ளூர்மயம் என்பது எவ்வளவு பெரிய ஆயுதம்.

நம்முடைய ஆயுதத்தை எதிரிதான் முடிவுசெய்கிறான் என்பார்கள். நம்மாழ்வாரோ போராட்ட ஆயுதத்துக்கான இலக்கணத்தை மாற்றிப் போடுகிறார். விஸ்கோஸ் ஆலையின் கழிவுக்கான ஆறாக பவானி ஆறு மாறியதைத் தடுக்கும் சூழலியல் போராட்டத்தின்போது செலவுகள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். பேச்சின் ஊடாக இடைமறித்த நம்மாழ்வார், “நீங்கள் வண்ணத்தில் போஸ்டர் அடித்தால் அவன் பல வண்ண போஸ்டர் அடித்து மயக்குவான். உங்களால் அவனின் ஆயுதத்தைத் தூக்க முடியாது. உங்களுடையது சுவர் விளம்பரமாக இருந்தால்? நம்மளவுக்கு அவனால் கீழிறங்க முடியாது. உங்களது ஆயுதம் எதிரியால் எடுத்தாள முடியாததாக இருக்க வேண்டும்” என்றார். கடைசிவரை வெளி இடுபொருட்களை எதிர்க்க உள்ளூர் இடுபொருட்களையும், வெளி அறிவை எதிர்க்க உள்ளூர் அறிவையும் அவர் ஆயுதமாகக் கொண்டார்.

எந்தவொரு சூழ்நிலையிலும் அவர் ஜனநாயக அணுகுமுறையை ஒதுக்கிய தில்லை. எதிர்க் கருத்துடையவரின் மனதைக் காயப்படுத்தியதுமில்லை. எவ்வளவு முரண் நிலை இருப்பினும் முற்றாக எவரையும் ஒதுக்கிவைத்தது கிடையாது. முரண்பட்டு ஒதுங்கியவர்களையும் சில காலம் கழித்து அரவணைத்துக்கொள்வார். “நம் இலக்கு பெரிது.. எவரையும் இழந்துவிட முடியாது” என்பார். பெண்களை முன்னிலைப்படுத்தாத எந்தக் காரியமும் முழுமையானதாகாது என்பதில் உறுதியாக இருந்தார். களக்காடு பகுதியில் பணிசெய்த காலத்தில், அங்கொரு போராட்டத்தை தோழர் நல்லகண்ணு உள்ளிட்டோர் முன்னெடுத்தனர். ஆனால், பெண்களைப் பங்கேற்கச் செய்ய முடியவில்லை. போராட்டம் தீவிரமாகவும் இல்லை. நம்மாழ்வார் அக்கிராமத்தில் ஓரிரு நாட்கள் தங்கி பெண்களிடம் பேச, அடுத்த சில நாட்களில் பெண்கள் கூட்டமும் வந்தது.

ஒரு போராட்டத்தை எப்படித் தொடர வேண்டும் என்பதை, தான் சந்தித்த வெளிநாட்டுப் பெண்மணியிடமிருந்து கற்றதாக ஒருமுறை சொன்னார். ஸ்வீடன் சென்றிருந்தபோது, நிறைமாதக் கர்ப்பிணியான அந்நாட்டுப் பெண்மணி ஒருவர், நம்மாழ்வாரை விமான நிலையத்திலிருந்து அழைத்து வந்து இரவு உணவு கொடுத்தார். சிறிது நேரத்திலேயே தனக்கு வேலை நேரம் வந்துவிட்டதால் விடைபெறுவதாக அப்பெண் கூறியிருக்கிறார். விசாரித்தபோது, “அணு மின்நிலையத்தின் கழிவுகளை எங்கள் கிராமத்தில் ஆழப் புதைக்க அரசு அனுமதியளித்துள்ளது. ஒப்பந்தம் செய்த நிறுவனம் பணிகளைத் தொடங்கி உள்ளது. அது விளைவிக்கப்போகும் சூழல்கேடுகளால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிப்புக் குள்ளாகும் என்பதை அரசுக்குப் பல வழிகளில் உணர்த்தியுள்ளோம்.

அந்தப் புதைகுழி அமைத்திடாத வகையில், நாங்கள் அந்த இடத்தில் இரவு, பகல் பாராமல் தொடர் போராட்டம் நடத்துகிறோம். அதற்காக முறை வைத்துக் காவல் காக்கிறோம். இன்று என்னுடைய முறை” என்று கூறிக் கிளம்பிவிட்டாராம். 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் அப்பெண்ணைப் பார்த்து அந்தப் போராட்டம் முடிவுக்கு வந்ததா என்று கேட்டபோது, “இல்லை.. இன்று அப்போராட்டத்தில் எனது 10 வயது மகனும் காவலுக்குச் செல்கிறான். அந்த நிறுவனம் செயல்பாடின்றி முடங்கியுள்ளது. இருப்பினும், இத்திட்டத்துக்கான ஒத்துழைப்பை அரசு ரத்துசெய்யும் வரை போராட்டம் தொடரும்” என்றார்.

“போராட்டம் என்பது வெறும் அடையாள நிகழ்வாக இருக்கக் கூடாது. பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப்படப்போகும் பகுதியில் வாழும் மக்கள் அத்திட்டத்தை அரசோ, பெரு நிறுவனங்களோ கைவிடும் வரை தொடர வேண்டும். வெளியிலிருந்து இதற்கான மக்கள் ஆதரவையும் திரட்டிப் பெருக்க வேண்டும். 10 நாள் அல்லது ஒருமாதம் மட்டும் போராட்டக் களத்தில் இருந்துவிட்டுப் பிறகு நீர்த்துப்போதல் கூடாது” என்றார். ஜல்லிக்கட்டுப் போராட்டம், நெடுவாசல் போராட்டம், டெல்லி விவசாயிகள் போராட்டம் ஆகியவை அந்த வழியில் நடப்பது வியப்பைத் தருகிறது.

“நம்மிடம் நல்ல தலைவர்கள் இல்லை. நல்ல தலைவர்களை உருவாக்கவுமில்லை” என்று தமிழகப் பசுமை இயக்கத் தலைவர் கூறியபோது, “மாற்றத்தை முன்னெடுக்கிற ஒவ்வொருவரும் தலைவரே. தலைவரை ஏன் வெளியே தேடுகிறீர்கள்” என்றார்.

இன்றும் அது பொருந்தும்தானே?

- அறச்சலூர் செல்வம், இயற்கை விவசாயி

தொடர்புக்கு: organicerode@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x