Published : 05 Jun 2017 09:08 AM
Last Updated : 05 Jun 2017 09:08 AM

காயிதே மில்லத்: தமிழ் முஸ்லிம் தலைமைக்கான ஒரு முன்னுதாரணம்!

தனது உயர்ந்த பண்பின் காரணமாக அமைந்த பெயராலேயே இறுதிவரை அழைக்கப்பட்ட தலைவர் ‘காயிதே மில்லத்’. முகமது இஸ்மாயில் என்பதுதான் அவரது இயற்பெயர். ஆனால், தன்னலமற்ற, தூய்மையான அரசியல் நடவடிக்கைகளால், ‘காயிதே மில்லத்’ என்றே அழைக்கப்பட்டார். உருது மொழியில், ‘வழிகாட்டும் தலைவர்’ என்று இதற்குப் பொருள்.

அடிப்படை நேர்மை என்ற பண்புதான் அவரது அனைத்து நற்பண்புகளுக்கும் அடித்தளமாக அமைந்தது. இன்று முஸ்லிம்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தி னராவது அடிப்படைக் கல்வி முடித்து உயர் கல்வி பெறுகிறார்கள் என்றால் அதற்கு முழு முதல் காரணம் காயிதே மில்லத்.

1946 முதல் 1952 வரை சென்னை மாகாண சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக அவர் இருந்தார். அப்போது, சென்னை அண்ணா சாலையில் கன்னிமரா ஹோட்டல் எதிரே இருந்த முஸ்லிம் அறக்கட்டளைக்குச் சொந்தமான முகமதியன் கல்லூரியைக் கையகப்படுத்திய அரசு, அதை அரசுப் பெண்கள் கல்லூரியாக மாற்ற முடிவுசெய்தது. இதை காயிதே மில்லத் கடுமையாக எதிர்த்தார். முஸ்லிம் அறக்கட்டளைக்குச் சொந்தமாக இருக்கும் ஒரே ஒரு கல்லூரியையும் அரசு கையகப்படுத்துவதால் முஸ்லிம்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று கருதினார்.

முஸ்லிம் கல்லூரிகள்

அப்போதைய உள்துறை அமைச்சர் டாக்டர் சுப்பராயனைச் சந்தித்து இது தொடர்பாக வலியுறுத்தினார், காயிதே மில்லத். அப்போது அமைச்சர் சுப்பராயன், ‘ஒரு கல்லூரிக்காகப் போராடுவதில் காட்டும் உழைப்பை, முஸ்லிம் சமூகத்துக்காக உங்கள் சமூகத்தில் உள்ள செல்வந்தர்களிடம் பேசி தமிழ்நாடு முழுவதும் பரவலாகக் கல்லூரிகளைத் தொடங்குவதில் நீங்கள் ஆர்வம் காட்டினால் அதிக பலன் கிடைக்குமே’ என்று யோசனை தெரிவித்தார்.

இந்த யோசனையில் இருக்கும் நன்மையைப் புரிந்துகொண்ட காயிதே மில்லத், உடனடியாகத் தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முஸ்லிம் சமூகத்தில் இருக்கும் மிகப் பெரும் செல்வந்தர்களைச் சந்தித்து, ‘முஸ்லிம் சமூகத்துக்கென்று கல்லூரிகள் தொடங்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். அவரது வேண்டுகோளைப் பல செல்வந்தர்கள் ஏற்றுக்கொண்டனர். தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் லட்சுமணசாமி முதலியாரைச் சந்தித்து, தனது இந்தத் திட்டம் பற்றி விளக்கி அனுமதி பெற்றார்.

இதைத் தொடர்ந்தே, சென்னையில் புதுக் கல்லூரி, திருச்சியில் ஜமால் முகமது கல்லூரி, அதிராம்பட்டினத்தில் காதர் மொய்தீன் கல்லூரி உள்ளிட்ட ஏராளமான முஸ்லிம் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. தமிழகத்திலிருந்து சென்று சிங்கப்பூர், மலேசியா, பர்மா போன்ற வெளிநாடுகளில் தொழில்செய்து வந்த முஸ்லிம் தனவந்தர்களிடம், கல்லூரிகளின் கட்டிட வசதிக்காக நிதி கோரினார். அவரது வேண்டுகோளை உத்தரவாக மதித்து அவர்கள் தாராளமாக நிதி வழங்கினர். ஒட்டுமொத்த நிதியையும் வெளிப்படையான நிர்வாகத்தின் மூலம் கல்லூரிகளின் கட்டிடங்களுக்காக செலவிட்டார். இன்றும் புதுக் கல்லூரி, ஜமால் முகமது கல்லூரிகளில் பர்மா- மலாய் வாழ் முஸ்லிம் பெயர்கள் கட்டிடங்களுக்குச் சூட்டப்பட்டிருப்பதே இதற்கு சாட்சி.

தலைவர்களால் மதிக்கப்பட்டவர்

தந்தை பெரியார் முதல் அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி வரை எல்லாத் தலைவர்களும் காயிதே மில்லத் மீது மிகுந்த மதிப்பு கொண்டவர்கள். 1967 தேர்தலில் திமுகவின் வெற்றிக்குத் துணை நின்றார். தேர்தலின்போது அவரது இல்லத்துக்குச் சென்று ஆலோசனை நடத்தினார் அண்ணா. எந்த முகமதியன் கல்லூரியை அரசு மகளிர் கல்லூரியாக மாற்ற காயிதே மில்லத் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தாரோ, அதே கல்லூரிக்கு காயிதே மில்லத்தின் பெயரையே சூட்டினார், அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி. எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது 1983-ல் காயிதே மில்லத்தின் வாழ்க்கை பற்றி ஐந்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம்பெறச் செய்தார்.

காயிதே மில்லத் மறைந்தபோது, அவரால் உருவாக்கப்பட்ட புதுக் கல்லூரியிலேயே அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. அப்போது எம்ஜிஆர் முதல்வராக இருந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்திய எம்ஜிஆர் அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவு வரை அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று நடந்தே வந்தார்.

முன்னதாக காயிதே மில்லத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த புதுக் கல்லூரிக்குப் பெரியார் வந்தார். அப்போது அங்கே கடுமையான கூட்டம். பெரியாரின் நெருங்கிய நண்பரான ஈரோடு கே.ஏ.எஸ். அலாவுதீன் சாஹிப், கூட்டத்தினரை விலக்கிவிட்டு பெரியாரை காயிதே மில்லத் உடல் அருகே அழைத்துச் சென்றார். அப்போது தேம்பிய பெரியார், “இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது. உத்தமமான மனிதர். முஸ்லிம் சமுதாயத்துக்கு இவரைப் போன்ற தலைவர் கிடைப்பது கஷ்டம்” என்று அனைவரின் காதுகளிலும் விழும்படி கூறினார். இதை அலாவுதீன் சாஹிபே பதிவுசெய்திருக்கிறார். பெரியார் சாதாரணமாக யாரையும் புகழ மாட்டார். அப்படிப்பட்ட பெரியாரிடம் இருந்து காயிதே மில்லத் பற்றி வெளியான இந்த வார்த்தைகள் இன்னும் உயிரோடு இருக்கின்றன.

நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு காயிதே மில்லத்தின் பெயரைச் சூட்டி அவரைப் பெருமைப்படுத்தினார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. இவ்வாறு முஸ்லிம் சமுதாயத்துக்கு வெளியே காயிதே மில்லத்தின் மேன்மையைப் புரிந்துகொண்டு அரசியல் தலைவர்கள் கடமை ஆற்றினார்கள்.

மத நல்லிணக்கம்

மத நல்லிணக்கத்துக்காகத் தன் வாழ்நாள் முழுதும் பாடுபட்டவர். முக்கியமாக மதப் பதற்றம் விளைவிக்கக் கூடிய தருணங்கள் உருவாகும்போது, யாரிடம் பேச வேண்டுமோ அவர்களிடம் பேசி பிரச்சினைக்கு ஆரம்பத்திலேயே சுமுகத் தீர்வு கண்டுவிடுவார். அப்படி பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தது பற்றி விளம்பரப்படுத்திக் கொள்ளவும் மாட்டார். சிறு விஷயங்களைப் பெரிதுபடுத்தி, பதற்றத்தை நீட்டிக்கும் வகையில் அவர் செயல்பட்டதே இல்லை.

இந்தித் திணிப்பைக் கடுமையாக எதிர்த்தவர். 'இஸ்லாம் என் மதம்; தமிழ் என் தாய் மொழி' என்று பிரகடனப்படுத்தியவர். மாநில மொழிகளின் உரிமைக்காகவும், மாநிலங்களின் உரிமைக்காகவும் போராடியவர் காயிதே மில்லத். மத நல்லிணக்கத்துக்கான இன்முகம், மாநில உரிமைகளுக்கான முழக்கம், தேர்ந்த தேச பக்தி என்று காயிதே மில்லத்தின் அரசியல் நிலைப்பாடு தெளிவானது. கல்லூரிகளைத் தோற்றுவித்த காயிதே மில்லத்திடமிருந்து முஸ்லிம் சமுதாயத் தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன. முஸ்லிம் சமுதாயத்தின் ஏற்றத்துக்கு வழிவகுக்கும் பாடங்கள் அவை!

-புதுமடம் ஜாபர் அலி

தொடர்புக்கு: pudumadamjaffar1968@gmail.com

ஜுன் 5: காயிதே மில்லத் பிறந்த நாள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x