Published : 01 Jan 2017 12:53 pm

Updated : 16 Jun 2017 11:37 am

 

Published : 01 Jan 2017 12:53 PM
Last Updated : 16 Jun 2017 11:37 AM

முகங்கள் 2016

2016

2016-ம் ஆண்டின் முகங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறோம். இந்தப் பட்டியல், சாதனையாளர்கள் அல்லது தலைசிறந்தவர்கள் அல்லது வெற்றியாளர்கள் என்பன போன்ற பட்டியல் அல்ல. கடந்த ஆண்டில் தாக்கங்களை உருவாக்கியவர்களின் பட்டியல். இவை 2016-ன் முகங்கள், அவ்வளவே!

தமிழர் கண்களினூடே இந்தியாவைப் பார்க்கிறோம். தேசிய அளவில் தாக்கங்களை உண்டாக்கிய தமிழக முகங்களையும் தமிழக அளவில் தாக்கங்களை உண்டாக்கிய தேசிய முகங்களையுமே நாம் பட்டியலிடுகிறோம். கடந்த ஆண்டின் பட்டியலோடு இந்தப் பட்டியலை ஒப்பிட்டால் நாம் கடந்துவந்த இந்த ஆண்டின் பயணம் எத்தகையது என்பது புரியும்.

கடந்த ஆண்டின் பட்டியலில் இடம்பெற்றவர்களின் வரிசை இது: சென்னை பெருவெள்ள மீட்பர்கள், நயன்தாரா சேகல், நிதிஷ் குமார் - லாலு பிரசாத் யாதவ், அப்துல் கலாம், சானியா - சாய்னா, சசிபெருமாள், சுந்தர் பிச்சை, ஜெயலலிதா, ஹர்திக் படேல், எம்.எஸ்.விஸ்வநாதன்.

கடந்த ஆண்டுக்கு முந்தைய இரு ஆண்டுகளின் பட்டியலில் தொடர்ந்து, கடந்த ஆண்டில் இடம்பெறாமல் இருந்த மோடியின் முகம் மீண்டும் இந்தப் பட்டியலுக்கு வந்துவிட்டது. ஒரு பிரதமராக அவர் மேற்கொள்ளும் தேசிய அளவிலான நடவடிக்கைகளைத் தாண்டி, அருணாசலப் பிரதேசம் முதல் தமிழகம் வரை உள்ளூர் நிழல் அரசியலிலும் இன்று அவர் பெயர் உச்சரிக்கப்படுகிறது. பட்டியலை உற்றுநோக்கையில், களிப்பைக் காட்டிலும் கவலையே அதிகம் ஏற்படுகிறது.

வரவிருக்கும் ஆண்டு புது நம்பிக்கைகளை நமக்கு அளிக்கட்டும். வாசகர்களுக்கு எமது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள்!

சி.வி. விஸ்வேஸ்வரா: கருந்துளை மனிதர்

இவர்: இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான கண்டுபிடிப்பாகக் கருதப்படும் ஈர்ப்பலைகள் கண்டுபிடிப்பில் முக்கியப் பங்காற்றியவர். 1997 முதல் நடத்தப்பட்ட ஈர்ப்பலைகள் கண்டுபிடிப்பு பற்றி, 2016 பிப்ரவரியில் உலக விஞ்ஞானிகள் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவரது பெயரும் இருந்தது. பட்டியலில் இவருக்கு முன்னதாக இடம்பெற்ற பெயர்: ஐன்ஸ்டைன்!

இவர்: ஈர்ப்பு அலைகள் உண்டு என்று நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஐன்ஸ்டைன் கணித்ததைப் போல, அவற்றின் வடிவம் எப்படியிருக்கும் என்பதைக் கணித்தவர். 130 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு ராட்சதக் கருந்துளைகள், ஒன்றையொன்று சுற்றிக்கொண்டே மோதிப் பிணைந்தபோது ஏற்பட்ட ஈர்ப்பலைகளின் வடிவம், 1970-ல் அவர் கணித்ததைப் போலவே இருந்ததை 2016-ல் கண்டு விஞ்ஞானிகள் வியந்து நிற்கின்றனர்.

இவர்: பெங்களூருவில் பிறந்தவர். அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அணுத் துகள் இயற்பியல் படித்தவர். மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தில் கருந்துளைகள் பற்றி ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர். பெங்களூரில், தான் உருவாக்கிய ஜவாஹர்லால் நேரு கோளரங்கத்தின் இயக்குநரில் இருந்து ஓய்வுபெற்றிருந்தார் இந்த 77 வயதுக்காரர்.

எம்.பாலமுரளிகிருஷ்ணா: அணைந்த இசைச் சுடர்

இவர்: தனது காந்தர்வக் குரல் மூலம் இந்தியாவைத் தாண்டியும் கொண்டாடப்பட்ட மகா கலைஞன். எட்டு வயதில் முதல் மேடைக் கச்சேரி, 15 வயதில் 72 மேளகர்த்தா ராகங்களில் பாடாந்திரம், வாழ்நாளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கச்சேரிகள் என்று இசையுலகைப் படிப்படியாக வசப்படுத்தியவர்.

இவர்: ‘ஒரு நாள் போதுமா’, ‘மெளனத்தில் விளையாடும் மனசாட்சியே’, ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ போன்ற திரைப் பாடல்கள் மூலம் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் சென்றடைந்த சாஸ்திரிய இசைக் கலைஞர். பண்டிட் பீம்சேன் ஜோஷி, ஹரிபிரசாத் சௌராசியா, கிஷோரி அமோங்கருடன் ஜுகல் பந்தி கச்சேரிகளை நடத்தியவர். ஜாஸ் இசைக் கலைஞர்களுடன் இணைந்து ‘ஃபியூஷன்’ இசை முயற்சிகளை மேற்கொண்டவர். பல ராகங்களை உருவாக்கியவர்.

இவர்: மறைந்தார். இசையின் சகல துறைகளிலும் சிறந்து விளங்கிய ஒரு இசைச் சுடர் அணைந்தது!

நரேந்திர மோடி: அரசியல் சுனாமி

இவர்: நவம்பர் 8 இரவு வெளியிட்ட ‘ரூ.500, ரூ.1,000 பணமதிப்பு நீக்க அறிவிப்பு’ நவீன இந்திய வரலாற்றில் அதிர்ச்சிகரமான நடவடிக்கைகளில் ஒன்று. புழக்கத்தில் இருந்த 82% நோட்டுகளை இதன் மூலம் செல்லாததாக்கினார் மோடி. “கறுப்புப் பண ஒழிப்பு, கள்ளப் பண ஒழிப்பு, பயங்கரவாதிகளின் நிதியாதார முறியடிப்பு” என்று தொடக்கத்தில் அவர் சொன்ன காரணங்கள் பின்பு “இந்தியாவை மின் நிதியாள்கை நாடாக மாற்றுதல், வருமான வரி வலைக்குள் கொண்டுவருதல்” என்று நீண்டது. நாடெங்கும் வங்கிகள், வங்கி ஏடிஎம்கள் முன் மணிக்கணக்கில் வரிசையில் நின்றார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள். “50 நாட்களில் நிலைமை சீராகவில்லை என்றால் என்னைத் தண்டிக்கலாம்” என்றெல்லாம் பங்கேற்ற கூட்டங்களில் உணர்ச்சிகரமாகப் பேசினார் மோடி. ஆனால், நடக்கவில்லை. பொருளாதாரம் தேக்கம் அடைந்தது. கிராமப்புறப் பொருளாதாரம் பெரும் சேதத்தை எதிர்கொண்டது. சாமானிய மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டார்கள். மோடியோ, ‘யாரிடமும் நான் கேட்க ஒன்றுமில்லை’ எனும் தொனியில் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்.

இவர்: ஜனவரி பதான்கோட் தாக்குதல், செப்டம்பர் உரி தாக்குதல்களுக்கு எதிர்வினையாக பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொண்ட ‘துல்லியத் தாக்குதல் நடவடிக்கை’ இந்திய வெளியுறவுக் கொள்கையில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான மாற்றமாகக் கருதப்படுகிறது.

இவர்: அருணாசலப் பிரதேசம் முதல் தமிழ்நாடு வரை நிழல் அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார் என்று குரல்கள் ஒலிக்கின்றன.

இவர்: எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை, வியூகமின்மை, இவருக்கு இணையாக இறங்கி அடிக்கும் ஆட்களின்மை ஆகியவை உருவாக்கிய வெற்றிடத்தில் மேலும் மேலும் முன்னேறுகிறார்.

ஜிக்னேஷ் மேவானி - கன்னையா குமார்: இரு நீலச் சிவப்பு முகங்கள்

இவர்கள்: குஜராத்தின் உனா நகர் அருகில் மோட்டோ சமதியாலா கிராமத்தில் செத்த மாடுகளின் தோலை உரித்த நான்கு தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, தலித் மக்களைத் திரட்டி நடத்திய போராட்டத்தால் நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஜிக்னேஷ் மேவானி. பிஹாரின் பேகுசாரய் மாவட்டம், பிகாத் கிராமத்தின் எளிய பின்னணியிலிருந்து, டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை அடைந்து, தன்னுடைய போராட்டங்களால் இடதுசாரி மாணவர் அரசியலின் முகமாக உருவெடுத்தவர் கன்னையா குமார். தேசத் துரோகக் குற்றச்சாட்டுக்குள்ளாக்கப்பட்டு, இவர் கைதுசெய்யப்பட்டதன் தொடர்ச்சியாக, தன்னெழுச்சியாக உருவான மாணவர் போராட்டங்களால், இந்தியா முழுவதும் கவனத்தை ஈர்த்தவர்.

இவர்கள்: இருவரின் உரைகளுமே இந்த ஆண்டில் அதிகம் கவனிக்கப்பட்ட உரைகள். புதிய நம்பிக்கைகளாக இளைஞர்களால் பார்க்கப்படுபவர்கள்.

டி.எம்.கிருஷ்ணா - பெசவாடா வில்சன்: இரு சமத்துவப் போராளிகள்

இவர்கள்: இனப் பாகுபாடு, சாதியத்துக்கு எதிராக ஒலிக்கும் இசை முழக்கத்துக்குச் சொந்தக்காரர் கிருஷ்ணா. கர்னாடக இசைச் சூழல் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் எனக் குரல்கொடுப்பதுடன், அதற்கான பணிகளிலும் ஈடுபட்டுவருபவர். அகாடமிகளில் நடக்கும் கர்னாடக இசைக் கச்சேரிகளைக் குப்பத்துக்கும் கொண்டுசென்றவர். குப்பத்து கானாவும் அகாடமிகளுக்குப் பரவ வேண்டும் என்பவர். கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் குடும்பத்தில் பிறந்து, இந்த இழிவுக்கு முடிவுகட்டுங்கள் என்று தனது பெற்றோரில் தொடங்கி, பிரதமர், குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வரை முழக்கத்தைக் கொண்டுசென்றவர் வில்சன். இவர் மேற்கொண்ட தொடர் முயற்சிகளுக்குப் பிறகே, கையால் மலம் அள்ள வேண்டிய நிலையில் உள்ள உலர் கழிப்பறைகளைச் சட்ட விரோதம் என்று 1993-ல் அறிவித்தது மத்திய அரசு.

இவர்கள்: இருவரும் தங்கள் சமத்துவக் குரலுக்காகவும் தங்களது பணிகளுக்காகவும் 2016-ம் ஆண்டுக்கான ‘மகசேசே’ விருதைப் பெற்றவர்கள்.

பி.வி.சிந்து: வெள்ளித் தாரகை

இவர்: பிரேசிலில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் பேட்மின்ட்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம், இறுதிச் சுற்றில் நுழைந்த முதல் இந்தியப் பெண் புயல்.

இவர்: 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் பெற்ற செய்னா நேவாலால் ஈர்க்கப்பட்டு, தீவிரப் பயிற்சியும் முயற்சியும் பெற்றவர். புல்லேல கோபிநாத்தின் சிஷ்யை. 2013-ல் மலேசிய கிராண்ட்ஃப்ரீ, சீனத்தின் குவாங்ஷுவில் உலக சாம்பியன், மகாப் ஓபனில் சாம்பியன் என்று தொடர்ந்து வெற்றிப் பாதையில் பயணிப்பவர்.

ராணுவ வீரர்கள்: தியாகப் படை

இவர்கள்: பாகிஸ்தான் ராணுவத்தினர், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானார்கள். பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில் ஜனவரி 2-ல் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் எட்டு வீரர்கள் கொல்லப்பட்டனர். ஐந்து நாட்களுக்கு நீடித்த மோதலில் கடைசி பயங்கரவாதி கொல்லப்படும் வரை போராடினார்கள்.

இவர்கள்: காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி ராணுவ முகாமில் நடந்த தாக்குதலிலும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானார்கள். இந்தச் சம்பவத்தில் 17 வீரர்கள் கொல்லப்பட்டனர். கடந்த ஆண்டு மட்டும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு 64 ராணுவ வீரர்கள் பலியானார்கள். கடந்த ஆறு ஆண்டுகளில் இதுதான் மிக அதிகம்!

இவர்கள்: அரசியல், வெளியுறவுத் துறை, பயங்கரவாதத் தாக்குதல்கள் என்று வெவ்வேறு விவகாரங்களில் கடந்த ஆண்டு ஆளும் அரசாலும் கட்சியாலும் உள்ளிழுத்து விடப்பட்டார்கள். அரசை விமர்சிக்கும் எந்த நடவடிக்கையையும் எதிர்க்க ‘எல்லையில் நமது ராணுவ வீரர்கள்..’ என்ற சொற்றொடரைப் பாஜகவினர் பயன்படுத்தியது இவர்களைச் சங்கடத்துக்குள்ளாக்கியது.

புர்ஹான் வாணி: காஷ்மீர் நெருப்பின் கங்கு

இவர்: காஷ்மீரின் ‘ஹிஜ்புல் முஜாஹிதீன்’ இயக்கத்தின் தளபதியாக இருந்தவர். காஷ்மீரிகளின் போராட்ட முகமாக மாறியிருந்தவர். இவரைப் பற்றித் தகவல் சொல்பவர்களுக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. ஜூலை 8-ல் இவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்படபோது, இறுதி ஊர்வலத்தில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் திரண்டது பரபரப்பாகப் பேசப்பட்டது.

இவர்: மரணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. கல்வீச்சு சம்பவங்கள், பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதல்கள் காரணமாக 80-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள். நூறு நாட்களைக் கடந்து காஷ்மீரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. போராட்டக்காரர்களை அடக்க இந்திய ராணுவத்தினர் பயன்படுத்திய பெல்லட் குண்டு தாக்குதல்கள் பெரும் சர்ச்சையையும் விவாதங்களையும் உருவாக்கின. பெல்லெட் குண்டுகள் தாக்குதலால் நூற்றுக்கணக்கானோர் பார்வையிழந்தனர். சர்வதேசம் மீண்டும் காஷ்மீரைக் கவலையோடு பார்த்தது.

ரவிச்சந்திரன் அஸ்வின்: சாதனை நாயகன்

இவர்: இந்திய கிரிக்கெட் அணியின் வலுவான தூண்களில் ஒருவர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் இந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரராகவும் சிறந்த கிரிக்கெட் வீரராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 44 டெஸ்ட் போட்டிகளில் 248 விக்கெட்டுகள், 1,816 ரன்கள் என்றொரு சாதனை. இதில் 50, 100, 150, 200 விக்கெட்டுகளை வீழ்த்தியதில் பல சாதனைகள்.

இவர்: வேகப்பந்து வீச்சாளரான தனது தந்தை ரவிச்சந்திரனை அடியொற்றி கிரிக்கெட்டுக்குள் வந்தவர். இளையோர் அணியில் தொடக்க பேட்ஸ்மனாக விளையாடத் தொடங்கி பரிமளிக்காதவர். பிறகு, கடின உழைப்பின் பலனாக மேலே ஏறியவர். “சுழல் பந்துதான் உனக்குக் கை கொடுக்கும்” என்று தனது தாய் சித்ரா அளித்த ஆலோசனைதான் இந்த இடத்தில் தன்னைக் கொண்டுவந்து நிறுத்தியது என்று கூறுபவர்.

திருப்தி தேசாய்: ஆன்மிகப் பெண்ணியவாதி

இவர்: வழிபாட்டுத் தலங்களில் பெண்கள் நுழைய விதிக்கப்பட்டிருக்கும் தடைகளை எதிர்த்துப் போராடிவரும் ‘பூமாதா பிரிகேட்’ அமைப்பின் தலைவர்.

இவர்: கர்நாடகத்தின் நிபானி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் சிறுமியாக இருந்தபோதே ஆசிரமம் ஒன்றில் சேர்ந்துவிட்டார் அவரது தந்தை. அப்பாவைப் போலவே தீவிர ஆன்மிகவாதியான இவர், மகாராஷ்டிராவின் அஹமது நகரில் உள்ள சனி ஷிக்நாபூர் கோயில், கோலாப்பூரில் உள்ள மகாலக்ஷ்மி கோயில், நாசிக் மாவட்டத்தின் திரியம்பகேஸ்வர் கோயில் என எங்கெல்லாம் பெண்கள் சுதந்திரமான வழிபாட்டுக்கு எதிரான அடக்குமுறைகள் இருந்தனவோ அங்கெல்லாம் தடைகளை உடைக்க முன்னின்றவர்.

இவர்: இந்துக் கோயில்களில் பெண்களுக்கான உரிமையை நிலைநாட்டும் பணியை, பிற மத வழிபாட்டுத் தலங்களுக்கும் விரிவுபடுத்தினார். 2016-ல் ஹாஜி அலி தர்காவில் பெண்கள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று கோரிப் போராடினார். தொடர்ந்து, ஜகியா சோமன், நூர்ஜஹான் நியாஸ் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த பொது நல வழக்கில், தர்காவில் பெண்கள் நுழைவதற்கு விதிக்கப்பட்ட தடை ரத்துசெய்யப்பட்டது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

முகங்கள் 2016மோடிஜிக்னேஷ் மேவானிகன்னையா குமார்பி.வி.சிந்துதிருப்தி தேசாய்அஸ்வின்ராணுவ வீரர்கள்புர்ஹான் வாணிஎம்.பாலமுரளி கிருஷ்ணாடி.எம்.கிருஷ்ணாபெசவாடா வில்சன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author