Published : 26 Dec 2013 00:00 am

Updated : 06 Jun 2017 16:55 pm

 

Published : 26 Dec 2013 12:00 AM
Last Updated : 06 Jun 2017 04:55 PM

தாத்தா - பாட்டியைக் கொண்டாடுவோம்

கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் எனது மகளின் பள்ளிக்கூடக் காலத்து பழைய சேகரிப்புகளில் பழைய அடையார் டைம்ஸ் செய்தித்தாள் ஒன்று கண்ணில் பட்டது. அதில் ஒரு புகைப்படத்தில் எனது மாமனார். அருகே எனது மாமியார். தாத்தா-பாட்டிகள் தினக் கொண்டாட்டம் பற்றிய புகைப்படச் செய்தி அது. பொதுவாக, பெற்றோர் தினம் அனுசரிக்கும் பள்ளிகளிடையே, பெற்றோரின் பெற்றோரை அழைக்கும் அந்த நடைமுறை எங்களை மிகவும் வசீகரித்தது. நமது பள்ளி நாட்களில் இப்படி தாத்தா-பாட்டியைக் கௌரவிக்க வாய்ப்பு கிடைக்காமல் போனதே என்று மனம் பழைய நினைவுகளில் நீந்தியது.

தாத்தாவிடம்தான் படிப்பேன்


இளமைக் காலத்தின் சில நினைவுகளை யாராலும் மறக்க முடியாது. எனது பாட்டனார் வீட்டு முற்றத்தின் தூண் ஒன்றைக் கட்டிப்பிடித்துக்கொண்டு “வர மாட்டேன்” என்று நான் அடம்பிடித்த காட்சி, ஒரு புகைப்படம்போல் இன்றும் நெஞ்சில் உறைந்திருக்கிறது. தன்னுடன் சென்னைக்கு வந்துவிட வேண்டும் என்று எனது தந்தை என்னை வற்புறுத்தவும், முடியாது என்று நான் அழுதுபுரளவும், “குழந்தை இங்கேயே இருந்து படிக்கட்டுமே, விட்டுருப்பா” என்று என் தாய்வழி தாத்தா கேட்டுக்கொண்ட குரல்கூட இன்னும் என் காதுகளில் ஒலிக்கவே செய்கிறது. இரண்டாம் வகுப்பு பாதியில் வேறு வழியின்றி எனது தந்தையுடன் சென்னைக்குக் குடிபெயர்ந்த நான், மீண்டும் எட்டாம் வகுப்பு சமயத்தில் தாத்தா வீட்டுக்குத் திரும்பினேன். ஆனால், அடுத்த சில மாதங்களில் அவர் மறைந்துவிட்டார்.

சால்வையாக இருக்கும் தாத்தா

தாத்தா, பாட்டி வீடு என்பது உள்ளபடியே குழந்தைகளுக்கு வேறு உலகம்! இப்போதுகூட ஏதாவது சால்வை அல்லது போர்வை ஒன்றை எடுத்துப் போர்த்திக்கொள்ளும்போது, என் தாத்தாவின் கதகதப்பு எனக்குள் ஓடுவதாக உணர்வதுண்டு. அவரது பச்சை நிற சால்வைக்குள் எனக்கும் இடம் இருந்த இள வயதில், பக்த ராமதாஸ் கதை அவரது கம்பீரமான குரலில் ஓடும்.

மார்கழி மாதக் குளிர் தாத்தாவின் அரவணைப்புக்குள் என்னைச் சிறைப்படுத்திக்கொள்ளவே வருவதுபோல் எனக்குத் தோன்றும். அத்தனை திருப்பாவை பாசுரங்களும் அவரது குரலில் எனக்குள் பதிவான குழந்தைப் பருவம் அது. நல்ல உயரமான மனிதரான அவர் வாலாஜாபாத் வீதிகளில் கம்பீரமாக இறங்கி நடந்து செல்லும்போது, அவர் உயரே பிடிக்கும் குடையின்கீழ் ஒரு முயல் குட்டி மாதிரி ஒடுங்கி, அவரது வேட்டி முனையைப் பிடித்துக்கொண்டு எனது ஒன்றாம் வகுப்பின் அறைக்குப் போன காட்சிகூட இன்னொரு புகைப்படம்தான் நெஞ்சில்! அந்த உயர்நிலைப் பள்ளியின் மதிப்புமிக்க தலைமை ஆசிரியராக இருந்தவர் எனது பாட்டனார்.

ரயில் சந்திப்பு வீடு

எட்டாம் வகுப்பில் என்னை அவர் விட்டுச்சென்ற இடத்தை முழுமையாகவும் அதற்கு மேல் இரண்டு பங்குமாக நிரப்பியவர் எனது பாட்டி. அதிகம் படித்தவள் அல்ல. ஆனால், தாத்தா வாங்காது விட்டுச்சென்ற ஓய்வூதியத்தை, அரசு அலுவலகங்களின் மூர்க்கமான மனிதர்களுக்கு எதிராகச் சளைக்காது போராடிப்பெற்றுத் தன் சுய மரியாதையான குடும்ப ஓய்வூதியத்தின் பெருமிதத்தில் வாழ்ந்து மறைந்தவர் அவர். அசாத்திய துணிச்சல், முரட்டுப் பாசம், வற்றாத வாஞ்சை என்பதோடு எப்போதும் ஏராளமான உறவினர்கள் வந்து தங்கி உண்டு விடைபெறும் ரயில் சந்திப்பு மாதிரி இயங்கவிட்டிருந்தார் தமது இல்லத்தை.

எட்டாம் வகுப்பிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கிய எனக்கு, நாடகங்களில் நடிக்கும் ஆர்வமும் தொற்றிக்கொண்டிருந்தது. காலம் தாழ்த்தியே வீடு திரும்பிக்கொண்டிருந்த என்னைக் கோபாவேசமாகத் திட்டிக்கொண்டிருந்தாலும், கட்டியணைத்து இன்னொருபுறம் ஊக்குவித்துக்கொண்டிருந்தவள் எனது பாட்டி.

சென்னையில் கல்லூரிக் காலத்தில் மாமா வீடு. அப்போது பாட்டி அங்கு வந்துவிட்டிருந்தார். இப்போது இன்னும் விரிவான நட்பு வட்டம், இலக்கியச் சிந்தனை மாதிரி நிகழ்வுகள், மாணவர் சங்கம் என்று மேலும் தாமதமாகத் திரும்பிக்கொண்டிருந்த நாட்களில் எனக்காக வெளிவாசலில் காத்திருந்து உள்ளே அழைத்துப் போய், திரைப்படங்களில் வரும் வசனமற்ற காட்சிகள் மாதிரி பல்லைக் கடித்துக்கொண்டு, சத்தம் போடாமலே வாயை அசைத்துக் கோப வசவுகளை உமிழ்ந்தவாறு சாப்பாடு போட்ட காலம் இனி எப்போதும் வராது.

பாஸ்போர்ட் புகைப்படமாகிவிட்ட வாழ்க்கை

பாட்டன்-பாட்டியைச் சிறப்பிக்கும் வாய்ப்பு பள்ளிக் குழந்தைகளுக்கு மகத்தான அனுபவத்தைக் கொடுக்கும். அது பள்ளிக்கூடம் தன்னைத்தானே சிறப்பித்துக்கொள்ளும் வைபவமாகவும் மாறும். ஆனால், எத்தனை குழந்தைகளால் அப்படி அழைத்துவர முடியும், முதலில்?

உறவு நிலைகளின் இன்றைய தளம் என்னவாக மாறி விட்டிருக்கிறது! பணத்தை முன்னிலைப்படுத்தும் சமூக அமைப்பானது உறவுகளைக் கொச்சைப்படுத்தும், உணர்வுகளை மலினப்படுத்தும், அனைத்துவித மதிப்புகளையும் கீழ்மைப்படுத்தும் என்று சும்மாவா சொன்னார் கார்ல் மார்க்ஸ்.

சந்தையை முன் நிறுத்தும் பொருளாதாரம் நமது பண்பாட்டுக் கூறுகளிலும் நிறைய ஊடுருவல்களை நிகழ்த்துகிறது. வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்கள், விளையாட்டு மற்றும் கேளிக்கையின் தன்மை, சமூக விழாக்கள் அடைந்துகொண்டிருக்கும் மாற்றங்கள்... இவற்றின் ஓட்டத்தில் எங்கோ விலகி விலகி நின்றவாறு வாழ்கிறோம் நாம். குடும்பப் புகைப்படங்கள் அரிதானவையாகவும், தனித்தனி மனிதர்களின் பாஸ்போர்ட் புகைப்படமே எங்கும் செல்லுபடியாகும் நடைமுறைத் தேவையாகவும் உருப்பெற்றுவிட்டது நமது வாழ்க்கை.

தாத்தா-பாட்டி தினம்

தாத்தா-பாட்டி காலங்களோடு அவர்களிடமிருந்து புறப்பட்ட கதைகளும் விடைபெற்றுச் சென்றுவிட்டன. ஒரு ஊரில் இருந்த ஒரு ராஜா-ராணி, சிங்கம்-சுண்டெலி, மந்திரவாதி-கிளி... எல்லாம் எங்கோ ஓடிமறைந்து தொலைந்தே போய்விட்டனர். “...ஒரு ஊரில் இருந்த ஒரு ராஜா உட்கார்ந்திருந்த சிம்மாசனத்தில் இப்போது தொலைக்காட்சிப் பெட்டி உட்கார்ந்திருக்கிறது. அது வேளை தவறாது ஏதேதோ தொடர்களை ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறது. அம்மாக்கள் அதன் முன் உட்கார்ந்திருக்க, குழந்தைகள் தனித்து விடப்பட்டு ஏங்கிக்கொண்டிருக்கின்றன...” என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க அறிக்கை ஒன்றில் வாசித்தது நினைவுக்கு வருகிறது.

அன்பின் உருவிலேயே கண்டிப்பையும், கோப முகத்தோடே இழுத்து வைத்துச் சோறு ஊட்டவும், சிரிக்கச் சிரிக்கக் கதை சொல்லவும், அழுது அழுது கஷ்டங்களைப் புரியவைக்கவுமான பேராற்றலை வழிவழி வந்த அனுபவத்தின் காட்டாறு பாட்டன் பாட்டிக்குப் புகட்டியிருந்தது. அவற்றை நழுவ விட்டுவிட்டது சம காலச் சூழல். அந்த நாள் இன்னும் நினைவில் இருக்கிறது. எங்கள் மகள் படித்த பள்ளியிலிருந்து ஓர் அழைப்பிதழ் வந்திருந்தது. பெற்றோர் தினம்தானே என்று நான் அதை எடுக்கப் போக, இல்லை இல்லை, எங்களைத்தான் அழைத்திருக்கிறார்கள், 'கிராண்ட் பேரன்ட்ஸ் டே' என்று எனது மாமனார் பெருமிதம் பொங்கச் சொன்னது நினைவில் இருக்கிறது - அவர் இப்போது இல்லை என்றாலும்.

- எஸ் வி வேணுகோபாலன், எழுத்தாளர், தொடர்புக்கு: sv.venu@gmail.com


தாதா பாட்டிஉறவுகள்பெரியவர்கள்குழந்தைகள்வளர்ப்புபிள்ளைப் பருவம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x