Last Updated : 27 Nov, 2014 11:37 AM

 

Published : 27 Nov 2014 11:37 AM
Last Updated : 27 Nov 2014 11:37 AM

சமூகநீதிக் காவலர்

வி.பி. சிங் நினைவு நாள்: 27.11.2008

விஷ்வநாத் பிரதாப் சிங். இன்றைக்குப் பலருக்கும் ஞாபக அடுக்குகளில் சிக்கி மறைந்தேவிட்ட தேசிய முன்னணியின் பிதாமகன். தேசிய அளவிலான அரசியல் கூட்டணிகளுக்கு முன்னோடி.

ராஜவம்சம்

உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் நகரில் 1931 ஜூன் 25-ல் பிறந்தார் வி.பி.சிங். மாண்டா என்ற பிரதேசத்தை ஆண்ட தையா ராஜவம்சத்தைச் சேர்ந்தவர். அலகாபாத் மற்றும் புணே பல்கலைக் கழகங்களில் இயற்பியல் பட்டம் பெற்றார். கல்லூரிக் காலத்தில் மாணவர் தலைவராகவும் இருந்திருக்கிறார். அணு விஞ்ஞானி ஆக வேண்டும் என்பது ஆரம்பகாலக் கனவு. 1941-ல், மாண்டாவின் ராஜா பகதூராக வி.பி.சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜா பகதூர் என்றாலும், ஏழை களின் பகதூர் ஆகவே நடந்துகொண்டார். வினோபாவேயின் பூமிதான இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். அதற்காகத் தன் நிலங்களைத் தானமாகத் தந்தவர்.

இன்னொரு வரலாறு

மதச்சார்பின்மையின் பெயரால், பாஜக அல்லாத கட்சிகள் காங்கிரஸுடன் கை கோத்து கூட்டணி ஆட்சி நடத்திய ஞாபகம் நம் எல்லோருக்கும் இருக்கும். வி.பி. சிங் ஆட்சி இதற்கு நேர் எதிர். ஒருபக்கம் பாஜக, இன்னொருபக்கம் இடதுசாரிகள் ஆதரவுடன் ஆட்சி நடத்தினார் சிங். கூட்டணி தர்மத்துக்குப் புது இலக்கணம் வகுத்தவர் சிங். தேர்தலில் ஒரு இடத்தில்கூட வெல்லாத சூழலிலும், திமுகவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளித்து, மாறனை அமைச்சர் ஆக்கியவர். வெற்றி, தோல்விக் கணக்குகளுக்கு அப்பாற்பட்டு தன்னுடைய அரசில் எல்லாக் கூட்டாளிகளும் இடம்பெற வேண்டும் என்று நினைத்தவர். கருணாநிதிக்கும் சிங்குக்கும் கடைசி வரை நல்லுறவு இருந்தது.

யாருக்கும் அஞ்சாதவர்

1984-ல் இந்திரா படுகொலைக்குப் பின்னர் நடந்த தேர்தலில், காங்கிரஸ் வென்று ராஜீவ் பிரதமரானபோது நிதியமைச்சர் ஆனார் சிங். வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்தவர்கள் யாராக இருந்தாலும் தயங்காமல் நடவடிக்கை எடுத்தார். திருபாய் அம்பானி, நடிகர் அமிதாப் பச்சனின் சகோதரர் அஜிதாப் பச்சன் ஆகியோரின் வீடுகளில் அமலாக்கப் பிரிவின் கீழ் சோதனை நடத்த உத்தரவிட்டார். ராஜீவின் நெருங்கிய நண்பரான அமிதாப், இதுபற்றி அவரிடம் புகார் தெரிவித்ததால், நிதியமைச்சர் பதவி அவரிடமிருந்து பறிக்கப்பட்டது. எனினும், நேர்மையாளர் என்று புகழ்பெற்ற வி.பி. சிங்கை அமைச்சரவையிலிருந்து முழுவதுமாக நீக்கிவைக்க ராஜீவால் முடியவில்லை. 1987-ல் பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார் சிங்.

போஃபர்ஸ் ஊழலும் பிரதமர் பதவியும்

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது ஸ்வீடனின் போஃபர்ஸ் மற்றும் பிரான்ஸின் சோஃப்மா பீரங்கிகளை வாங்க முடிவுசெய்யப்பட்டிருந்தது. இந்திராவின் மறைவுக்குப் பின்னர் பிரதமரான ராஜீவ், போஃபர்ஸ் பீரங்கிகளை வாங்க முடிவுசெய்தார். ஆனால், பீரங்கி பேரத்தில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக ஸ்வீடன் வானொலி மூலம் தெரியவந்தது. வெறும் சலசலப்போடு ஓய்ந்த இந்தப் பிரச்சினையை 1988-ல் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் கையில் எடுத்தபோது நாடே அதிர்ந்தது. என். ராம், சித்ரா சுப்ரமண்யம் இருவரும் மேற்கொண்ட புலனாய்வு இதழியல் ராஜீவ் ஆட்சியை ஆடவைத்தது. நேர்மையாளரான சிங், இந்த விவகாரத்தில் பிரதமர் ராஜீவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க, அமைச்சரவையிலிருந்தும், பின்னர் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். ஜனமோர்ச்சா கட்சியை ஆரம்பித்த சிங், ராஜீவுக்கு எதிரான காங்கிரஸ் தலைவர்களையும் பிற கட்சிகளையும் திரட்டி, தேசிய முன்னணியைத் தொடங்கினார். இக்கூட்டணி, தேர்தலில் அதிக இடங்களைப் பெறவே சிங் பிரதமர் ஆனார்.

மண்டல் கமிஷனும் ரத யாத்திரையும்

ஒருபுறம் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தாலும், மறுபுறம் தன்னுடைய இந்துத்துவச் செயல்திட்டங்கள் மூலம் நெருக்கடி கொடுத்துக்கொண்டே இருந்தது பாஜக. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று, சிங் இடஒதுக்கீட்டை அமலாக்கியபோது, பாஜக நெருக்கடியை மேலும் அதிகரித்தது. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரத யாத்திரை மேற்கொண்ட பாஜக தலைவர் அத்வானி கைதுசெய்யப்பட்டதும் இடஒதுக்கீடு விவகாரம் ஒன்றுசேர, சிங் அரசுக்குக் கொடுத்த ஆதரவை விலக்கிக்கொண்டது பாஜக. ஓராண்டு பிரதமர் காலத்தை நிறைவுசெய்வதற்கு 16 நாட்கள் முன்னதாக சிங் பிரதமர் பதவியை இழந்தார்.

புற்றுநோயுடன் போர்

1996-ல் தேவகௌடா, பின்னர் குஜ்ரால் பிரதமர் பதவியில் அமர முக்கியப் பங்காற்றினார் சிங். ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின்னர், பல ஆண்டுகள் பொதுவாழ்க்கையிலிருந்து ஒதுங்கியிருந்தவர், 2006-ல் ஜனமோர்ச்சா கட்சியை மீண்டும் தொடங்கினார். நடிகர் ராஜ் பப்பரைக் கட்சியின் தலைவராக நியமித்தார். 2006-ல் உத்தரப் பிரதேசத்தின் தாத்ரி பகுதியில் விவசாயிகளின் நிலங்களை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் வசமான விவாகரத்தில், இடதுசாரித் தலைவர்களுடன் இணைந்து போராடிக் கைதானார். தொடர்ந்து பல்வேறு கூட்டங்கள், போராட்டங்களில் பங்கேற்றார். எனினும், புற்றுநோயுடன் சிறுநீரகக் கோளாறும் சேர்ந்துகொள்ள, 2008 நவம்பர் 27 அன்று காலமானார்.

தூரிகைக் கலைஞர்

போராட்ட குணம் கொண்ட வி.பி. சிங் சிறந்த ஓவியரும்கூட. தீவிர அரசியல் வாழ்க்கைக்கு இடையிலும், தூரிகையின் துணையுடன் அழகியலைத் தக்கவைத்துக்கொண்டவர். “காட்சிப் படிமத்தில் எனக்கு அபாரக் காதல் இருந்தது. எனது இளமைக்காலத்திலேயே கண்களால் அல்ல, இதயத்தால் பார்க்க வேண்டும் என்று உணர்ந்துகொண்டேன். ஏனெனில், உணர்வுதான் வாழ்க்கை” என்று சொன்ன சிங், “எனது ஓவியங்கள் என் உள்ளொளியின் பிரதிபலிப்புகள்” என்றும் சொன்னார்.

மறக்க முடியாத உரை

நல்ல பேச்சாளரும் கவிஞரும் நாடாளுமன்றவாதியுமான சிங், பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கு முன் ஆற்றிய உரை வரலாற்றுப் புகழ்பெற்றது. ‘பிரதமர் பதவியைவிட முக்கியமானது தேசத்தின் ஒற்றுமை’ என்று அன்றைய தினம் அவர் ஆற்றிய உரை, இந்திய ஒற்றுமைக்கு மதச்சார்பின்மை எவ்வளவு முக்கியம் என்பதை மட்டுமல்லாமல், அரசியல்வாதிகளுக்கு விழுமியங்கள் எவ்வளவு முக்கியம் என்பதையும் சொன்னது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x