Last Updated : 27 Jun, 2017 09:11 AM

 

Published : 27 Jun 2017 09:11 AM
Last Updated : 27 Jun 2017 09:11 AM

மன அழுத்தத்தில் தமிழக விவசாயிகள்!

தமிழ்நாட்டு மக்களில் 70% பேர் ஏதோ ஒரு வகையில் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். வறட்சியால் வேளாண் பணிகள் நின்றுவிட்டதால் விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் பெரும் மன அழுத்தத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். தங்களுடைய விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை தருவதுடன், வறட்சி நிவாரண உதவிகளையும் அளிக்க வேண்டும் என்று மத்திய - மாநில அரசுகளுக்குக் கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.

தங்களுடைய இன்றைய நிலைக்கு மத்திய - மாநில அரசுகளின் தவறான வேளாண் கொள்கைகள்தான் காரணம் என்கின்றனர் விவசாயிகள். விவசாயத் துறைக்கான அடித்தளக் கட்டமைப்புப் பணி களையும், நல்வாழ்வு நடவடிக்கைகளையும் நடைமுறைப் படுத்துவதில் தவறுகள் நிகழ்ந்துள்ளன. மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. கடந்த 100 ஆண்டுகளில் இருந்திராத வகையில், அடுத்தடுத்து இரண்டு ஆண்டுகளாகப் பருவமழை பெய்யவில்லை. போதாக்குறைக்கு மத்திய அரசு அறிவித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மானாவாரிச் சாகுபடிப் பகுதிகளிலும் நிலத்தடி நீர்ப்பாசனப் பகுதிகளிலும் விவசாய வேலைகள் முடங்கிவிட்டன. தமிழகம் ஆண்டுதோறும் 921 மில்லி மீட்டர் மழை பெறுகிறது. தேசிய சராசரி 1,200 மி.மீ.யைவிட இது குறைவு. 33.94 லட்சம் ஹெக்டேர்கள் பாசன வசதி பெற்றுள்ள நிலங்கள். இதில் 79%-ல்தான் உணவு தானியங்கள் பயிராகின்றன.

பணமதிப்பு நீக்கத்தின் பாதிப்பு

தமிழக விவசாயிகளை மத்திய அரசு இரு வழிகளில் தாக்கியிருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் 8-ல் அறிவிக்கப்பட்ட ரூ.1,000, ரூ.500 பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ரொக்கப் பரிமாற்றத்தையே முழுக்க முழுக்க நம்பியிருக்கும் கிராமப் பொருளாதாரம் அடியோடு சீர்குலைந்தது. இதிலிருந்து மீள விவசாயிகள் முயன்று கொண்டிருந்தபோது ‘பிராணிகள் வதை (கால்நடைச் சந்தை ஒழுங்குபடுத்துதல்) விதிகள், 2017’ அறிவிக்கப்பட்டது. இது இறைச்சிக்காகக் கால்நடைகளைச் சந்தைகளுக்கு ஓட்டிச் செல்வதைத் தடை செய்கிறது.

பணமதிப்பு நீக்கத்தால் ஏற்பட்ட ரொக்க இழப்பு, ஈரோடு உள்ளிட்ட கால்நடைச் சந்தைகளை 50%-க்கும் அதிகமாகப் பாதித்தது. பருவமழை பெய்யாததால் கால்நடைத் தீவனங்கள் பற்றாக்குறையானதுடன் விலையும் கணிசமாக உயர்ந்தது. இதையடுத்து, செலவைக் குறைப்பதற்காகக் கால்நடைகளைச் சந்தையில் விற்க விவசாயிகள் முயன்றனர். விதை உரம் வாங்கவும், விவசாயத் தொழிலாளர்களுக்கு ஊதியம் தரவும் ரொக்கத்துக்குத் தட்டுப்பாடு என்று தெரிந்ததும் லேவாதேவிக்காரர்கள் கிராமங்களை முற்றுகையிட்டனர். 2017 பிப்ரவரி வரையில் ஒட்டுமொத்த விதைப்பில் 29% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 29.55 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடியானது. இந்த ஆண்டு அது 17.95 லட்சம் ஏக்கராகக் குறைந்துவிட்டது. பருப்பு வகைகள், சிறுதானியங்கள், எண்ணெய் வித்துகளின் சாகுபடிப் பரப்பு கணிசமாகக் குறைந்திருக்கிறது.

அடுத்தடுத்துப் பருவமழை பொய்த்ததால் சாகுபடி பொய்த்தது, விவசாய வருமானம் வீழ்ச்சிஅடைந்தது, கடன் சுமை கடுமையாக ஏறியது, இதனால் கடனை அடைக்க முடியாமல் மன அழுத்தத்தில் ஆழ்ந்த விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்தது. கடந்த ஆறு மாதங்களில் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடன் சுமையால் மட்டுமே தற்கொலை செய்துகொண்டதாக விவசாய சங்கங்களும் ஊடகங்களும் கூறினாலும், வேளாண் துறை நெருக்கடி காரணமாக 17 பேர் மட்டுமே தற்கொலை செய்துகொண்டதாக மாநில அரசு தெரிவிக்கிறது. இதர இறப்புகள் வேளாண் நெருக்கடி தவிர்த்த காரணங்களாலும் மாரடைப்பு போன்ற நோய்களாலும் ஏற்பட்டவை என்கிறது அரசு.

அச்சுறுத்தும் புதிய அபாயம்

இந்தத் துயரங்களுக்கு இடையில் மத்திய அரசின் ‘சிறு வயல் எண்ணெய் - எரிவாயுக் கிணறுகள் கண்டுபிடிப்பு’ திட்டத்தின் கீழ், காவிரி டெல்டா பகுதியிலும் புதுக்கோட்டை மாவட்டத்திலும் கிணறுகளைத் தோண்டும் பணிகள் தொடங்கப்படுவது விவசாயிகளுக்கு அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. கசியும் எண்ணெய் விவசாய நிலங்களைப் பாழ்படுத்துவதுடன், நிலத்தடி நீரிலும் கலந்து மாசுபடுத்திவிடும் என்று அஞ்சுகின்றனர்.

வேளாண் கூட்டுறவு வங்கிகளையே கடனுக்காக நம்பியிருந்த காவிரி டெல்டா பகுதியில் மட்டும் 40 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். “கூட்டுறவுச் சங்கங்களிடமும் கிராமப்புற வங்கிகளிடமும் ரொக்கம் வற்றிவிட்டது. அவசரத் தேவைக்கு யாரை அணுகுவது என்று விவசாயிகளுக்குத் தெரியவில்லை. வறட்சி வேறு கடுமையாகியது. தமிழ்நாட்டில் விவசாயம் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறது” என்கிறார் மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் கே.பாலகிருஷ்ணன். மேட்டூர் அணை வறண்டதால் இரண்டாவது ஆண்டாகத் தொடர்ந்து குறுவைச் சாகுபடியை இழந்திருக்கும் காவிரி டெல்டா மட்டுமில்லை, முழு மாநிலமுமே பாதிக்கப்பட்டிருக்கிறது.

“எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அளித்த பரிந்துரைகளை அமல்செய்ய அரசு முன்வர வேண்டும். சாகுபடிக்காகும் மொத்தச் செலவுடன் 50% லாபம் சேர்த்து ஆதாரக் கொள்முதல் விலையை நிர்ணயிக்க வேண்டும் என்கிறது அக்குழு” என்கிறார் காவிரி டெல்டா விவசாயிகள் நல சங்கப் பொதுச் செயலாளர் மன்னர்குடி எஸ்.ரங்கநாதன். காவிரியில் நீர்ப் பற்றாக்குறை தொடர்வதால், காவிரி மேலாண்மை வாரியத்தை உருவாக்குவது பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும் என்கிறார் அவர். இதை இதர விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும் ஆமோதிக்கின்றனர்.

உடனடி நிவாரணம் மட்டும் போதாது

இந்த ஆண்டு ஜனவரி மாதம் நிலைமையைப் பரிசீலித்த பிறகு, ‘மாநிலமே வறட்சியால் பாதிக்கப்பட்டிருக் கிறது’ என்று அறிவித்த தமிழக அரசு, நிலைமையை நேரில் மதிப்பிட மாவட்டங்களுக்கு அமைச்சர்களை அனுப்பி வைத்தது. ரூ.2,000 கோடியை உடனடி நிவாரணமாக விடுவித்தது. தமிழகத்தைப் பீடித்துள்ள நெருக்கடியுடன் ஒப்பிடுகையில், இது மிகமிக அற்பமான தொகை என்கின்றனர் விவசாயிகள். நிலத்தின் அளவு எவ்வளவு என்று கணக்கில் கொள்ளாமல் எல்லா விவசாயிகளுக்கும் கூட்டுறவு விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

உண்மை நிலவரம் இப்படியிருக்க, 2016-17-ம் ஆண்டுக்காக மாநில அரசு வெளியிட்ட வேளாண்மைக் கொள்கைக் குறிப்போ, “இரண்டாவது பசுமைப் புரட்சியை உருவாக்குவோம்” என்கிறது! வேளாண் துறைக்கு ஏற்பட்ட நெருக்கடி கடுமையாக இருப்பதால், பிரச்சினையை மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்ல டெல்லி சென்றனர் விவசாயிகள். ஜந்தர் மந்தரில் தொடர்ந்து 41 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய தென்னிந்திய நதிகளை இணைப்பதற்கான விவசாயிகள் சங்கத் தலைவர் பி.அய்யாகண்ணு தலைமையில் நடந்த போராட்டம், ஏப்ரல் 23-ல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்தப் போராட்டம் இப்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டாலும், விவசாயிகளின் நிலைமை நாட்டில் எவ்வளவு மோசமாகவும், தமிழ்நாட்டில் எந்த அளவுக்குப் படுமோசமாகவும் இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

விவசாயத் துறையை ‘கார்ப்பரேட்’ மயமாக்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் காரணமாகத்தான் இந்த நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது என்று உட்பட பல்வேறு அமைப்புகள் கூறுகின்றன. அரசின் போக்கைக் கண்டிக்கவும் விவசாயிகளின் வாழ்க்கைப் பிரச்சினைகளை விவாதிக்கவும் தஞ்சாவூரில் ஆகஸ்ட் 5-ல் மாநாடு நடத்த அந்த அமைப்பு ஏற்பாடு களைச் செய்துவருகிறது. விவசாயிகளின் மிகப் பெரிய கிளர்ச்சியை புது டெல்லி சந்தித்தது 1998. உத்தர பிரதேசத்திலிருந்து 5 லட்சம் விவசாயிகள் திரண்டுவந்து டெல்லியை முற்றுகையிட்டனர். அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி உடனடியாக அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற ஒப்புக்கொண்டார். ஆனால், பல முறை வேண்டுகோள்கள் விடுத்தும் தமிழக விவசாயப் பிரதிநிதிகளை பிரதமர் மோடி இம்முறை சந்திக்கவில்லை.

©: ‘பிரண்ட்லைன்’

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x