Published : 04 Nov 2014 08:49 AM
Last Updated : 04 Nov 2014 08:49 AM

கொஞ்சம் அமைதியாக அணுகுவோம்

போதைப்பொருள் கடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருப்பது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும்மேலும் மோசமாவதற்கு அரசியல் பெரும் காரணமாக இருந்துவரும் வேளையில், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மீனவர்கள் இதில் பகடைக்காய்களாகச் சிக்கியிருப்பது வேதனையைத் தருகிறது. இலங்கையின் உள்நாட்டு அரசியலில் சிங்களர்களுக்கும் தமிழர்களுக்குமான மோதலின் நீட்சியே இது என்று கருதத்தக்க அளவுக்கு இந்த வழக்கின் தண்டனை அமைந்திருக்கிறது.

2011 நவம்பர் மாதம் பாக் விரிகுடா பகுதியில் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 5 மீனவர்களையும் கைதுசெய்த இலங்கைக் கடற்படை, அவர்கள் போதை மருந்துகளைக் கடத்தியதாக அவர்கள்மீது வழக்குப் பதிவுசெய்தது. அவர்களுடன் இலங்கையைச் சேர்ந்த மூன்று மீனவர்களும்கூட அதே வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் குற்றச்சாட்டு குறித்தோ, வழக்கு விசாரணை நடந்த முறை குறித்தோ ஆராய்வதற்கு முன்னால், தண்டனையை மட்டும் பார்க்கும்போது இது மிகமிக அதிகம் என்பது உறைக்கிறது. தமிழக மீனவர்களின் படகுகள் தாக்கப்படும்போதும் மீன்கள் பறிக்கப்படும்போதும் மீனவர்கள் கைதுசெய்யப்படும்போதும் ஏற்படும் கோபம், அதிர்ச்சி போன்றவற்றைவிட இது பல மடங்கு உணர்ச்சிக் கொந்தளிப்புகளை ஏற்படுத்தி யிருக்கிறது.

இலங்கையின் ஆட்சியில் புத்த மதத்தின் தாக்கம் அதிகம். அந்நாட்டுச் சட்டப் புத்தகத்திலிருந்து மரண தண்டனை நீக்கப்படவில்லை என்றாலும் பல்வேறு வழக்குகளில் மரண தண்டனைக்கு உள்ளானவர்கள்கூட 1976-க்குப் பிறகு அவ்வாறு தண்டனைக்கு உள்ளாக்கப்

படவில்லை என்பது ஆறுதல் தரக்கூடியது. இந்த வழக்கிலும் மேல் விசாரணைக்குப் பிறகு தண்டனை குறைக்கப்பட வாய்ப்பிருக்கிறது. இலங்கை அதிபருக்குச் சட்ட ஆலோசகராக இருப்பவரையே, இந்த வழக்கில் மரண தண்டனைக்கு உள்ளான ஐந்து பேரின் சார்பில் வாதாட இந்தியத் தூதரகம் நியமித்திருப்பதாக தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்திருக்கிறார்.

இந்த வழக்கில் குற்றங்களை நிரூபிப்பதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லையென்றும் மேல் விசாரணையில் அவர்கள் நிரபராதிகள் என்பது நிரூபிக்கப்பட்டுவிடும் என்றும் அவர் கூறியதாக வெளியாகும் தகவல்கள் நிம்மதியைத் தருகின்றன. தண்டனை விதிக்கப்பட்ட 5 பேரின் மீது, இதற்கு முன்பு போதைப் பொருள் கடத்தல் தொடர்பான எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லை என்பது கவனிக்கத் தக்கது.

இலங்கை அரசும் இந்தியாவும் - குறிப்பாக தமிழக அரசியல் கட்சிகளும் - சற்று நிதானத்துடன் நடந்துகொள்வதே இப்போதைக்கு நல்லது. இந்த வழக்கில் சிக்கியுள்ள மீனவர்கள் மட்டுமல்ல, தமிழகத்தின் ஒட்டுமொத்த மீனவர்களின் நலனுக்காகவும் இரு நாடுகளும் விருப்பு வெறுப்பற்ற முறையில் எல்லா பிரச்சினைகளையும் பேசுவது அவசியம். இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு இந்திய அரசு வலுவான உதவிகளை அளிக்கவும் இத்தகைய நிதானம் அவசியம். இந்த வழக்கில் மேல் விசாரணை விரைவாக நடந்து, மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்படும் வகையில் இரு தரப்பும் பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும். அதுவரை இதை ஆர்ப்பாட்ட அரசியலாக்காமல் அமைதியாக அணுகுவது மிகவும் அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x