Published : 04 Aug 2016 09:17 AM
Last Updated : 14 Jun 2017 05:03 PM
மேலேயிருந்து ஒருவன் கண்காணிக்கிறான் என்ற பிரமையே, நாணயமாக நடந்துகொள்ளத் தூண்டும்
என்னதான்யா அதிலே இருக்குன்னு எல்லாரும் தண்ணியடிக்கிறதும், கஞ்சா அடிக்கிறதும், போதை ஊசி போட்டுக்கிறதுமா அலையுறாங்க என்று பலருக்கு வியப்பாக இருக்கிறது. மது, ஹெராயின், கோகெய்ன் போன்றவை மூளையின் மகிழ்ச்சி மையங்களைத் தூண்டி, மனதின் கவலைகளை மறக்கச் செய்கின்றன என்று கூறப்படுவதையாவது எதிர்ப்புடன் ஏற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால், மனச் செயல்பாடுகளை மாற்றியமைத்து, வண்ணமயமான உருவெளித் தோற்றங்களையும் பொய்யான பிம்பங்களையும் மனதில் தோன்றச் செய்கிறவையும் பிரக்ஞை உணர்வைத் திரித்துப் போடுகிறவையுமான எல்.எஸ்.டி. போன்ற மனத்திரிபு ரசாயனங்களை ஏன் சிலர் பயன்படுத்துகிறார்கள் என்பது விளங்காத புதிராக இருக்கிறது.
மனிதனின் பரிணாம வரலாற்றில் மத அனுபவங்களும் ‘கட’ நிலை அனுபவங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மதம் என்பது ஒரு சமூகத்தின் உறுப்பினர்களுக்கு இடையில் நட்புணர்வையும் ஒத்துழைப்பையும் சகோதர பாவத்தையும் வளர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. தற்காலத்தின் அரிமா மற்றும் சுழற்சங்கங்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் முதலியவைகூட மக்களிடையே நட்புணர்வையும் ஒத்துழைப்பையும் ஏற்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டவைதான். நம் ஊர்க்காரர், நம் சாதி என்பவையும் சிறு குழுவினருக்குள் பிணைப்பை ஏற்படுத்தும். ஆனால், அந்த உணர்வுகள் அத்துமீறிப் போகும்போது சிக்கல்கள் ஏற்படுகின்றன. மதம் மற்றும் கட நிலைத் தியான அனுபவங்களைக் குறுக்குவழியில் அடைய போதைப் பொருள் உதவுகின்றதாக சிலர் சொல்லுகிறார்கள். குழுவின் அளவு பெரிதாகிறபோது மதத்தின் பிணைப்பு ஏற்படுத்தும் செயல்பாடு அதிகமாகிறது. இன்றைக்கு ஏறத்தாழ 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சிறுசிறு மத்தியக் கிழக்கு நாடுகள் உருவானதற்கு மனிதர்களின் செயல்பாடுகளையும் வாழ்க்கையையும் நிர்ணயித்து வழிநடத்துகிற பெரும் தெய்வங்கள் யார் யார் என்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே காரணம் என மானிடவியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். தவறு செய்தால் தெய்வம் தண்டிக்கும் என்ற பயமே மக்களைத் தவறான வழியில் செல்லாமல் தடுத்தது. ‘மேலேயிருந்து ஒருவன் நீ செய்கிற அட்டூழியத்தையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறான்’ என்பதே சாமானியர்களை நல்வழிப்படுத்தப் போதுமானதாயிருந்தது.
பிறவிக் குணங்கள்
ஒரு ஆய்வின்போது, ஒரு மதுக்கூடத்தின் உள்ளே உற்றுப்பார்க்கிற ஒரு ஜோடிக் கண்களின் பெரிய ஓவியத்தை கல்லாவுக்கு மேலே மாட்டினார்கள். வாடிக்கையாளர்கள் அதைப் பார்த்த பின், தாம் தர வேண்டிய காசை கல்லாவில் இருந்தவரிடம் சரியாகக் கொடுத்துவிட்டு வெளியே போனார்கள். மேலேயிருந்து ஒருவன் நம்மைக் கண்காணிக்கிறான் என்ற பிரமையே, நாணயமாக நடந்துகொள்ளத் தூண்டுதலாயிருந்தது.
மனிதன் தன்னைவிடத் திறமையும், ஆற்றலும், செயற்கரிய செயல்களைச் செய்யும் திறனும் கொண்ட ஓர் உருவத்துடன் தன்னை இணைத்துக்கொள்ளும் நாட்டத்துடன்தான் கடவுளை உருவாக்கிக்கொண்டதாக வரலாற்று ஆய்வர்கள் கூறுகிறார்கள். மனிதருக்கு அச்சமும் பத்திரமற்ற உணர்வும் பிறவிக் குணங்கள். அவற்றின் காரணமாகவே மனிதன் கூட்டமாக வாழ்வதற்கு முனைகிறான். இன்றும்கூட, நடுநிசி நேரத்தில் ஊர் அடங்கி ஆளரவமற்ற தெருவில் செல்லும்போது, நம் மனதில் கலக்கம் ஏற்படுகிறது. மயிர்க்கூச்செறிகிறது.
ஆரோக்கியத்தின் எதிரி
கடவுளும் மதமும் ஒரு கூட்டத்தை வடிவமைக்கின்றன. பொதுவான நம்பிக்கைகளும் நடவடிக்கைகளும் நடத்தை விதிகளும் கூட்டத்தினருக்குள் பிணைப்பையும் ஒரேவிதமான கருத்துகளையும் உண்டாக்குகின்றன. இதிலுள்ள முக்கியமான அம்சம் என்னவெனில், உடனடியான பலனேதும் கிட்டாது என்ற நிலையிலும்கூட, மக்கள் சேர்ந்து செயல்படுகிறார்கள். அவ்வாறு சேர்ந்து செயல்படுகையில் தனி ஒருவனின் முயற்சியும் உழைப்பும் மற்றவர்களுக்கும் பயன்தருவதை அவனால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. என்னை மட்டுமின்றி இந்த உலகில் உள்ள சகல ஜீவராசிகளையும் இன்புற்றிருக்கச் செய்க என்று பிரார்த்திக்க மனம்வருகிறது.
கடவுள் மற்றும் மதம் ஏற்படுத்துகிற கட நிலை அனுபவத்தை எல்.எஸ்.டி. வகை ரசாயனங்களும் மனதில் ஏற்படுத்துவதாகச் சொல்கிறார்கள். மதப் பிரச்சாரகர்களும் தவசிகளும் மந்திர உச்சாடனம், உபவாசம், பிரார்த்தனை, தியானம் போன்றவற்றின் தன்மையால் பிரக்ஞையின் தன்மையை மாற்றி அமைத்துக்கொள்ள முடியும் என்கிறார்கள். இவற்றில் ஒழுக்கம், ஆன்மிக நாட்டம், நேர்மை போன்ற நடத்தை விதிகள் உண்டு. போதை மருந்துகளில் அவை கிடையாது. அத்துடன் அவை உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடியவை. எனினும் கடவுள் வழிபாட்டில் கள், சாராயம், கஞ்சா போன்றவற்றை நிவேதனமாகப் படைத்து, பின்னர் அவற்றைப் பிரசாதம் என்ற பெயரில் உண்பதும் சில சமூகங்களில் வழக்கமாக உள்ளது. வட நாட்டுச் சாமியார் ஒருவர், “கடவுள் நாமத்தை ஜபித்துக்கொண்டு கஞ்சாவைப் புகைத்தால், பிரக்ஞை தவறிய பிறகும் உள் மனது கடவுள் நாமத்தைத் திரும்பத் திரும்ப ஜபித்துக்கொண்டே இருக்கும். விழிப்பு நிலையில் மனதை அதுபோல ஒருமுனைப்படுத்துவது மிகவும் கடினம்” என்று விளக்கம் தந்தார்!
போதை மருத்துவம்
மேலைநாட்டு உடற்செயலியல் மருத்துவர்களும் உளவியல் மருத்துவர்களும் தமது சிகிச்சைகளில் சில குறிப்பிட்ட ரசாயனங்களைப் பயன்படுத்தி நோயாளிகளைக் குணப்படுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஹிப்னாடிஸம் மூலம் மனதைக் கட்டுப்படுத்தி, நோயாளியின் உள் மனதில் புதைந்துள்ள கோபதாபங்களையும் ஏக்கங்களையும் அவர் வெளியே கொட்டும்படி செய்வது நவீன சிகிச்சை முறைகளில் ஒன்று. அவ்வாறு மனதின் தளைகளைத் தளர்த்தி விடவும், தங்குதடையின்றித் தமது எண்ணங்களை வெளிப்படுத்தவும் ஊக்குவிக்க போதை மருந்துகள் பயன்படுகின்றன. மனச்சோர்வு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பிழைக்க முடியாது என்ற இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்ட நோயாளிகளுக்கும் உளநிலை மாற்ற ரசாயனங்கள் துன்பத்தைக் குறைப்பதில் உதவிசெய்கின்றன.
மேலை நாடுகளில் இத்தகைய உளநிலை மாற்ற ரசாயனங்கள் இளைஞர்களால் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, அதிகாரிகள் என்னவிதமான நடவடிக்கைகளை எடுத்தாலும் முழு வெற்றி பெற முடிவதில்லை. எந்தவொரு ஆட்சி முறையாலும் மனித இயல்பை மாற்றிவிட முடியாது. நம் நாட்டிலேயே மதுவிலக்கை வெற்றிகரமாக அமல்படுத்த முடியவில்லையே? போதை என்பது ஒருவித மனநிலை ; அது அவசியம் அல்ல என்று உணர்த்தப்பட்டாலே பிரச்சினைகள் குறைந்துவிடும்.
- கே.என்.ராமசந்திரன்,
அறிவியல் கட்டுரையாளர்.