Last Updated : 17 Apr, 2017 08:25 AM

 

Published : 17 Apr 2017 08:25 AM
Last Updated : 17 Apr 2017 08:25 AM

பெரிய ஒப்பந்தத்தின் சிறிய வரலாறு!

இந்தியா, வங்கதேச உறவில் கடந்த எட்டு ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுவருகிறது. வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா டெல்லியில் இருந்தபோது 36 ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. பொருளாதாரம், ராணுவம், மின்உற்பத்தி, போக்குவரத்து உள்ளிட்ட முக்கியமான துறைகளில் ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டுள்ளன. தீஸ்தா நதி நீர்ப்பகிர்வு தொடர்பான முட்டுக்கட்டை நிலையால் வங்கதேசத்தைச் சேர்ந்த ஏராளமான சாமானியர்களின் வாழ்க்கையில் பாதிப்பு நீடிக்கிறது. மேற்கு வங்க மாநிலத்தின் சமரசமற்ற போக்கு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.

வங்கதேசத்தில் ஓடும் 57 ஆறுகளில் 54 இந்தியாவுக்கும் பொதுவானது. கங்கை, பிரம்மபுத்திரா, மேக்னா ஆறுகளுக்கு அடுத்தபடியாக நான்காவது பெரிய ஆறு தீஸ்தா. 1983-ல் செய்துகொள்ளப்பட்ட இடைக்கால ஏற்பாட்டின்படி தீஸ்தாவில் 39% இந்தியாவுக்கும், 36% வங்கதேசத்துக்கும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. பிறகு தீர்மானித்துக் கொள்ளலாம் என்று எஞ்சிய 25% தண்ணீர் யாருக்கும் பிரித்துத் தரப்படாமல் விடப் பட்டிருக்கிறது. தீஸ்தாவின் வெள்ள வடிநிலம் வங்கதேசத்தில் 2,750 சதுர கிலோமீட்டர் பரப்பில் இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு கோடி மக்கள் இந்த ஆற்று நீரையே நம்பியிருக்கின்றனர். வங்கதேசத்தின் 5 மாவட்டங்களில் ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்பளவுள்ள நிலம், கோடைக் காலத்தில் தண்ணீர் வரத்து இல்லாததால் மிகவும் பாதிக்கப் படுகின்றன. குடிநீர் உள்ளிட்ட தேவைகள் போக விவசாயமே நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கிறது. வங்கதேசத்தின் மொத்த விளைச்சலில் 14%, தீஸ்தா நதி நீரை மட்டுமே நம்பியிருக்கிறது. எனவே, தீ்ஸ்தா நீரை இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் உரிய அளவில் பிரிப்பது அவசியம்.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

2011-ல் பிரதமர் மன்மோகன் சிங், டாக்கா சென்றிருந்தபோது தீஸ்தா நதி நீரை இரு நாடுகளும் பகிர்ந்துகொள்வது தொடர்பாக, 15 ஆண்டுகளுக்குச் செல்லத்தக்க உடன்பாடு இறுதி செய்யப்பட்டது. ஆற்றில் நீர்வரத்து குறையும் காலத்தில், இருக்கும் நீரில் 42.5% இந்தியாவுக்கு, 37.5% வங்கதேசத்துக்கு என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. மன்மோகன் சிங்குடன் டாக்கா செல்லவிருந்த குழுவிலிருந்து விலகிய அப்போதைய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, வங்கதேசத்துக்கு தீஸ்தா நதிநீரில் அதிகப் பங்கு தரப்படுவதாக ஆட்சேபித்தார்.

தேவை தண்ணீர்; தீஸ்தா அல்ல!

2015 பிப்ரவரியில் டாக்கா சென்ற பானர்ஜி, தீஸ்தா நதிப் பிரச்சினையில் என் மீது நம்பிக்கை வையுங்கள், பிரதமர் ‘ஷேக் ஹசீனாவுடன் பேசப்போகிறேன்’ என்றார். ஆனால், தண்ணீர்ப் பகிர்வு தொடர்பாக ஒரு நிலையான முடிவுக்கு அவர் இன்னமும் வரவில்லை. 2015 ஜூனில் டாக்கா சென்ற பிரதமர் மோடியுடன் குழுவில் இடம்பெற்ற போதும் இதே போல நம்பிக்கையை ஏற்படுத்தினார். தண்ணீர்ப் பகிர்வு தொடர்பான புதிய யோசனையை மோடி அரசு ஏற்றது, ஆனால், பானர்ஜி ஏற்க மறுத்துவிட்டார்.

எனவே, நதிநீர்ப் பகிர்வு தொடர்பாக ஒப்பந்தம் ஏற்படவில்லை. நதிகள் இரு நாடுகளிடையே உறவை வளர்க்க வேண்டும், அதிருப்தி வளரக் காரணமாக இருக்கக் கூடாது என்றார் மோடி. 2016 ஏப்ரல், மே-ல் நடந்த மேற்கு வங்க சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் பெரு வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தபோதிலும் தீஸ்தா நதிநீர்ப் பகிர்வு ஏற்பாட்டை மம்தா ஏற்கவில்லை. உங்களுக்குத் தேவை தண்ணீர்தான், தீஸ்தா அல்ல, மாற்று ஏற்பாடுகளைக் கூறுங்கள், நான் ஏற்பாடு செய்கிறேன் என்று ஹசீனாவிடமே நேரில் கூறினார் மம்தா.

மம்தாவின் நிலைமாற்றங்கள்

தீஸ்தா பிரச்சினையை ஆராய கல்யாண் ருத்ர என்பவர் தலைமையில் 2011-ல் குழுவை நியமித்தார் பானர்ஜி. அந்தக் குழுவின் அறிக்கை வெளியாகவில்லை என்றாலும், வங்கதேசத்துக்கு ஆதரவாகவே அது இருந்தது என்று தெரிகிறது. “நீர்வரத்து மிகவும் குறைவான காலத்தில் கஜல்டோபா அணைக்கட்டில் உள்ள எல்லா மதகுகளையும் இந்தியா மூடிவிடுவதால் சொட்டுத் தண்ணீர் கூட வராமல் நாங்கள் பரிதவிக்கிறோம், இப்படியொரு செயலை நட்பு நாட்டிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்கிறார் வங்கதேச நீரியல் நிபுணர் ஐனன் நிஷாத்.

ஒரு மாநில முதலமைச்சரின் ஒத்துழையாத போக்கால் வங்கதேசம் அல்லல்பட வேண்டியிருக்கிறது. டெல்லி யிடமிருந்து சிறப்பு நிதி தேவைப்படுவதால் பேரம் பேசி தன்னுடைய கையை வலுப்படுத்திக் கொள்கிறார் மம்தா. மம்தாவின் அரசியல் விளையாட்டுக்கு சாமானிய வங்கதேசிகள் பிணை வைக்கப்படுகிறார்கள்.

2019 தொடக்கத்தில் வங்கதேசத்தில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற விருக்கிறது. இந்தியாவுடன் உறவை வலுப் படுத்த நடவடிக்கைகளை எடுத்திருப்பதன் மூலம் தன்னுடைய அரசியல் எதிர்காலத்தைப் பிணை வைத்திருக்கிறார் ஹசீனா.

இரு தரப்பு உறவை உச்சாணிக் கொம்புக்கு உயர்த்த ஆசைப்படுகிறார். இந்தியாவும் வங்கதேசமும் பக்குவத்துடன் நடந்துகொண்டாலும் மேற்கு வங்கத்தின் பக்குவமற்ற செயல்கள்தான் முட்டுக்கட்டை யாகத் திகழ்கின்றான.

சையத் முனிர் கஸ்ரு,

‘சர்வதேசச் சிந்தனையாளர்கள்’ அமைப்பின் தலைவர்.

சுருக்கமாகத் தமிழில்: சாரி,

© ‘தி இந்து’ ஆங்கிலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x