Last Updated : 07 Mar, 2017 09:57 AM

 

Published : 07 Mar 2017 09:57 AM
Last Updated : 07 Mar 2017 09:57 AM

மணிப்பூர் மக்கள் மனதில் இருப்பது என்ன?

மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தல் மார்ச் 4 மற்றும் 8 தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது. 60 உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் மார்ச் 18 அன்று முடிவடைகிறது. 2012-ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் 42 இடங்களை வென்று, ஒக்ரம் இபோபி சிங்கே மீண்டும் முதல்வரானார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மணிப்பூர் மாநில காங்கிரஸ் கட்சியின் ஐந்து உறுப்பினர்கள் காங்கிரஸில் சேர்ந்து ஒரு நிலையான அரசை உருவாக்கினர்.

கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசை வீழ்த்தும் நோக்கில், பிப்ரவரி 25-ல் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு பேசினார் பிரதமர் நரேந்திர மோடி. 2012 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஒரு இடம் கூடக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம். பிரச்சாரத்தின்போது, காங்கிரஸ் அரசு மீது கடுமையான ஊழல் குற்றச் சாட்டைச் சுமத்தினார் மோடி. தாங்கள் ஆட்சிக்கு வந்தால், மணிப்பூரில் பொருளா தார முட்டுக்கட்டை ஏற்படாது என்று பாஜக உறுதியளித்திருக்கிறது.

மூன்று முக்கியப் பிரச்சினைகள்

இதற்குப் பதிலடியாகப் பேசிய ஒக்ரம் இபோபி, மணிப்பூரில் பொருளாதார முட்டுக்கட்டை ஏற்படுத்தும் நெடுஞ்சாலைத் தடுப்புப் போராட்டத்துக்குத் தலைமை யேற்றிருக்கும் ஐக்கிய நாகா கவுன்சில் (யூ.என்.சி.), இந்த முட்டுக்கட்டைக்குப் பின்னணியில் இருக்கும் நாகா கிளர்ச்சிக் குழுவான நாகாலிம் தேசிய சோஷலிஸ கவுன்சில் - ஐசக் முய்வா (என்எஸ்சிஎன் ஐஎம்) ஆகியவற்றுக்கும் தனக்கும் இடையிலான தொடர்பை மோடி தெளிவாகக் காட்டுவதாகப் புகார் தெரிவித்தார். இந்தக் குற்றச்சாட்டுகள், பதில் குற்றச்சாட்டுகளை விடவும், வேறு மூன்று பிரச்சினைகள்தான் மணிப்பூர் தேர்தல் அரசியலில் மிகவும் முக்கியமானவை.

முதலாவதும் மிக முக்கியமானதுமான விஷயம், அம்மாநிலத்தின் பிராந்திய ஒற்றுமை. மணிப்பூரின் பெரும்பான்மையான மக்கள், குறிப்பாகப் பள்ளத்தாக்குப் பகுதி யைச் சேர்ந்தவர்கள், 2015 ஆகஸ்ட்டில் மத்திய அரசுக்கும், நாகாலிம் தேசிய சோஷலிஸ கவுன்சில் - ஐசக் முய்வா (என்எஸ்சிஎன் ஐஎம்) அமைப்புக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் ஷரத்துகள் தொடர்பாகக் கவலையடைந் திருக்கிறார்கள்.

பாஜகவின் தயக்கம்

மோடி தனது பிரச்சார உரைகளில், மணிப்பூரின் பிராந்திய ஒற்றுமையையும், பிராந்திய எல்லையையும் நாகா ஒப்பந்தம் குலைத்துவிடாது என்று குறிப்பிட்டுப் பேசிவருகிறார் மோடி. மணிப்பூரின் பிராந்திய ஒற்றுமைக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அந்த ஒப்பந்தத்தில் ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

எனினும், இந்த ஒப்பந்தம் தொடர்பான தகவல்களை வெளியிட மோடி அரசு மறுத்துவருவதால், பெருமளவிலான வாக்காளர்கள், குறிப்பாகப் பெரும் பான்மையினரான மெய்தேய் மக்கள், பாஜகவின் வாய்மொழி வாக்குறுதியை நம்பத் தயாராக இல்லை. பாஜக இப்படி தயக்கம் காட்டிவருவதைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பும் காங் கிரஸ், பிரச்சாரத்தில் இந்தப் பிரச்சினை யைப் பிரதானப்படுத்திப் பேசுவதுடன் மணிப்பூரின் பிராந்திய ஒற்றுமையைப் பாதுகாப்பதாகவும் உறுதியளித்திருக் கிறது.

காங்கிரஸ் ஒப்புக்கொள்ள மறுத்தாலும், கடந்த டிசம்பரில் ஏழு புதிய மாவட்டங்களை உருவாக்கும் காங்கிரஸின் நடவடிக்கை, கிரேட்டர் நாகாலாந்து அல்லது தெற்கு நாகாலாந்து எனும் கருத்தாக்கம் வலுப் பெறுவதைத் தடுக்கின்ற அல்லது எதிர்க்கின்ற சமயோசிதமான திட்டம் என்றே அரசியல் பார்வையாளர்கள் கருது கிறார்கள்.

கடந்த நவம்பர் 1 முதல் ஐக்கிய நாகா கவுன்சில் நடத்திவரும் தேசிய நெடுஞ் சாலை முடக்கப் போராட்டம், மணிப்பூரின் நாகா மக்களுக்கான பிரத்யேக நிர் வாகத்தை உருவாக்கும் நோக்கத்தை வலுப்படுத்தும் நடவடிக்கை என்றே பலராலும் கருதப்படுகிறது. இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர, ஐக்கிய நாகா கவுன்சில் முன்வைக்கும் முக்கிய நிபந்தனை, புதிய மாவட்டங்களை உருவாக்கும் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான். அந்த நிபந்தனையை காங்கிரஸ் அரசு இதுவரை ஏற்கவில்லை.

காங்கிரஸின் உத்தி

காங்போப்கி, ஜிரிபாம் போன்ற புதிய மாவட்டங்களை உருவாக்குவதன் மூலம், அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ‘கிரேட்டர் நாகாலாந்து’ அல்லது தெற்கு நாகாலாந்து கோரிக்கையை எதிர்ப்பார்கள். சுருக்கமாகச் சொன்னால், புதிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை, மணிப்பூரின் பிராந்திய ஒற்றுமை பாதுகாப்பு எனும் விஷயத்தில் வெற்றிகரமாக ஈடுபடுத்தியிருக்கிறது காங்கிரஸ்.

இரண்டாவது விஷயம் பொருளாதாரம். பல வாக்காளர்கள், குறிப்பாக மலைப் பிரதேசங்களைச் சேர்ந்த வாக்காளர்கள், கிராமப்புற வாக்காளர்கள் உணவு, உடை, கல்வி போன்ற அடிப்படைத் தேவைகள் விஷயத்தில் உதவியை எதிர்பார்த்திருக்கும் நிலையில், இந்தப் பிரச்சினைகள் தேர்தலில் எதிரொலிக்கும்.

மூன்றாவது விஷயம், ஆயுதமேந்திய குழுக்கள். 20-க்கும் மேற்பட்ட ஆயுதக் குழுக்கள் மணிப்பூரில் செயல்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட சில பகுதிகளில் அந்தக் குழுக்களில் சில செல்வாக் குடன் இயங்குகின்றன. சில குழுக்கள் அரசுடன் போர் நிறுத்த ஒப்பந்தங்கள், செயல்பாடுகளை நிறுத்தி வைத்துக்கொள்ளும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருந்தாலும், பல குழுக்கள் தொடர்ந்து மாநில, மத்திய அரசுப் படைகளுடன் மோதிக்கொண்டு தான் இருக்கின்றன.

தேர்தலுக்காக, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், ஏதேனும் ஒரு வகையில் தேர்தலைச் சீர்குலைக்க இந்தக் குழுக்கள் ஈடுபடவும் வாய்ப்பிருக்கிறது.

கொந்தளிப்பான இந்தச் சூழலைப் பார்க்கும்போது, தேர்தலுக்குப் பிறகான சூழல் எப்படி இருக்கும் என்பதைக் கணிப்பது கடினம். எனினும், மணிப்பூரின் அரசியல் சமூக நிகழ்வுகளையும் மக்களின் கருத்தையும் வைத்துப் பார்த்தால், இந்த அம்சங்கள்தான் தேர்தலின் முடிவைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

- நேகின்பாவ் கிப்ஜென்,
உதவிப் பேராசிரியர், ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகம்
‘தி இந்து’ (ஆங்கிலம்)

தமிழில்: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x