Last Updated : 04 Aug, 2016 09:20 AM

 

Published : 04 Aug 2016 09:20 AM
Last Updated : 04 Aug 2016 09:20 AM

முற்றுகிறது தென் சீனக் கடல் விவகாரம்

தென் சீனக் கடல் முழுக்கத் தனக்கே சொந்தம் என்று கூறிவந்த சீனா, சர்வதேச நீதிமன்றம் ஜூலை 12-ல் அளித்த தீர்ப்பின் பின்னணியில், அமெரிக்காதான் இருக்கிறது என்று கருதுகிறது. ஸ்கார்பாரோ நிலத்திட்டு யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக வழக்குத் தொடுக்குமாறு பிலிப்பைன்ஸைத் தூண்டியது, தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தில் (ஆசியான்) இடம்பெற்றுள்ள நாடுகளிடையே அதிருப்தித் தீயை மூட்டிவிட்டது, சர்வதேச நீதிமன்றத்தில் ஒரு தலைப்பட்சமான தீர்ப்பு வருமாறு செய்தது என்று எல்லாமே அமெரிக்காவின் செயல் என்று சீனா கருதுகிறது. இந்த விவகாரத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐந்து உறுப்பினர்கள் கொண்ட நீதிமன்றமே கறைபடிந்தது என்று சாடுகின்றனர் சீன நிபுணர்கள்.

ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயின் ஆதரவாளரும் வலதுசாரி கருத்துகளைக் கொண்டவருமான ஜப்பானிய நீதிமன்றத் தலைவர் ஷுன்ஜி யனாய், அந்த நீதிபதிகளைத் தேர்வுசெய்தார் என்றும் குற்றஞ்சாட்டுகின்றனர். சீனத்தின் இந்தக் கோபம், இனி வரப்போகும் பனிப்போருக்கு முன்னோட்டம்போலத் தெரிகிறது.

செயற்கைத் தீவு

தென் சீனக் கடலைச் சுற்றி தன்னுடைய வரைபடத்தில் ஒன்பது சிறு கோடுகளைப் புள்ளிபோல இணைத்து அடையாளப்படுத்திக்கொண்டதாலேயே அவை சீனத் துக்குச் சொந்தமாகிவிடாது, வரலாற்றுரீதியிலான உரிமை அதற்குக் கிடையாது என்று அந்த நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. சர்ச்சைக்குரிய பகுதி யாருடையது என்பது தீர்மானிக்கப்படுவதற்கு முன்னதாகவே ‘மிஸ்சீஃப் ரீஃப்’ பாறைப் பகுதியில் செயற்கையான தீவை சீனா உருவாக்கியதும், பிலிப்பைன்ஸுக்கு அதன் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் மீது உரிமை கிடையாது என்று கூறியதும், மீன்பிடிக்கக் கூடாது, பெட்ரோல் - சமையல் எரிவாயு கிடைக்கிறதா என்று தேடக் கூடாது என்றும் சொல்லி பிரச்சினையைப் பெரிதாக்கிவிட்டது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. ஓரிடத்தின் மீது உரிமை கோருவது இயற்கையான சூழலுக்கு இயைந்ததாக இருக்க வேண்டும், செயற்கையாக ஒரு கட்டுமானத்தைக் கட்டுவதன் மூலமும், கடலில் கல், மணல் போன்றவற்றைக் கொட்டி மேடாக்கியதன் மூலமும் இடம் தனக்குத்தான் சொந்தம் என்று கோர முடியாது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

கொந்தளிக்கும் சீனா

‘சர்வதேச நடுவர் மன்றத்தின் தீர்ப்பு தங்களைக் கட்டுப்படுத்தாது, எந்த வகையிலும் செல்லாது’ என்று சீனத் தலைவர்கள் கூறியுள்ளனர். சிங்குவா பல்கலைக்கழகத்தில் ஜூலை 16-ல் நடந்த ‘உலக சமாதான அரங்கு ’நிகழ்ச்சியில் பேசிய சீனத் துணைப் பிரதமர் லியு யான்டாங் சர்வதேச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு சட்ட விரோதமானது, சட்டப்படியானது அல்ல என்று சாடியிருக்கிறார். நீதிமன்றம் தன்னுடைய விசாரணை வரம்பைத் தாண்டி, தனக்களிக்கப்பட்ட வாய்ப்பைத் தவறாகப் பயன்படுத்தி தீர்ப்பு வழங்கியிருப்பதுடன், தென் சீனக் கடலில் சீனத்துக்குள்ள பிரதேச இறையாண்மை உரிமை, கடல்வழிப் போக்குவரத்து உரிமை ஆகியவற்றிலும் குறுக்கிட்டிருக்கிறது என்று கண்டித்துள்ளார்.

தன்னுடைய கடல்வழிப் போக்குவரத்து எல்லை, வரலாற்றுபூர்வமாகத் தனக்கு உரிமையுள்ள விரிகுடா ஆகியவை, ஐநா கடல் சட்டத்துக்கு உட்பட்ட விசாரணை வரம்புக்கு உட்படாது என்று 2006-ல் சீனா தானாகவே அறிவித்தது. இரு நாடுகளுக்கு இடையில் பிரச்சினை என்றால், மூன்றாவது நபரின் மத்தியஸ்தத்துக்கு இரு தரப்பும் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால், ஐநா கடல் சட்டப்படி அது கட்டாயம் அல்ல. ஒரு தரப்பு வர மறுப்பதோ, தன்னுடைய தரப்பை எடுத்துரைக்கத் தவறுவதோ விசாரணை நடைமுறையைத் தடுக்காது என்று ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க முடியாது. ஆனால், வரலாற்றுபூர்வமான உரிமைகள் தொடர்பாக சர்வதேசச் சட்ட அடிப்படையில் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்வதில் உறுதியாக இருக்கிறோம் என்றும் லியு கூறியிருக்கிறார்.

அதே அரங்கில், கடந்த ஆண்டு இதே காலத்தில் பேசிய வெளியுறவு அமைச்சர் வாங் யி இதே கருத்தை வலியுறுத்தினார். “கப்பல் போக்குவரத்து, கடல் வாணிபம் ஆகியவற்றைத் தென் சீனக் கடலில் தடையின்றி அனுமதிப்போம்; சர்வதேசச் சட்டப்படி கடலோர நாடு ஆற்ற வேண்டிய முக்கியமான கடமைகள், பொறுப்புகள் அடிப்படையில் அதைச் செய்வோம்” என்று கூறியிருக்கிறார். சீனாவும் இப்பகுதியில் உள்ள ஒரு கடலோர நாடுதான் என்பதும் உலக அளவிலான விதிகளை சீனா மதித்து நடக்கும் என்பதும் அந்தப் பேச்சில் வெளிப்பட்டது. தென் சீனக் கடல் என்பது தங்களுக்கு மட்டுமே முழுமையாக உரிமையுள்ள பகுதி என்ற தொனி அதில் இல்லை.

அப்படியிருக்க, சர்வதேச நீதிமன்றத்தின் சமீபத்தியத் தீர்ப்பை ஏற்க முடியாது என்று கூறியும், சர்ச்சைக்குரிய பகுதிகளில் ஆக்கிரமித்தும், கடல் தண்ணீரை வற்றவைத்து மேடாக்கி தீவை உருவாக்கியும், சர்ச்சைக்குரிய இடம் என்று தெரிந்தும் ராணுவப் பயன்பாட்டுக்கான விமான ஓடுபாதை, பீரங்கி தளம், கப்பல் வந்து நிற்கும் துறை ஆகியவற்றை உருவாக்கியும் தன்னுடைய ராணுவ வலிமையைப் பறைசாற்றியிருக்கிறது சீனா.

யு.எஸ்.,யு.கே. முன்னுதாரணம்

நிகராகுவாவுக்கு எதிராக எடுத்த ராணுவ நடவடிக்கைக்காக அந்நாட்டுக்கு நஷ்டஈடு தர வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்க முடியாது என்று 1986-ல் அமெரிக்கா நிராகரித்ததை சீனா இப்போது சுட்டிக்காட்டுகிறது. மால்வினாஸ் என்ற இடத்தில் கண்டத்திட்டு யாருக்கு என்பதில் ஆர்ஜென்டினாவுக்கு ஆதரவாக ஐநா ஆணையத்தின் நிபுணர்கள் குழு அளித்த முடிவை ஏற்க முடியாது என்று பிரிட்டன் இந்த ஆண்டு நிராகரித்ததையும் சீனா நினைவுகூர்கிறது.

வழக்கில் கவனிக்கப்பட வேண்டிய பல தகவல்களையே சீனா இப்போது திரித்துவிட்டது. ‘ஆசியான்’ அமைப்பில் இடம்பெற்றுள்ள புரூணை, மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகியவற்றுக்கு தென் சீனக்கடல் பகுதி மீது உள்ள உரிமையை சீனா இப்போதும் ஒப்புக்கொள்ளவில்லை. தான் அளிக்கும் தீர்ப்பு இறுதியானது, அனைவரையும் கட்டுப்படுத்தக் கூடியது என்று சர்வதேச நீதிமன்றம் கூறியும் சீனா அதை ஏற்க மறுக்கிறது. காரணம், அந்தத் தீர்ப்பை அமல்படுத்தும் ஏற்பாடு ஏதும் சர்வதேச நீதிமன்ற நடைமுறையில் இல்லை.

சீன - ஆசியான் அமைப்புக்கிடையே பேச்சுவார்த்தை தொடங்கி 25 ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் நிகழ்ச்சி, குன்மிங் நகரில் ஜூன் 14-ல் நடைபெற்றது. ஆசியான் பகுதியில் அமைதி, பாதுகாப்பு, அரசியல் நிலைத்தன்மை ஆகியவற்றைக் குலைக்கும் வகையில் சீனத்தின் முடிவு அமைந்திருக்கிறது என்று ஆசியான் அமைப்பு தீர்மானம் நிறைவேற்றத் திட்டமிட்டிருந்தது. கம்போடியா, லாவோஸ் மீது அரசியல் அழுத்தம் தந்து அத்தகைய தீர்மானம் எதுவும் அந்தக் கூட்டத்தில் நிறைவேறிவிடாதபடிக்குத் தடுத்துவிட்டது சீனா. இதனால் எரிச்சலுற்ற மலேசியா, தன்னுடைய வெளியுறவுத் துறையின் இணையத்தில் அந்தத் தீர்மான வாசகத்தை வெளியிட்டது. பிறகு, சீனா அதற்கும் பலத்த எதிர்ப்பு தெரிவித்து நிர்பந்திக்கவே அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.

தீர்க்கக்கூடிய வேறுபாடுகள்

சீனா இத்தீர்ப்பை ஏற்கிறதோ இல்லையோ, அந்நாட்டின் நலன்களைப் பல வகைகளில் இத்தீர்ப்பு சேதப்படுத்தியிருக்கிறது. ஆசியான் அமைப்பில் உள்ள நாடுகளில் பலவற்றுடன் அதன் உறவைச் சீர்குலைத்திருக்கிறது. சர்வதேச விவகாரங்களில் தனக்குக் கேடயமாகச் செயல்பட வேண்டிய அமைப்பு, குத்தீட்டியாக மாறியிருக்கிறது. கடல்வழி உரிமை தொடர்பாகப் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டிய பிரதேச உரிமைப் பிரச்சினைகள் இறையாண்மை பிரச்சினைகளாக மாற்றப்பட்டுவிட்டன. சர்வதேச நீதிமன்றத் தீர்ப்புக்கு ஆதரவாக ஆசியான் அமைப்பின் எட்டு நாடுகள் அறிக்கை வெளியிட்டுள்ளன. அந்த வாசகங்கள் மென்று விழுங்காமல் பொட்டில் அறைந்தாற்போல் நேரடியாக இருக்கின்றன. வியட்நாமும் மியான்மரும் காட்டமாகவே விமர்சித்துள்ளன.

ஐநா சபை மாநாட்டில் ஏற்கப்பட்ட கடல் சட்டப்படியான இந்தத் தீர்ப்பை ஏற்க முடியாது என்று சீனா கூறியிருந்தாலும் இந்தச் சட்டத்துக்கு ஆதரவாகக் கையெழுத்திட்டிருக்கிறது. அப்படிக் கையெழுத்திட்ட நாடுகள் அதைக் கடைப்பிடிப்பதிலிருந்து விலக்கு கோர முடியாது. இந்தத் தீர்ப்பு அரசியல் நாடகம் என்று சாடி, தான் ஆதரித்து, அங்கீகரித்த கடல் சட்டத்துக்கே முதுகைக் காட்டியிருக்கிறது.

நிகராகுவா விஷயத்தில் அமெரிக்காவும் மால்வினாஸ் விஷயத்தில் பிரிட்டனும் தீர்ப்பை ஏற்க மறுத்த முன்னுதாரணத்தைக் காட்டியதன் மூலம் ஏகாதிபத்திய சக்திகளுக்கும் தனக்கும் வேறுபாடு இல்லை என்று காட்டுகிறது. ஆசியாவிலிருந்து யூரேசியா வரை பொதுவான பயணத்தை நோக்கிச் செல்லும் சமூகங்களுக்கிடையே ஒற்றுமை தேவை என்று இதுநாள் வரை பேசிவிட்டு அதற்கான தீர்ப்பை நிராகரித்திருப்பது அதற்கு எப்படிப் பார்த்தாலும் ‘வெற்றி - வெற்றி’ என்ற நிலையைத் தரவில்லை. இந்தப் பிராந்தியத்தில் சீனா எப்படித் தலைமை நாடாக இருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. பக்கத்தில் உள்ள நாடுகளுடன் உடனடியாகப் பேசி, சுமுகமான தீர்வைக் காணாவிட்டால் ஆறாத புண்ணாக அது வளர்வதற்கே வாய்ப்புகள் அதிகம். தீர்ப்பு அளிக்கும் பலனுக்கு அதிகமாக சீனத்தால் அந்நாடுகளுக்கு எதையும் செய்துவிட முடியாது. எனவே, சீனத்தின் ராணுவ பலத்துக்கு அஞ்சிகூட பிலிப்பைன்ஸோ வேறு எந்த சிறு நாடோ மாற்று யோசனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது.

பாடங்கள்

ஐநா சபையின் நீதிமன்றத்திடம் பிரச்சினையைக் கொண்டு சென்றதன் மூலம் பிலிப்பைன்ஸ் பலன் பெற்றிருக்கிறது. இறுதியாக பேச்சு மூலம்தான் தீர்வு காண வேண்டும் என்றாலும், சட்டப்படி அதன் கோரிக்கை நியாயமானது என்பது முடிவாகிவிட்டது. அதே போல சீனாவும் தன்னுடைய நிலையிலிருந்து இறங்கிவராது என்பதை தீர்ப்பை நிராகரித்ததன் மூலம் உணர்த்தியிருக்கிறது. அமெரிக்கா மட்டுமல்ல, தனக்குப் பக்கத்திலேயே இருக்கும் நாடுகள் நெருக்குதல் தந்தாலும் தனது நிலையை மாற்றிக்கொள்ள முடியாது என்று காட்டியிருக்கிறது.

தென் சீனக் கடல் மீது தனக்குள்ள உரிமை வரலாற்றுப் பாரம்பரியப்படியானது, சட்டப்பூர்வமானது, நியாயமானது என்று கருதிய சீனா, பிற நாடுகளுக்கும் அப்படி உரிமை இருப்பதாக நினைக்கவில்லை. மாறாக, யாருடைய தூண்டுதலின் பேரிலோ அவை தனக்கு இடைஞ்சலாக உரிமை பாராட்டுகின்றன என்றே தவறாக நினைக்கிறது.

அதே வேளையில், தன்னைச் சுற்றியுள்ள நாடுகளே தன்னுடைய நிலையை எதிர்ப்பதையும் தீர்ப்பை வரவேற்பதையும் வியப்போடு பார்க்கிறது சீனம். சீனா வல்லரசாக இருக்கலாம், பொறுப்புள்ள வல்லரசாக இருப்பது எப்படி என்று இனி பாடம் படிக்க வேண்டும். ஒரே தலைமுறைக் காலத்தில் 50 கோடிப் பேரை வறுமைக் கோட்டுக்கு வெளியே எடுத்துவரும் மிகப் பெரிய பொருளாதாரச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது சீனம். உலக மனித வரலாற்றில் இதுவரை இப்படி நடந்ததே இல்லை. வெளியுறவு அரங்கில் தோழமையுள்ள சூழலை வளர்க்க வேண்டுமென்றால், சிறிய நாடுகளாக இருந்தாலும் தன்னைச் சுற்றியுள்ள நாடுகளின் உணர்ச்சிகளுக்கும் உரிமைகளுக்கும் அது மதிப்பளிக்க வேண்டும்.

புத்திசாலித்தனமான முடிவை எடுக்கும் வகையில் சீனத் தலைவர்களிடம் தரவுகள் இல்லாமல் போயிருக்கலாம். கசப்பான உண்மைகளைத் தலைவர்களுடன் பகிர்ந்து கொள்ள சீன அதிகாரிகள் தயங்குகின்றனர். எனவே, பல நாடுகள் தங்களைத்தான் ஆதரிப்பதாகத் தலைவர்களிடம் தவறாகத் தெரிவித்தனர். அந்த நாடுகள் எதிர்த்தபோது சீனத் தலைவர்கள் வியப்பும் கோபமும் அடைந்தனர். ஆசியான் அமைப்பில் சீனத்துக்கு எதிராகத் தீர்மானம் இயற்றப்படாமல் தடுத்துவிட்டதால் எல்லோரும் இனி இதை மறந்துவிடுவார்கள் என்றே சீன அதிகாரிகள் தவறாக நினைத்திருக்க வேண்டும்.

சீனா தன்னுடைய அதிகாரத்தைக் காட்டத் தயங்காது. தன்னுடைய ஆசியக் கூட்டாளிகளுக்காக அமெரிக்கா எந்த அளவுக்கு உதவிக்கு வரும் என்று சீனா சோதித்துப் பார்க்கக்கூட முற்படும். 2007-08-க்குப் பிறகு உலகப் பொருளாதாரம் மீட்சியடைய சீனத்தின் பங்களிப்பு கணிசமானது. இந்நிலையில் தென் சீனக் கடலில் ராணுவ சாகசத்தில் ஈடுபட அது முற்பட்டால் அது சீனத்துக்கும், அப்பகுதிக்கும், உலகுக்கும் குறிப்பாக இந்தியாவுக்கும் நல்லதல்ல.

- ஜெயந்த் பிரசாத், ராணுவக் கல்வி, ஆய்வு நிறுவனத்தின் தலைமை இயக்குநர்.

தமிழில்: சாரி,

© ‘தி இந்து’ ஆங்கிலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x